இருதலைக்கொள்ளி

This entry is part 5 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

வளவ. துரையன்

சிறுவயதிலிருந்தே எனக்குக் கிரிக்கெட் மீது கொஞ்சம் பைத்தியமுண்டு. எங்கள் தெருவின் அணியின் தலைவனே நான்தான். பிற்பாடு பெரியவனான பிறகு ஊரில் அணி ஒன்றைத் தொடங்கி வெளியூர்களெல்லாம் சென்று விளையாடிய காலம் ஒன்று உண்டு.
எழுபுதுகளில் இலக்கியத்தின் மீது நாட்டம் அதிகமான போதும் கிரிக்கெட் ஆர்வம் குறையவில்லை. ஒருநாள் முழுதும் விளையாடிவிட்டு மாலையில் வேட்டி சட்டையுடன் [ இதுதான் பண்டைய தமிழ்ச் சொற்பொழிவாளர் உடை ] பட்டி மன்றம் பேசப் போயுள்ளேன்.
இந்த இருவித ஈர்ப்புகளினால் சிலநேரம் மிகவும் தவித்திருக்கிறேன். கடந்த ஆண்டில் நகர மன்றத்தில் ஓர் இலக்கிய விழா. பிற்பகல் மூன்று மணிக்கு என் உள்ளம் கவர்ந்த பேச்சாளர் தனி உரை நிகழ்த்த உள்ளார். அவசியம் நான் போக வேண்டும்.
ஆனால் அன்றுதான் ஷார்ஜா இறுதி ஆட்டம் நிகழ இருக்கிறது. அதுவும் இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் என்றால் அதைப் பார்க்காமல் எப்படிப் போவது? முதல் மாலை முதலே மனத்தில் ஒரே குழப்பம். என்ன செய்வது எங்கு செல்வது என்றே புரியவில்லை.
இரவு உறக்கம் வராமல் புரண்ட போது மனைவி கூறினாள். “ஏன் இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரி தவிக்கிறீங்க? ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டியதுதானே?”
”நிறுத்து. உன் உவமையே தவறு. இருதலைக்கொள்ளி எறும்பால் இரண்டு பக்கமுமே போக முடியாது.”
”அது தெரியும். அந்த எறும்பு எவ்வாறு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்குமோ அதுபோல உங்கள் மனமும் முன்னும் பின்னும் ஊசலாடிக் கொண்டிருக்கிறதே! அதைத்தான் நான் இருதலைக் கொள்ளி எறும்பு என்று கூறினேன்” என்ற பதில் எனக்கு ஏற்புடையதாய் இருந்தது. மனம் அமைதி அடைய சிந்தனை பிறக்க இருதலைக்கொள்ளி என்னும் சொற்றொடர் இலக்கியத்தில் வரும் இடங்களெல்லாம் காட்சிகளாயின.
சோழன் வீதியில் உலா வருகிறான். அவள் அவனின் காமம் மிக்க தோளழகைக் காண ஆவல் கொண்டாள். மன்னன் ஒவ்வொரு தெருவிற்கும் சென்று அவள் வீதிக்கு வர யாமம் ஆகிவிட்டது.
அவள் வெளியே வந்து அவனைப் பார்க்க எண்ணுகிறாள். மனம் கதவருகே செல்கிறது. உடனே நாணம் வந்து மனத்தை வீட்டுக்குள் இழுத்துவிடுகிறது.
இப்போது கண்கள் காட்டு என்றவுடன் அவன் மீது கொண்ட காதலால் மனம் முன்னே செல்லத் தொடங்குகிறது. மீண்டும் நாணம் வந்து தடுக்க மனம் உள்ளே வந்துவிடுகிறது.
”இவ்வாறு “என் மனமானது முன்னும் பின்னுமாகப் போவதும் வருவதுமாக இருதலைக் கொள்ளியின் உள்ளே அகப்பட்ட எறும்புபோல அலைகிறதே” என்று அவள் வருந்துகிறாள்.
”நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்ப
காமருதோள் கிள்ளிக்கென் கண்கலற்ற யாமத்[து
இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு போலத்
திரிதரும் பேரும்என் நெஞ்சு”
[முத்தொள்ளாயிரம்—100]

Series Navigationமொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1
author

வளவ.துரையன்

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    // சோழன் வீதியில் உலா வருகிறான். அவள் அவனின் காமம் மிக்க தோளழகைக் காண ஆவல் கொண்டாள். அவள் வெளியே வந்து அவனைப் பார்க்க எண்ணுகிறாள். மனம் கதவருகே செல்கிறது. உடனே நாணம் வந்து மனத்தை வீட்டுக்குள் இழுத்துவிடுகிறது.

    இப்போது கண்கள் காட்டு என்றவுடன் அவன் மீது கொண்ட காதலால் மனம் முன்னே செல்லத் தொடங்குகிறது. மீண்டும் நாணம் வந்து தடுக்க மனம் உள்ளே வந்துவிடுகிறது.

    ”இவ்வாறு “என் மனமானது முன்னும் பின்னுமாகப் போவதும் வருவதுமாக இருதலைக் கொள்ளியின் உள்ளே அகப்பட்ட எறும்புபோல அலைகிறதே” என்று அவள் வருந்துகிறாள் //

    அய்யா! வளவ.துறையனார் அவர்களே…அரைத்த மாவையே எத்துனை முறைதான் அரைப்பது.ஒரே மாவை இட்லியாகவும்,தோசையாகவும் மாற்றி கொடுக்க முயற்சிப்பது ஏன்.?கொஞ்சம் மாத்தி யோசியுங்கள்.இப்ப வந்த தோசைமாவு, பிப்ரவரி மாதம் இட்லியாக வந்துவிட்டது.

    //அந்த சோழ அரசனைக் காட்டு என்று வேண்ட மறுபடியும் மனம் வாசலுக்குச் செல்கிறது. நாணமோ மறுபடியும் உள்ளே இழுக்கிறது. இப்படியே உள்ளே போவதும் வருவதுமாக இரு பக்கமும் நெருப்பு உள்ள கட்டையில் மாட்டிக் கொண்ட எறும்பு போல என் மனம் தவிக்கிறதே என்று அத் தலைவி எண்ணுகிறாள். முத்தொள்ளாயிரம் காட்டும் காட்சி இது.//
    http://puthu.thinnai.com/?p=28373 February 23rd, 2015

    //..இரவு உறக்கம் வராமல் புரண்ட போது மனைவி கூறினாள். “ஏன் இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரி தவிக்கிறீங்க…//

    ஒரே கட்டுரை ஆறே மாதத்தில் மீண்டும் கிரிக்கெட் திண்ணையில் விளையாடியதால்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *