கோணல் மன(ர)ங்கள்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 3 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

என்.துளசி அண்ணாமலை

“இராசாத்தி, இங்கே வந்துட்டுப்போ”
கூடத்திலிருந்து மாமியார் அழைப்பது கேட்டது. வானொலியில் பழம்பாடல்களைக் கேட்டுக் கொண்டே துணிகளை மடித்துக் கொண்டிருந்த இராசாத்திக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டது. அந்த வயதுக்கே வரக்கூடிய முட்டிவலி ஒரு நிமிடம் அவளை நகரவிடவில்லை. ஆனால் அதற்குள் மாமியாரிடமிருந்து இரு அழைப்புகள் வந்து விட்டன.
“இதோ வந்துட்டேம்மா” என்று குரல் கொடுத்துக் கொண்டே கூடத்துக்கு வர, சன் தொலைக்காட்சியில் சக்தி விடைபெற்றுக் கொண்டிருந்தாள். அடுத்த நிகழ்ச்சியான திரைப்படத்தைக்காண இராசாத்தியின் கணவர் குமரன் சோபா நாற்காலியில் வாகாக உடலைச் சாய்த்தார்.
மாமியார் கல்யாணி தன்னுடைய மூக்குக் கண்ணாடியை அதன் கூட்டுக்குள் வைத்து மூடிவிட்டு நிமிர்ந்தாள். இராசாத்தி, மாமியாரின் கையைப்பற்றி வலிக்காமல் தூக்கிவிட்டாள். மாமியாருக்கு எண்பது வயதாகிவிட்டது. ஆனால், கண்பார்வை இன்னும் நன்றாகவே இருந்தது. தொலைக்காட்சி நாடகங்களைப் பார்க்கும்போதும் பத்திரிக்கையோ கதைப்புத்தகமோ வாசிக்கும்போதும் மட்டுமே கண்ணாடியைப் பயன்படுத்துவாள். வெற்றிலைக் காவியேறிய பற்களால் இன்னமும் பட்டாணியையும் பக்கோடாவையும் சர்வ சாதாரணமாக மென்று தின்னக் கூடிய பல்வலிமை மிகுந்திருந்தது. எந்த சூழ்நிலையிலும் எந்த விசயத்தையும் நிதானம் தவறாமல்ஆழ்ந்து சிந்தித்து செயல்படுத்தும் ஆற்றலில் குறைவில்லை. அதேவேளையில், மற்றவர்களின் மனம் நோகப் பேசுவதிலும், தொலைக்காட்சி நாடகங்களைப் பார்க்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் “நச்” “நச்”சென்று இராசாத்தியை ஏசுவதிலும் சளைக்க மாட்டாள்.

இராசாத்திக்கு இதெல்லாம் பழகிப்போய் விட்டது. அதனால் மாமியாரின் குத்தல் பேச்சுக்களைப் பெரிதுபடுத்தமாட்டாள். மாமியார் மட்டுமல்ல, அவளுடைய கணவரும், பெண்ணும் பிள்ளையும் கூட பல சமயங்களில் அவளைப் புண்படுத்தத் தவறியதில்லை. மனம் வேதனைப்படும் போதெல்லாம் அவளுக்குப் புகலிடம் தந்தது, சமையலறையக் கடந்த புழக்கடைப் பக்கம்தான். வேலியை ஒட்டி ஒரு மூலையில் வளர்ந்திருந்த இரண்டு வாழை மரங்களைச் சுற்றி குட்டி வாழைக்கன்றுகள் கூட்டமாய் இரண்டடி உயரத்திற்கு முளைத்திருந்தன. மறுமூலையில் உயர்ந்து பரந்து வளர்ந்திருந்த அத்தி மரத்தில் பச்சையும் மஞ்சளும் இளஞ்சிவப்புமாக அத்திக்காய்களும் பழங்களும், ஒன்றாய்க் கூடிவாழும் குடும்ப உறுப்பினர்களைப் போல கொத்துக் கொத்தாகக் காய்த்திருந்தன.
இந்த மரத்தின் மிகப்பெரிய சிறப்பு, அதன் உயரமோ, பருமனோ, காய்களோ அல்ல! தரையிலிருந்து சுமார் ஒன்றரை அடி உயரத்திற்குப் பிறகு குறுக்கு வாட்டத்தில் சாய்வாக நீண்டு, பின்னர் நிமிர்ந்து உயர்ந்து வளர்ந்திருந்தது. அந்த வளைவில் தாராளமாக சாய்ந்து படுத்துக் கொள்ளலாம்.
இராசாத்தி பெரும்பாலும் அங்குதான் அமர்ந்து தன் மதிய உணவை உண்பாள். மரத்தின் தாழ்ந்த கிளை ஒன்றில் அவளுடைய செல்லமான சிவப்பு சிங்கர் வானொலிப்பெட்டி பதவிசாகத் தொங்கிக்கொண்டிருக்க, இரவு தூங்கும் நேரம் தவிர, மற்றெல்லா நேரங்களிலும் பாடிக்கொண்டும் பேசிக்கொண்டுமிருக்கும். வேலிக்கும் சமையலறைக்கும் இடைப்பட்ட இடத்தில், மல்லிகை, ரோஜா, மனோரஞ்சிதம், கத்தரிக்காய், பச்சைமிளகாய், வெண்டைக்காய் என எல்லாமே இராசாத்தியின் கைவண்ணத்தாலும் உழைப்பாலும் செழித்து வளர்ந்திருந்தன. சமையற்கட்டில் சமைக்கும் நேரங்களில் வானொலிப்பெட்டி அங்கே இடம்பெயர்ந்திருக்கும்.
“ரேடியோ பையித்தியம்” என்று குடும்பத்தினர் அவளைக் கேலி செய்தலும், இராசாத்தி அதைப் பொருட்படுத்துவதில்லை.
இராசாத்தி வசதி குறைவான குடும்பத்திலிருந்து வந்தவள். அவளத் தன் வீட்டுக்கு மருமகளாக அழைத்து வந்து, மகாராணியாக உயர்த்தி வைத்துவிட்டதாக கல்யாணிக்கு நினைப்பு.
“ஏதோ நீ செய்த புண்ணியம், நீ என் வீட்டுக்கு மருமகளாக வந்தது. இல்லை யென்றால், உன் அப்பன் சம்பாதிக்கிற சம்பாத்தியத்துக்கு, எம்புள்ள மாதிரி ஒருவன் உனக்குப் புருசனா கிடைப்பானா, என்ன?” என்று அடிக்கடி அவளைக் குத்திக்காட்டத் தவறுவதில்லை.
ஆரம்பத்தில் கணவனிடம் சொல்லிக் குறைபட்டுக் கொள்வாள். ஆனால், போகப்போக அவ்வாறு குறைபட்டுக் கொள்வதால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டாள். கணவன் தன்மீது கொண்டிருக்கும் அன்பில் குறைவில்லை. மாமியார் தேளாகக் கொட்டினாலும், கணவன் நல்ல நண்பனாக நடந்து கொண்டது பெரும் ஆறுதல். ஆனால், மாமியாரின் முன்னிலையில் நண்பன் காணாமல் போய்விடுவான். மாறாக, அங்கே தாயின் சொல்லுக்கு மறுப்பேதும் சொல்லாத ‘ஆமாம்சாமிப் பிள்ளையாக’ அவன் அமர்ந்திருப்பான். கணவன்தான் இப்படியென்றால், பெற்ற பிள்ளையையும் பெண்ணையும் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களும் பாட்டியின் கைப்பிள்ளைகள்தாம்.
நாளாக ஆக, வானொலிப்பெட்டி அன்புத் தோழியானது. அறிவிப்பாளர்கள் அவளுடைய நலம் விரும்பிகள் ஆனார்கள். பாடகர்களும் நாடக நடிகர்களும் அவளுடைய உறவினர்கள் ஆனார்கள். இசையும் பாட்டும் அவளுடைய உலகமானது.
முதன்முதலில் “இசை சொல்லும் கதை” எழுதத் தொடங்கி, பின்னர் வானொலிக்கும் பத்திரிக்கைகளுக்கும் எழுத ஆரம்பித்தாள். தன்னுடைய சொந்தப் பெயரை மறைத்து, “செந்தாமரை” என்ற தன் பாட்டியின் பெயரில் எழுதினாள். தான் எழுதுவதைக் கூட குடும்பத்தாரிடமிருந்து மறைத்து வந்தாள்.
அவள் தனக்குள்ளேயே பேசிக்கொண்டும், பாடிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் வேலைகளைச் செய்வது ஒன்று புதிதல்ல. இப்போதும் அப்படித்தான். சற்றுமுன் கேட்ட பாடலை அசைபோட்டவாறே மாமியாரின் கையைப்பற்றித் தூக்கிவிட்டாள்.
தடுமாறிக் கொண்டே எழுந்த மாமியார், இராசாத்தியின் முகபாவத்தைப் பார்த்து முகவாயில் இடித்தாள். திடுக்கிட்ட இராசாத்தி, “ஆங்” என்று விழித்தாள்.
“என்னடி நெனப்பு?” என்று மருமகளை முறைத்தாள்.
விழிகளில் மளுக்கென்று கண்ணீர் தளும்பி, ‘இதோ, கீழே விழப்போகிறேன்” என்று பயமுறுத்த, மீண்டும் முகவாயில் ஒரு தாக்குதல் நிகழ்ந்தது. கண்ணீர்த்துளிகள் பட்டென்று விடைபெற்று கன்னங்களில் இறங்கி ஓடின. அதனைத் துடைக்கவும் மறந்து, மாமியாரைக் கைத்தாங்களாகப் பற்றி படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள். சுருக்கம் ஏதுமின்றி மிக நேர்த்தியாகத் தெரிந்த படுக்கை மாமியார வாயடைக்கச் செய்தது. குறை சொல்ல வழியேதுமில்லை. போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திவிட்டு, விட்ட வேலையைத் தொடரச் சென்றாள் இராசாத்தி.
“அம்மா! நேத்தே சொன்னேனே, என்னோட சட்டையை அயர்ன் பண்ணி வைய்யின்னு…….”
மூத்தமகன் அன்பரசன் தன்னுடைய காற்சட்டையையும் பனியனையும் அவளுடைய முகத்தில் மூர்க்கத்தனமாக விட்டெறிந்தான்.
திகைப்பும் அவமானமும் ஒருங்கே அவளைத் தாக்க, தன் முன் எறியப்பட்ட துணிமணிகளைக் கையிலெடுத்தாள்.
“எப்பப் பார்த்தாலும் ரேடியோவைக் கேட்டுக்கிட்டு, பையித்தியம் மாதிரி பேசிக்கிட்டு…சிரிச்சிக்கிட்டு……உன்னை ‘அம்மா’ன்னு சொல்லிக்கவே அவமானமா இருக்கு….. வேலை செய்ய முடியல்லன்னா ஒரு வேலைக்காரிய வைச்சுக்க வேண்டியதுதானே? இந்த வீட்டுல பணத்துக்கா பஞ்சம்?”
நஞ்சில் தோய்த்த சுடுசொற்களை அவள்மீது அள்ளித் தெளித்துவிட்டு முன்பக்கம் போய்விட்டான்.
இராசாத்தியின் உடல் பலமே குன்றிவிட்டாற்போலக் கூனிக்குறுகி அமர்ந்துவிட்டாள்.
‘என்ன வார்த்தை சொல்லிவிட்டான்?’ மணம் முடித்து மூன்று ஆண்டுகள் கழிந்தும் தாய்மை அடையாமல் நின்றவளை, வாய் கூசாமல் ‘மலடி’ என்று மாமியார் தேளாய்க் கொட்டி, அவளை நாளொரு சுடுசொல்லும், பொழுதொரு இடியுமாகத் துன்புறுத்தியபோது, ‘இதோ….உன் வேதனையத் தீர்க்க வந்தேன்’ என்று வந்துதித்த செல்லமகன்! தாயென்ற உயர் நிலையைத் தந்தவன்…..அதனாலேயே அவன்மீது அளவுகடந்த அன்பும் பாசமும் பெருகியிருந்தது. எல்லாருமே அவனை அன்பு மழையில் தோய்த்தெடுத்து, அவன் ஆற்றிய பெருங்குற்றங்களையும் அற்புத சாகசங்களாக, வீரதீர செயல்களாகப் போற்றிப் பாராட்டி, மொத்தத்தில் அவனை ஆணவக்காரனாக, முரட்டுத்தனம் மிகுந்தவனாக, மரியாதை தெரியாத மூர்க்கனாக வளர்த்துவிட்டனர். தன்னக் கண்டித்த தாயைப் புழுவினும் கீழாகப் பார்த்தான். தாய்க்கெதிராக அவனைத் தூண்டிவிட்ட பாட்டி, அவன் தன் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டும் என்பதற்காகவே அவன் கேட்டபோதெல்லாம் பணத்த தாராளமாகத் தந்து, அவனைத் தன் கட்டுப் பாட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டாள். அடுத்துப் பிறந்த சங்கீதாவையும் அவ்வாறே கவனித்துக் கொண்டாள். இனித் திரும்பிப் பார்க்க வழியில்லை. அவர்களிடம் அன்பை எதிர்பார்ப்பதும் கல்லில் நார் உரித்த கதையே!
இராசாத்தி, மகனுடைய ஆடைகளை அயர்ன் பண்ணத் தொடங்கினாள். அவளுடைய மனதைப் படித்தாற் போல வானொலியில் பழம்பாடல் தொடர்ந்தது.
“மகனே நீ வந்தாய், மழலை சொல் தந்தாய், மாறாத செல்வமும் நீதானடா…
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணயும் ஏதுக்கம்மா…”
அந்த வைரவரிகள் இராசாத்தியின் இதய நரம்புகளைச் சுண்டி இழுத்தன.
“ஹா…என்ன தவறு செய்தேன், இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற?” என்று தன்னையே நொந்து கொண்டாலும், சற்று நேரத்தில் அந்தக் கழிவிரக்க உணர்வும் வானொலியிலிருந்து கசிந்த பாடல்களில் கரைந்து போயின. விட்ட வேலையைத் தொடர்ந்தாள்.
ஒரு வாரமாக சங்கீதா கல்லூரியிலிருந்து தாமதமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். கணவரும் கண்டுகொள்ளவில்லை. சனிக்கிழமை காலையில் அவள் கல்லூரிக்குப் போகிறேன் என்று புறப்பட்டபோது, மனம் தாளாமல் இராசாத்தி கேட்டேவிட்டாள்.
“சங்கீதா, இன்றைக்கு உனக்கு விடுமுறை இல்லையா? எங்கே புறப்பட்டு விட்டாய்?”
தாயின் கேள்வி சங்கீதாவை மட்டுமல்ல, அன்பரசனையும் கலியாணியையும் கூட திரும்பிப் பார்க்கவைத்தது.
சண்டைக்கோழிபோல சிலிர்த்துக் கொண்டு நின்றாள் சங்கீதா. “நான் எங்கே போகிறேன் என்று உனக்குச் சொல்லவேண்டிய அவசியமில்லை. கல்லூரியைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? போய் அந்தக் கோணல் மரத்துக்கிட்ட கேட்டுக்கோ!”
சங்கீதா பேசத்தொடங்கியதும் அன்பரசனும் மாமியாரும் உடன் சேர்ந்து கொண்டனர். அவர்களுடைய கூச்சலையும் மீறிக்கொண்டு குமரனின் குரல் ஓங்கி ஒலித்தது.
“அம்மா, போதும் நிறுத்துங்க! சங்கீதா! உன்னுடைய தாயின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவள் நீ! அவள் உன் தாய் என்பதை மறந்து விடாதே!” என்று அவருடைய குரல் ஓங்கி ஒலித்ததும், கல்யாணியும் அன்பரசனும் வாயடைத்துப் போயினர்.
இராசாத்திக்கு மிகவும் அவமானமாக இருந்தது. பொங்கிவந்த அழுகையை மறைத்துக் கொண்டு புழக்கடைப்பக்கம் வந்தாள். உடல் தள்ளாடியது.
கோணல் அத்திமரம் அவளை ‘வா மகளே, வா!’ என்று அழைத்தது. ஓடிப்போய் அதன்மீது சாய்ந்து படுத்தாள். அழுகையினால் உடல் குலுங்கியது. அத்திமர இலைகளில் சில அவள்மீது விழுந்தன.
‘அழாதே மகளே!’ என்று ஆறுதல் கூறுவதைப்போல உணர்ந்தாள். மேலும் அழுதாள். இத்தனை வருடங்களாக ஏற்படாத துயரம் இன்று இதயம் முழுவதும் பரவி, அவளை பலவீனப்படுத்தியது. ஏன்? எத்தனையோ முறை எல்லருமே தன்னை அவமானப்படுத்தியபோது வராத துயரம், இப்போது மட்டும் ஏன் வந்தது? அப்படியானால் இத்தனைக் காலமும் என் இதயம் இவர்களுடைய அன்புக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருந்ததா? இராசாத்தியால் மேலும் சிந்திக்க முடியவில்ல. இந்தக் குடும்பத்தினரின் உதாசீனம் என்னைப் பாதிக்கவில்ல என்று இத்தனைக் காலமும் நான் என்னையே ஏமாற்றிக் கொண்டிருந்தேனா?
தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு பெண் எழுத்தாளரின் பேட்டி இப்போது நினைவில் வந்து ஊடாடியது.
“மாமியாரின் கொடுமையும், கணவரின் உதாசீனமும் தான் இரண்டு நாவல்களை எழுத எனக்குத் துணிவையும் ஆற்றலையும் தந்தது!” என்று தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
உண்மைதான். இந்தக் குடும்பத்தின் உதாசீனம்தானே என்னை எழுதவே தூண்டியது! அப்படியிருக்க, இவர்களுக்கு நான் ஏன் மரியாதை தரவேண்டும்?
வெகுநேரம் அப்படியே படுத்திருந்தவளை வானொலி உசுப்பியது. அதில் ஒலித்த அறிவிப்பும் அவளைத் துள்ளியெழ வைத்தது. உடனே உற்சாகமும் பீறிட்டு எழுந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மலாயா பல்கலைக்கழக துணைவேந்தர் மண்டபம் வருகையாளர்களால் கலகலத்துக் கொண்டிருந்தது. இருக்கைகள் ஒவ்வொன்றாக நிரம்பிக் கொண்டிருந்தன. இன்னும் சில
நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்கிவிடும். நீலவண்ணப் பட்டுச் சேலையில் பட்டாம்பூச்சி போலத் தன் தோழிகளோடு அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்த தன் பேத்தியைக் கண்கொட்டாமல் பார்த்த கல்யாணி, அருகில் அமர்ந்திருந்த தன் மகனிடம், “பார்த்தாயா உன் மகளை? என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது” என்று பூரித்தாள்.
குமரனும் அதே மகிழ்ச்சியையும் பெருமையையும் ஆனந்தமாக அனுபவித்தார். அதேவேளையில் மண்டபத்தின் உள்வாசலில் அன்பரசன் தன் நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருப்பதையும் பார்த்தார்.
அவன் முகத்தில்தான் எவ்வளவு கம்பீரம்? கம்பீரமா, ஆணவமா? மகன் நல்ல பணி யில் அமர்ந்து விட்டால், அவனுக்கு மண்முடித்துவிட வேண்டும். மகள் இன்னும் இரண்டு வருடங்களில் படிப்பை முடித்து விடுவாள். அவளையும் ஒரு சிறப்பான பணியில் அமர்த்தி, பொறுப்பானதும் மேன்மையானதுமான வேலையில் இருத்திவிட வேண்டும். அப்புறம் என் கடமைகள் யாவும் முடிந்து விடும்….. பிறகு…’
குமரன் பல்வேறு சிந்தனைகளோடு தன் அருகில் அமர்ந்திருக்கும் மனைவியைப் பார்த்தார். கரைகளில் சிவப்பு ரோஜாக்களைக் கொட்டியிருந்த வெண்ணிறப் பட்டுப் புடவையில் தேவதைபோல வீற்றிருந்தாள் இராசாத்தி. இயற்கையிலேயே நீண்ட, அடர்த்தியான கூந்தல் இடுப்புவரை நீண்டிருக்கும். இன்று அந்தக் கூந்தலை மிக நேர்த்தியான கொண்டையாக முடித்து, இரட்டை ரோஜாக்களை வலப்பக்கமாகச் சூடியிருந்தாள். முகத்தில் அளவான மேல்பூச்சு. கர்மயோகி போல அமர்ந்து மேடை நிகழ்ச்சிகளில் கண்பதித்திருந்தாள். முகத்தில் எவ்விதமான சலனமுமில்லை.
“அப்பா, இன்று பல்கலைக்கத்தில் ஒரு முக்கியமான விழா இருக்கின்றது. மாணவர்களான நாங்கள் கண்டிப்பாகக் கலந்துகொள்ளவேண்டும். நீங்களும் வாங்க!” என்ற சங்கீதாவின் இடைவிடாத நச்சரிப்புக்காகத்தான் இங்கு குமரனும் கல்யாணியும் வந்திருந்தனர். போனால் போகிறதென்று இராசாத்தியையும் உடன் அழைத்து வந்திருந்தனர்.
தேசியகீதம், தமிழ்வாழ்த்து, பரதநாட்டியம், வரவேற்புரை, தலைமையுரை, தகவல்துறை அமைச்சரின் சிறப்புரை என்று எதுவுமே குமரனையும் கல்யாணியையும் கவரவில்லை. சங்கீதா மேடையில் தோன்றப் போகின்றாள் என்ற எதிர்பார்ப்பு ஒன்று மட்டுமே மனதில் தேங்கி நின்றது. காலந்தாழ்த்தி வீடு திரும்பியதற்கான காரணம், இன்றைய விழாவில் கலைநிகழ்ச்சியைப் படைக்கவிருப்பதாகக் கூறியிருந்தாள். எனவே, ஆவல் மேலிடக் காத்திருந்தபோது, மின்னல் எஃப்,எம்.மின் தேசிய அளவிலான நாவல் எழுதும் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மூன்றாவது பரிசு, இரண்டாவது பரிசு என்று அறிவிக்கப்பட்டு, வெற்றியாளர்களின் புகைப்படங்கள் காணொலித்திரையில் தெரிந்தன. அவர்களுக்குரிய மாலை, மரியாதை முதலியன நடந்தேறின.
தொடர்ந்து, “முதல் பரிசைத் தட்டிச் செல்லும் நாவல் ஆசிரியை திருமதி செந்தாமரை” என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மேடையின் காணொலித்திரையில் தோன்றிய புகைப்படத்தைப் பார்த்து கல்யாணி திடுக்கிட்டாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மேடையில் இராசாத்தி வந்து நின்றாள்! அவள் எப்போது மேடைக்குச் சென்றாள்?
குமரனும் அன்பரசனும் விழிகளை இமைக்கவும் மறந்தனர். அன்பரசனின் நண்பர்கள் ஆர்ப்பரித்து கரவோசை எழுப்பினர்!
சங்கீதாவின் கலகல சிரிப்பு நின்றது. இதயம் துடிக்க மறந்தது.
‘பையித்தியம்’ என்று எள்ளி நகையாடிய தன் தாயா புகழ்பெற்ற எழுத்தாளர் செந்தாமரை?’ மனம் குன்றியவளாகத் தாயைப் பார்த்தாள். இராசாத்திக்குப் பொன்னாடையும் மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது. நாட்டின் தகவல்துறை அமைச்சரின் கரங்களால் நினைவுப்பரிசும் ஊக்குவிப்புத் தொகை பத்தாயிரம் ரிங்கிட்டும் வழங்கப்பட்டது.
“நீங்கள் எழுதுவதற்கு ஊக்கமும் உற்சாகமும் தந்தவர்களைப்பற்றிக் கூறுங்கள்”. விழா நெறியாளர் ஆவலுடன் இராசாத்தியைப் பார்த்தார்.
மேடையிலிருந்து முன்னூற்றி அறுபது பாகையில் இராசாத்தியின் பார்வை பொதுமக்களை அளந்தது.
“நான் எழுதுவதற்குக் காரணம் என்னுடைய இனிய தோழி, வானொலிப்பெட்டியும், எழுத்துலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்திய மின்னல் எஃப்.எம்.பண்பலையும்தான். எனக்கு ஒவ்வொரு நாளும் உற்சாகம் தந்து எழுதத் தூண்டியவர்கள் என்னுடைய குடும்பத்தினர்! அவர்களுக்கு இவ்வேளையில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இராசாத்தி கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் முகத்தில் அறைந்தாற் போலிருந்தது குடும்பத்தினருக்கு. குறிப்பாக சங்கீதாவுக்கு. தாயைப் பார்த்தாள். ‘பையித்தியம்’ என்று ஒதுக்கப்பட்ட தாய், சதா அடுப்பங்கரையே கதி, வீட்டின் புழக்கடைப்பக்கமே உலகம் என்று அடைந்து கிடந்தவள், இன்று அண்ணாந்து பார்த்தாலும் எட்ட முடியாத இமயமாக உயர்ந்து நிற்கின்றாள்! அவள் எங்கே? அந்தத் தாயின் உன்னதத்தையும் சிறப்பையும் புரிந்து கொள்ள கடுகளவுகூட முயற்சி செய்யாத தான் எங்கே?
உடல் கூனிக்குறுக, நெஞ்சு நடுநடுங்க, விழிநீர் பார்வையை மறைக்க, தாயை நோக்கிக் கரங்களைக் குவித்தாள். இராசாத்தி பெற்றமகள்.

எழுத்து: என்.துளசி அண்ணாமலை,BSc,SMP,PMC.
No;484, Jalan Kemboja, Taman Marida 70450 Senawang,
Negeri Sembilan, Malaysia
Tel/Fax:066789627 HPh.No:006-016-9788567

Series Navigationகிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுதுமொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *