ஓநாய்கள்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 2 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

   மு. தூயன்

முதல் நாள் பெய்த மழையில் பஸ் ஸ்டாண்ட் கசகசவென்று சகதியாகயிருந்தது. பஸ் உள்ளேயும் மிதமான வெப்பம் பரவியிருந்தது. வெளியேயிருக்கும் புழுக்கத்திற்கு இது மேலும் வெப்பத்தை அதிகப் படுத்தியது.எப்போதும் அமரும் இடத்தில் இன்று வேறு ஒருவர் இருந்தார். அவள் அவருக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தாள். ஜன்னல் கண்ணாடியை தள்ளிவிட்டு மெதுவாக காற்றை உள்வாங்கினாள். இரவு மழைக்குப்பின் விடியும் பகல், நகரத்தை புதிதாகவே காட்டுகிறது. கட்டிடங்களும், தார்சாலைகளும், மரங்களும் புதுவண்ணம் பூசியது போல அவளுக்கு தெரிந்தது. டிரைவர் சீட்டில் ஏறி உட்கார்ந்ததும், அவள் தன் இடதுகையை திருப்பி வாட்சைப் பார்த்தாள் அது சரியாக 8.10 ஐ காட்டியது. பஸ் மெதுவாக அசைந்து பஸ்ஸ்டாண்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தது. அதற்குள் சம்ஸாதட்டுக்காரனும், பாப்பின்ஸ் பையனும் பின்பக்கமாக இறங்கி ஓடினார்கள்.

புதுக்கோட்டையிலிருந்து சரியாக நாற்பது நிமிடத்தில் பஸ் அறந்தாங்கி சென்றுவிடும். சிலநேரம் ஐம்பது நிமிடம் வரை ஆகும். அதற்குள் அன்றைய தினசரியை முழுமையாக படித்துவிடுவாள். சிலநேரம் தினசரியை சீக்கிரம் முடித்துவிட்டாலும் போரடிக்காது ஹேண்ட்பேகில் ‘பொன்னியின் செல்வன்’ வைத்திருப்பாள்.

ஜன்னலிலிருந்து வந்த எதிற்காற்றில் கலைந்து பறந்தது தலைமுடி. கண்ணாடியை தள்ளமுற்பட்டபோது ‘காத்து வரட்டுங்க’ என்றாள் பக்கத்தில் இருந்தவள்.மடியிலிருந்த தினசரியை புரட்ட ஆரம்பித்தாள். காற்றில் அது அடங்காமல் பஸ்ஸின் உள்ளே கொடிபோல பறந்தது. சேலையைப்போல் நான்காக அதை மடித்துக்கொண்டு படிக்கத்தொடங்கினாள். இரண்டாவது பக்கத்தை புரட்டியபோது கண்டக்டர் வந்தார். அவள் நிமிர்ந்து பார்த்ததும் அவர் டிக்கட்டை கொடுத்;தார். கையில் சுருட்டி வைத்திருந்த இருபது ரூபாயை நீட்டினாள்.

‘எந்த ஊர்,எந்த ஸ்டாப் எல்லாம் அவருக்கு தெரியும் பயனிகளின் ‘மாமுல் ஸ்டாப்’ அவருக்கு தெரியாதா என்ன?..’ அவளும் ஐந்து வருடமாக அதே பஸ்ஸில் தான் போகிறாள். தினசரியில் அவள் எப்போதும் படிக்கும் ‘தலையங்கத்தை’ முடித்துவிட்டு மற்றபக்கங்களை மேலோட்டமாக பார்த்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் எரிச்சலுற்று நாலாக மடித்து, ஹேண்ட்பேகின் மீது வைத்து கையால் அழுத்திப்பிடித்து ஜன்னல் வழியே காட்சிகளை பார்க்க ஆரம்பித்தாள். மணி 8.20 யைத் தாண்டிருக்கும்…பஸ் அண்ணா சிலையை கடந்து சென்றுகொண்டிருந்தது.

அவளுக்கு பின்புறமாக ஓடிமறையும் வீடுகளையும், தெருக்;களையும் வேடிக்கைப் பார்த்தவாறே இருந்தாள். இந்த ஊருக்கு அவள் மாற்றலாகிவந்த ஐந்து வருடத்தில் இந்த நகரம் மெல்ல மெல்ல மாறிவருவதை அவளாள் உணரமுடிந்தது. புதிய கட்டிடங்கள், கடைகள், காம்ளக்ஸ்கள் என ரோட்டோரத்தில் இருந்த எத்தனையோ மரங்களுக்கும்,வயல்களுக்கும் பதிலாக முளைத்து வருவதை நினைத்தாள்.

ஜன்னல் வழியே பார்வையிருந்தாலும் ஏதோ ஒன்று நினைவில் முட்டி முட்டி அதை களைத்தது. மீண்டும் தினசரியை புரட்டி அந்த செய்தியைப் பார்த்துவிட்டு பழையபடி நாலாகமடித்து வைத்துக்கொண்டாள். பஸ் முன்னோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தது…..

 

அப்போதெல்லாம் அவளுக்கு செல்வி அக்காதான் எல்லாமே. ஸ்கூல் முடிந்து வந்தவுடனே “செல்வியக்கா செல்வியக்கா” என்று கூப்பிட்டபடியே தேடிக்கொண்டு செல்வி வீட்டிற்குதான் வருவாள். இவளுக்காகவே செல்வி காத்துக்கொண்டிருப்பாள். வந்ததும் பள்ளிக்கூட பையை பிடுங்கி அதிலிருந்து ஜாமெண்டிரி பாக்ஸில் இருக்கும் நாவல் பழத்தை திண்பதுதான் அவளுக்கு முதல் வேலை. நாவல் பழத்தை செல்வி திண்பதை பார்பதற்கே அவளுக்கு ஆசையாக இருக்கும். இடதுகையில் கல் உப்பை இறுக்கி மூடிவைத்திருப்பாள் தயாராக.       கல் உப்பில் பழத்தை ஒற்றி ஒற்றி உள்ளே தள்ளுவாள். ஒவ்வொரு பழத்திலும் இரண்டு மூன்று உப்புக்கல் ஒட்டியிருக்கும். பழத்தை விதையோடு முழுங்கிவிடுவாள். பழம் உள்ளே போகும்போது அக்கா முகம் சுருங்கி பின் விரியும். அதைப்பார்க்கும் போது அவளுக்கே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.

 

“ யே அயிலா நாளைக்கும் நெறையா பொறக்கிட்டு வாடீ” என்று தின்று முடித்துவிட்டு வீட்டுக்கு ஓடிவிடுவாள். செல்வி ஸ்கூலுக்கு போவதுகிடையாது. வயதுக்கு வந்ததிலிருந்தே அவள் அம்மா லெட்சுமி அவளை ஸ்கூலுக்கு அனுப்பவதில்லை. பதினான்கு வயதுதான். அக்கா, அவளைவிட நான்கு வயதுதான் பெரியவள். அவளுடைய அம்மாவிற்கு ஒரே மகள். செல்வி அப்பா இறந்து ஆறுவருடமாக அவளுடைய வீட்டிற்கு அருகேதான் இருந்தார்கள். லெட்சுமியம்மா கூலி வேலைக்கு செல்கிறாள். செல்வி பக்கத்திலுருந்த ‘பீங்கான் கப்’ கம்பெனியில் வேலை பார்த்தாள். அகிலா வீடு சின்னதுதான் ஓடுவேய்ந்தது. செல்வி வீட்டைவிட சற்றே அகலம் பெரியது. எப்போதும் அவள் செல்வி வீட்டில்தான் படுத்துக் கொள்வாள். காலையில் எழுந்தவுடனே லெட்சுமி அம்;மா ஏசுவாள் ‘யாருடீ ராத்திரி ஒன்னுக்கு பேஞ்சது’ இரண்டுபேரும் ‘க்ளு’கென்று வாயைப்பொத்திசிரிப்பார்கள்.

“ஏன்டீ அயிலா நீயாத்தா இந்த வேல பாத்தது.. இந்தா ஒங்கம்மாகிட்ட சொல்றேன். காட்டுக்கு ஓடுங்கடி நாத்தம் புடிச்சவளுகளா..” ஒவ்வொருநாளும் ஏசியபடியேதான் விடியும்.

 

அன்றைக்கு சாயந்தரம் வீட்டிற்கு வந்ததும் செல்வியை காணாமல் தேடினாள்;. ரொம்பநேரம் தேடியும் காணாததால் அழுகையேவந்தது. அம்மாகிட்ட கேட்டபோது ‘வேலை முடுஞ்சு வருவா நீ பேசாம கெட’என்றாள். ராத்திரி முழுதும் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து ரோட்டையேப்பார்த்துவிட்டு பின் வீட்டிற்குள் வந்து படுத்தாள். காலையில்; செல்வியின் குரல் கேட்டதும் சந்தோசமாக துள்ளினாள். அக்காவைப்பார்த்ததும் ஏதோ இனம்புரியாத ஏக்கம் வந்தது. அவளும் அக்காவும் சவுக்கு காட்டுக்கு வெளிய இருக்க(காலை கடன்) போகும்போது அக்காதான் கேட்டாள்;;

“ராத்திரி முழுச்சிருந்தியா”

“ஆமா”.

செல்வி எதிரேயிருந்த புதருக்குள் சென்று அமர்ந்தாள்.

“நேத்து நானும் எங்கம்மாவும் கல்யாணியக்கா மவளுக்கு தண்ணி ஊத்தறக்கு போனோடீ. எம்புட்டு வலையளு தெரியுமா?… எத்தன நெய்பாலிசு, பொட்டு பாக்கெட்டுடீ.. ஒன்னு ரெண்டு இல்ல ஒருகடையே இருந்துச்சு…”

“நெறையாவா..கொலுசு?”

“ம்….நாலு கொலுசு, நுறுவலவி, அம்பது மஞ்ச… ஏன்டீ கண்ணாடியிருக்கா ஒங்க வீட்டுல மொகம் பாக்கறது?”

“ம்….;”

“எத்தன”

“ஒன்னுதான்”

“அங்க பத்து கண்ணாடிங்க இருந்துச்சு. எனக்கு ஒரு கண்ணாடி ஒரு டசன் வலையலு, அப்றம் பொட்டு அம்மா எடுத்தாந்து கொடுத்துச்சு”

“அக்கா எனக்கு ரெண்டு வலவி குடு….சி;ன்ன பொட்டுனா அதுல ரெண்டு தா..”

செல்வி வேகமாக தலையாட்டினாள்.

அவளுக்கு கேட்கவே தோன்றியது மறைக்காமல் கேட்டாள்.

“அக்கா நீ வயசுக்கு வந்தப்ப இப்படிதான் நெறையா செஞ்சாங்களா?”

செல்வி முகம் சட்டென்று மாறியது. இல்லை என்பது போல் தலை அசைத்தாள். அவள் கேட்பதற்குள் செல்வியே சொன்னாள் “எங்கம்மாவுக்கு தான் யாருமே இல்லயேடீ. அப்பா இருந்தப்ப யாரு வீட்டுக்கும் கூட்டிப்போனது இல்ல”.

“வேற யாரு தண்ணி ஊத்துனாக்கா”

“எங்கம்மாதான்” என்றாள் .

அவள் அமைதியாயிருந்தாள். அக்கா அவளை ஓரமாக நிற்க சொல்லிவிட்டு தேங்கியருந்த சின்னகுட்டையில்; கை கால்களை அலம்பிவிட்டு வந்தாள். அக்கா வந்தவுடன் அவள் அலம்ப சென்றாள். செல்வி சவுக்கு மரத்தை பார்தவாறே நின்றாள். சின்ன சின்னதாய் சவுக்கு விதைகள் கீழே கொட்டிக்கிடந்தன. அவள் வரும்போது அவளிடம் காட்டுவதற்காக மடியில் பொறக்கி வைத்திருந்தாள். அவள் அக்காவிடம் கேட்டாள்.

“வேறு யாரும் ஏதும் வாங்கிதரலையா ஒனக்கு”

“எங்க அம்மாயி” சற்று மேலே பார்த்தபடி யோசித்தவாறு “ம்ம்ஆறு வலவி வாங்கியாந்து போட்டுச்சு அப்போ”

நடந்தபடியே சவுக்கு காட்டைவிட்டு வெளியே வந்தபோது வெயிலின் உச்சம் தெரிந்தது.

“எப்படிக்கா வயசுக்கு வருவாங்க” அவள்கேட்டதும் செல்வி வெட்கத்துடன் ‘துனு’க்கென்று சிரித்தாள். செல்வியக்கா சிரிப்பதைப்பார்தததும் அவளுக்கும் சிரிப்பு வந்தது.

“நீ பெரிய பொண்ணாறப்ப ஒனக்கு தெரியும். அப்ப நெறையா சோப்பு கண்ணாடி வலையலு கொலுசெல்லாம் வருந்தானே”

“இல்ல.. இல்ல.. எனக்கு கைமுழுக்க வலவி, அப்றம் நெத்திசூடி, டிக்கர்பொட்டு… இன்னும் இன்னும் நெறையா கேப்பேன்”. அவள் சொல்வரை செல்வி கேட்டுவிட்டு கண்கலங்கியபடி சிரித்தாள். காட்டுக்குள் ஆடு மேய்க்கும் கிழவி ஒன்று காய்ந்த வற்றல் போல நின்று பார்த்துகொண்டிருந்தது. “என்னத்த கண்டுபுட்டாளுக சிரிக்கிக இப்படி விழுந்து விழுந்து சிரிக்குதுக” என்று முனகிக்கொண்டே சென்றது. கிழவி சென்றதும் சிரிப்பு முன்னiவிட அதிகமாக எழுந்தது.

 

ஸ்கூலுக்கு போகும்போதும் அதே பேச்சு. அவள்தான் ஆரம்பித்தாள்.செல்வி பதில்சொல்லாமல் சிரித்தபடியே வந்தாள்.

ஸ்கூல் போகும் வழியில்தான் செல்வி வேலைபார்க்கும் அந்த கப் கம்பெனி. ஒரு தரம் அவளும் செல்வியைப் பார்க்க அங்கு போயிருக்கிறாள். ராட்ஸ குடோன் போல இருக்கும் அது. மாவு மிஷின் ஓடுவது போல சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும். வாட்ச்மேன்தான் அவளை அக்காகிட்ட கூட்டி போவான். செல்வி தலை கலைந்து பரட்டையாக இருப்பாள். முகத்தில் அழுக்கு பவுடராக பூசியிருக்கும். வீட்டில் பார்க்கும் அக்காவிற்கும் அங்கு பார்பதற்கும் நிறைய மாற்றமாக அவளுக்குத் தெரியும். அங்கு ‘வர வேண்டா’மென்று செல்வி அவளை கேட்டுக்கொண்டாள்.

ஸ்கூலில் அவளுக்கு அருகில் இருந்தவர்களிடமெல்லாம் அக்கா சொன்ன கல்யாணியக்கா மகள் சடங்கு விஷேசத்தை சொன்னாள். அவளும் கேள்விபட்டதை அவளுக்கு சொன்னாள். இப்படியாக ஸ்கூல் முழுவதும் ‘கல்யாணியக்கா மகள் சடங்கு’ பேச்சு அடிபட்டுக் கொண்டேயிருந்தது. எல்லோரும் அவரவருக்கு கேட்ட பிரம்மாண்டத்தை பரிமாறிக்கொண்டார்கள்.

ஸ்கூல் முடிந்து வந்தவுடனே அவள் கேட்ட கதையெல்லாம் செல்விஅக்காவிடம் சொல்லிமுடித்தாள். அத்தனை பிரம்மாண்டத்தையும் சொல்லி முடிக்கும் வரை அவளால் நிலைகொள்ள முடியவில்லை. செல்விக்கு அத்தனையும் அன்றைக்கே நேராக பார்த்திருந்த போதிலும்; இமைவிரிய கேட்டுக்கொண்டாள்.

 

அவளுக்கு அன்று இரவு தூக்கம் பிடிக்கவில்லை. எப்போதாவது இப்படி செல்வி வீட்டில் படுக்கின்றபோது தூக்கம் வர நேரமெடுக்மெனத் தெரியும். படுக்கையருகில் செல்வியக்காவுக்கு தந்திருந்த கண்ணாடி வளையலும்ää பொட்டும் கிடந்தது. நெடுநேரம் அதனை கலட்டி மாட்டியபடியே படுத்திருந்தாள். நடுநிசியில் மெதுவாக தூக்கம் வந்தது…….

அவளைசுற்றி பெரியம்மா சித்தி பாட்டி என எல்லோரும் நின்றார்கள். அவள் கைமுழுவதும் வளையலும், முகத்தில் சந்தனம், கால்களில் வெள்ளி கொலுசும் இருந்தது. சிவப்பு பச்சை கலந்த சேலை அணிந்திருந்தாள். செல்வியக்கா அவளுக்கு பின்புறம் நின்றுகொண்டு தலைக்கு பூ தைத்து அலங்காரம் செய்துகொண்டிருந்தாள். சித்தியும்,அத்தையும் அவளுக்கு வந்;த சீர் வரிசைகளை அடுக்கி கொண்டிருந்தார்கள். வலையள் மோதும் சத்தமும், கொலுசு சினுங்கும் ஒலியும் ‘கிணுங் கிணுங்’கென்று காதில் கேட்டது. திடுக்கென்று எழுந்தாள். வெளியே கழுவிவிட்டது போல் வாசல் பாதையும் தெளிந்திருந்தது. தூங்கியெழுந்ததே தெரியவில்லை. செல்வி வீட்டு வாசலில் சாணியை உருட்டி கூடையில் அள்ளிக்கொண்டிருந்தாள்.

“ஏய் அகிலா ஒங்கம்மா கூபுடுதுடீ” லெட்சுமி அம்மா கத்தினாள். அவள் ஓடும்போது அக்கா காதில் கிள்ளிவிட்டு ஓடினாள்.அன்று முழுவதும் அந்த கiவே அவளுக்கு நினைவில் வந்து சென்றது.

 

ஸ்கூல் முடிந்து வந்ததும் அவளுக்கு வயிற்றுவலி அதிகமாகயிருந்தது காட்டுக்கு போக நின்றாள். “ஒனக்கு நேரங்காலமே இல்லடீ” அம்மா அவளை திட்டியபடி செல்வியையும் துணைக்கு கூட்டிப்போகச் சொன்னாள். வானம் இருள் கவ்வத்தொடங்கியது. பௌர்ணமிக்கு இன்னுமொரு நாளே இருந்தது. ஓரத்தில் கடித்து மிச்சம் வைத்த ரொட்டித்துண்டைப்போன்று நிலா சிரித்;துக்கொண்டிருந்தது. அந்த சிறிய வெளிச்சத்தில் ஸ்கூல் கதைகளை பேசிக்கொண்டு சிரித்தபடியே நடந்தார்கள். செல்வியிடம் அவள் கண்ட கனவை சொன்னாள். அவளும் ‘அப்றம்’ என்று கேட்டபடியே வந்தாள். இடையிடையே வாயைப் பொத்தி அடக்கமுடியாமல் செல்வி சிரித்;து விட்டாள்.

செல்வியை ஓரமாக நிற்க சொல்லிவிட்டு அவள் மட்டும் மறைவாக சென்;றுஅமர்ந்தாள்.

 

சவுக்கு காடு பெரும் இருள் சூழ்ந்ததுபோல இருந்தது. வெளியே இருக்கும் வெளிச்சத்தை உள்ளே புகவிடாமல் மறைத்திருந்தது. அவளுக்கு உள்ளுர ஒரு பயம் பிடித்தது. அடிக்கடி ‘செல்வியக்கா’ என்று கூப்பிட்டபடியே அருகிலிருப்பதை உறுதி செய்து கொண்டாள். செல்வியும் ‘இருக்கன் இருக்கன்’ என்று சொல்லும் போது சிரித்துக்கொண்டாள். எப்போதும் இறங்கும் பள்ளத்திற்குள் சென்று தண்ணிரில் கால் கழுவிக்கொண்டிருக்கும்போதுதான் அந்த அலறல் கேட்டது. திக்கென்றது அவளுக்கு. ‘அக்கா’வென அலறியபடி இருளில் தேடினாள். கண்களை சுருக்கி தெளிவான பார்வைக்கு வர முயன்றாள். சரசரவென சவுக்கு சருகுகளின் நொருங்கும் சத்தம்; நாலப்பக்கமும் எதிரொலித்தது.

கொன்றுபோட்ட காட்டுபன்றியை இழுத்து போவது போல யாரோ செல்வியக்காவை வாயைப்பொத்தியபடியும் இன்னொருவன் காலை பிடித்தும் இழுத்து போவது தெரிந்தது. அதை பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவளுக்கு உடல் வியர்த்து, நாக்கு உள்ளிழுக்கப்பட்டு வார்த்தை வராமல் செய்தது. அந்த இரண்டு மிருகங்களும் வேட்டையாட எத்தனித்தது. செல்வி அதிலிருந்து மீள பலம் கொண்டு திமிறினாள். கையாள் நிலத்தை ஓங்கி ஓங்கி பலமுறை அறைந்தாள். பசி கொண்டு அலையும் மிருகத்தை போல் செல்வியை கிழித்து எறிந்தார்கள்….அவளுக்கு கண்கள் மறைத்தது. தாடை ரெண்டும் ஒட்ட முடியாமல் திறந்திருந்தது. தூரத்தில் அவர்களின் கண்கள் அவளுக்கு இருளிளும் லேசாக தெரிந்தது. கொடிய குரூர பாய்ச்சலை அவர்களின் கண்களில் பார்த்தாள்.. நாக்கு நீண்டு கோர பற்களோடு திரியும் ஓநாயைப் போலிருந்தது. அவர்கள் மனிதர்கள்தான் என்பதே ஒரு கணம் அவளாள் நம்பமுடியவில்லை. நடப்பது ஒரு கணவாக முடிந்துவிடுமென்று நினைத்த போதிலும் செல்வி விம்மி விம்மி அழும் சப்தம் கேட்டது. செல்வியை அழ கூட அவர்கள் அனுமதிக்கவில்லை.. வாய் பொத்தியிருந்தார்கள். அவளால் அதைப்பார்க்க முடியவில்லை. தொண்டை அடைப்பது போலிருந்தது கண்கள் இருட்ட ஆரம்பித்தது பக்கத்திலிருந்த சவுக்கு மரத்தை விழாமலிருக்க பலம்கொண்டு பிடித்துக்கொண்டாள். பார்வை முழுவதும் மறைத்தது……

சிறிதுநேரத்தில் உயிர் வந்தவளாக எழுந்து செல்வியைத் தேடினாள். செல்வி ‘அயிலா அயிலா’என முனகியபடி கிடந்தாள். செல்வியக்காவின் பாவாடை கிழிந்து மார்பில் படர்ந்திருந்தது. கால்கள் வழியே குருதி வழிந்திருந்தது. தலைமுடி சருகும், மண்ணுமாக கிடந்தது. அவள் அக்காவை பிடித்து அழுதாள். உடம்பு முழுதும் சாராய நெடி வீசியது. அவள் அழ தெம்பில்லாமல் முனகமட்டுமே செய்தாள். மெல்ல தூக்கிய போது செல்வி வீறிட்டு அழுதாள். கை எழும்பு முறிந்திருந்தது. ரோட்டுக்கு ஓடிவந்து கத்தினாள். கட்டட வேலை முடித்து திரும்பிக்கொண்டிருந்த சித்;தாள் பெண்கள் நான்கு பேர் வீட்டுக்கு தூக்கி வந்து சேர்த்தார்கள்.

ஊரே கூடியது. லெட்சுமியம்மா தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். அவளால் எதையும் பார்க்க முடியாமல் அம்மா மடியில் படுத்து அழுதாள். கரும்பு ஏற்ற நின்றிருந்த ஒரு ட்ராக்டரில் பெரியாஸ்பத்திரிக்கு தூக்கிப்போனார்கள். ஒருவாரத்துக்கு பிறகு கூட்டிவந்தார்கள். ஊர் ஜனமெல்லாம் தினம் தினம் வீட்டிற்கு வந்து அவளை பார்த்துவிட்டு சென்றார்கள்..

அவள் ஏதும் சாப்பிடாமல் உடல் மெலிந்து நோயாளியைப்போன்று கிடந்தாள். போலிஸ் ஆட்கள் நான்கைந்து பேர் அடிக்கடி வந்து சென்றார்கள். பத்திரிக்கையிலும் அவளைப் பற்றி எழுதியிருந்ததாக ஸ்கூலில் பேசிக்கொண்டார்கள். அம்மா அவர்களை அடையாளம் காட்ட வேண்டாமென்று கெஞ்சினாள்

“காவாளி பயலுக ஒன்னயும் கண்ணு வெப்பானுக. நி கடகன்னிக்கு போகும்போது தாயளிக ஒன்னயும் நாசம் பன்னருவாங்கே”. என்று அப்பாவும் அவளிடம் கூறினார். ஒருமாதம் அவள் பிரம்மை பிடித்தபடியே இருந்தாள். கொஞ்ச நாளில் செல்வி குடும்பம் ஊரை காலிசெய்து போனார்கள். வெளியே எங்கும் அவளை அனுப்பவில்லை. அடைத்து வைத்தது போல இருந்தாள்.

வயதிற்கு வந்தபோதும் தண்ணிர் ஊற்ற செல்வியக்காவை கூட்டிவர கேட்டு அம்மாவிடம் அழுதாள். அம்மாவும் கூட்டிவருவதாக சொன்னாள். ஆனால் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று யாருக்;குமே தெரியவில்லை.

பின்னொறு நாளில் அவள் சவுக்கு காட்டை பார்க்கும் போதெல்லாம் இரத்தகறையோடு வாய்திறந்திருக்கும் ஒரு பெரும்   அரக்கனின் கோர முகமே தெரிந்தது. அப்போது அவள் உடலெங்கும் நாற்றமடித்த புழுக்கள் நெளிவது போலிருக்கும். அந்த காட்டிற்குள் எங்கிருந்தோ செல்வி அக்காவின் அழுகுரல் அவளுக்கு கேட்டுக்கொண்டேயிருந்தது.

இன்றைக்கும் எத்தனையோ முகங்களை பார்க்கும்போது செல்வியக்காவின் முகத்தை அவள் தேடுவாள். காய்கறி விற்பவள், சோளகருது விற்பவள், வெள்ளரி கூடை, இடுப்பில் குழந்தையோடு ரோட்டைக் கடக்கும் பெண்கள்…….

எங்காவது செல்வியக்காவின் முகம் பார்த்தால் ஓடி சென்று அவளை கட்டிக்கொண்டு அழ வேண்டுமென நினைத்திருந்தாள்.

பஸ் அறந்தாங்கி வந்ததும் தினசரியை சுருட்டி சீட்டில் வீசிவிட்டு இறங்கினாள். பஸ் ஸ்டாண்ட் சேறும், சகதியுமாய் நாற்றமெடுத்தபடியிருந்தது..

 

—————————————————————————————————-மு.தூயன்

Series Navigationஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா ?திருக்குறளில் இல்லறம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *