இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

This entry is part 5 of 22 in the series 27 செப்டம்பர் 2015

கோவையில் வசித்து வரும் இளங்கோ கிருஷ்ணன் [ இயற்பெயர் ; பா. இளங்கோவன் ] வரி ஆலோசகராகப் பணிசெய்து வருகிறார். ஃறிணை

என்ற பெயரில் கவிதைகள் , கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ பட்சியன் சரிதம் ‘ இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. இதில் 43

கவிதைகள் உள்ளன. இவரது கவிதை இயல்புகள் [ 1 ] புனைவு [ 2 ] எல்லாவற்றையும் கவிதையாக்க விரும்பும் ஆர்வம். [ 3 ] வித்தியாசமான

சிந்தனைகள் எனலாம்.

புத்தகத்தின் தலைப்புக் கவிதை , ‘ பட்சியன் சரிதம் ‘ இதில் சிறிய ஆறு பிரிவுகள் உள்ளன. அதிக புனைவு காணப்படுகிறது. ‘ பீடிகை ‘

என்னும் பிரிவுடன் தொடங்குகிறது. கவிதை

 

நான் நினைத்திருக்கவில்லை

விரும்பிய இடத்திற்கு

எனை அழைத்துச் செல்லும்

சிறகுகள் எனக்கு முளைக்கும் என்று

எனக்குத் தெரியாது

நான் ஒரு பறவை

ஆகிக்கொண்டிருக்கிறேன் என்று

இது ஒரு மந்திரக் கிணறு என்பது

தெரியாமலே இதன் நீரைப் பருகினேன்

……. நீர் பருகியதால் கவிதை சொல்லியின் மிருகம் விழித்துக் கொள்கிறது. இறுதியில் மேகங்களைப் பிழிந்து குடித்து , பறவை மேகங்களுக்கு மேல் பறக்கிறது. இக்கவிதையில் தேவையில்லாமல் பீடிகை , சூதுரை காதை , மனமுரை காதை , அலருரை காதை – முதல்

காண்டம் , அலருரை காதை – இரண்டாம் காண்டம் , அந்தம் என்ற பிரிவுகள் காட்டப்படுகின்றன. கவிதைத் தலைப்பிலுள்ள ‘ சரிதம் ‘ என்ற

சொல் காட்டும் பரப்பில் கவிதை சொல்லி இட்டு நிரப்பும் செய்திகள் மிக மிகக் குறைவு . கனவு என்பதால் கோவையாக சிந்தனைகள்

அமைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பது கவிதைப் போக்கில் தெரிகிறது

‘ கனவுகளைப் பற்றிய விளக்கங்கள் ‘ என்றொரு கவிதை. மனிதர்கள் அதிகம் கனவு காண்கிறார்கள். ஒரு கனவு முடிந்தால் அடுத்த

கனவு தொடர்கிறது என்பதே இக்கவிதைக் கரு. மற்றபடி குறிப்பிட்டுச் சொல்ல கவிதையில் ஒன்றுமில்லை.

‘ யுரேகா…யுரேகா’ என்ற கவிதையில் வன்முறைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்படுகிறார்கள்

ஆண்களின் குறி வெட்டப்படுகிறது.

கர்ப்ப ஸ்திரீகளின் வயிறு கிழிக்கப்பட்டு

சதைப் பிண்டங்கள் ரத்தச் சகதியோடு

கொளுத்தப்படுகின்றன.

முதியவர்களின் கபாலம் சிதறடிக்கப்படுகிறது.

குழந்தைகள் பிய்த்தெறியப்படுகிறார்கள்

நகரம் சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது.

…….. மேற்கண்ட தகவல்களின் இடையிடையே , ‘ ஆர்கிமிடிஸ் பூமியைப் படித்துக் கொண்டிருக்கிறான் ” என்ற வரி கணப்படுகிறது.

கொடுமைகளின் மேல் ராணுவம் என்ற முத்திரை இருப்பதால் , வங்கொடுமைகள் இலங்கைச் சம்பவங்ககளை நினைவூட்டுகின்றன.

‘ ஆர்கிமிடிஸ் ‘ குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எண்ண முடிகிறது. விழிப்புணர்வு இல்லாத , எதற்கும் தலையைத் தொங்கப்போட்டுக்

கொண்டு செயல்படாமல் இருக்கும் மௌனத்தை இக்குறியீடு இடித்துக் காட்டுகிறது.

‘ வீடு ‘ என்ற கவிதையில் கட்டமைப்பு சீராக உள்ளது. குறியீடு சார்ந்த தத்துவப்பூச்சோடு கவிதை அமைந்துள்ளது.

கண்ணாடி ஓட்டின் வழி

நுழையும் ஒளிக்கற்றைகள்

எதைத் தேடி நகர்ந்துகொண்டிருக்கின்றன

எங்கிருந்தோ வரும்

ஒளிபோல் இருள்போல்

அனுப்பப்பட்டேன்

…… கடைசி மூன்று வரிகளில் ஒரு வகையான திணிப்பு தெரிகிறது. தன் விருப்பம் புறக்கணிக்கப்பட்டதுபோல் இருக்கிறது.

நிச்சலனத்தின் சிறு துடிப்பாக

என் அறையில்

மெல்ல வளர்ந்துகொண்டிருக்கிறது

கொடும் பாலை ஒன்று

அதன் வெக்கை தாளாது

மண்ணுள்ளிபோல்

ஊர்ந்து வெளியேறுகிறது இந்நாள்

……. வீடு பாலையாய்த் தகிப்பது ஏன் ? அவனுக்கு ஒரு பிரிவு துயரமளிக்கிறது. அது எதுவாக இருக்கும் ?

கனவில் ஒலிப்பதுபோல்

கசியும் மெல்லிய இசையை

மீட்டும் அரூப விரல்களைத்

துரத்திக்கொண்டோடும் பைத்தியமே

உன் வீடு நகரத்தை விட்டு

வெகு தூரம் போய்க்கொண்டிருக்கிறது என்பதறி

 

……. கவிதையில் பேசப்படுபவன் மனைவியை இழந்தவனாக இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. ‘ நீ தனிமைப்பட்டுவிட்டாய் ‘ என்ற

தகவல்தான் கடைசி இரண்டு வரிகளாகச் சொல்லப்பட்டுள்ளன. ‘ பாலை ‘ குறியீடாக அமைந்துள்ளது. கவிதையின் கட்டமைப்பில் ஒரு

நேர்த்தி கணப்படுகிறது.

‘ அநாதரவு ‘ என்ற கவிதையில் சமூக அவலம் ஒன்று பதிவாகியுள்ளது. மதுவின் கொடுமை வருத்துகிறது. சிறு குழந்தையைத்

தூக்கிக்கொண்டு மதுக்கடைக்குச் சென்று குடித்திவிட்டு விழுந்து கிடக்கிறான் ஒருவன். அவன் சுய நினைவில் இல்லை. குழந்தையோ

அழுகிறது.

‘ தாண்டவம் ‘ யாரும் எழுதாக் கருக்பொருள் கொண்டது. எளிமையானது ; அவசியமான சொற்கள் இடம் பெறுகின்றன. எனவே அழகு

வெகு இயல்பாய்க் கவிதையைக் கட்டமைக்கிறது.

ஒன்றை ஒன்று தொடாதவாறு

அருகருகே நடப்பட்டிருக்கின்றன

இரண்டு வேர்கள்

ஒன்று சக்தி

மற்றொன்று சிவம்

 

இரண்டின் நிழல்களும்

ஒன்றன்மீது ஒன்றாகக்

கிடக்கின்றன தரையில்

சிவம் இதழ்பிரியும் மலராக

 

வெயிலில்

புரண்டு

புரண்டு

பின்னிக்கிடக்கிறார்கள்

 

 

சூரியன்

சரியச்

சரிய

திடீரென

நீண்டு கொண்டே போகிறாள் சக்தி

துரத்திக் கொண்டே போய் சிவம்

மூச்சிரைத்துக் கொண்டிருக்க

அந்தி வருகிறது

இருளில் மறைகிறார்கள் இருவரும்

……. எல்லோரும் பார்த்த காட்சிதான். இங்கே கிருஷ்ணனின் விசேஷ பார்வையில் கவிதை பதிவாகியுள்ளது, பெண்மைக்கு முதலிடம்

அளிக்கப்பட்டுள்ளது. ‘ வீடு ‘ கவிதையைப் போலவே இதுவும் சிறப்பிடம் பெறுகிறது.

‘ என் ராஜாங்கத்தில் ‘ —- மூன்று பத்திகளைக் கொண்ட உரைநடை. தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

‘ உருளைக்கிழங்கு பொடிமாஸ் ‘ கவிதை ரசிக்கும்படியாக இல்லை.

இத்தொகுப்பு சில நல்ல கவிதைகளையும் பல சுமாரான கவிதைகளையும் கொண்டது.

Series Navigationஅவன், அவள். அது…! -3பொன்னியின் செல்வன் படக்கதை – 6

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *