’சாரல் விருது’ பெற்ற விழா மேடையில் விக்ரமாதித்யன் நிகழ்த்திய ஏற்புரை

This entry is part 22 of 22 in the series 27 செப்டம்பர் 2015

இனம் மொழி கவிதை
யாயும் யாயும் யாரா கியரோ
எந்தையுந் நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெய்ந்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
–    செம்புலப் பெய்ந்நீரார்
( ’குறுந்தொகை’ பாடல் :40 )
பதினைந்து வருஷங்களுக்கு மேலேயே இருக்கும்; ஆங்கில நாளேடு ஒன்றில் வந்த செய்தி; உலகமொழிகள் ஒவ்வொன்றிலிருந்தும் மாதாமாதம் ஒரு கவிதையைத் தெரிவுசெய்து – அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இணைத்து – லண்டன் மெட்ரோ ரயிலின் எல்லாப் பெட்டிகளிலும் இடம்பெறச் செய்வார்கள்; இந்த சங்கப் பாடலும் பேராசிரியர் ஏ.கே. ராமானுஜத்தின் மொழிபெயர்ப்பும் அப்படி வந்திருந்தன, அந்த மரத்தில்; திறமான புலனம்; வெளிநாட்டார் வணக்கம் செய்திருக்கிறார்கள்.
உள்ளபடியே, ஓர் இனத்துக்கும் மொழிக்கும் கிட்டும் ஆகப் பெருஞ் சிறப்பு இது; இது கவிதைவாயிலாக, செம்புலப் பெய்ந்நீரார் வழியே வந்தடைந்திருக்கிறது.
கவிதைதான் தமிழின் முழு முதல் அடையாளம்; தமிழனின் ஆதி இலக்கியச் செல்வம்; இந்தவகையில் கபிலர் முதல் இன்றைக்கு எழுதும் லிபி ஆரண்யாவரை ஒவ்வாரு கவிஞனும் மொழிக்குக் கொடை நல்குகிறான்; இனத்துக்குப் பெருமை சேர்க்கிறான்.
எதிர்காலத்தில், என் கவிதைகளுள் ஒன்று இதுபோல கௌரவத்துக் குரியதாகுமெனில் அதுதான் இந்த கவிவாழ்வின் பயனாகும்; பொருளாகும்.
விருதுகள், பரிசுகள் எல்லாமே, உண்மையிலேயே, கவிஞனை ஊக்கப்படுத்துவனதாம்; அதேவேளை, பொறுப்பைக் கொண்டுவருபவையும்  கூட ; எதிர்வரும் நாள்களில் இன்னும் செவ்வனே பணிசெய்ய இயற்கை அருள்புரிய வேண்டும்.
‘’நீங்கள் உண்மைக்கவிஞர்’’ என்று கடிதங்களில் எழுதி எழுதியே என்னை வளர்த்தெடுத்த நவீன இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான நகுலனையும், ‘’ விக்ரமாதித்யனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்‘’ என்று குறிப்பிட்ட பெரியவர் க.நா.சு.வையும் இந்த மன்றத்தில் நினைவுகூர்கிறேன்.
ராபர்ட் – ஆரோக்கியம் அறக்கட்டளையிலிருந்து சாரல் விருது வழங்கி மரியாதை செய்திருக்கும் இயக்குநர்கள் ஜேடி- ஜெர்ரி ஆகியோர்க்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
என்னிடத்தே ஒரு தனிப்பரிவும் பற்றும் கொண்டிருக்கிற, இங்கே வந்து ஞாபகப்பரிசு வழங்கியிருக்கிற, மதிப்பிற்குரிய இயக்குநர் பாலா அவர்களுக்கு எந்நாளும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
என் வாழ்க்கையில் அன்றிலிருந்து இன்றுவரை ஆக்கமே செய்திருக்கும் அன்புக்குரிய நக்கீரன் கோபால் அவர்கள் பொன்னாடை அணிவித்திருப்பது, பெருமகிழ்ச்சி தருகிறது; அவருக்குப் பட்டிருக்கும் கடன் தீர்க்கமுடியாதெனினும், நன்றிசொல்லும் மரபை விட்டுவிட முடியாதுதானே.
என் கவிதைகள் குறித்துப் பேசிய, வணக்கத்துக்குரிய மூத்தகவிஞர் ஞானக்கூத்தன், கலைவிமர்சகர் தேனுகா, இயக்குநர் கரு.பழனியப்பன், கவிஞர் சுகுமாரன், தேர்வுக்குழு உறுப்பினர்களான மா. அரங்கநாதன், கவிஞர் ரவிசுப்பிரமணியன் மற்றும் விழாவுக்கு வருகைபுரிந்த சக இலக்கியவாதிகள், வாசகர்கள் எல்லோர்க்கும் மனமார்ந்த நன்றி, வணக்கம்.
( ’சாரல் விருது’  பெற்ற விழா மேடையில் விக்ரமாதித்யன் நிகழ்த்திய ஏற்புரை)

Series Navigationமருத்துவக் கட்டுரை- தலை சுற்றல் ( Vertigo )

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *