அலைக்கற்றை ஊழல், நிலக்கரி பேர ஊழல் போன்ற இன்னும் பல்வேறு ஊழல்களில் கோடிக்கணக்கில் பணத்தை ஏப்பம் விட்டு எழைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டு இந்தியாவின் பொருளாதாரச் சீர்கேட்டுக்கு அடி கோலிய காங்கிரசுக்குப் பாடம் புகட்ட எண்ணி பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து அதை அரியணையில் அமர்த்தியது சிங்கத்திடமிருந்து தப்பிப் புலிவாயில் ஒருவன் சிக்கிய கதையைத்தான் நினைவூட்டுகிறது.
தெய்வம், தேசம் ஆகியவற்றக் காட்டிலும் மதத்தின் மீது அதிகப் பற்றுக் கொண்டவர்களுக்கு வாக்களித்தால் என்ன நேரும் என்பதை அக்கட்சியின் தலைவர்கள் அடிக்கடி உதிர்த்துக்கொண்டிருக்கும் உளறல்களிலிருந்து மிகத் தெளிவாய்ப் புரிந்துகொள்ள முடிகிறது. ராமஜென்ம பூமி சார்ந்த விஷயத்தில் மக்களுக்கு உள்ள ஈடுபாட்டால்தான் தங்களுக்கு வெற்றி கிடைத்தது என்கிற மிகத் தவறான மயக்க உணர்விலிருந்து பாஜகவினர் விடுபடப் போவதே இல்லை என்பதுதான் அவர்களின் திருவாய்கள் உதிரர்த்துக்கொண்டிருக்கும் உளறல்களிலிருந்து தெரிகிறது. ராமன் அவதார புருஷன் என்பதை நம்புகிற பெரும்பாலான இந்துக்கள் கூட அயோத்தியில் குறிப்பிட்ட இடத்தில்தான் ராமபிரானுக்குக் கோவில் கட்ட வேண்டும் என்றெல்லாம் வெறி பிடித்து அலையவில்லை. அவர்களுக்கு வேண்டிய, வயிறார மூன்று வேளை – இரண்டு வேளையாகிலும் – சோறு, பாதுகாப்பான உறைவிடம், உடை, கல்வி, வேலை ஆகியவற்றை ராவணன் திரும்ப வந்து கொடுத்தாலும் இந்துக்கள் ஏற்பார்கள் என்பதே உண்மை.
மக்களைக்காட்டிலும் மதத்தை அதிகமாய் நேசிக்கும் தலைவர்கள் மக்களையும் புரிந்துகொள்ளவில்லை, நல்லவற்றைப் போதித்த மதத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்பதே மெய்.
பிற மதத்தினரின் உணவுப்பழக்கத்தி லெல்லாம் தலையிட்டுக் கலகம் செய்யும் அதிகாரத்தை யார் இவர்களுக்குக் கொடுத்தார்கள்? மாட்டிறைச்சி சாப்பிட்டால் தப்பு. ஆட்டிறைச்சி சாப்பிடலமாமா? மற்ற உயிர்களை வதைத்து அவற்றை உண்பது மட்டும சரியாமா? மாடு தெய்வமெனில் அதை உன் மட்டுக்கு வைத்துக்கொள். மற்றவர்களும் அவ்வாறே கருதவேண்டுமென நிர்ப்பந்திக்க நீ யார்? இந்துக்களிலேயே சில இனத்தினர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்களே? அது தெரியாதா உனக்கு? உனக்குப் பிடிக்கவில்லை யெனில் நீ அதைச் செய்யாதே. உன் கருத்தின்படி பிற மதத்தினரும் நடக்க வேண்டும் என்று கூற நீ யார்?
அது சரி, இந்துக்கள் பசுக்களை அன்பாக நடத்துகிறார்களா? பசு தெய்வமெனில் அதன்பாலைக் கறந்து நாம் பருகலாமா? அதன் கன்றுகளுக்கே அந்த முழு உரிமையையும் தர வேண்டாமா? இந்துக் கோவில்களில் உள்ள பசுக்கள் எலும்புந் தோலுமாய் வற்றி வறண்டு கிடப்பது யாரால்? அவற்றை பராமரிக்கும் கடமையைச் சரிவரச் செய்யாமல் அவற்றைப் பட்டினிபோட்டு அந்தக் காசில் கொழுக்கும் இந்துக்கள் அன்றோ! மாட்டுக்கு ஊசி போட்டு அதிகப் பாலைக் கறக்கும் கொடுமையைச் செய்வோரை என்ன செய்யப் போகிறாய்?
தாத்ரியில் ஓர் இஸ்லாமியர் வீட்டில் மாட்டிறைச்சி இருந்ததாகத் தெரியவந்த தகவலின் பேரில் அவரைச் சில கொடும் பாவிகள் அடித்தே கொன்றிருக்கிறார்களே! மாட்டைக் கொல்லுவது பாவமெனில் அந்த அப்பாவி மனிதனைக் கொன்றது மட்டும் பாவம் ஆகாதா? இந்த அநியாயத்துக்காகப் பதறித் துடித்துக் கொலைகாரார்களைக் கண்டித்திருக்க வேண்டிய பிரதமர், அது பற்றி வாயே திறவாமல் இந்து-முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பிரசாரம் மட்டும் செய்தால் போதுமா?
ஊழலால் ஒரு நாட்டின் பொருளாதாரம் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகிறது. மதவெறி தூண்டப்பட்டு அது மிகுமானால், அதன் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும். ஆயிரக்கணக்கான மனிதர்கள் கொல்லப்படுவார்கள். பெண்கள் வன்னுகர்வுக்கு ஆளாவார்கள். குழந்தைகள் கூட விட்டுவைக்கப்பட மாட்டார்கள். தேசமே பல்லிடங்களில் தீப்பற்றி எரியத் தொடங்கும். கோவில்கள் சூறையாடப்படும். பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் விளைவுகள் பற்றி இந்த மதம்பிடித்த தலைவர்கள் அறிய மாட்டார்களா? அதன் விளைவாகப் பங்களாதேஷின் ஆயிரக்கணக்கான பழம்பெரும் காளி கோவிகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டனவே. இந்து-முஸ்லிம் கலவரங்கள் அதிகரித்ததே பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் பிறகு தானே? தங்கள் கோவில்கள் இடிக்கப்படுவதற்குத் தாங்களே வழி வகுக்கும் இவர்கள் எத்தோடு சேர்த்தி?
ஒரு தலைவர் இந்துப் பெண்மணிகள் தலா பத்துக் குழந்தைகளைப் பெற வேண்டும் என்று உளறினார். அந்தப் பெண்ணின் நிலை பற்றி அந்த மனிதர் கடுகளவேனும் சிந்தித்திருந்தால் அப்படி ஒரு கொடுமையான யோனையைச் சொல்லுவாரா? பெண்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பவே, மற்றொருவர் சற்றே இறங்கிவந்து, பத்தை நாலாக்கி இரக்கம் காட்டினார்.
பாஜகவின் ஒரு முக்கியத் தலைவி சமுஸ்கிருதம் படித்தால் நல்ல தன்மைகள் பெருகும் என்று உளறிக்கொண்டிருக்கிறார். தமிழில் இல்லாத நல்லவையா சமுஸ்கிருதத்தில் இருக்கின்றன? மக்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் எவ்வளவு மோசமான இலக்கியங்களும் வடமொழியில் இருக்கின்றன என்று பட்டியல் இட்டால் அந்த அம்மையார் எங்கே போய் ஒளிந்து கொள்ளுவார்? எல்லா மொழிகளிலும் நல்லவையும் கெட்டவையும் கலந்தே இருக்கின்றன.
இன்னொருவர் பகவத் கீதை பயிலச் சொல்லுகிறார். பகவத்கீதை யில் சில ஆன்மிகத் தத்துவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன என்பது உண்மையே. ஆனால் அது சாதாரண மக்களுக்கான நூலன்று. பெருவாரியான மக்களுக்கான அரிய படைப்பாகத் திகழும் திருக்குறளுக்கு முன்னால் பகவத்கீதை ஒன்றுமே இல்லை!
மதவெறி பிடித்தவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்தால் என்னவெல்லாம் நேரும் என்பதற்கு இவை மிகச் சில உதாரணங்கள்:
காங்கிரசுக்குப் பாடம் புகட்டுவதற்காக இவர்களைப் பதவியில் அமர்த்திவிட்டோம். அடுத்த தேர்தலில் இவர்களுக்கு மக்கள் கட்டாயம் பாடம் கற்பிப்பார்கள்.
……….
- நிச்சயம்
- தொடர் மூக்கு அழற்சி ( Chronic Simple Rhinitis )
- திரும்பிப்பார்க்கின்றேன். தாமரைக்கு ஒரு செல்வி – வன்னிமக்களுக்கு ஒரு வன்னியாச்சி.
- பிறப்பியலும் புணர்ச்சியும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். அகிலவெளி மரண விண்மீன் அண்டக் கோளைச் சிதைக்கிறது
- வெட்டுங்கடா கிடாவை
- திருவள்ளுவர் ஒரு மனநல மருத்துவர்
- ஆதாரம்
- அற்புத மலருக்கு ஒரு அஞ்சலி
- இளம் தமிழ்க் கவிதை மனம்: பூ.அ. இரவீந்திரன் கவிதைத் தொகுதி பவுர்ணமி இரவின் பேரலை : சுப்ரபாரதிமணியன்
- கவிதைகள் – நித்ய சைதன்யா
- அகதிகள் ஆண்டாக கொண்டாடுவோம்
- அவன், அவள். அது…! -7
- தொடுவானம் 91. தேவை ஒரு பாவை
- அதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள்
- அதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி
- அ. ரோஸ்லின் கவிதைகள் — ஒரு பார்வை
- உயிர் குடிக்கும் மதவெறிக்கு ஊழல் எவ்வளவோ பரவாயில்லை!
- நானும் ரவுடிதான்
- வெங்கட் சாமிநாதன் – உயர்ந்த மனிதர்
- இரும்புக் கவசம்
- குருட்டு ஆசை
- லா.ச.ரா-வின் நூற்றாண்டு விழா
- வெங்கட் சாமிநாதன் அஞ்சலி நிகழ்ச்சியும் ஆவணப்படத் திரையிடலும் நாள்: 01.11.2015 ஞாயிறு