ஆதாரம்

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 24 in the series 25 அக்டோபர் 2015

 தருணாதித்தன்

அதி காலை எழுந்த சிவந்த கண்கள், தொப்பி, கூலிங்கிலாஸ், டிஜிடல் காமரா, தண்ணீர் பாட்டில் என்று பஸ் முழுவதும் சுற்றுலாப் பயணிகள். புதிய சாலை, மல்டி ஆக்ஸல் பஸ். ஆனாலும் அடிக்கும் ஏஸியும், அலறும் சினிமாப் பாட்டும் தூக்கத்துக்கு தொந்தரவாக இருந்தது. ஏழரை மணிக்கு காலை உணவுக்காக பஸ் நிறுத்தப் பட்டது. அப்போதுதான் முதல் தகராறு ஆரம்பித்தது.

டூர் கைடின் குரல் ஒலி பெருக்கியில் சரித்திர காலத்துக்கு அழைத்தது. சில நூற்றாண்டுகள் பின்னே எப்போதும் சற்று அரைத் தூக்கத்தில் இருக்கும் ஊர், கோட்டை, அகழி, சுரங்கப்பாதை, அரண்மனை, ஆயுத சாலை, சங்கீத மஹால், வசந்த மண்டபம், யானைக் கொட்டில், ம்யூஸியம், ரவி வர்மா படங்கள், வினோத மணிக்கூண்டு என்று நாள் முழுவதும் பார்க்கலாம்.

டூர் கைடு வயசானவாரக இருந்தாலும் “ காலை வணக்கம், என் பெயர் விக்ரம்” என்று ஆரம்பித்தது முதல் உற்சாகமாக பேசினார். சுமார் எழுபது வயது சொல்லலாம், பார்த்தவுடன் ஒரு மரியாதை தோன்றும் உயரமான மெலிந்த உருவம், சிரிக்கும் பெரிய கண்கள், மெல்லிய வெள்ளி ஃப்ரேம் கண்ணாடி, நேர்த்தியான தூய வெள்ளை ஜிப்பா என்று வயதாகி இருந்தாலும் வசீகரமாக இருந்தார், அவருடன் தான் வாக்கு வாதம் ஆரம்பித்தான் ரஞ்சன். என் பக்கத்து ஸீட்டில் அமரும் போதே கையில் குண்டு புத்தகத்துடன் வந்தவன். சிறு வயதுதான். தடியான கண்ணாடி, ஒழுங்கற்ற தாடி, நிறம் வெளுத்த பித்தான் கழன்ற சட்டை, காகி பேன்ட், புழுதி படிந்த ஷு. “ ஹலோ , நான் ரஞ்சன்” என்று மொட்டையான அறிமுகத்துடன், ஸ்னேகம் இல்லாமல் புன்னகைத்து விட்டு ஏறியது முதல் பரீட்சைக்குப் படிப்பது போல அவசரமாக பக்கங்களைத் திருப்பிக் கொண்டிருந்தான்.

போகும் வழி வறண்ட பூமி. காலை வெயிலில் பனை மரங்களின் நீண்ட நிழல்கள். திடீரென்று நிலப்பரப்பு மாறியது. சிறு மரங்கள், பிறகு அடர்ந்த சோலை ஒன்று. அங்கேதான் ஒரு ஹோட்டல் இருந்தது. விக்ரம் அந்த இடத்தின் சரித்திரத்தை ஆரம்பித்தார். இது ஒரு முக்கியமான வியாபார ஸ்தலமாக இருந்ததாம். நெடுஞ்சாலை இதே வழியாகத்தான் தலை நகரத்துக்குப் போனது. அரபு வியாபாரிகள் குதிரைகளை துறைமுகத்தில் கப்பலிலிருந்து இறக்கி வந்து இங்குதான் விற்பார்களாம்.அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே ரஞ்சன் சற்று பரபரப்பானான். குண்டு புத்தகத்தை எடுத்து பக்கங்களைத் திருப்பினான். ஏதோ முணுமுணுத்தான். அப்போது விக்ரம் “ இதே இடத்தில் உணவு சாலை இருந்தது, ஏழு தலை முறைகளாக ஒரே குடும்பத்தினர் அதை நடத்தி வருகிறார்கள் “ என்றார். அவ்வளவுதான் ரஞ்சன் எழுந்து அவரைப் பார்த்து கிண்டலாக “ எந்த நூற்றாண்டில் இருந்து அரபு வியாபாரிகள் வந்து குதிரை விற்றார்கள் என்று சொல்ல முடியுமா ? “ உரக்கக் கேட்டு நிறுத்தினான். விக்ரம் ஒரு கணம் திகைத்து நின்றார்.

ரஞ்சன் தொடர்ந்தான் “ முதல் தப்பு அரபு வியாபாரிகள் இந்த இடம் வரை வந்ததே இல்லை, நம் ஆட்கள் துறைமுகத்திலிருந்து வாங்கி வந்து உள் நாட்டில் விற்றார்கள். இரண்டாவது ஏழு தலைமுறைக்கு முன்பு நம் நாட்டில் உணவை காசுக்கு விற்க மாட்டார்கள். தர்ம சத்திரம் தான். என்ன இப்படி இஷ்டத்துக்கு கதை விடுகிறீர்கள் ? “என்று ஆவேசமாகக் கேட்டான். சில பேர் அதிர்ச்சியாகவும், சிலர் விக்ரம் என்ன பதில் சொல்லுவார் என்று ஆர்வமாகவும் திரும்பினார்கள். விக்ரம் ஒரு கணம் தடுமாறின மாதிரி இருந்தது. அவர் தன் கண்ணாடியை கழற்றி. கைக்குட்டையால் துடைத்தபடி நிதானமாக, மரியாதையாக “ அய்யா, நான் வாய்மொழியாக்க் கேள்விப்பட்டது, இங்கே வந்து தான் அரபு வியாபாரிகள் வியாபாரம் செய்தார்கள். நம் அரசர்கள் குதிரைகளை வாங்கியது மட்டும் அல்ல, அவர்களுக்கு இங்கே தங்க ஒரு குடியிருப்புப் பகுதி அமைத்துக் கொடுத்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இரண்டாவது நான் உணவைக் காசுக்கு விற்றார்கள் என்று சொல்லவில்லையே, இந்த இடத்தில் சத்திரமும் உணவு சாலையும் இருந்தது, இதோ இப்போது இருக்கும் முதலாளியின் முன்னோர்கள் தான் அதைப் பராமரித்து வந்தார்கள், அவரிடம் ராஜ மான்யம் ஓலைச் சுவடிகள் கூட உண்டு, நானே பார்த்திருக்கிறேன். நான் பூரணமாக நம்பாத எதையுமே சொல்ல மாட்டேன் “

ரஞ்சன் அந்தக் குண்டு புத்தகத்தை எடுத்து ஆட்டினான். “ஸர் ஜான் வில்லியம்ஸ் ஒரு இடத்துலயும் இந்தக் கதையச் சொல்லல. இதெல்லாம் படித்ததுண்டா, நீங்கள் சொல்வதற்கெல்லாம் என்ன ஆதாரம் ? “ என்றான். அவன் ஸர் ஜான் வில்லியம்ஸ் என்றபோது விக்ரமின் முகத்தில் ஒரு சுழிப்பு தோன்றி மறைந்தது.

அதற்குள் முன்புறம் இருந்த ஒருவர், “விடுங்கப்பா, பசிக்குது போய் சாப்பிடலாம்” என்று தற்காலிகமாக அந்தப் போரை நிறுத்தினார்.

குழு இரண்டு மூன்று கட்சிகளாகப் பிரிந்தது. சில இளம் வயதினர் ரஞ்சனுடன் உட்கார்ந்தனர். அவன் புத்தகத்திலிருந்து உரக்கப் படித்துக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தான். சில வயதானவர்கள் விக்ரமைச் சுற்றி அமர்ந்தனர். அவரும் ஏதோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார், ஆனால் காலையில் ஆரம்பித்த உற்சாகம் இல்லை. சிலர் இந்த விவகாரத்தையே கவனிக்காமல் இட்லி தோசைகளில் கவனமாக இருந்தார்கள். சாப்பிட்டு பஸ்ஸில் ஏறி கிளம்பியதும் எல்லோரும் சற்று கண்ணசர, கனத்த மௌனம் நிலவியது.

சுமார் ஒன்பதரைக்கு கோட்டை வாசலுக்கு வந்து சேர்ந்தோம்.விக்ரம் அந்தக் கோட்டை கட்டப்பட்ட வரலாறு சொன்னார். அது பதினாலாம் நூற்றாண்டில் கட்டப் பட்டதாம். வடக்கிலிருந்து படை எடுப்புகள் அதிகமானதால், கோவில் கட்டுவது, சிற்பம், இசை, நாட்டியம் என்று கலைகளின் உச்சத்தில் இருந்த நாடு போருக்குத் தயார் செய்ய ஆரம்பித்ததின் முதல் அடையாளம் என்றார். கட்டப் பட்ட வருடம், அப்போது இருந்த மந்திரி, தளபதி ,மற்ற சரித்திர விவரங்களை எல்லாம் விக்ரம் கவனமாக சொல்வதாகத் தோன்றியது. ரஞ்சன் அடிக்கடி புத்தகத்தைப் புரட்டி அவர் சொல்வதை எல்லாம் சோதித்துக் கொண்டிருந்தான். கோட்டை விஷயத்தில் அவ்வளவாக ஒன்றும் முரண்பாடு இல்லை போலும். இருந்தாலும் சிலர் ஏதோ கேட்க, அவன் மேலும் சில விவரங்களை புத்தகத்திலிருந்து படித்துக் காட்டினான்.

கோட்டை வாசலைத் தாண்டி உள்ளே சென்றோம். அங்கே நிறைய சிற்ப வேலைப்பாடுகளுடன் ஒரு கோவில். மன்னர்களின் குல தெய்வம் துர்கையின் கோவிலாம். விக்ரம், மன்னர் வாழ்ந்த காலத்தில் அந்தக் கோவில் எப்படி எல்லாம் இருந்தது என்று விவரமாக ஆரம்பித்தார். தினமும் ஆறு காலம் பூஜை நடக்குமாம், ஒவ்வொரு வேளையும் மங்கல வாத்தியங்கள் முழங்க, நாட்டியம் நடக்குமாம். தினமும் காலை தீபாராதனைக்கு வராமல் மன்னர் தண்ணீர் கூட அருந்த மாட்டாராம். நவராத்ரி காலத்தில் பூப் பல்லக்கு உற்சவம், ஊரே திரண்டு வருமாம். இப்படியாக பெருமிதத்துடன் தான் கண்டதை விவரிப்பது போல பேசிக் கொண்டே போனார். ரஞ்சன் மறுபடி புத்தகத்தைப் பார்த்து விட்டு ஸர் ஜான் வில்லியம்ஸ் இது காவல் தெய்வத்தின் கோவில் என்றல்லவா எழுதி இருக்கிறார் என்று ஆரம்பித்தான். இந்த முறை விக்ரம் தெளிவாக இருந்தார். “இது குல தெய்வம் கோவில். கோட்டைக் கதவுக்கு மேலே செதுக்கி இருக்கும் சிற்பம்கூட துர்கை தான். அதனால் காவல் தெய்வம் என்று எழுதியிருக்கக் கூடும் “ என்றார். அத்துடன் “ உங்கள் ஸர் ஜான் வில்லியம்ஸ் ப்ரிடிஷ் அரசாங்கத்தின் ஏஜென்ட்- மாதத்துக்கு ஒரு முறை அரண்மனைக்குள் வந்து வந்து மன்னரிடம் வரி கேட்பான். நமது கலாசாரத்தைப் பற்றி என்ன தெரியும் ? “ என்றார். ரஞ்சன் ஒப்புக்கொள்ளாமல் ஏதோ முணுமுணுத்தான்.

வெயில் ஏறி தரை சுட்டது. அரண்மனைக்கு உள்ளே நுழைந்ததுமே குளிர்ச்சியாக இருந்தது. தந்தப் பல்லக்கு, ரத்தின சிம்மாசனம், தங்க அம்பாரி, சாரட்டு, தர்பார் உடைகள், இரும்புக் கவசம், கேடயம், வாள், சீன ஜாடிகள், வெள்ளிப் பாத்திரங்கள், நாணயங்கள், ஓலைச் சுவடிகள், செப்புப் பட்டயங்கள் என்று வரிசையாக பெரிய அறைகளைச் சுற்றி கால்கள் சோர்ந்தன. எல்லா இடத்திலும் விக்ரம் சரளமாக விளக்கம் கொடுத்துக் கொண்டு வந்தார். ரஞ்சன் புத்தகத்தை பார்த்துக் கொண்டு வந்தான். எல்லோரும் விக்ரமின் சுகமான குரலில் ஆழ்ந்து விட்டோம். ரஞ்சனுடைய கட்சி வலுவிழந்து விட்டதாகத் தோன்றியது.

சங்கீத மஹாலுக்கு வந்தோம். விசாலமான முற்றம் போல இருந்தது. ஒரு பக்கம் பெரிய மேடை, எதிரில் மன்னர் குடும்பத்துடன் அமரும் இடம், நாலு பக்கமும் மற்ற பிரதானிகள் அமர ஆசனங்கள், உயரமான தூண்கள், சித்திர முகப்பு என்று அபூர்வமாக இருந்தது. இங்கேதான் தினமும் மாலையில் சங்கீதம், நாடகம், நாட்டியம் என்று கலை நிகழ்ச்சிகள் நடக்குமாம். மேடையிலிருந்து சிறு ஒலி கூட மஹால் முழுவதும் தெளிவாகக் கேட்டது. விக்ரம் அங்கே நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியைப் பற்றி சொன்னார். வட நாட்டிலிருந்து ஒரு உஸ்தாத் வந்திருந்தாராம். அவருக்கும் ஆஸ்தான வித்வானுக்கும் போட்டி ஒரு இரவு முழுவதும் நடந்ததாம். சபையே மந்திரத்துக்குக் கட்டுப் பட்ட மாதிரி இருந்ததாம். அதற்குள் ரஞ்சன் குறுக்கிட்டான். மன்னர் அரசாங்க வேலைகளை சரியாக கவனிக்கவில்லையாமே, நாள் முழுவதும் பாட்டு, நாட்டியம், புலவர்கள் என்று பொழுது போக்கிக் கொண்டிருந்தாராம், மக்கள் அதிருப்தி அடைந்து ப்ரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனுக் கொடுத்தார்களாம் என்று ஆரம்பித்தான். இப்போது விக்ரமிற்கு நிஜமாகவே கோபம் வந்து விட்டது. கையை வீசி, சரேல் என்று திரும்பினார் – “என்னுடன் எல்லோரும் வாருங்கள்”.

 

முண்டியடித்து அவரைப் பின் தொடர்ந்து தர்பார் மண்டபத்துக்கு வந்தோம். விக்ரம் கையை மேலே விரித்துச் சுற்றினார். அங்கே கண்ட காட்சியை சொற்களால் விவரிக்க முடியாது. அறு கோண வடிவில், பெரிய மேல் விதானத்துடன், வண்ணக் கண்ணாடிகள் பதித்த சுற்றுச் சுவர்களும், பொன் மிளிர்ந்த பிரம்மாண்டமான தூண்களும், மேலே உப்பரிகைகளும், வித விதமான சலவைக் கற்கள் பதித்த தரையும், நாங்கள் எல்லோரும் அப்படியே அசந்து போய் அப்படியே நின்று விட்டோம். ரஞ்சன் கூட புத்தகத்தை ஒரு கணம் மறந்து விட்டான்.

அந்த மண்டபத்தில் தர்பார் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பதற்குள், விக்ரம் சுவற்றில் இருந்த மகத்தான ஓவியத்தைக் காண்பித்தார். நடுவே சிம்மாசனத்தில் கம்பீரமாக மஹாராஜா அமர்ந்திருக்க, சுற்றிலும் மந்திரிகள், பிரதானிகள், அதிகாரிகள், கிராமங்களிலிருந்து வந்திருந்த குடி மக்கள், முதல் விளைச்சலை மன்னருக்கு கொண்டு தருவார்களாம் – நிறைய பழங்களும், தானியங்களும் கொட்டிக் கிடந்தன. ஒரு பக்கம் பட்டு வியாபாரிகள் வண்ணப்பட்டாடைகளைத் தயாராக கையில் வைத்துக் கொண்டு பணிவாக நின்றிருந்தனர், வியாபாரி ஒருவர் குண்டு குண்டான முத்து மாலைகளுடன். பாதுகாப்பு வீரர்கள், உப்பரிகைகளில் அந்தப்புரப் பெண்கள், குழந்தைகள், விளிம்பில் எட்டிப் பார்க்கும் சிறுவர்கள் என்று வண்ணமும் ஒளியும் கலந்து ஒரு மாய உலகத்தையே அங்கே கண்டோம். தற்போது சினிமாக்களிலும், சீரியல்களிலும் காண்பிக்கும் நீண்ட தர்பார் ஹால், தூண்கள், திரைச் சீலைகள் என்று பார்த்துப் பழகி, இந்த மாதிரி அரசவைக் காட்சி திகைப்பாக இருந்தது.

“அரசர் ஆடல் பாடல்களிலேயே ஆழ்ந்திருந்து நாட்டையே கவனிக்காமல் இருந்திருந்தால், இந்த மாதிரி மக்கள் அரசரிடம் ஆசையாக இருந்திருப்பார்களா ? மன்னர் ஒரு நாள் கூட நாட்டு விவகாரங்களை கவனிக்காமல் இருந்ததில்லை, தினமும் அவருக்கு நான்கு மணி நேரம் கூட தூங்க முடியாது, அப்படி உழைத்தவர் “

“ஸர் ஜான் வில்லியமஸ் அப்படி சொல்லவில்லையே – மன்னர் நாள் முழுவதும் கேளிக்கையில் இருந்தார், எப்போது பார்த்தாலும் அவரைச் சுற்றி ஆட்டக் காரர்கள்தான் என்று தெளிவாக எழுதி இருக்கிறாரே ?”

“மன்னர் அவனை ஒரு நாளும் அரசவைக்கு அழைத்ததில்லை, அவன் அரசாங்கம் சரியாக நடக்கவில்லை,உள் நாட்டில் கலகம், ப்ரிட்டிஷ் அரசு பாதுகாப்புக்கு அதிகப் படைகளை அனுப்ப வேண்டும், அதற்கு அதிக வரி வேண்டும் என்று வசூல் செய்வதே குறியாக இருந்தவன். அவன் வேறு என்ன எழுதுவான் ? “

ரஞ்சன் விடுவதாக இல்லை –“ சரி ஸர் ஜான் வில்லியம்ஸ் பொய் எழுதினார் என்றே வைத்துக் கொள்ளாலாம் – நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம் ? இந்தப் படம் ஒன்றுதானா ? இல்லை அரசவைக் கவி யாராவது அரை வெள்ளிப் பணத்துக்கு இந்திரன் சந்திரன் என்று வர்ணித்து எழுதின காவியமா ? “

“அட முட்டாளே, இதோ பார் – எனக்கு ஒரு புத்தகமும் அவசியமில்லை” – விக்ரம் அந்தப் படத்திற்கு அருகே சென்று சுட்டிக் காட்டினார். நாங்கள் எல்லோரும் படத்துக்கு அருகே சென்றோம். மன்னருக்கு அருகில் கம்பீரமாக ஒரு சிறுவன் – அவன் அமர்ந்திருந்த கோலம், பெருமிதத்துடன் பார்க்கும் தோரணை, முகத்தில் ராஜ களை,

“அது நான் தான் “ என்று முடித்தார் விக்ரம்.

 

தருணாதித்தன்

Series Navigationதிருவள்ளுவர் ஒரு மனநல மருத்துவர்அற்புத மலருக்கு ஒரு அஞ்சலி
author

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *