– சிறகு இரவிச்சந்திரன்
0
பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருளின் பின்னால் உள்ள ஊழலை உரித்துக் காட்டும் படம்!
போதைப்பொருள் தடுப்பு காவல் அதிகாரி திவாகர், காவல் துறையின் கருப்பு ஆடுகளை சட்டத்தின் முன் நிறுத்த நடத்தும் போராட்டத்தின் பின் விளைவாக அவரது மகன் வாசு, கடத்தல்காரன் விட்டல்ராவால் கடத்தப்படுகிறான். மகனை மீட்க திவாகர் செய்யும் யுத்தத்தில் அவன் வென்றாரா என்பதே மொத்த கதை!
தூக்கமற்ற இரவு ( ஸ்லீப்லெஸ் நைட் ) என்கிற ஃபிரெஞ்சு படத்தின் தழுவலில், கமல் தனக்கே உரிய புத்திசாலித்தனமான உத்திகளைத் தூவி, திவாகர் என்கிற பாத்திரத்தில் மனதைக் கவர்கிறார். குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியாததால் மனைவியை பிரிந்து, வளர்ந்த மகனுடன் வாழும் காவல் அதிகாரி பாத்திரத்தின் உளவியலை அவரை தவிர வேறும் யாரும் அசலாக காண்பித்திருக்க முடியாது.
நார்காட்டிக்ஸ் அதிகாரி மல்லிகாவாக திரிஷாவுக்கு இது வித்தியாசமான வேடம். நேர்மையான அதிகாரி வேடத்தில் மனதில் பதிகிறார் அவர்.
நண்பன் மணியாக யூகி சேது. ஊழல் காவல் அதிகாரி திரவியமாக கிஷோர். கடத்தல் தாதா விட்டல்ராவாக பிரகாஷ் ராஜ். போதைப் பொருள் வியாபாரி ‘ பெத்த பாபு ‘வாக சம்பத். கமலின் மனைவியாக ஆஷா சரத். பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்த விதத்தில் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா பாஸ் ஆகிறார்.
127 நிமிட திரில்லர் நடக்கும் மதுபானக் கூடம் கலை இயக்குனர் பிரேம் நிவாசின் பெயரை உயர்த்திப் பிடிக்கிறது. சானு ஜான் வர்கீஸின் வித்தியாச கோணங்கள் படத்திற்கு பலம். ஷான் மொகமதுவின் எடிட்டிங் செமை ஷார்ப். விறுவிறுப்புக்கு வயகரா ஊட்டுகிறது கட்டிங்க்ஸ்!
கமலுக்கு பாடல்கள் இல்லை. நடனக்காட்சிகள் இல்லை. நகைச்சுவை கூட இல்லை. ஆனாலும் திவாகர் மனதில் வந்து உட்கார்ந்து கொள்கிறார்.
பெண்கள் கழிப்பறையில் மறைத்து வைக்கப்படும் போதைப் பொருள். அதைத் தேடிச் செல்லும் இரு ரவுடிகள். வெளியே நமுட்டு சிரிப்புடன் பெண்கள். கமலின் முத்திரை அந்தக் காட்சியில் பளிச்.
அதேபோல வாசு ஆம்லெட் சாப்பிடும்போது “ ஐ டோன்ட் லைக் திஸ் புல்ஷிட் “ என்கிறான். கமல் “ சாப்பிடறச்ச சொல்ற வார்த்தையா இது “ என்கிறார். புரிந்து சிரிப்பதற்குள் அடுத்த வசனம் வந்து விடும்.
இது வெகுநாளைக்கு பிறகு, கமல் தன் ரசிகர்களுக்கு தந்திருக்கும் க்ளாசிக். வர்த்தக ரீதியாக வெல்லுமா என்று தெரியவில்லை. ஆனாலும் ‘குருதிப்புனல்’ போல பல காலம் பேசப்படும்.
கமலின் கையுறையாக செயல்பட்டிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு கமல் தன் கையுறையை மாற்ற மாட்டார். அவருக்கு அது பொருந்தி இருக்கிறது. பிடித்தும் இருக்கிறது.
0
பார்வை : கமல் கிளாசிக் / அசத்தல் ஆவணம்.
மொழி : தப்பிக்கறச்ச கூட நாலைஞ்சு முத்தம் கொடுத்துடறாரே! அங்கேதான் நிக்கறாரு கமல்!
0
தூங்காவனம் விமர்சனத்தின் நீட்சி!
0
கமலின் அபார திரைக்கதை ஞானம் வெளிப்பட்டிருக்கும் படம்! தூக்கமின்றி மகனைத் தேடும் கமல் நுழையும் இரவு விடுதிக்குப் பெயர் ‘ இன்ஸோம்னியா’ ( தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு வரும் நோயின் பெயர் )
ஐம்பது வருடங்கள் இந்திய திரையுலகில் கொடி நாட்டிய எந்தக் கதை நாயகனாவது கத்திக் குத்து பட்டு ரத்தம் வழியும் வெள்ளை சட்டையுடனும், முகம் முழுக்க காயம் பட்ட தோற்றத்துடனும் நடிப்பாரா என்பது கேள்விக்குறி. ஆறுதலுக்காக ஒரு கனவு காட்சி, கவர்ச்சி நாயகியுடன் டூயட் என்று சந்தில் பேந்தா அடிக்கும் நாயகர்கள் மத்தியில் எடுத்துக் கொண்ட பாத்திரத்திற்கு நேர்மையாக, உண்மையாக இருப்பவர் சிவாஜி கணேசனுக்கு அப்புறம் கமல் மட்டுமே!
படத்தின் ஆரம்பக்காட்சியில் மகன் வாசுவுக்கு சோயா பால் தான் பிடிக்கும் என்று சொல்லப் படுகிறது. இடைவேளை திருப்பத்தில் அந்த சோயா பாலே அவன் இருக்கும் அறையை திவாகர் கண்டு பிடிக்க உதவுகிறது. வாவ் திரைக்கதை!
மருத்துவ அம்மா, அறிவு ஜீவி அப்பாவுக்குப் பிறக்கும் புத்திசாலி பிள்ளை சுய தீர்மானங்களை கொண்டவனாக வளர்வான். வாசு அம்மாதிரி பிள்ளை. சாப்பாட்டிலிருந்து விளையாட்டு வரைக்கும் அவனே தீர்மானம் செய்கிறான். அவன் தன்னை பிடித்து வைத்திருக்கும் ரவுடி ஜெகனிடம் அலைபேசி பற்றி பேசும் காட்சி சிரிப்பு சரவெடி. பிடிபட்ட இடத்திலிருந்து அவன் திவாகரிடம் பேசும்போது அவர் சொல்கிறார் “ இதோ பார் வாசு! அவன் கிட்டே உன் புத்திசாலித்தனத்தைக் காட்டாதே! அவனுக்கு புரியாது. கடுப்பாயி அடிப்பான். அதனால அதிகம் பேசாதே! “ சிறுவனின் பாத்திரம் சரியான செதுக்கல். பட இறுதியில் அடிபட்ட திவாகரை அவனே காரை ஓட்டி, மருத்துவ மனையில் சேர்க்கிறான். யார் என்று கேட்கிறார்கள் மருத்துவமனையில்.. “ என் அப்பா “ என்கிறான் வாசு. அதுவரை படம் முழுவதும் அவன் ஒரு வித இறுக்கத்துடன் சொன்ன அப்பா என்கிற வார்த்தையை இம்முறை முகத்தில் பெருமிதத்துடன் சொல்கிறான். எத்தனை பக்க வசனங்களும் இந்தக் காட்சியின் தாக்கத்தை தர இயலாது.
கிஷோரிடமிருந்தும், மல்லிகாவிடமிருந்தும் விடுதிக்குள் தப்பியோடும் கமல்! சுற்றிலும் கைகளை உயர்த்தி ஆடிக் கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள். கமலும் கைகளை உயர்த்தி ஆடிக் கொண்டே பதுங்கி தப்பிக்கிறார். அரங்கம் அதிர்கிறது.
பத்து வருடங்களாக பார்பி பொம்மையாக வலம் வந்த திரிஷாவுக்கு இது நிச்சயமாக முத்திரை படம். சிரிப்பை தொலைத்த நார்க்காட்டிக்ஸ் அதிகாரி. கவர்ச்சி காட்டாத கோட்டு சட்டை பெண் . ஆக்ரோஷமாக சண்டை போடும் பெண் சிறுத்தை. பலே!ஷாவாக வெல்கிறார் திரிஷா!
காமெடி வில்லன் விட்டல்ராவாக பிரகாஷ் ராஜ். மனிதரைச் சுற்றிலும் எல்லோருமே அரை வேக்காடுகள். அவர்களின் தத்துபித்துகளை அவர் சமாளித்து கமலை மடக்கும் காட்சிகள் சூப்பர். பம்பாய் எக்ஸ்பிரஸ் பட பசுபதி பாத்திரம் போல வடிக்கப்பட்ட வேடத்தில் பிரகாஷ் ராஜ் அச்சாக பொருந்துகிறார்.
பெயர்களிலும் குறியீடு வைத்திருக்கிறார் கமல்.
ஊழல் அதிகாரி கிஷோர் பெயர் திரவியம். பணத்தாசை பிடித்த யூகி சேது பெயர் மணி (Money) கமலின் பெயர் திவாகர்? இதற்கு இந்தியில் திவா கர் – அழகியின் வீடு என்று கொள்ளலாமா?
ஒரு திரைக்காவியத்தைப் பற்றி பல நாட்களுக்குப் பின் எழுதும்போது அதன் காட்சிகள் கண் முன்னே விரிந்தால், அந்தப் படம் ஒரு கிளாசிக் என்று சொல்லலாம்.
தூங்காவனம் ரசிகனுக்கும் விமர்சகனுக்கும் அப்படித்தான் இருக்கிறது!
0
- சூரியக் கதிர்ப் புயல்கள் சூழ்வெளியைச் சூனிய மாக்கி வறண்ட செவ்வாய்க் கோள் ஆறுகளில் வேனிற் காலத்தில் உப்பு நீரோட்டம்
- இஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா?
- ” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி
- மூன்று நூல்களின் வெளியீட்டு விழா
- மருத்துவக் கட்டுரை புற நரம்பு அழற்சி
- பொன்னியின் செல்வன் படக்கதை – 12
- நித்ய சைதன்யா – கவிதைகள்
- மாறி நுழைந்த அறை
- ‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்
- தேடப்படாதவர்கள்
- பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி
- அவன், அவள். அது…! 10
- பூவைப்பூவண்ணா
- தண்ணீரிலே தாமரைப்பூ
- திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)
- தொல்காப்பியம் இறையனாரகப்பொருள்- அகப்பாட்டு உறுப்புக்கள் ஒப்பீடு
- தொடுவானம் 94. முதலாண்டு தேர்வுகள்
- திரை விமர்சனம் தூங்காவனம்