‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்

This entry is part 9 of 18 in the series 15 நவம்பர் 2015

 

 

எதிர்வு என்ற இதழொன்றிர்க்கு பேராசிரியர் பஞ்சு எழுதியுள்ள இக்கட்டுரையைக் காவ்யா வெளியிட்டுள்ள நவீன இலக்கிய கோட்பாடுகள் கட்டுரைத் தொகுப்பில் வாசிக்க நேர்ந்தது. பின் நவீனத்தின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள இக்கட்டுரை பெரிதும் உதவும். நவீனம் என்ற சொல்லுடன் இணைந்த கலையும் இலக்கியமும் அதன் பிறப்பு தொட்டு ‘புரியவில்லை’ என்ற சொல்லை எதிர்கொண்டு வந்திருக்கின்றன. இவற்றுள் திறனாய்வாளர்கள், கலை விமர்சகர்கள் அபூர்வாமானது, மெய் சிலிர்க்கவைப்பது, பிரம்மிக்க வைப்பது என புளகாங்கிதமடைகிற படைப்புகள் கூட இத்தகைய தாக்குதலுக்கு ஆளாயின என்பதும் உண்மை.

இரண்டொரு மாதங்களுக்கு முன்பு ஒரு நண்பர் தமது புதிய நாவலொன்றை அனுப்பி எனது கருத்தைக் கேட்டிருந்தார். அதனை விமர்சனமாக எழுதினால் இதழொன்றில் பிரசுரிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். அந்நண்பர் அண்மையில் வெளிவந்திருந்த எனது புதிய நாவல்குறித்த ஒரு மதிப்புரையை இச்சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனுப்பியிருந்தார், நாவலைப்பற்றிய உயர்வானக் கருத்தை அதிற் பதிவு செய்திருந்தார். பதிலுக்கு அவர் நாவல் குறித்து அதே பார்வையுடன் உயர்வாக எழுதவேண்டும் என்பது தமிழ்ப் புனைகதை உலகின் எழுதப்படாத விதி. நண்பரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, அவருடைய நாவல் குறித்து எதிர்மறையான கருத்துக்களை அனுப்பிவைத்தேன். இதில் ஓர் உண்மைப் பொதிந்துள்ளது. நண்பரின் என்னுடைய நூலைப்பற்றிய நேர் மறையான விமர்சனத்தை எப்படி ஒட்டுமொத்த வாசகர்களின் ஏகோபித்த கருத்தாகக் கொள்ள முடியாதோ அதுபோலவே நண்பரின் நூலைப்பற்றிய என்னுடைய எதிர்மறையான கருத்தையும் ஒட்டுமொத்த தமிழ் வாசகர்களின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. மனிதர்க்கு மனிதர் அவரவர் வாசிப்பு திறன்சார்ந்து எடுக்கின்ற முடிவு தனித்தன்மைக் கொண்டதாக இருக்கக்கூடும். இங்கே நூலை வாசிக்காமலேயே இகழும் கூட்டத்தையோ, வேண்டியவர் எழுதினார் எனவே நன்றாக இருக்கிறது என எழுதும் கூட்டத்தையோ கணக்கிற்கொள்ளவில்லை. எது எப்படி இருப்பினும் பிறரின் அபிப்ராயத்தைக்கொண்டு ஒரு நூலைப் பற்றிய எவ்வித முன் முடிவுகளையும் எடுப்பது சரியல்ல. கலையும் சரி இலக்கியமும் சரி வெறும் அறிவுசார் வெளிப்பாடுகளோ முடிவுகளோ அல்ல, அவை புலன்களோடும் கலந்தவை. ஓர் பாடல் ஒருவருக்கு இனிமையாகவும் மற்றவருக்கு பெரும் ஓசையாகவும், ஒரு நடிகன் ஒருவரால் விரும்பப்படவும், பிறரால் தூற்றப்படவும், ஒரு பண்டம் ஒரு நாவிற்குச் சுவையாகவும் பிறிதொன்றிர்க்கு வேண்டாததாகவும் இருப்பதைப்போலவே கலையும் இலக்கியமும் இரண்டுபேரில் ஒருவருக்கு ஏற்கக்கூடியதாகவும் மற்றவர் நிராகரிக்கக் கூடியதாகவும் இருக்கக்கூடும். பொதுவில் புலன்சார்ந்த விருப்பு வெறுப்புகள் அனைத்துமே, ஒரு மனிதனைக் கட்டமைக்கிற இயற்கை மற்றும் சமூகக் கூறுகள் தீர்மானிப்பவை. எனவேதான் ஒரு ஓவியத்தையோ, சிற்பத்தையோ, கவிதையையோ, கதையையோ விமர்சிப்பதாகக் கூறி முன்வைக்கப்படும் ‘புரியவில்லை’ என்ற பதத்தையும் சந்தேகிக்கவேண்டியிருக்கிறது.

பஞ்சுவைக் காட்டிலும் வேறொருவர் இச்சொல்லை இத்தனை நுணுக்கமாக ஆழமாகவும் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கமுடியாது. தீர்ப்பினை முடிவுசெய்தபிறகு குற்றவாளியை விசாரணக்கு உட்படுத்துகிற ராணுவ அல்லது புரட்சி நீதிமன்ற நடைமுறைகள் அவர் இயல்புக்கு மாறானவை என்பதை அறிவோம். இக்கட்டுரையிலும் அந்நேர்மைக் காப்பற்றப்பட்டுள்ளது. நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் நியாங்களும் அவற்றுக்குரிய வாதங்களும் ‘புரியவில்லை’ யின் பொருட்டு தெள்ளத்தெளிவாக மக்கள் மன்றத்தில் வைக்கப்படுகின்றன.

‘கலைஞன்-படைப்பு-சுவைஞன்

“ஒரு இலக்கியத்தை- ஓவியத்தை – அனுபவிப்பதற்கு முழுதும் புரியவேண்டும் என்பது அவசியமில்லை என்று டி.எஸ் எலியட்டின் வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாமா” என்று கட்டுரையின் தொடக்கத்தில் அச்சுறுத்துவதுபோல ஒரு கேள்வியை ஆசிரியர் எழுப்பினாலும், அவர் அப்படிச்செய்யக்கூடியவரல்லர் என்பதும் நாம் அறிந்ததுதான். தொடர்ந்து ‘புரியவில்லை’ என்பவர்களுக்கு ஜெயகாந்தன் அளித்த பதிலென்று கட்டுரையில் இடம்பெற்றுள்ள வரிகள் சுவாரஸ்யமானவை: « நீங்கள் படிப்பது உங்களுக்குப் புரியவில்லை என்றால் அது உங்களுக்கு எழுதப்பட்டது அல்ல; வேறு யாருக்கோ எழுதப்பட்டது என்பதுமா உங்களுக்குப் புரியவில்லை? புரியவில்லையென்றால் பேசாமல் விட்டுவிடுங்களேன் ». இப்பதிலில் இருக்கிற நியாயத்தின் விழுக்காடுகள்பற்றி கேள்வி எழினும், ஜெயகாந்தன் குரலில் அதனைக் கற்பனை செய்துபார்க்கிறபோது நமக்கு பேதி காண்கிறது. ஜெயகாந்தனிடம் கேள்வியை வைத்த நபர் நொந்துபோயிருப்பார் என்பது நிச்சயம். டி. எஸ் எலியட் கூறியதைத்தான் ஜெயகாந்தன் அவருடைய பாணியில் தெரிவித்திருக்கிறார்.

«  கலைஞன்-படைப்பு-சுவைஞன்இந்த மூவரும் ஒரே ரத்த ஓட்ட மண்டலத்தில் கட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதால் ஒன்றில் குறை ஏற்பட்டாலும் கலையிலும், கலை அனுபவத்திலும் குறை ஏற்படத்தான் செய்கிறதென்றும், பார்வையாளனை நினைவில் வைத்துப் படைக்கப்படும் படைப்பு எவ்வாறு தோல்வி காணுமோ, அவ்வாறே தனக்கான பார்வையாளனை அறவே மறந்துவிட்டுப் படைக்கப்படும் படைப்பும் தோல்வி காணத்தான் செய்யும் » என்கிற பேராசிரியரின் கருத்தின் பிற்பகுதியை முழுமையாக ஏற்றுக்கொள்ள எனக்குத் தயக்கம்.

உண்மையில் சந்தை உலகில் நுகர்வோனுடைய ரசனைக்கேற்ப அல்லது அப்படி நம்பவைத்து கலையை, இலக்கியத்தை விற்கத்தெரிந்தவர்களின் சரக்குகள் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவர்களுக்குத் தோல்வி அரிதாகத்தான் ஏற்படும். அதுபோலவே தனக்கான பார்வையாளனை அறவே மறந்துவிட்டுப் படைக்கும் படைப்பும் தோல்வியைக் காணும் என்பதிலும் எனக்கு முழுமையாக உடன்பாடில்லை. பொதுவாக நல்ல இலக்கியங்கள் வாசகனை வாசலில் நிறுத்திக்கொண்டு கைகுலுக்க எழுந்து வருவதில்லை, மாறாக அது வீதிக்கு வந்ததும் எதிர்ப்படும் முகங்கள் தெரிந்த முகங்களாக இருந்தால் கை குலுக்குகிறது. ஆனால் தமிழ்ச் சூழலில் நல்ல படைப்புகளாக இருந்தாலுங்கூட அரசியல்வாதி நடைபயணம்மேற்கொள்கிறபோது ஆட்களைத் திரட்டுவதுபோல வாசகர்களைத் திரட்டும் சாமர்த்தியம் இருப்பின் அவர்தான் இலக்கியசந்தையில் ‘பெஸ்ட் ஸெல்லெர்’. ஆக இங்கு ‘புரியவில்லை’ என்ற பிரச்சினைகள் எழவாய்ப்பே இல்லை. இங்கு படித்து புரியவில்லை என்பவர்களை காட்டிலும், படிக்காமலேயே ‘புரிகிறது’ என்று சொல்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள் (இதற்கெல்லாம் நதிமூலம் ரிஷிமூலம் தேடிக்கொண்டிருப்பது வீணற்ற வேலை). ஆகையால் ஆக இதுபோன்ற வாசகர்களை வலைவீசிப்பிடிக்கும் சாதுர்யம்கொண்ட எழுத்தாளர்கள் வாசகர்களை அறவே மறந்துவிட்டும் எழுதலாம்.

 

‘புரியவில்லை’ யார் காரணம்?

‘புரியவில்லை’ பிரச்சினை எதனால் எழுகிறது, யார் காரணம் வாசகனா? படைப்பாளியா? என்று கேள்விக்கு இருவிதமான ‘புரியவில்லை’களைத் தெரிவித்து, இரண்டுபேரையுமே குற்றவாளிகள் என்கிறார் ஆசிரியர். முதலாவது ‘புரியவில்லை’ படைப்பாளிகளால் உருவாவது: « புதியபாதை போடுகிற – சோதனை முயற்சியில் இறங்குகிற- கலை படைப்புகளை ஒட்டி » – என்கிறார் பஞ்சு. அடுத்தது வாசகர்களிடமிருந்து உருவாவது: « ஐன்ஸ்டீன் சார்பு நிலைக் கொள்கைபுரியவில்லை என்றால் அதைப் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு, அந்தத் துறையில் தனக்குக் கல்வி அறிவு போதாது என்று சரியான முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் ஓர் ஓவியமோ, ஒரு கவிதையோ புரியவில்லையென்றால், இது ஒரு மோசமான ஓவியம் (அ) கவிதை என்று உடனே மதிப்பிட்டு முடிவு கூறிவிடுகிறார்கள் » (பெட்ராண்ட் ரஸ்ஸல் கூறியதாகக் கூறப்படுகிறதென்று – ஆசிரியர் தெரிவிக்கிறார்). முதலாவதாகச் சொல்லப்பட்ட « முயற்சியில் இறங்குகிற கலைஞன், அர்ப்பணிப்புத் தன்மையோடு செயல்படும்போது, படைப்போடு தன் பணியைச் சுருக்கிக்கொள்ளாமல், தன் பாதையை மற்றவர்களுக்கும் பழக்கப்படுத்தவேண்டிய நெருக்கடியான கடமையையும் மேற்கொள்கிறான். தன் பாதையை ஓர் இயக்கமாக்குகிறான். அவன் ஒரு சமூக இயக்கத்தோடு இணையும்போது அவன் கடமை எளிதாகிவிடுகிறது. அவன் படைப்புத் தன்மை மரபாகி விடுகிறது »- என்கிறார்.

எப்போது புதிய முயற்சி மரபாகிறது என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டும். ஒரு சமூகத்தில் ஒருவரோ சிலரோ கூடி அறிமுகப்படுத்தும் சடங்கு தம்மில் பெரும்பான்மையோரின் நன்மைக்கு உதவும் என நம்பிக்கையை விதைக்க முடிந்தால் அச்சடங்கு மரபாகிறது. மேற்குலகில் கலையில் இலக்கியத்தில் மேற்கொண்ட பல சோதனை முயற்சிகள் பின்னாளில் ஆதரவற்றுபோனதற்கு பெரும்பாலான இலக்கியவாதிகளின் நம்பிக்கையை அச்சோதனை முயற்சிகள் பெறாததே காரணம். மாறாக ரஸ்ஸல் கூற்றென்று சொல்லப்பட்டதை ஆசிரியர் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. « புரியாததற்கு கலைஞன் பொறுப்பில்லை; வாசகனின் கலை அறிவு போதாமையே என்று ஒரே அடியாகச் சொல்லிவிடலாமா? «  எனக்கேட்கிறார். பேராசிரியர் கூறுவதைப்போல ஐன்ஸ்டீனுடைய ‘சார்பு நிலைக்கொள்கை’ யைப் பொருளாதாரம் படிக்கும் மாணவன் தனக்குப் “புரியவில்லை” எனக்கூறினால், உனக்குப் புரியாது அதற்குரிய கல்வி உனக்கில்லை எனக்கூறிவிடலாம், ஆனால் பௌதிகம் படிக்கும் மாணவன் புரியவில்லையென்றால் அவனுக்குப் புரியும்படி அவனுடைய பேராசிரியர் போதிக்கவில்லை என்றுதானே பொருள்கொள்ளவேண்டும். பல ஆண்டுகளாக இலக்கியத்துடன் பரிச்சயம் உள்ள, ஆழமான வாசிப்பு உள்ளவர்கள் நேர்மையாக புரியவில்லைஎன்று சொல்கிறபோது அவர்களின் கருத்தை படைத்தவர் கவனத்திற்கொள்ளவேண்டுமே தவிர, பஞ்சு கூறுவதைப்போல வாசகனின் கலை அறிவு போதாமையைச் சாக்காகச் சொல்லி, படைப்பாளி நழுவ முடியாது.

கலை மக்களுக்காக?

வேறொரு கேள்வியையும் கட்டுரை ஆசிரியர்வைக்கிறார்: “ஓரளவு கலைகளோடு பர்ச்சயம் உள்ளவர்களுக்கே ‘புரியவில்லை’ என்ற நிலை ஏற்படும்போது, பொது மக்களின் நிலை என்ன? எந்த மக்களின் நலனுக்காகப் படைக்கப்படுவதாகக் கூறப்படுகிறதோ, அந்த மக்களுக்கு இது புரியுமா? ” எனக் கேட்கிறார். இதுவும் நியாயமான கேள்விதான். எல்லா மக்களுக்கும் படைப்பு போய்ச்சேரவேண்டியதுதான். ஆனால் இதில் சில ஐயங்கள் எழுகின்றன. எல்லோரும் சாப்பிடவேண்டும் என்று இலைபோடுகிறோம். பசி இருக்கிறவன், உட்காருகிறான், சாப்பிடுகிறான். உட்காரமாட்டேன், சாப்பிடமாட்டேன் என்பவனை என்னசெய்வது. நாம் இலைபோடமுடியும், உணவை பரிமாறமுடியும், உண்பதற்கு வாசகன்தான் முயற்சிகள் எடுக்கவேண்டும். ஆக இந்த ‘புரியவில்லை’ பிரச்சினையை எழுத்தாளர் -வாசகர் இருவருமே புரிந்துகொண்டு இறங்கிவரவேண்டும், இப்புரிதல் இருவருக்குமே உதவும்.

‘புரியவில்லை’ – தீர்வுகள்

புரியவில்லை என்ற பிரச்சினைக்கு பேராசிரியர் சில தீர்வுகளையும் முன்மொழிகிறார். அவற்றுள் ஒன்று புரியவில்லைக்கு எதிர்சொல்லான புரிதலைத் தனிப்பட்ட ரசனையோடு பொருத்திப் பார்க்காமல் செயல்பாட்டுடன் சம்பந்தப்படுத்திப்பார்த்தல். « பாரதியின் பாடல்களைப் படித்துவிட்டு சுரண்டும் அமைப்பிற்கு சேவகம் செய்த-செய்கிற- பழம்பெரும் படிப்பாளிகளைவிட தெருவில் அச்சம் இல்லை அச்சம் இல்லை!என்று பாடிக்கொண்டுபோன பாமரர்கள்தாம் பாரதியைச் சரியாக புரிந்துகொண்டார்கள் »- என்று கூறுகிறபோது, நாம் வாயடைத்துபோகிறோம். பஞ்சு கூறுவதைப் போலவே ரூஸ்ஸோவின் ‘சமூக ஒப்பந்தம்’ நூல் பெருமை பெற்றது அதனைப் புரிந்துகொண்டவர்களால் அல்ல, அதனைப் புரட்சியாகச் செயல்படுத்தியவர்களால் என்ற உண்மை பேராசியரின் கருத்திற்கு வலு சேர்க்கிறது. இரண்டாவது தீர்வாக பஞ்சு முன் வைப்பது. ‘பயிற்சி’: « தர்க்கமற்ற மிகவும் சிக்கலான ஒரு மொழி அமைப்பை குழந்தையொன்று பயிற்சியில் தன்மயமாக்கிக் கொள்வது போல, படைப்பைப் புரிந்துகொள்வதிலும் இந்தப் பயிற்சிக்குப் பங்குண்டு. இலக்கியம் படைப்பது பழக்கமாகிப்போவதுபோல, இலக்கியத்தைப் புரிந்துகொள்வதும் பழக்கமாகிப் போய்விடவேண்டும »-என்கிறார். தவிர ‘புரியவில்லை’ என்பதைத் தவிர்க்க ‘முயற்சி’யும் இன்றையமையாதது எனக்கூறி புரிந்துகொள்வதில்லுள்ள ஐந்து தளங்களைக் குறிப்பிட்டுள்ளார் 1. ஒரே பார்வையில் உடனடியாகப் புரிந்துகொள்வது. 2. தன் அனுபவ அடிப்படையில் புரிந்து கொள்வது. 3. தன் கொள்கை அடிப்படையில் புரிந்துகொள்வது 3. கலா பூர்வமாய் புரிந்துகொள்வது 5. நாம் அறியாமலேயே நமக்குள் வாய்க்கும் மரபு அடிப்படையில் புரிந்துகொள்வது. புரிதல் அனைந்துமே இவற்றில் ஏதாவதொன்றின் உதவியுடன் நடப்பதென்பது ஆசிரியரின் கருத்து.

இறுதியாக இலக்கியத்தைப் புரிதல் என்பது மொழியைப் புரிதல் மட்டுமல்ல, மனிதன் தன்னை, தனது சமூகத்தை, தன்கால சமூக இயக்கங்களின் சாரத்தை, தன் பிழைப்பை, இசை ஓவியம் முதலிய பிறகலைகளைத், துறைகளைப் புரிதல் என முத்தாய்ப்பாக ஆசிரியர் தரும் விளக்கம் கோடி பெறும்.

——————————————–

 

Series Navigationமாறி நுழைந்த அறைதேடப்படாதவர்கள்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *