தொடுவானம் 95. இதமான பொழுது

This entry is part 9 of 16 in the series 22 நவம்பர் 2015

நீண்ட விடுமுறையை நிதானமாகக் கழிக்க முடிவு செய்தேன். தேர்வுக்காக இரவு பகலாக பாடநூல்களுடன் கழித்துவிட்டேன். இனி மன மகிழ்ச்சிக்காக நல்ல துணையுடன் கழிப்பது உகந்தது.
ஒரு சூட் கேஸ் நிறைய துணிமணிகளை அடுக்கிக்கொண்டேன், வட மாநிலங்களுக்குச் செல்பவர்கள் சென்னை சென்று ” சென்ட்ரல் ஸ்டேஷனில் ” இரயில் ஏற வேண்டும். நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு சென்னை புறப்பட்டுவிட்டேன். இந்த முறை காட்பாடியிலிருந்து புகைவண்டி மூலம் சென்றோம். அது பாதை வழி. அரக்கோணம் வழியாக சென்னை சென்றது. அந்த பிரயாணம் முழுவதும் ஆட்டமும் பாட்டும்தான். ஒரு ” கேரியேஜ் ” முழுக்க நாங்கள்தான். இரண்டு மணி நேர பிரயாணம்.

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து பூங்கா மின்சார இரயில் நிலையம் சென்றேன். அங்கிருந்து முக்கால்  மணி நேரத்தில் தாம்பரம் வந்துவிட்டேன். நேராக அத்தை வீடு சென்றேன்.

          அத்தை வீடு சென்னை கிறிஸ்துவக் கல்லூரி வளாகத்தின் அருகிலேயே கணபதிபுரம் என்ற பகுதியில் உள்ளது. அங்கு வரிசை வரிசையாக குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் கல்லூரியின் கடைநிலை ஊழியர்கள் குடியிருந்தனர். அதற்கு ” மாடல் விலேஜ் ” என்று பெயர். மாதிரி கிராமம் என்று பொருள். இதை சென்னை கிறிஸ்துவக் கல்லூரி நிர்வாகம் உருவாக்கியிருந்தது. அனைத்தும் காண்கிரீட்டிலான கல் வீடுகள். நீண்ட ஒரு கட்டிடத்தில் ஆறு வீடுகள் பக்கத்தில் பக்கத்தில். முன்பக்க வராந்தாக்கள் தனித்தனி. பின்பக்கம் தோட்டமும் தனித்தனிதான். கம்பி வேலியால் பிரிக்கப்பட்டிருந்தன. வீட்டினுள் ஒரு ஹால்.ஒரு படுக்கை அறைதான். பின்பக்கம் சமையல் அறையும் அதையடுத்து குளியல் அறையும் கடைசியில் கழிவறையும் இருந்தன. மின்சார வசதியும், குடிநீர் வசதியும் இருந்தன. ஆனால் விறகு அடுப்புதான் பயன்படுத்தினர். வீடு போதுமானது இல்லைதான். ஆனால் அதுதான் கடைநிலை ஊழியர்களுக்கு அப்போது தரப்பட்டிருந்து. கிராமப்புறத்தில் கூரை வீட்டிலிருந்து வந்து அங்கு வேலை செய்வோருக்கு அது சொகுசு வீடுதான். மின்சாரம் இருந்ததால் சுழல் காற்றாடி, வானொலிப்பெட்டி, இஸ்திரி பெட்டி போன்றவை வைத்திருந்தனர். இவையெல்லாம் அப்போது கிராமங்களில் கிடையாது.  தோட்டத்தில் கோழிகள் வளர்த்தனர். தோட்டத்தின் பின்புறம் பெரிய காற்பந்து திடல் இருந்தது. பெரும்பாலும் புல் இருப்பதில்லை. வெறும் கட்டாந்தரைதான். வெயில் காலம் அதிகம். அதில் மாலையில் அன்றாடம் அங்குள்ள பையன்கள் பந்து விளையாடுவார்கள்.அது ஆரோக்கியமான பொழுதுபோக்கும் உடற்பயிற்சியுமாகும்..
           அங்கிருந்து கல்லூரிக்கு நடந்தே செல்லலாம். சிலர் சைக்கிள்  வைத்திருந்தனர். அதுபோன்றே தாம்பரம் இரயில் நிலையத்துக்கும் நடந்தே சென்றுவிடலாம். சிலர் ரிக்க்ஷாவில் செல்வார்கள். அதை ஆட்கள்தான் இழுத்துச் செல்வார்கள்! குதிரை வண்டிகளும் இருந்தன.
          தாம்பரம் சென்னைக்கு நுழைவாயில். தெற்கேயிருந்து வரும் அனைத்து புகைவண்டிகளும் பேருந்துகளும் தாம்பரம் வழியாகத்தான் செல்லவேண்டும். தாம்பரத்திலிருந்துதான் முதன்முதலாக மின்சார இரயில் சென்னை கடற்கரை நிலையம் வரை சென்றுகொண்டிருந்தது. தாம்பரம் இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு பெயர் பெற்றது. ஒன்று சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரி. மற்றொன்று இந்திய விமானப் படையின் பயிற்சி நிறுவனம். இந்த இரண்டிலுமே இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பயில்கின்றனர். இதனால் தாம்பரம் துவக்கத்திலிருந்தே ஒரு ” காஸ்மோபாலிட்டன் ”  நகரமாகவே இருந்துவருகிறது.
          ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது 1942ல் தாம்பரத்தில் 1400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் குறுக்கும் நெடுக்குமாக இரண்டு ஓடுபாதைகள் கொண்ட ஒரு விமானத்திடல் அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது  இது  ” அரச கடற்படை ஆகாய தளம் ‘ ( Royal Naval Air Station ) என்று அழைக்கப்பட்டது. அப்போது நேசப் படையினருக்கு தேவையான உதவிகளும் ஓய்வெடுக்கும் தளமாகவும் இது பயன்பட்டது. 1948 ஆம் வருடம் அம்பாலாவில் முதல் விமானிகள் பயிற்சிப் பள்ளி நிறுவப்பட்டது. 1954 ஆம் வருடம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூண்ட  வேளையில், இராணுவ பாதுகாப்பு கருதி, அந்த பயிற்சிப் பள்ளி தாம்பரத்துக்கு மாற்றப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தாம்பரம் வான்வெளியில் இந்திய ஆகாயப்படையின் பலதரப்பட்ட நவீன போர் விமானங்கள் தொடர்ந்து பறந்து வருகின்றன. உலக தரத்து போர் விமானிகள் இங்கு சிறந்த முறையில் உருவாக்கப்படுகின்றனர்.
         என்னைக் கண்ட அத்தை வீடடினர் அனைவருமே வியந்துபோயினர்! என்னுடைய திடீர் வருகை அவர்களுக்கு ஆச்சரியத்தையே தந்தது. அத்தைக்கு ஒரே பெருமை.அவரின் அண்ணன் மகன் மருத்துவம் பயில்வது, அதிலும் முதல் ஆண்டை முடித்துவிட்டேன் என்றதும் அவரின் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அத்தைக்கு அண்ணன்தான் செல்ல பிள்ளை. அவரை சிறு வயதிலிருந்து தாம்பரத்தில்தான் வளர்த்துள்ளார். அவரைப் படிக்க வைத்ததும் அங்கேதான். அவரைத்தான் .தன்னுடைய மூத்த மகன் என்பார்  நான் சிங்கப்பூரிலேயே இருந்துவிட்டதால் அத்தை எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை. ஆனால் அத்தைக்கு என்னை சிறு குழந்தையிலேயே தெரியும். அவர் திருமணமானபோது நான் தள்ளாடி தள்ளாடி நடக்கும் குழந்தையாம்!
          அத்தைக்கு இரண்டு அண்ணன்கள். அவர்கள் இருவரும் ஆசிரியர்கள். அத்தையும் ஆசிரியைதான். அவருடைய இரு அண்ணன்களும் மலாயா சிங்கப்பூர் சென்றுவிட்டனர். எங்கள் குடும்பம் பிளவுபட்டதாகவே துவக்கத்திலிருந்து திகழ்ந்துள்ளது. ஆனால் அத்தைக்கு என்மேல் எவ்வளவு பாசம் உள்ளது என்பதை நான்  தாம்பரம் செல்லும்போதெல்லாம் காணமுடிந்தது.
         அத்தைக்கே அவ்வளவு பாசம் என்றால் நேசமணிக்கு என்மேல் எவ்வளவு ஆசை இருந்திருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? நான் அவளுக்கு மாமன் மகன் அல்லவா? என்னைக் கண்டதும் அவளுக்கு தலை கால் புரியவிலல்லை. பருவம் எய்திய பெண்ணுக்கு என்னென்ன ஆசைகள் வரும் என்பதை அவளிடம் கண்டுகொண்டேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னிடம் கலகலவென்று பேசிக்கொண்டிருப்பாள்.அவள் கொண்டுள்ள மகிழ்ச்சியைக் கெடுக்க நான் விரும்பவில்லை. என்னை அவள் மானசீகமாக கணவனாக கற்பனை செய்துகொண்டாள் என்பது எனக்குத் தெரிந்தது. அதை தனக்கு உண்டான உரிமை என்றுகூட அவள் எண்ணியிருக்கலாம். அவளுடைய நடையில் தென்படும் மாற்றங்களை அத்தை தெரிந்திருப்பார். .நாங்கள் பேசிக்கொண்டிருப்பது அத்தைக்குப் பிடித்திருந்தது.

” இன்னும் நான்கு ஆண்டுகளில் படித்து முடித்துவிடுவீர்களா? ” நேசமணி ஆசையோடு கேட்டாள்.

” ஆமாம். இன்னும் நான்கு ஆண்டுகள்தான். அதன்பின்பு ஒரு வருடம் ஹவுஸ் சர்ஜனாக பயிற்சி பெறவேண்டும். ” என்றேன்.

” அதன்பின் சிங்கப்பூர் போய்விடுவீர்களா அத்தான்? ” கவலையுடன் கேட்டாள்.

நான் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறினேன்.

” அது பற்றி இப்போ உனக்கு என்ன கவலை. இன்னும் ஐந்து வருடம் உள்ளதே. அதற்குள் போய்விடுவேனோ என்ற கவலையா உனக்கு? ” இதற்கு அவளால் பதில் கூற முடியவில்லை.

அவள் கள்ளங்கபடு இல்லாமல் திறந்த மனத்துடன்தான் என்னுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவளுடைய மனம் கோணாமல் நடந்துகொள்ள முடிவு செய்திருந்தேன்.

அன்று இரவு அடுப்படியில் கோழிக்குழம்பு மண்சட்டியில் கொதித்துக்கொண்டு கமகமத்தது. நேசமணி தான் உணவு பரிமாறினாள். அவளிடம் பேசியபடியே சுவைத்து உண்டேன்.

காலையில் பசியாறியபின் மெட்ராஸ் செல்வதாகக் கூறி புறப்பட்டேன். வாடகைச் சைக்கிள் எடுத்துக்கொண்டு இரயில்வே காலனி  நோக்கி மிதித்தேன். வெரோனிக்காவின் வீட்டுமுன் நிறுத்தினேன். அவள் வீட்டு வாசலில் பூஞ்செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் முகமலர்ந்தாள்.

” வந்துவிட்டீர்களா? எப்போது வந்தீர்கள்? ” புன்னகை பூத்து வரவேற்றாள். ஓடிவந்து கையைப் பற்றிகொண்டாள். நான் வருவதாக அவளுக்கு கடிதம் போடவில்லை. அதற்கு நேரம் கிட்டவில்லை.
அவளுடைய அப்பாவும் அம்மாவும் அன்புடன் வரவேற்றனர். என்னுடைய தேர்வு பற்றி விசாரித்தனர். வெரோனிக்கா பி.எஸ்.சி. இறுதியாண்டு செல்லப்போவதாகக் கூறினர். அதன்பின் தொடர்ந்து எம்.எஸ்.சி. யும் படிக்கவைக்கலாம் என்றனர்.

” மெட்ராஸ் போவோமா? ” சூடாக காப்பி கொண்டுவந்து தந்துவிட்டு  கேட்டாள் வெரோனிக்கா.

         ” போகலாமே. நான்கூட மவுண்ட் ரோடு ஹிக்கின்பாத்தம் சென்று ஒரு அலசு அலசி சில நாவல்கள் வாங்கவேண்டும். நீண்ட விடுமுறை. நிறைய படிக்கலாம். ” நாவல்கள் வாங்கிவருமாறு இராஜகிளி கூறியிருந்தது நினைவில் இருந்தது.

” நான் கிளம்பும்வரை காத்திருக்கிறீர்களா? ” கையில் அன்றைய ” இந்தியன் எக்ஸ்பிரஸ் ” நாளேட்டைத் தந்துவிட்டு குளியல் அறைக்குள் ஓடினாள்.

” நீ அவசரப்படாமல் குளித்துவிட்டு கிளம்பு. நான் கல்லூரிக்குள் ஒரு சுற்று சுற்றிவிட்டு பத்து மணிக்கு வருகிறேன். ” நான் வெளியேறி மீண்டும் சைக்கிளில் அமர்ந்துகொண்டேன்.

எனககு ஒரு பழக்கம் உள்ளது. தாம்பரம் வரும்போதெல்லாம் கல்லூரி வளாகம் சென்று விடுதியைப் பார்த்துவிட்டு வருவேன். அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் புதியவர்கள்தான். அனால் பெரும்பாலான ஊழியர்கள் பழையவர்கள்தான். ஒரு வருடம் பழகியவர்கள் அல்லவா? வரும்போதெல்லாம் அவர்களுக்கு செலவுக்கு பணமும் தருவேன்.

இந்த முறை நாங்கள் மெட்ராஸ் சென்றபோது பிரிவு எங்களுக்குப் பழகிவிட்டதுபோலும். நீண்ட நாட்கள் பார்க்கவில்லையே என்ற ஏக்கம் அவளிடமும் இல்லை. என்னிடமும் இல்லை. வேறு வழியில்லை. கட்டாயம் படித்துத்தானே ஆகவேண்டும்? இதில் பிரிந்துதானே இருக்கவேண்டும்.  கவலைப் பட்டு என்ன கிடைக்கப்போகிறது என்ற மனநிலையோ எங்களுக்கு? அல்லது மனப்பக்குவம் அடைந்துவிட்டோமா?

புத்தகக் கடையில் ஆசை தீர மதிய உணவு நேரம் வரை கழித்தோம். குளிர் சாதன வசதியிருந்ததால் அந்த புத்தகக் ” கடலில் ” நேரம் போனதே தெரியவில்லை. தமிழில் சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கட்டுரை நூல்கள், கவிதைத் தொகுப்புகள், சமூகம், அரசியல், அறிவியல், பொருளாதாரம், சரித்திரம், வாழ்க்கை வரலாறு, தன்முனைப்பு, சிறுவர் இலக்கியம் என வரிசை வரிசையாக நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஒரு பகுதியில் உலகின் பிரசித்திப்பெற்ற ஆங்கில நூல்களும் காணப்பட்டன. நூல்கள் படிக்கும் ஆர்வமுள்ளோருக்கு அது உண்மையில் கண்கொள்ளாக் காட்சிதான்! எதை வாங்குவது எதை விடுவது என்பதில் சிரமம் உண்டானது. வெரோனிக்காவும் சில நூல்களை எடுத்துக்கொண்டாள். நூல்களைப் பார்த்துக்கொண்டே நடக்கும்போது பிடித்ததை கையில் அப்போதே எடுத்துக்கொண்டு முன்னேறுவேன். அதுபோன்று செல்கையில் கைகளில் பத்து பதினைந்து நூல்கள் சேர்ந்துவிடும். அவற்றை ஓர் இடத்தில் வைத்துவிட்டு மீண்டும் தொடர்ந்து நடப்பேன். அதுபோன்று சேகரித்த எல்லா நூல்களையும் இன்னொரு சுற்று ஆராய்வேன்.அவற்றில் சிலவற்றை அடுத்த முறை வாங்கலாம் என்று விட்டுவிடுவேன். அவ்வாறு தேர்ந்தெடுத்த நூல்களை வாங்கியபின் நேராக மவுண்ட் ரோடு புஹாரிக்குச் சென்றோம். சுவையான கோழி பிரியாணி உண்டு களைப்பு தீர்த்தோம்.

          ” உங்களுக்கு ஒன்று தெரியுமா? ” திடீரென்று அவள் கேட்டாள்.
          ” இப்படி தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் கேட்டால் எப்படி? ” அவளைப் பார்த்து சிரித்தேன்.
          ” நீங்களும் நானும் ஒரே நேரத்தில் படித்து முடிப்போம். ” ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தாள்.
          ” உண்மைதான்.நான்கூட இதை எண்ணிப்பார்க்கவில்லை. ” பதில் கூறினேன்.
          ” ஆமாம்  உங்களுக்கு இன்னும் நான்கு வருடங்கள். நான் எம். எஸ்.சி. சேர்ந்துவிட்டால் எனக்கும் நான்கு வருடங்கள்! ” வியந்து கூறினாள்.
          ” ஆக நாம் இருவரும் ஒரே நேரத்தில் படித்து முடிக்கப்போகிறோம். மகிழ்ச்சியானதுதான். ” சர்வசாதாரனமாகக்  கூறினேன்.
          ” அதன்பின் நீங்கள் சிங்கப்பூர் போய்விடுவீர்களா? ” அவள் சொன்னது கேட்டு எனக்கு ஒரு கணம் வியப்பு! உடன் பதில் சொல்ல முடியவில்லை. நேற்று இரவுதான் நேசமணி இதே கேள்வியைக் கேட்டாள்!
” என்ன ? பதிலைக் காணோம்? என்ன யோசனை? ” அவள் மீண்டும் கேட்டாள்.
          ” ஒன்றுமில்லை. அதற்குதான்  இன்னும் நான்கு வருடங்கள் உள்ளதே? அதற்குள் ஏன் இந்தக் கவலை? அதுவரை நாம் இங்குதானே இருக்கப்போகிறோம்? ” நான் சமாளித்தேன்.
           ”  இருக்கிறோம்….ஆனால் ……”
          ” என்ன ஆனால்? அருகில் இல்லையே என்றுதானே சொல்ல வருகிறாய்? “
          ” ஆமாம். ” அவள் தலையசைத்தாள்.
          ” உள்ளத்தில் குடியிருந்தால் எங்கிருந்தால்தான் என்ன? ” ஆறுதல் கூறினேன்.

அதன்பின்பு கடல்காற்று வாங்க மெரினா சென்றுவிட்டோம்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationசெந்தி கவிதைகள் — ஒரு பார்வைஅவன் அவள் அது – 11
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *