அத்தை மகள் என்மீது அளவற்ற பாசமழை பொழிந்தாள். அவளுடைய பிஞ்சு மனதில் அத்தகைய ஆசையை அத்தைதான் வளர்த்துவிட்டிருந்தார். அது தவறு என்று நான் கூறமாட்டேன். உறவு விட்டுப்போகக்கூடாது என்று தொன்றுதொட்டு நம் சமுதாயத்தில் நிலவிவரும் ஒருவித கோட்பாடு இது. அத்தைக்கு தன்னுடைய அண்ணன் மகன் மருமகனாகவேண்டும் என்ற ஆசை. அதுபோன்றுதான் அம்மாவுக்கும் தன்னுடைய அண்ணன் மகள் உமாராணி மருமகளாக வரவேண்டும் என்று ஆவல்! இடையில் அப்பாவின் மனதில் என்ன உள்ளது என்பது யாருக்கும் அப்போது தெரியாது. அவரோ சொந்த பந்தங்களையெல்லாம் விட்டுவிட்டு தனியாக தூரத்தில் சிங்கப்பூரில் உள்ளார். வயதுக்கு வந்த அத்தை மகளையும் மாமன் மகளையும் அவர் பார்த்ததில்லை.
என் நிலைமையோ வேறு. சிங்கப்பூரில் என்னுடைய பால்ய சிநேகிதியும் பருவக் காதலியுமான லதா நான் திரும்பி வருவேன் என்று காத்துள்ளாள். கல்லூரிக் காதலி வெரோனிக்காவோ நான் எப்போது படித்து முடிப்பேன் என்று மௌனம் காத்து வருகிறாள். கிராமத்துப் பைங்கிளி கோகிலமோ நான் எப்போது ஊர் வருவேன் என்று வழிமேல் விழி வைத்துள்ளாள்.
பெண்களைப் பொருத்தவரை என் மனது எப்போதுமே இளகினதுதான்! அவர்களிடம் நான் கடுமையாக நடந்துகொள்ளமாட்டேன்.அதற்காக காணும் பெண்கள் மீதெல்லாம் ஆசை பிறந்துவிடுமா? வாழ்க்கையில் நாம் எத்தனையோ பெண்களைப் பார்த்து பழகவும் நேர்கிறது. ஆனால் எல்லாரிடமும் ஒரே மாதிரியான கவர்ச்சி அல்லது ஆசை உண்டாவதில்லை.எதோ ஒரு ஈர்ப்பு காரணமாக ஒரு சிலர் மீதுதான் தனிக் கவர்ச்சி உண்டாகிறது. அதுகூட அவர்களுடன் பழக நேர்ந்ததால்தான். அப்படியே பழக நேர்ந்தாலும்கூட ஒருவர் மீது ஏதும் இல்லாமல் போவதும் உண்டு. என்னுடைய வகுப்புப் பெண்கள் அதற்கு நல்ல உதாரணம்!
சிறு வயதிலிருந்து ஒன்றாகப் பழகி பின் இளம் வயதிலேயே காதலித்த லதாவை அப்பா வேண்டாம் என்று எதிர்த்து எங்களைப் பிரித்துவிட்டார். வெரோனிக்கா இடையில் ஒரு வருட பழக்கத்தில் வந்துள்ள கல்லூரிக் காதலிதான் வெரோனிக்காவும் அத்தை மகளும் தாம்பரத்தில்தான் உள்ளனர். ஆனால் அத்தை மகள் மேல் இல்லாத ஈர்ப்பு வெரோனிக்கா மீது உண்டானது. அதற்குக் காரணம் அவள் கல்லூரி மாணவி என்பதாலும், அவளுடைய நிறமும் புற அழகும் எனலாம்.
அன்று இரவு அத்தை வீட்டு தோட்டத்தில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டு வானத்து நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு நித்திரைக்கு காத்திருந்தபோது இத்தகைய நினைவலைகளில் மூழ்கினேன்.
இன்னும் இரண்டொரு நாட்களில் தரங்கம்பாடி சென்றுவிட முடிவுசெய்திருந்தேன். போகும் வரை நேசமணியிடம் அன்பாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.யார் யார் மீதோ காதல் கொள்ளும் நான் சொந்த அத்தை மகளின் ஆசையை நிறைவேற்றாமல் போவது எப்படி என்று மனம் உறுத்தியது.
மறுநாள் அவளை படம் பார்க்க பல்லாவரம் அழைத்துச் சென்றேன். அவள் அடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அது ” மேட்டினி ஷோ “. திரையரங்கில் விளக்குகள் அணைந்ததும் என் கையைப் பிடித்தவள்தான். படம் முடிந்துதான் விட்டாள்!
இரவு புகைவண்டி மூலம் மாயவரம் புறப்பட்டேன்.முதல் வகுப்பில் சொகுசாக தூங்கினேன். விடியலில் மாயவரத்திலிருந்து தரங்கம்பாடிக்கு இன்னொரு வண்டி ஏறினேன். கடல்காற்று ஜிலிஜிலுக்க அந்த குறுகிய பிரயாணம் சுகமாக இருந்தது.
இன்முகத்துடன் அண்ணி வரவேற்றார். அண்ணன் தோட்டக் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார். என் பின்னாலேயே மீன் விற்கும் பெண் கூடை நிறைய மீன்கள், இறால், கணவாய், நண்டு கொண்டுவந்தாள் வேண்டியமட்டும் அண்ணி வாங்கினார். அவள் வாடிக்கையாய் வருபவள்.
வழக்கமாக பேசும் பாணியில் அண்ணி மூலம் அண்ணனும் நானும் பேசிக்கொண்டோம். அவர்கள் இருவருக்கும் இன்னும் பள்ளி விடுமுறைக்கு நாட்கள் இருந்தன. காலையிலேயே சென்றுவிடுவார்கள். மதிய உணவின்போது வீடு திரும்புவார்கள். எனக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது. வாங்கி வந்த நாவல்களில் சிலவற்றைப் படித்தேன். சில சிறுகதைகளும் எழுதினேன். மாலையில் கடற்கரையில் தனிமையில் கழித்துவிட்டு இருட்டியபிறகு திரும்புவேன்.
இரவுகளில் வேறு பொழுதுபோக்கு இல்லை. ஒரு திரைப்பட அரங்கு பொறையாரில் இருந்தது சுமார் இரண்டு கிலோமீட்டர் நடந்துசெல்லவேண்டும். அண்ணன் பெரும்பாலும் வருவதில்லை. அண்ணியும் நானும் சென்று வருவோம். புதிதாக வரும் படங்களைப் பார்த்துவிடுவோம். அண்ணியின் துணை எனக்குப் பிடித்திருந்தது.தனியாகவே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட எனக்கு இது போன்ற குடும்ப உறவு முறையும், பாசமும், அன்பும் புது அனுபமாக இருந்தது.
- தொடுவானம் 96. தஞ்சைப் பெரிய கோயில்
- எழுத்தாளர் குரு அரவிந்தனின் பாராட்டுவிழா
- இஸ்லாமிய சீர்திருத்தத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்?
- அவன் அவள் அது – 12
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
- நீ தந்த செலாவணிகள்
- யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடு
- திரை விமர்சனம் 144
- எழுத மறந்த குறிப்புகளுடன் ஒரு பதிவு இலக்கியப்பணியுடன் மருத்துவப்பணியும் மேற்கொள்ளும் மனிதாபிமானி ச. முருகானந்தன்
- வன்னி நாவல் பற்றிய என்பார்வை
- மருத்துவக் கட்டுரை- மார்பக தசைநார்க் கட்டி ( பைப்ரோஅடினோமா ) ( Fibroadenoma )
- நாளைய பங்களா தேஷ் யாருக்கானது?
- செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் பேரளவு உஷ்ணத்தில் பெருவெடிப்பின் போது தோற்ற காலக் குவார்க் குளுவான்கள் பிறப்பு
- நெய்தல் வழங்கும் விருதுகள்
- கடலூர் சென்னை மக்களுக்கு உதவ