அப்பாவும் மகனும்

This entry is part 3 of 12 in the series 13 மார்ச் 2016

 

பாவண்ணன்

தமக்குள் சீரான உறவில்லாத தந்தை-மகன் பாத்திரங்களைக் கொண்ட இரண்டு படைப்புகளை போன ஆண்டில் அடுத்தடுத்து படிக்கும்படி நேர்ந்தது. மறைந்த எழுத்தாளர் தவசி எழுதிய ’அப்பாவின் தண்டனைகள்’ என்னும் நாவலைத்தான் முதலில் படித்தேன். அந்த நாவல் வழங்கிய அனுபவம் நெஞ்சில் இருக்கும்போதே, ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு இதழில் வெளிவந்த ‘பூனைகள் நகரம்’ என்னும் ஜப்பானியச் சிறுகதையை அடுத்து படித்தேன். (மூலம்: ஹாருகி முரகாமி) அசோகமித்திரன் கட்டியெழுப்பும் சீரான தந்தை-மகன் உறவு சார்ந்த படைப்புகளை தராசின் ஒரு தட்டில் வைத்தால், அதன் மற்றொரு தட்டில் மேற்சொன்ன படைப்புகளை வைக்கலாம் என்று தோன்றுகிறது. துரதிருஷ்டவசமாக சிதைந்த உறவை முன்வைக்கும் படைப்புகளின் சுமையால் தராசுத்தட்டு தரையை விட்டு மேலெழ வாய்ப்பே இருக்காதோ என்று நினைக்கிறேன்.

ஏன் இப்படி நேர்கிறது என்னும் கேள்விக்கு உளவியல் சார்ந்து பல விடைகள் சொல்லப்படுகின்றன. முதல் காரணம் இருவருமே ஆண்கள். இருவருமே தம் ஆளுமையை உருவாக்கி இந்த மண்ணில் தம்மை நிறுவிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். தந்தையுடைய ஆளுமையின் தொடர்ச்சியாக தன்னை நிறுவிக்கொள்ளும் விருப்பமுள்ளவனாக மகன் இருக்கிற நிலையில், அவர்களிடையே எவ்விதமான உறவுச்சிக்கலும் எழ வாய்ப்பில்லை. ஒருவேளை, தந்தையுடைய ஆளுமைக்கு மாறாக வேறொரு ஆளுமையாக தன்னை நிறுவிக்கொள்ள விருப்பமுள்ளவனாக மகன் எண்ணும் நிலையில், அக்கணத்திலிருந்தே அவர்களிடையே உறவுச்சிக்கல் முளைத்துவிடுகிறது. இது ஒரு மேலோட்டமான கணிப்பு மட்டுமே. உளவியல் அடிப்படையிலான ஆய்வுகளில் இன்னும் பல உண்மைகள் புலப்படக்கூடும்.

உண்மைகளின் உறுத்தலால் மனம் சலித்திருந்த ஒருநாள் மாலையில் தற்செயலாக நான் பார்த்த ’RIDING ALONE FOR THOUSANDS OF MILES’ என்னும் சீனமொழித் திரைப்படம் மாபெரும் ஆறுதலாக இருந்தது. இது சீரான உறவைக் கொண்ட தந்தை-மகன் பாத்திரங்களைக் கொண்ட படமோ அல்லது சிதைந்த உறவைக் கொண்ட தந்தை-மகன் பாத்திரங்களைக் கொண்ட படமோ அல்ல. மாறாக, சிதைந்த உறவிலிருந்து தொடங்கி சீரான உறவை நோக்கி நகர்ந்துவரும் திரைப்படம்.

அப்பாவின் பெயர் தகாதா. மகனின் பெயர் கெனிச்சி. இருவருக்குமிடையே சீரான உறவில்லை. தகாதா மனைவிதான் பாலமாக இருந்து இருவரையும் இணைப்பவர். அவருடைய எதிர்பாராத மரணத்துக்குப் பிறகு அவர்கள் பிரிந்து செல்வது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. தகாதா தொலைவில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்று தனிமையில் வாழத் தொடங்குகிறார். கெனிச்சி டோக்கியாவில் வளர்ந்து பெரிய ஆளாகி திருமணம் செய்துகொண்டு வாழ்கிறான். ஆண்டுக்கணக்கில் இருவருக்குமிடையே எவ்விதமான தொடர்பும் இல்லை. திடீரென ஒருநாள் தகாதாவுக்கு தொலைபேசி அழைப்பொன்று வருகிறது. மருத்துமனையில் கெனிச்சி சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் சொல்கிறாள் கெனிச்சியின் மனைவி. வந்து பார்த்தால் நல்லது என்றும் சொல்கிறாள். அதைக் கேட்டு அன்றே டோக்கியாவுக்குப் புறப்படுகிறார் தகாதா.

மருத்துவமனையில் மருமகளைச் சந்தித்துப் பேசும்போதுதான் கெனிச்சி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் விஷயத்தைத் தெரிந்துகொள்கிறார் தகாதா. கெனிச்சியை புற்றுநோய் தாக்கியிருக்கிறது என்றும் தீவிர மருத்துவம் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கிறாள். அதிர்ச்சியில் உறைந்துவிடும் தகாதா தன் மகனைப் பார்க்க விழைகிறார். சிறிது நேரம் காத்திருக்கும்படியும் அவர் வருகையை கெனிச்சிக்குத் தெரிவித்துவிட்டு வருவதாகவும் சொல்லிவிட்டு கெனிச்சியின் அறைக்குள் நுழைகிறாள் அவள். அறைக்குள் இருவருக்குமிடையில் நிகழும் உரையாடலை வெளியில் இருந்தபடியே கேட்கிறார் தகாதா. தன் தந்தையைப் பார்க்க தனக்கு விருப்பமில்லை என்று உறுதியான குரலில் சொல்கிறான் கெனிச்சி. அவருக்கு தகவலைத் தெரிவித்ததற்காக அவளைக் கடிந்துகொள்கிறான். அந்தக் குரலில் வெளிப்படும் வெறுப்பையும் கசப்பையும் உணர்ந்துகொள்ளும் தகாதா மருத்துவமனை வளாகத்திலிருந்து வேதனையுடன் வெளியேறுகிறார். கெனிச்சியின் அறையிலிருந்து வெளியே வந்த மருமகள், தகாதா வெளியேறிவிட்டதை அறிந்துகொண்டு, வளாகத்துக்கு வெளியே ஓடிவந்து அவர் நடந்துசெல்வதைக் கண்டுபிடித்துவிடுகிறாள். அவரை அழைத்தபடி பின்னாலேயே ஓடிவந்து நிறுத்துகிறாள். மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் கீமோதெரபி போன்ற மருத்துவமுறை கெனிச்சியை மிகவும் வேதனைப்படுத்துவதாகவும் அதன் சலிப்பின் காரணமாகவே அடிக்கடி கெனிச்சி கோபம் கொள்வதாகவும் எரிச்சல் படுவதாகவும் எடுத்துச் சொல்லிப் புரியவைக்க முயற்சி செய்கிறாள். கெனிச்சியை தவறாக நினைக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறாள். நகரத்திலேயே தங்கியிருக்கும்படியும் பொறுமையாக கெனிச்சியிடம் எடுத்துச் சொல்லி அமைதிப்படுத்துவதாகவும் இருவரும் பார்த்துப் பேசிக்கொள்ள ஏற்பாடு செய்வதாகவும் சொல்கிறாள். கெனிச்சியை மேலும் நெருக்கமாகப் புரிந்துகொள்ளவும் அவன் ஆர்வங்களைத் தெரிந்துகொள்ளவும் உதவக்கூடும் என்று சொல்லி, அவன் எடுத்த ஓர் ஆவணப்பட வீடியோ கேசெட்டைக் கொடுக்கிறாள்.

குழப்பத்தோடும் வருத்தத்தோடும் அறைக்குத் திரும்பிய தகாதா வீடியோவைப் பார்க்கத் தொடங்குகிறார். அப்போதுதான் அவருக்கு தன் மகன் நாட்டார் கலைகளில் ஈடுபாடு கொண்டவன் என்றும் அதைப் படம்பிடித்து ஆவணப்படுத்துவதற்காக புகைப்படக் கருவியோடு பல இடங்களில் அலைந்து திரியும் ஆர்வமுள்ளவன் என்றும் அவர் புரிந்துகொள்கிறார். மேடையில் நடிக்கப்படும் நிகழ்த்துகலையான ‘ஆயிரக்கணக்கான மைல் தொலைவு தனிமையில் அலைதல்’ என்னும் நாட்டார் கதைப்பாடலைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் சீனக் கிராமங்களில் அவன் மேற்கொண்ட பயணத்தை அந்த வீடியோ விவரிக்கிறது. யுன்னான் என்னும் கிராமத்தில் லி ஜியாமின் என்னும் கலைஞன் அந்த நிகழ்த்துகலையை நடிப்பதில் வல்லவன் என அறிந்து அவனைச் சந்திப்பதற்காகச் செல்கிறான் கெனிச்சி. நீண்ட பயணத்துக்குப் பிறகு ஜியாமினைச் சந்திக்கிறான் கெனிச்சி. தன் நோக்கத்தைச் சொல்லி உரையாடுகிறான். திருவிழா சமயத்தில்தான் அந்தக் கதை நடிக்கப்படும் என்றும் அது சமீபத்தில்தான் முடிந்துவிட்டதென்றும் அடுத்த ஆண்டு அவசியம் வரவேண்டுமென்றும் அப்போது நடித்துக் காட்டுவதாகவும் தெரிவிக்கிறான் ஜியாமின். அத்துடன் அந்த வீடியோ பதிவு முடிவடைந்துவிடுகிறது.

இரவெல்லாம் யோசனையில் மூழ்கிக் கிடக்கிறார் தகாதா. தன் மகனுடைய ஆர்வம் அவருக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. வீடியோவில் ஜியாமின் குறிப்பிட்ட பருவம் தொடங்கிவிட்டதையும் அப்போது புறப்பட்டால் அந்த நாடகத்தைப் படமெடுத்துவிட்டுத் திரும்பிவிட முடியும் என்று அவர் நினைக்கிறார். தனது மகனின் ஆசையை நிறைவேற்றிவைப்பதன் மூலம் அவனுடைய நம்பிக்கையையும் அன்பையும் பெறமுடியும் என்று அவருக்குத் தோன்றுகிறது. அடுத்த நாளே அவர் சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். லிஜியாங் என்னும் நகரத்தில் இறங்கி வாடகைக்காரில் ஜாஸ்மின் என்னும் மொழிபெயர்ப்பாளரோடு புறப்பட்டுச் செல்கிறார். ஒரு வழிகாட்டியையும் அமர்த்திக்கொண்டு ஜியாமினைத் தேடி கிராமத்துக்குச் செல்கிறார்கள். துரதிருஷ்டவசமாக ஜியாமின் அங்கே இல்லை. ஓர் அடிதடி வழக்கில் அவன் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாக தகவல் கிடைக்கிறது. கிராமத்தில் திருமணமாகாமலேயே ஜியாமின் ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தான். ஒரு மகனைப் பெற்றெடுத்துவிட்டு அவள் இறந்துவிடுகிறாள். தன் மகனைப்பற்றி தவறாகப் பேசிய ஒருவனை அடித்துவிட்டான் என்பதுதான் அந்த வழக்கு. தகாதாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அந்த நாடகத்தை வேறொரு கலைஞனைக் கொண்டு நிகழ்த்தவைத்து படமாகப் பிடித்துக்கொள்ளலாம் என்றொரு ஆலோசனையை வழங்குகிறான் வழிகாட்டி. அந்த நாடகம் முகத்தில் முகமூடியைப் போட்டுக்கொண்டு நடிக்கப்படும் நாடகமென்றும் படமாகப் பிடிக்கப்பட்ட பிறகு அதில் ஜியாமிதான் நடித்தானா அல்லது வேறொருவர் நடித்தாரா என்பது தெரியப்போவதில்லை என்றும் சொல்கிறான். ஆனால் அந்தத் திட்டத்தை ஏற்க மறுத்துவிடுகிறார் தகாதா. தன் மகன் ஜியாமின் பேசியும் பாடியும் நடிக்கும் நாடகத்தைத்தான் படம் பிடிக்க விரும்பினான் என்றும் அவனை ஏமாற்றும் செயலைச் செய்யமுடியாது என்றும் சொல்கிறார். மேலும் வெறும் கையோடு திரும்பிச் செல்லவும் தனக்கு விருப்பமில்லை என்றும் சொல்கிறார். அதற்குள் ஒப்பந்த நேரம் முடிந்துவிட்டதாகச் சொல்லி ஜாஸ்மின் திரும்பிச் சென்றுவிடுகிறாள். அரைகுறையாக ஜப்பானிய மொழியைத் தெரிந்துவைத்திருக்கும் வழிகாட்டியையே உதவிக்கு வைத்துக்கொள்கிரார் தகாதா.

அப்போது தகாதாவின் மருமகள் தொலைபேசியில் அழைக்கிறாள். எங்கே போய்விட்டீர்கள் என்று கேட்கிறாள். கெனிச்சியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவன் விரும்பிய நாடகத்தைப் படமெடுப்பதற்காக சீனக் கிராமத்துக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார் தகாதா. தன் முயற்சி அவனை மகிழ்ச்சிப்படுத்தக்கூடும் என நம்புவதாகவும் சொல்கிறார். அவர் முயற்சியை அறிந்து மனநெகிழ்ச்சியுறுகிறாள் மருமகள். அவர் மகனிடம் அந்தத் தகவலைத் தெரிவிப்பதாகச் சொல்கிறாள்.

ஜியாமினைச் சந்திக்காமல் திரும்ப முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் தகாதா வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் சிறைத்துறை அதிகாரிகளையும் சந்திக்க நடவடிக்கைகள் எடுக்கிறார். வெளிநாட்டவர் என்பதாலும் சிறையில் படமெடுத்தல் என்பதாலும் அதிகாரிகள் அவர் கோரிக்கையை நிராகரித்துவிடுகிறார்கள். அப்போதும் மனம் சோர்ந்துபோகவில்லை தகாதா. மொழிப்பிரச்சினையின் காரணமாக தன் எண்ணத்தை அவர்களுக்குப் புரியவைக்க முடியவில்லை என்று நினைக்கிறார். தனக்கும் தன் மகன் கெனிச்சிக்கும் இடையிலுள்ள உறவு, கெனிச்சியின் உடல்நிலை, கெனிச்சியின் நிகழ்த்துகலை ஆர்வம், தன் மகனுக்கு ஜியாமின் வழங்கியிருக்கும் வாக்குறுதி, மரணத்தறுவாயில் இருக்கும் ஒரு மகனுக்கு ஒரு தந்தையாக தான் ஆற்ற நினைக்கும் கடமை என சொல்ல நினைப்பவை அனைத்தையும் பேசி, அதை ஒரு புதிய வீடியோ கேசெட்டில் முதலில் பதிவு செய்யவைக்கிறார். தான் பேசியவை அனைத்தையும் ஒரு வரி விடாமல் தொலைபேசியிலேயே எங்கோ இருக்கும் மொழிபெயர்ப்பாளரான ஜாஸ்மினுக்குத் தெரிவித்து, அவை அனைத்தையும் சீன மொழியில் மொழிபெயர்த்து எழுதி தொலைநகலில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறார். தொலைநகலில் வந்த சீன வாசகங்களைப் படித்துப் புரிந்துகொள்ளும்படி வழிகாட்டியைக் கேட்டுக்கொள்கிறார். வீடியோவில் தான் உரையாடத் தொடங்கியதும், தன் சொற்களுக்கு இணையாக சீன வாசகங்களை அவன் அதிகாரிகளுக்குப் படித்துக் காட்டவேண்டும் என்று வழிகாட்டிக்கு எடுத்துரைக்கிறார். வழிகாட்டிக்கு தகாதாவின் நிலைமை அப்போதுதான் முழுமையாகப் புரிகிறது. உடனே, அதிகாரியின் அலுவலக வாசலிலேயே காத்திருந்து அவரைச் சந்திக்கும் வழிகாட்டி, அதிகாரிகள் குழு அந்த வீடியோவைப் பார்ப்பதற்கான ஏற்பாட்டைச் செய்கிறான். மரணத்தின் விளிம்பில் காத்திருக்கும் ஓர் உயிருக்காக முன்வைக்கப்படும் கோரிக்கை என்பதைப் புரிந்துகொள்ளும் அதிகாரிகள் தகாதா சிறைக்குள் சென்று ஜியாமினைச் சந்திக்கவும் படம் பிடிக்கவும் அனுமதியை அளிக்கிறார்கள்.

தடையைக் கடந்துவிட்டோம் என்று நிம்மதியோடு சிறைக்குள் செல்லும் தகாதாவுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. படம் பிடிப்பதற்கான ஒப்பனையைச் செய்துகொண்டு மேடையில் தோன்றும் ஜியாமின் தன்னால் குரலெடுத்துப் பாடமுடியவில்லை என்றும் தன் மகனைப்பற்றி நினைவு தன்னைப் படாத பாடுபடுத்துகிறது என்றும் அமைதியற்ற அச்சூழலில் தன்னால் பாடி நடிக்கமுடியாதென்றும் சொல்லிவிட்டு முகமூடியைக் கழற்றிவிடுகிறான்.

தன் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்ட சோர்வில் சிறைக்கூடத்தைவிட்டு வெளியே வரும் தகாதாவை ஜப்பானுக்கே திரும்பிச் செல்லும்படி சொல்கிறான் வழிகாட்டி. அதற்கு உடன்பட மறுக்கிறார் தகாதா. பட முயற்சியை ஒருபோதும் கைவிடமுடியாது என்று சொல்கிறார். மகனுடைய நினைவில் துயருறும் அப்பா என்னும் நிலையில் ஜியாமினுக்கும் தனக்கும் பெரிய வேறுபாடொன்றும் இல்லை என்பதை அவர் மனம் புரிந்துகொள்கிறது. ஜியாமினுக்குச் செய்யும் உதவி தனக்குத்தானே செய்துகொள்ளும் உதவி என அவர் மனம் கருதுகிறது. நீண்ட யோசனைகளுக்குப் பிறகு யுன்னான் கிராமத்துக்குச் சென்று ஜியாமினுடைய மகனைச் சந்தித்து அழைத்து வந்து அவன் முன் நிறுத்தலாமென்றும் அப்போது உத்வேகம் கொண்டு அவன் பாடக்கூடும் என்றும் அவர் வழிகாட்டியிடம் சொல்கிறார். அவர் பயணம் மீண்டும் தொடர்கிறது.

கிராமத்துப் பெரியவர்களைச் சந்தித்து அந்த வருகையின் நோக்கத்தைத் தெரியப்படுத்துகிறான் வழிகாட்டி. பெரியவர்கள் தகாதாவிடம் அன்போடும் மதிப்போடும் நடந்துகொள்கிறார்கள். முறையற்ற உறவால் பிறந்த – ஜியாமினால் கைவிடப்பட்ட மகன் யான்யானை ஊரே பொறுப்பேற்று வளர்த்து வருகிறதென்றும் சொல்கிறார் ஒரு பெரியவர். அச்சிறுவனை தகாதாவின் பொறுப்பின் அனுப்புவதற்கு அவர் உடன்படுகிறார். கிராமமே கூடி அவருக்கு ஒரு விருந்தளிக்கிறது. எட்டு வயது சிறுவனான யான்யானும் அந்த விருந்தில் கலந்துகொள்கிறான். அவனை விதம்விதமான கோணங்களில் தன் கேமிராவில் படமெடுக்கிறார். அத்தருணத்தில் அவருடைய மருமகளிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. தனக்காக தன் அப்பா ஆவணப்படமெடுக்கச் சென்றிருக்கும் செய்தியைக் கேட்டு கெனிச்சி மிகவும் மகிழ்ச்சியுற்றான் என்றும் அவர்மீது தனக்கு எவ்விதமான வருத்தமும் இல்லையெனத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டான் என்றும் மகிழ்ச்சியுடன் சொல்கிறாள். அதைக் கேட்டு தகாதாவின் மனம் நிம்மதியடைகிறது. அடுத்த ஆண்டு வருவேன் என ஜியாமினிடம் சொன்ன சொல் ஒரு சம்பிரதாயத்துக்குச் சொல்லப்பட்ட சொல்தான் என்றும் படமெடுக்கும் முயற்சியை நிறுத்திவிட்டு ஊருக்குத் திரும்பிவிடலாமென்றும் கெனிச்சி கேட்டுக்கொண்டதாகவும் மருமகள் தெரிவிக்கிறாள். தகாதா அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இம்முயற்சியில் தன்னால் வெற்றிபெற முடியும் என்றும் இப்படம் கெனிச்சியை கண்டிப்பாக மகிழ்ச்சியடைய வைக்கும் என்றும் அதற்காக இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது தன்னுடைய கடமையென்றும் ஆவணப்படத்துடன் விரைவில் வந்து சந்திப்பதாகவும் சொல்லிவிட்டு புன்னகைக்கிறார் தகாதா.

யான்யானை அழைத்துக்கொண்டு கிராமத்தைவிட்டு புறப்படுகிறார்கள். வழியில் ஓரிடத்தில் வாகனத்தில் பழுது ஏற்பட்டுவிடுகிறது. வண்டியோட்டியும் வழிகாட்டியும் பழுதை நீக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். தகாதா வண்டியிலிருந்து இறங்கி குன்றுகளின் தொகையாக உள்ள அந்த இடத்தையும் சிக்கலான வளைவுப்பாதைகளையும் வேடிக்கை பார்க்கிறார். சிறுநீர் கழிப்பதற்காகச் செல்லும் சிறுவன் யாரும் தன்னை கவனிக்காத ஒரு தருணத்தில் அங்கிருந்து தப்பிவிடுகிறான். வெகுநேரத்துக்குப் பிறகு அதை உணர்ந்துகொள்கிற தகாதா அவன் சென்ற பாதையில் அவனைத் தேடிச் செல்கிறார். அந்தி சாயும் நேரத்தில் ஒரு குன்றின் திருப்பத்தில் அவனைக் கண்டுபிடிக்கிறார். சிறுவன் அவருடன் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறான். சிறுவனுக்கு அந்தப் பயணத்தில் சிறிதும் ஆர்வமில்லை. அவனுக்கு தன் தந்தையைப் பார்ப்பதில் எந்த ஆர்வமும் இல்லை. அவர்மீது அவனுக்கு துளியளவு கூட பாசமும் இல்லை. அதை தகாதா புரிந்துகொள்கிறார். அவன் ஓடும்போதும் சீறும்போதும் முறைக்கும்போதும் பல படங்களை எடுத்துக்கொள்கிறார் தகாதா. இருவரும் திரும்பி நடக்கிறார்கள். அதற்குள் இருட்டி விடுகிறது. எங்கோ தவறான சாலையில் செல்வதை அப்போது உணர்கிறார் தகாதா. தொடர்ந்து செல்லாமல் விடியும்வரைக்கும் எங்காவது ஒதுங்கி இருப்பதுதான் நல்ல வழி என அவருக்குத் தோன்றுகிறது. குன்றுக்கிடையில் ஓர் இடுக்கைக் கண்டுபிடித்து அங்கே இருவரும் ஒடுங்குகிறார்கள்.

வாகனத்தின் பழுதை நீக்கியபிறகு சிறுவன் காணாமல் போன செய்தியைத் தெரிவிப்பதற்காக கிராமத்துக்கு மீண்டும் செல்கிறான் வழிகாட்டி. கிராமத்துக்காரர்கள் தீப்பந்தங்களோடு குன்றுகளுக்கிடையில் தேடி வருகிறார்கள்.

ஒருவேளை யாராவது தம்மைத் தேடிவந்தால் அவர்கள் காதுகளில் விழவேண்டும் என தன்னிடமிருக்கும் விசிலை எடுத்து ஊதுகிறார் தகாதா. விசில் ஓசையைக் கேட்டதும் ஆர்வம் மிகுதியால் அதை வாங்கி ஊதுகிறான் சிறுவன். விசில் ஓசை குன்றுகளில் பட்டு எதிரொலித்தபடி இருக்கிறது. ஒரு கட்டத்தில் தகாதாவை அச்சிறுவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. அவர் மடியிலேயே சாய்ந்து உறங்கிவிடுகிறான். தன் மேல்கோட்டைக் கழற்றி சிறுவனுக்குப் போர்த்திவிடுகிறார் தகாதா. அடிக்கடி தன் கேமிராவை இயக்கி, வெளிச்சப்புள்ளியை உருவாக்கியபடி இருக்கிறார்.

கிராமத்துக்காரர்கள் தகாதாவையும் சிறுவனையும் அதிகாலையில் கண்டுபிடித்து கிராமத்துக்கே அழைத்து வருகிறார்கள். மருத்துவர்கள் விரைந்துவந்து மருத்துவம் செய்கிறார்கள். சிறுவனால் ஏற்பட்ட இடையூறுகளுக்காக தகாதாவிடம் வருத்தம் தெரிவிக்கிறார்கள் கிராமத்துப் பெரியவர்கள். தன் அப்பாவைப் பார்க்க நகரத்துக்கு வருவதைக் குறித்து யான்யானுடைய எண்ணம் என்ன என்று கேட்டுச் சொல்லுமாறு பெரியவர்களிடம் வேண்டுகிறார் தகாதா. அது அவசியமில்லை என்றும் பெரியவர்கள் கட்டளைக்கு சிறுவர்கள் கட்டுப்படவேண்டும் என்றும் சொல்கிறார்கள் பெரியவர்கள். ஆயினும் தகாதாவின் தொடர்ச்சியான வேண்டுகோள்களுக்குப் பிறகு யான்யானுக்குப் பக்கத்தில் சென்று அவனுடைய எண்ணத்தைச் சொல்லுமாறு கேட்கிறார்கள். அவன் தனக்கு தன் அப்பாவைப் பார்ப்பதில் ஆர்வமில்லை என்றும் நகரத்துக்குச் செல்லப் போவதில்லை என்றும் சொல்லிவிட்டு அழுகிறான். அந்த அழுகை கிராமத்துப் பெரியவர்களுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

அதற்கிடையில் தகாதாவுக்கு அவர் மருமகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. முந்தைய நாள் இரவில் கெனிச்சி மறைந்துவிட்ட செய்தியை அவள் துயரத்துடன் சொல்கிறாள். மரணத்துக்கு முன்பாக அவரைப்பற்றி கெனிச்சி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும் அவரிடம் காரணமில்லாமலேயே முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும் சொல்கிறாள். அவன் சொல்லச்சொல்ல அவள் எழுதிய கடித வரிகளை அவள் தொலைபேசியிக்லேயே தகாதாவுக்குப் படித்துக் காட்டுகிறாள். அவை அவர் மனத்தை நெகிழ்வடைய வைக்கின்றன. படமெடுக்கும் முயற்சியை நிறுத்திவிட்டு திரும்பி வந்துவிடுமாறு அவரை மறுபடியும் கேட்டுக்கொள்கிறாள் மருமகள். எதுவும் பேசாமல் பெருமூச்சோடு கைப்பேசியை அணைத்துவிட்டு பெரியவர்களிடம் வருகிறார் தகாதா. சிறுவனைக் கட்டாயப்படுத்தவேண்டாம் என்றும் தான் படமெடுக்கப் போவதில்லை என்றும் அவர் சொல்கிறார். யான்யானை நெருங்கி அவன் தலையை வாஞ்சையோடு வருடிக்கொடுத்து மார்போடு அணைத்துக்கொள்கிறார். யான்யானின் விழிகளில் கண்ணீர் வழிகிறது. யான்யானிடம் உள்ள குழந்தைமையை தகாதாவும் தகாதாவிடம் உள்ள தந்தைமையை யான்யானும் உணர்ந்துகொள்கிறார்கள். தனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்ட விசிலை ஊதி, கிராமத்தைவிட்டு வெளியேறும் தகாதாவின் வாகனத்துக்கு விடையளிக்கிறான் யான்யான்.

நகரத்துக்குத் திரும்பிய பிறகு மீண்டும் சிறையதிகாரிகளைப் பார்த்துப் பேசி அனுமதியைப் பெறுகிறான் வழிகாட்டி. சிறையில் உள்ள கலைக்கூடத்துக்கு ஜியாமின் வரவழைக்கப்படுகிறான். தான் எடுத்து வந்த யான்யான் புகைப்படங்களை அவனுக்குக் காட்டுகிறான். மனம் நெகிழ்ந்து போகிறான் ஜியாமின். நிகழ்த்துகலைக்காக முகமூடியை அணிந்து அணிந்து எல்லாத் தருணங்களிலும் ஒரு முகமூடியை அணிந்துகொள்ளும்படியாக தன் வாழ்க்கை அமைந்துவிட்டது என அழுகிறான் அவன். முகமூடியில்லாமல் பழகவேண்டிய மகனிடம்கூட ஏதோ ஒரு முகமூடியோடு பழகியதில் அவனுடைய உறவையே இழக்கும்படி நேர்ந்துவிட்டது என்றும் அழுகையிடையே ஒவ்வொரு வார்த்தையும் தடுமாற சொல்கிறான். மனித உறவுகளிடையே முகமூடி இருக்கக்கூடாது என்று இறுதியாகச் சொல்லி முடிக்கிறான். பிறகு ஒப்பனை புனைந்து நாடகத்தை நிகழ்த்துவதற்குத் தயாராகிறான். படமெடுக்கப் போவதில்லை என தகாதா தெரிவித்தாலும் கூட படமெடுக்கும்படி அவனை எல்லோருமே கேட்டுக்கொள்கிறார்கள். உச்சகட்ட உணர்ச்சிவேகத்தில் அந்த நாடகம் அங்கே அரங்கேறுகிறது.

மகனுடைய மன்னிப்பையும் அன்பையும் நல்லெண்ணத்தையும் பெறுவதற்காக மொழி தெரியாத ஒரு நாட்டில் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவுக்கு தனிமையில் மேற்கொண்ட தனது பயணத்தை அசைபோட்டபடி தன்னுடைய கிராமத்துக்கே திரும்பிவருகிறார் தகாதா.

திரைப்படத்தின் கதைமட்டுமல்ல, ஒவ்வொரு காட்சியும் மனம்கவரும் வகையில் கவித்துவத்துடன் அமைந்திருக்கிறது. தூண்டிலை வீசிவிட்டு மீனுக்காகக் காத்திருந்து பிடிக்கிற கலையில் ஆர்வமும் தேர்ச்சியும் உள்ள தகாதா தன் மகனின் மனத்தில் உள்ளதென்ன என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வமோ தேர்ச்சியோ இல்லாமல் இருப்பதில் உள்ள முரணை மெளனமாக முன்வைக்கின்றன, தகாதாவின் மீன்பிடி காட்சிகள். சீனப் பயணமும் ஜியாமின், யான்யான், கிராமத்துப் பெரியவர்கள், ஜாஸ்மின், வழிகாட்டி என பலருடைய பழக்கமும் அவருக்கு மனத்தை அறியும் ஆர்வத்தையும் பக்குவத்தையும் வழங்குகின்றன. ஆனால் அந்த அனுபவத்தின் அடிப்படையில் நெருங்கி உறவாட அவர் மகன் உயிருடன் இல்லை. இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரையும் தன் மகனாக நினைத்துக்கொள்ளும் புள்ளிக்கு அருகில் வாழ்க்கை அவரைக் கொண்டுவந்து நிறுத்துகிறது.

தகாதாவின் வாகனம் செல்லும் பாதையைக் காட்டும் ஒவ்வொரு காட்சியிலும் வளைந்துவளைந்து நீளும் பல பாதைகளின் தடங்களும் பயணப்பாதையுடன் இணைந்து தெரிகின்றன. சிக்கல் நிறைந்த பயணத்தின் குறியீடாக இவை ஒரு கணம் தோன்றி மறைகிறது. மிக எளிமையாக வாழவேண்டிய வாழ்க்கையை நாமே நம் எண்ணங்களாலும் செய்கைகளாலும் சிக்கலாக்கிக் கொள்கிறோம். பிறகு அதிலிருந்து மீண்டு, மறுபடியும் பழைய தடத்தில் இணைந்துகொள்வது என்பது நாம் நினைக்கிற அளவுக்கு எளிதானதல்ல.

நாளை என்றேனும் ஒருநாள் ஜியாமின் சிறையிலிருந்து விடுதலையாகி வரக்கூடும். ஆனால் அவனால் தன் மகன் யான்யானை நெருங்கி உறவாட முடியுமா என்பதை உறுதியாகச் சொல்லமுடியவில்லை. தன் மகனுடனான உறவைச் சீராக்கிக்கொள்ள தகாதாவைப்போல அவனும் ஏதேனும் ஒரு பயணத்தை மேற்கொள்ள நேரிடலாம். மகனுடன் தன் உறவைச் சீரமைத்துக்கொள்ள விரும்பும் அப்பா அல்லது அப்பாவுடன் தன் உறவைச் சீரமைத்துக்கொள்ள விரும்பும் மகன் இந்த மண்ணில் காலம்காலமாக எல்லாத் தேசங்களிலும் ஏதோ ஒருசில முயற்சிகளில் ஈடுபட்டபடியே இருக்கிறார்கள்.

தகாதா மேற்கொள்ளும் முயற்சியைவிட, கெனிச்சியின் மனமாற்றத்தைவிட முக்கியமானதொரு உண்மையை மறைமுகமாக உணர்த்தும் ஒரு காட்சி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. அது காட்டில் வழி தெரியாமல், கட்டற்ற அன்பெனப் பொழியும் நிலவொளியில் ஒரு குன்றின் இடுக்கில் தகாதா தன் மடியில் சிறுவனை படுக்கவைத்துக்கொண்டிருக்கும் காட்சி. பெற்றுவிட்டதாலேயே ஒருவன் அப்பாவாக இருந்துவிட முடியாது. பிறந்துவிட்டதாலேயே ஒருவன் மகனாகவும் இருந்துவிட முடியாது. அப்பா என்றாலும் சரி, மகன் என்றாலும் சரி, அது ஓர் உணர்வுநிலை. குருதிவழியாக அது அமைவதில்லை. அதற்கு தகாதா-யான்யான் சாட்சி. அது உலகப்பார்வையில் எடுபடாமல் போகலாம். ஆனால் உணர்வுசார்ந்த உலகத்தில் அதற்கு எப்போதும் இடமுண்டு.

Series Navigationதமிழ் விஞ்ஞான நூல் “விண்வெளி வெற்றிகள்”தொடுவானம் 111. அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *