தொடுவானம் 119. ஜப்பானியர் கைப்பற்றிய சிங்கப்பூர்..

This entry is part 8 of 10 in the series 8 மே 2016
 Surrender of Singapore

சிங்கப்பூரை முதன்முதலாகக் கண்டுபிடித்து பெயர் சூட்டியவர் ஸ்ரீ விஜயத்தின் இந்திய இளவரசர் பரமேஸ்வரன். இவர் அரசு விருந்தினராக சீன தேசம் வரை சென்று வந்துள்ளார். சீனாவுடன் கடல் மார்க்கமாக வர்த்தகமும் செய்துள்ளார். அவருக்குப்பின் அவருடைய மகன் இஸ்கந்தர் ஷா 1389 ஆம் வருடத்தில் சிங்கப்பூரின் மகாராஜாவானார். அவர் அந்தப் பாரசீகப் பெயரைச சூடிக்கொன்டாலும் அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவவில்லை.இவர் ஸ்ரீ ரண விக்ரமா  என்றும் பெயர் கொண்டவர். 1398 ஆம் வருடத்தில் ஜாவா தீவிலிருந்து மஜாபாகித் என்னும் இந்து அரசர் விக்கிரமவர்த்தனன்  என்பவர் பெரும் கப்பற்படையுடன் வந்து தாக்கி சிங்கப்பூரைக் கைப்பற்றினார். தப்பியோடிய ஸ்ரீ விஜய மன்னன் வடக்கே மலாயாவிலிருந்த மலாக்காவைக் கண்டுபிடித்து தன் இராஜ்யத்தை அமைத்துக்கொண்டார். அங்கிருந்து அவரின் சந்ததியினர் சிங்கப்பூரையும் ஆண்டனர்.

சிங்கப்பூரை 1819 வருடத்தில் விலைக்கு வாங்கிய ரேபிள்ஸ் அதை கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய துறைமுகமாகப் பயன்படுத்த அதை ஆங்கிலேயரின் காலனியாக மாற்றினார்.

சிங்கப்பூர் துறைமுகம் மேற்கிற்கும்  கிழக்கிற்கும் நடுவில் இருந்ததால் மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கே சீனாவுக்கும் ஜப்பானுக்கும் செல்லும் கப்பல்கள் சிங்கப்பூரில் தங்கி பழுது பார்ப்பது, தண்ணீர் மற்றும் உணவுகளை ஏற்றிக்கொள்வது போன்றவற்றுக்கு பயன்பட்டது. பொருள்கள் இங்கு இறக்குமதியும் ஏற்றுமதியும் ஆனது.  வரி விதிக்கப்படாமல் இலவச துறைமுகமாகவும் செயல்பட்டது. இங்கு ஆங்கிலேயர்கள், யூதர்கல், அராபியர்கள், ஆர்மீனியர்கள், அமெரிக்கர்கள், சீனர்கள், இந்தியர்கள் தங்களுடைய வர்த்தக நிறுவ னங்களை அமைத்துக்கொண்டனர். இதன் மூலம் உலக வர்த்தகச் சந்தையாயாக சிங்கப்பூர் மாறியது.
குறிப்பாக மலாயாவிலிருந்து ரப்பரும் ஈயமும் இங்கு இரயில் மூலம் கொண்டுவரப்பட்டு ஏற்றுமதி செயப்பட்டது. அந்த ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய ஆயிரமாயிரம் தமிழர்களும் தெலுங்கர்களும் கொண்டுவரப்பட்டனர். துறைமுகத்தில் பணி புறியவும்  ஆயிரக்கணக்கில் தமிழர்கள் தமிழகத்திலிருந்து கொண்டுவரப்பட்டனர்.அதோடு சிங்கப்பூரில் வீதிகள், கட்டிடங்கள் அமைக்கவும் தமிழர்கள் பெரிதளவில் பயன்பட்டனர். நகரசபைத் தொழிலாரகளாக பலர் அமர்த்தப்பட்டனர். அதோடு அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், தபால் நிலையங்களிலும், இரயில் நிலையத்திலும் பணிபுரியவும்  தமிழர்கள் பயன்பட்டனர்.

சீனர்கள் பெரும்பாலும் வர்த்தகம் செய்ய சீனாவிலிருந்து வந்து சேர்ந்தனர். மலாயா ஈய லம்பங்களில் வேலை செய்ய ஆயிரக்கணக்கில் கொண்டுவரப்பட்டனர்.சீனாவில் நிலவிய கம்யூனிஸ்ட்டு ஆட்சியின் கொடுமைத் தாங்க முடியாமல் தப்பி வந்தவர்களும் ஏராளமானவர்கள் சிங்கப்பூரில் குடியேறினர். அவர்கள் திரும்ப சீனாவுக்குப் போகமுடியாமல் இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டனர். அவர்களின் ஜனத்தொகையும் பெருகியது. சிங்கப்பூரின் வர்த்தகம் அவர்கள் கையில் இருந்தது.

ஒரே கால கட்டத்தில் சிங்கப்பூருக்கு இந்தியர்களும் சீனர்களும் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டாலும் சீனர்களின் ஜனத்தொகை இங்கே பெருகியதற்கும், இந்தியர்களின் ஜனத்தொகை குறைந்ததற்கும் இதுவே முக்கிய காரணம். இந்தியர்கள் இதை பொருள் ஈட்ட வந்த நாடாகவே கருதி இந்தியாவை விடாமல் குடும்பங்களை அங்கேயே வைத்திருந்தனர். ஆனால் சீனர்களுக்கு வேறு வழியில்லை. அதனால் அவர்கள் இதையே தங்களின் நாடாக ஏற்றுக்கொண்டு பலுகிப் பெருகிவிட்டனர். வர்த்தகமும் அவர்களின் கைகளில் இருந்ததால் அவர்கள் பலம் வாய்ந்த இனமாக உருவாகிவிட்டனர். இன்று சிங்கப்பூர் சீனர்களின் கையில் இருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது அவர்களின் இராணுவம் இங்கே நிறுத்தப்பட்டது. அதில் முக்கியமானது ” நேவல் பேஸ் ” ( Naval Base ) என்னும் போர்க் கப்பல்கள் தளம். இங்கு போர்க் கப்பல்கள் கட்டப்பட்டன. 500 மில்லியன் டாலர்களால் கட்டப்பட்ட இந்தத்  தளம் உலகின் மிகப் பெரிய உலர்ந்த கப்பல் தளமாக ( Dry Dock ) உருவானது. பிரிட்டிஷ் போர்க் கப்பல்களுக்குத்  தேவையான எரிபொருள் ஆறு மாதங்களுக்குத் தேவையானது இங்கே சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இங்கே ஆயிரக்ககணக்கான தமிழர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இதைப் பாதுகாக்க தெங்கா விமான நிலையத்தில் ராயல் விமானப் படை ( Royal Air Force ) நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அங்கேயும் தமிழர்கள் வேலையில் இருந்தனர்.ஆனால் துரதிஷ்டவசமாக அனைத்து போர்க்கப்பல்களும் பிரிட்டனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவசரமானால் அவை அங்கிருந்துதான் புறப்பட்டு வரவேண்டும்!

சிங்கப்பூர் பள்ளிகளில் பெரும்பாலும் தமிழர்களே ஆசிரியர்களாகப் பணியாற்றினார். பின்புதான் சீனர்கள் ஆசிரியர் தொழிலுக்கு வந்தனர். தமிழர்கள்  வாழும் பகுதிகளில் தமிழ் துவக்கப் பள்ளிகள் இயங்கின. இதைத் தன்னார்வமுள்ள தமிழ் மக்கள் அரசு உதவியுடன் கட்டி நடத்தினர். ஆசிரியர்களுக்கு ஊதியத்தை அரசு வழங்கியது. அத்தனை தமிழ்ப் பள்ளிகளுக்கும் ஒரேயொரு உயர்நிலைப் பள்ளிதான் இருந்தது. அது உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி. இதை சிங்கப்பூரில் இருந்த தமிழ் இஸ்லாமியயர்கள் உருவாக்கி அரசு உதவியுடன் நடந்தினர்.

ஆனால் சீனர்களின் நிலை வேறுவிதமானது.சீனாவில் கம்யூனிஸ்ட்டு புரட்சி நடந்தது. அங்கு அடக்குமுறையில் வேலைகள் வாங்கப்பட்டதால் அதிலிருந்து தப்பி ஆயிரக்கணக்கில் சீனர்கள் இங்கு கூலி வேலை செய்ய தப்பித்து வந்தனர். இங்கு வந்தவர்கள் சன் யாட் சென்னை ( Sun Yat  Sen ) ஆதரித்து வந்தனர். அவர் அப்போது சீனாவை ஆண்டுகொண்டிருந்த குவிங் அரச பரம்பரையை ( Qing Dynasty ) எதிர்த்து போராடிவந்தார்.சீனர்கள் இரகசிய சங்கங்கள் நடத்தினர். அவர்கள் கூலியாட்களை கடுமையாக நடத்தினர். பெண்களை கட்டாயமாக விலைமாதர் தொழிலில் ஈடுபடுத்தினர். ஆங்கில அரசு சீனர்களின் இரகசிய சங்கங்களுக்குத் தடை விதித்தது. இருந்தபோதிலும் அவை இரகசியமாகவே செயல்பட்டன. பின்னாட்களில் அவை குண்டர் கும்பலாக உருமாறின.அவை பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டன. இது ஒருபுறமிருக்க சீனர்கள் சிங்கப்பூரிலேயே நிரந்தரமாகக் குடியேறி விட்டதால் 1827 இல் சீனர்களின் ஜனத்தொகை முதலிடத்தில் உயந்து இன்றுவரை அதே நிலையில் உள்ளது. 1860 இல்தான் இந்தியர்களின் ஜனத்தொகை இரண்டாம் நிலையை எட்டியது. 1911 ஆம் ஆண்டில் சீன குடியரசு உருவாக சிங்கப்பூரில் குடியேறிய சீனர்கள் பெருமளவில் நிதி திரட்டி உதவியதோடு ஆயதங்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதுவரை சிங்கப்பூர் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சியின்கீழ் இருந்தது. பெரும்பாலான வர்த்தகர்கள் அதை எதிர்த்தனர். அதனால் 1867 ஆம் ஆண்டிலிருந்து பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் ஆகியவை கிரவுன் காலனி ( Crown Colony ) என்று ஒரு ஆளுநரின் கீழ் செயல்பட்டது. இதன் தலைமையகம் லண்டனில் இருந்தது. ஆளுநருக்கு உதவியாக ஒரு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் ( Legislative Council ) செயல்பட்டது. அதன் உறுப்பினர்கள் அமர்த்தப்பட்டனர்.தேர்வு செய்யப்படவில்லை.

சிங்கப்பூர் வர்த்தக ரீதியிலும் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கியது. அதுவே அதற்கு ஆபத்தையும் கொண்டுவந்தது!

1941 ஆம் வருடம் டிசம்பரில் ஜப்பான் போர் விமானங்கள் பேர்ல் துறைமுகத்தையும் ( Pearl Harbour  ) மலாயாவின் கிழக்குக் கடற்கரையையும் குண்டு வீசித் தாக்கின!

தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கைப்பற்றி அவற்றின் பொருளாதாரத்தையும் வளத்தையும் தனது இராணுவ முன்னேற்றத்துக்கு பயன்படுத்த எண்ணியது ஜப்பான். அதனால் சகலவிதமான செழிப்புடன் விளங்கிய சிங்கப்பூர் மீது ஜப்பான் குறி வைத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

சிங்கப்பூரின் பிரிட்டிஷ் இராணுவ தளபதிகள் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையுடன் இருந்தனர். ஜப்பானியர்கள் தெற்கிலிருந்துதான் தாக்கமுடியும் என்பது அவர்களின் கணிப்பு. வடக்கே மலாயாவின் அடர்ந்த காடுகள்  பாதுகாப்பு அரண் என்று நம்பினர். அவற்றை ஊடுருவி ஜப்பானியர்கள் வர இயலாது என்று இறுமாந்திருந்தனர். அனால் நடந்ததோ வேறு!

வடக்கே கோத்தா பாருவில் கடற்கரையில் ஜப்பானியர் இறங்கிவிட்டனர். உதவிக்கு வந்த பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ( Prince of Wales ), ரீபல்ஸ் ( Repulse ) என்னும் இரண்டு பிரிட்டிஷ் போர்க்கப்பல்களும் ஜப்பானிய குண்டுவீச்சால் மூழ்கடிக்கப்பட்டன!

வடக்கிலிருந்து வெகு வேகமாக ஜப்பானியப் படை தெற்கே சிங்கப்பூர் நோக்கி முன்னேறியது. அதைத் தடுத்து நிறுத்த முடியாத பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கின..ஐம்பத்து ஐந்து நாட்களில் மலாயா முழுவதையும் கைப்பற்றிவிட்டனர் ஜப்பானியர்கள். அவர்களின் அடுத்த குறி சிங்கப்பூர்தான்!

சிங்கப்பூரை மலாயாவுடன் இணைக்கும் பாலத்தை ( Causeway ) பிரிட்டிஷ் படைகள் தகர்த்தன. ஆனால் ஜப்பான் இராணுவத்தினர் அது பற்றிக் கவலை கொள்ளவில்லை. அவர்கள் படகுகள் மூலம் கடலைத் தாண்டினர்.

சிங்கப்பூர் கரையிலிருந்து அவர்களை முன்னேற விடாமல் தடுக்க அலை அலையாக பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால் ஜப்பானியர் அவர்களை சரமாரியாக சுட்டு வீழ்த்தியவாறு படகுகளில் முன்னேறினர். அவ்வாறு அன்று சிங்கப்பூரைக் காக்க ஆயிரக்கணக்கில் உயிர் நீத்த பிரிட்டிஷ் படையினர் வேறு யாரும் இல்லை – இந்தியப் படை வீரர்கள்தான்! அதில் பஞ்சாப் படையினரும் ஹைதராபாத் படையினரும் வங்காளப் படையினரும் அடங்குவர். இவர்கள்தான் அன்றைய பிரிட்டிஷ் படையினர்!

ஆயுதப் பற்றாக்குறையாலும், போர் புரிந்தவர் அடைந்த பின்னடைவாலும் பிரிட்டிஷ் லெப்டனன்ட் ஜெனரல் ஆர்தர் பெர்சிவால் நேசப் படையினருடன் ஜப்பானிய ஜெனரல் டோமோயூக்கி யாமாஷிட்டாவிடம் சீனப் புத்தாண்டான பெப்ருவரி 15ஆம் நாள் 1942 அன்று சரண் அடைந்தார்,

130,000 இந்திய, ஆஸ்திரேலிய, பிரிட்டிஷ் படைவீரர்கள் போர்க் கைதிகளாயினர். அவர்கள் பர்மா, ஜப்பான், கொரியா,மஞ்சூரியா ஆகிய நாடுகளுக்கு அடிமைகளாக நரகக் கப்பல்கள் ( Hell Ships ) மூலமாக அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் கடுமையாக நடத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கில் மாண்டனர்.

சிங்கப்பூர் ஜப்பானியரிடம் வீழ்ந்தது பிரிட்டிஷ் படையின் இராணுவ வரலாற்றில் படு தோல்வியாகக் கருதப்படுகிறது!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஉன்னை நினைவூட்டல்”வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்”
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *