தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 ஆகஸ்ட் 2020

ஒன்றும் தெரியாது

Spread the love

அன்பழகன் செந்தில்வேல்

கல்யாணமோ சடங்கு வீடோ
கபடி விளையாட்டோ கட்சி கூட்டமோ
பழனிச் சாமி அண்ணன் கொண்டு வரும்
சோடா கலர் மென் பானங்கள்தான்
நாவிற்கு தித்திப்பாய் இருக்கும்
நாகல் குளத்தடி கிணற்று ஊற்றுத் தண்ணீரில் உருவான
அப்பானங்கள் தேவாமிர்தமாய் இருக்கும்
தண்ணீருடன் கார்பனேற்றி
ஆதுரமாய் ஹெர்குலிஸ் சைக்கிளில்
சோடா பானங்களை எடுத்து வருவார் அண்ணன்
சுற்றுப் புற கிராமங்களிலும்
மயில் மார்க் பானங்கள் அத்தனை பிரபலமாய் இருந்தது
தாகமோ வயிற்று வலியோ அஜீரணமோ
அண்ணனின் மென் பானங்கள் சோடா கருப்பு கலர்தான் நிவாரணம்
பரம்பரை பரம்பரையாய்
கதர் சட்டை அணியும் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணனுக்கு
உலகமயமாக்கல் பற்றி ஒன்றும் தெரியாது
நம் நாட்டு ஜீவ நதிகளில் தயாரிக்கப்பட்ட
வெளிநாட்டு மென் பானங்களின் போத்தல்கள்
உள்ளூர் கடைகளில் லிட்டர் லிட்டராக
தொங்கிய போதும் கூட
அவருக்கு உலகமயமாக்கல் பற்றி ஒன்றும் தெரியாது
தொழில் நசிந்து
தண்ணீருடன் கார்பன் டை ஆக்சைடு நிரப்பும் இயந்திரங்களில்
சிலந்தி வலை பின்னத் தொடங்கிய போதும் கூட
என்ன நடக்கிறது என்பது
அவருக்கு தெரிய வில்லை
தொழிற் கூடத்தை மூடி விட்டு
பக்கத்து ஊர் லட்சுமி மில்லுக்கு
இரவு காவலாளி வேலைக்கு செல்லும்
இந்த நாட்களிலும் கூட
அவருக்கு ஒன்றும் தெரிய வில்லை
சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் அண்ணனுக்கு
கோக்கோ பெப்சியோ பேண்டாவோ
தம்ளர்களில் ஊற்றிக் கொடுக்கும் போது
குடித்து முடித்து விட்டு
என்ன எசென்ஸ் கலந்து இருக்கானுவ
செத்த பயலுவ என்று சொல்வதோடு சரி

Series Navigationமே-09. அட்சய திருதியை தினம்கவிதை

Leave a Comment

Archives