ஜப்பானியர் ஆட்சியின் கீழ் சிங்கப்பூர் இருந்தபோது அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வந்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது.
அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு பரம எதிரி. கல்கத்தாவில் அவர்களால் வீட்டுக் காவலில் இருந்தபோது மாறுவேடம் பூண்டு தப்பித்தார். ஆப்கானிஸ்தான் வழியாக தரை மார்க்கமாக ரஷியா சென்றார். அங்கு இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை எதிர்த்துப் போர் புரிய உதவி கேட்டார். ஆனால் அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. அங்கிருந்து அவர் ஜெர்மன் தூதரகத்தின் உதவியுடன் ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் சென்றார்.
ஜெர்மனியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டாம் உலகப் போரின் உச்ச கட்டம் அது. ஹிட்லரின் படைகள் ஆஸ்திரியா, பெல்ஜியம், ருமேனியா, போலந்து, நார்வே, டென்மார்க்,ஸ்வீடன், செக்கோசுலோவிக்கியா பிரான்சு, ஆகிய ஐரோப்பாவின் அனைத்து நாடுகளையும் கைப்பற்றி வெற்றி வாகைச் சூடியது ஜெர்மனி. அடுத்த இலக்காக இங்கிலாந்தைக் குறிவைத்தது. லண்டன் நகரின் மீது குண்டுகளும் வீசியது.
ஜெர்மனியுடன் கூட்டு சேர்ந்திருந்த ஜப்பான் தென் கிழக்கில் எல்லா நாடுகளையும் கைப்பற்றிவிட்டது. அவற்றில் மலாயா, சிங்கப்பூர், இந்தோனேசிய, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஜப்பானின் கைவசம் மாறியது அவற்றில் சிங்கப்பூரை இழந்தது பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு பெருத்த அவமானமும் இழப்புமாகும். இங்கிலாந்தின் தற்காப்பு அமைச்சர் வின்ஸ்டன் சர்ச்சில் நிலை தடுமாறினார். அவருக்கு இங்கிலாந்தைக் காப்பதா அல்லது கிழக்கில் இருந்த இந்தியாவையும் இதர பிரிட்டிஷ் காலனிகளைக் காப்பதா என்ற குழப்பம்.
அதுபோன்றே ஹிட்லருக்கும் சிறு குழப்பம். இங்கிலாந்தைத் தாக்குவதா அல்லது ரஷ்யாவைத் தாக்குவதா என்பது அவரின் குழப்பம். ரஷ்யாவின் ஸ்டாலின் முன்பு இத்தாலியின் முசோலினியுடன் சேர்ந்து ஹிட்லரை ஆதரித்தவர்தான். ஆனால் இடையில் அவர் பின்வாங்கிவிட்டார். ஸ்டாலின் ரஷ்யப் புரட்சியில் கவனம் செலுத்தினார். அவருக்கு ஹிட்லர் அண்டை நாடுகளைப் பிடித்து ஜெர்மனியுடன் இணைத்துக்கொள்வதில் இணக்கம் இல்லை. எந்த நேரத்திலும் ஹிட்லர் ரஷ்யா பக்கமும் திரும்பலாம் என்பது அவருடைய அச்சம். அதனால் அவர் ஹிட்லரிடமிருந்து விலகிக்கொண்டார். அவர் எதிர்பார்த்தபடியே ஹிட்லர் ரஷ்யா மீதும் தாக்குதல் நடத்த டாங்கிகளை அனுப்பினார்.
இத்தகைய உச்ச கட்டப் போரின்போதுதான் நேதாஜி ஹிட்லரைச் சந்தித்தார் அது 1941 ஆம் வருடம் ஏப்ரல் மாதம். இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்ற இதுவே சரியான தருணம் என்று அவர் ஹிட்லரிடம் கூறி ஒரு திட்டத்தையும் முன் வைத்தார். அதன்படி ஜெர்மன் படைகள் ஆப்கானிஸ்த்தான் வழியாக இந்தியாவை வடமேற்கில் இருந்து தாக்குவது. ஜப்பானியர் பர்மா வழியாக கிழக்கிலிருந்து தாக்குதல் நடத்துவது. அப்படிச் செய்தால் இந்தியாவை எளிதில் கைப்பற்றி ஆங்கிலேயர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடலாம் என்பதே அந்தத் திட்டம். அதைக் கூர்ந்து கவனித்தபோதும், ஹிட்லர் அது பற்றி அவ்வளவாக ஆர்வம் காட்டாதது நேதாஜிக்கு ஏமாற்றத்தை உண்டுபண்ணியது. அதனால் அவர் அடுத்தபடியாக ஜப்பானின் உதவியைத்தான் நாடவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.
ஆனால் ஜப்பானுடன் சேர்ந்து இந்தியாவைக் கைப்பற்றவேண்டுமானால் தன் வசமும் ஒரு வலுவான இராணுவம் இருக்க வேண்டியதின் அவசியத்தையும் உணர்ந்தார்.ஆனால் அதற்கும் அவர் ஹிட்லரின் உதவியையே நாடவேண்டியிருந்தது.
இந்தியா பற்றி முழுமையான ஆதரவு ஹிட்லர் காட்டவில்லையென்றாலும் நேதாஜியின் விடுதலை வேட்கையை அவர் ஓரளவு புரிந்து கொண்டு உதவினார். அதன்படி 1941 நவம்பர் மாதத்தில் ஜெர்மன் நாட்டு நிதி உதவியுடன் பெர்லின் நகரில் இந்திய விடுதலை மையம் ( Free India Centre ) செயல்படத் தொடங்கியது. அங்கிருந்து அன்றாடம் இரவில் இந்திய விடுதலை வானொலி மூலம் நேதாஜி உரையாற்றினார். அந்த 3,000 இந்திய போர்க் கைதிகளை வைத்து இந்திய விடுதலைப் படையை உருவாக்கினார்.இந்தியாவை ஜெர்மன் படைகள் தாக்கும்போது அவர்களுடன் அதுவும் சேர்ந்துகொள்வதுதான் நேதாஜியின் திட்டம்.அதற்கான போர்ப் பயிற்சிகளும் ஜேர்மனிய இராணுவத் தளபதிகளால் தரப்பட்டன. அதற்குமுன் அவர்கள் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். “.இந்தியாவுக்காக சுபாஷ் சந்திர போசின் தலைமையில் போரிடப்போகும் ஜெர்மன் நாட்டின் தலைவரான அடோல்ப் ஹிட்லரை ஜெர்மன் ஆயுதப் படைகளின் தளபதியாக ஏற்று அவருக்குக் கீழ்ப்படிவேன் என்று கடவுளின் மீது ஆணையிடுகிறேன் ” ” I swear by God this holy oath that I will obey the leader of the German race and state, Adolf Hitler, as the commander of the German armed forces in the fight for India, whose leader is Subash Chandra Bose.” என்பதே அந்த உறுதிமொழி.
1942 ஆம் வருடத்தில் தென்கிழக்கில் ஜப்பான் பெற்ற மகத்தான வெற்றிகளால், ஜெர்மனி தன்னுடைய போர் நடவடிக்கைகளில் சில மாற்றங்களைச் செய்துகொண்டது. அதன்படி இந்தியாவை ஜெர்மன் படைகள்கொண்டு தாக்கும் எண்ணம் கைவிடப்பட்டது.அது நேதாஜிக்கு பெரிய அதிர்சியானது! அவருடைய கனவுக் கோட்டை இடிந்து தரைமட்டமானது! வேறு வழியின்றி அவர் இனி ஜப்பானின் உதவியை நாட வேண்டியிருந்தது.
ஹிட்லரும் நேதாஜியை ஜப்பானின் உதவியுடன் இந்தியாவை விடுவிப்பதே சிறந்ததாகப் படுவதாகக் கூறி அவர் தென்கிழக்கு ஆசியா செல்ல ஒரு நீர்மூழ்கி கப்பலையும் ஏற்பாடு செய்தார்.
1943 ஆம் வருடம் பெப்ருவரி மாதம் நீர்மூழ்கியில் புறப்பட்டார் நேதாஜி . மடகாஸ்காரில் அவர் ஜப்பானிய நீர்மூழ்கி கப்பலுக்கு மாற்றப்பட்டார். மே மாதம் அவர் சுமாத்திரா வந்தடைந்தார். அது அப்போது ஜப்பானின் கைவசம் இருந்தது.
- பெண்கள் நிலை – அன்றும் இன்றும்!
- அணுமின்சக்தி -பிரச்சனைகள் & மெய்ப்பாடுகள்
- 19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள்
- முரசொலி மாறனை மறந்த திமுக.
- ‘முசுறும் காலமும்’
- அம்மா நாமம் வாழ்க !
- பழைய கள்
- தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் முறைகள்
- தொடுவானம் 121. சிங்கப்பூரில் நேதாஜி.
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6
- காப்பியக் காட்சிகள் 5.சிந்தாமணியில் நாற்கதிகள்
- உதயணனின் ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’