சாதீயச் சுவடுகளைக் காட்டும் புதிய சுவடுகள்

author
0 minutes, 1 second Read
This entry is part 2 of 17 in the series 12 ஜூன் 2016

 13407646_297805047223719_921613165_nதேவராசா கஜீபன்

தமிழ் சிறப்புத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்

 

ஈழத்து எழுத்தாளர்கள் வரிசையில் தி.ஞானசேகரன் தனக்கென ஓர் இடத்தை பதிவு செய்துள்ளார். சிறுகதைகள் நாவல் என இவரது படைப்புக்கள் இன்றும் தமிழ் உலகில் நடை பயில்கின்றன. புன்னாலைக்கட்டுவானை பிறப்பிடமாகக்கொண்ட ஞானசேகரன் தமிழ் இலக்கிய உலகில் ஈடுபாடு கொண்டவராகவே திகழ்வதனை அவதானிக்கலாம். வைத்தியராக கடமையாற்றிய இவர் எழுத்தாற்றலும் கைவரப்பெற்றவராவார். சிறந்த படைப்புகளுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் இலக்கிய இதழான ஞானம் சஞ்சிகையின் ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். சிறுகதை மூலம் எழுத்துலகில் கால் பதித்த இவர் புதியசுவடுகள்,குருதிமலை,லயத்துச்சிறை ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். கலாபூசணம் என்ற அரச விருதினைப் பெற்றுள்ள ஞானசேகரனின் புதிய சுவடுகள் என்ற நாவல் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப்பரிசு பெற்ற நூல் என்ற சிறப்பைக்கொண்டள்ளது. புதிய சுவடுகள் என்னும் நாவலானது யாழ்ப்பாணத்தில் நிகழும் சாதிப்பிரச்சினைகளைக் கருவாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. மண் வாசனை வீசும் தன்மையோடு யதார்த்த பூர்வமாக சிறந்த பாத்திர வார்ப்புக்க@டாக கதைகளை நகர்த்திச் செல்லும் பாங்கு ஞானசேகரனின் இந் நாவலின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்துள்ளன எனலாம். 60,70 காலப்பகுதிகளில் சாதிப்பிரச்சினை தொடர்பாகப் பேச எழுந்த நாவல்களுள் புதிய சுவடுகள் குறிப்பிடத்தக்க ஒரு நாவலாகும்.

இந்நாவல் சாதியில் குறைந்த சமுதாயப் பிரிவினனான மாணிக்கத்திற்கும் உயர்சாதி சமுதாயத்தை சேர்ந்த பார்வதிக்கும் இடையில் ஏற்படும் காதலையும் சமுதாய பிரச்சனை காரணமாக இருவரும் இணையமுடியாத சூழ்நிலை உருவாகுவதையும் இதனால் இருவரும் கந்தசாமி என்பவனின் துணைகொண்டு முத்தையன் கட்டிற்கு சென்று வாழ்வதனையும் காட்டுகிறார்;. இங்கு அவர்களின் காதல் உச்சம் பெற்று பார்வதி கருவுற்றுவிடுகிறாள். முத்தையன் கட்டிற்கு சென்ற துரைசிங்கம் முதலாளியும் பார்வதியின் தந்தை செல்லப்பரும் மாணிக்கனை அடித்துப் போட்டு விட்டு பார்வதியை தமது ஊருக்கு திரும்பவும் அழைத்து வருகின்றனர். மாணிக்கம் இறந்துவிட்டதாக கூறி பார்வதியை நடேசு என்ற அவளது மச்சானுக்கு திருமணம் முடித்துவைக்கின்றனர.; மாணிக்கத்தின் குழந்தையை காப்பாற்ற வேண்டும், இந்த கொடுமைத் தனமான சமுதாயத்தை தனக்கு பிறக்கவிருக்கும் மகன் மூலம் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவும் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். பிரசவவலி காரணமாக பார்வதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறாள். அவளது உடல்நிலை கவலைக்கிடமாகச் செல்கின்றது. மாணிக்கம் அனைத்துசெய்திகளையும் கேள்வியுற்று பார்வதியைக் காணவருகிறான். மாணிக்கத்தை நோக்கிய பார்வதி “இது உங்களுடைய சொத்து” என தன் குழந்தை மேல் மாணிக்கத்தின் கையை வைத்தபடி உயிர் விடுகிறாள். மாணிக்கத்தின் குழந்தை அந்த சமுதாயத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. என்ற கருத்தோடு நாவலாசிரியர் இந்நாவலைச் முடிப்பதைக் காணலாம்.

சில அடக்கு முறைகளை திணிப்பதன்மூலமும் அந்தஸ்தடிப்படையில் தம்மை உயர்;வாய் காட்டி சமூகத்தை கட்டியாள நினைக்கும் எந்த மனிதனையும் காலமானது புடம் போடும் என்பதே உண்மை. சாதி வெறி கொண்ட சமுதாய அமைப்புமுறையில் இருவேறுபட்ட சாதியினரிடையே காதல்என்பது உண்மையில் அந்த சமுதாய அமைப்பின் அடித்தளத்தையே அசைத்துவிடக்  கூடியது. அந்தவகையில் சாதிப்பிரச்சனைகளை பேசமுனைந்த தி.ஞானசேகரன் காதலை சாதி அடக்கு முறையாளர்களுக்கெதிரான ஆயுதமாகவே பயன்படுத்தியுள்ளார் எனலாம். பொருளாதாரம் எவ்வாறு அரசியல், சமய, சமூக காரணிகளை தீர்மானிக்கின்றனவோ  அதேபோலவே காதல் என்பது சாதிய சமுதாய அமைப்புக்களிடையே பெரும் மாற்றங்களை எற்படுத்தும் முக்கிய காரணியாக அமைகின்றது இது இன்றும் காணத்தக்கது. இது அன்றைய காலப்பகுதியிலேயே சமூகத்தில் வேர்விடத்தொடங்கியுள்ளமையை நாவலாசிரியர் மிகவும் சிறப்பாக எடுத்துரைக்கின்றார்.

காலம் காலமாக மரபுவழிப்பட்டு நின்று பேணப்பட்டு வந்த ஓர் அம்சமே இவ் சாதிய அமைப்பு முறைகள் என்பர். இதன் அடிப்படையை இந்நாவலில் தரிசிக்க முடிவதனைக் காணலாம். உயர் சாதி சமுதாயத்தினருக்கு கீழ் தாம் கட்டுப்பட்டுஇருக்கத்தான் வேண்டும் என்பதனை கீழ்சாதி சமுதாய அமைப்பினர் ஏற்றுக்கொள்வதையும் அடங்கி நடப்பதையும் காணலாம். ஆயினும் அவற்றிற்கெதிராக சமுதாய மாற்றம் கருதி போராடும் இலட்சிய பாத்திரங்களையும் நாவலாசிரியர் காட்ட தவறவில்லை. சாதியத்தின் தாக்கம் பார்வதி என்னும் பாத்திரத்தில் ஏற்படுத்தும் உணர்வு நிலை போராட்டங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்து சித்தரிப்பதன் மூலம் இறுதியில் உயர்சாதி வரக்கத்தினர் முகங்களில் கரியினை பூசிவிடுகின்றார்  என்றே கூறவேண்டும்.

இதனடிப்படையில் 60,70ம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ்ப்பாண சமுதாயம் முழுவதுமே இவ் சாதிப்பிரச்சினைகள் தலைதூக்கியிருந்தன என்பதே உண்மை இதை உணர்த்தவே ஆசிரியர் நாவலில் கதை நிகழ்ந்த களத்தை பொதுவாகவே சித்தரித்தார் போலும். ஆரம்பத்தில் எவ் ஊர் பெர்களையும் அவர் குறிப்பிட்டு இந்த ஊரிலே இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறுகின்றன எனக் கூறவில்லை. முழுவதுமாக யாழ்ப்பபாண சமுதாயத்தையே சுட்டிக்காட்டுகின்றார். ஆகவே யாழ் சமுதாயம் எங்கணும் சாதியம் தாண்டவமாடியுள்ளது என்பதே உண்மை. புதிய சுவடுகள் வெளிக்கொணர்கின்ற சாதிப்பிரச்சனைகளை அந்த நாவல் வழி நின்று அலசுவது பொருத்தம் எனக் கருதுகின்றேன். புதிய சுவடுகள் வெளிப்படுத்தும் சாதியம் பற்றிய கருத்துக்களை பல கோணங்களில் தரிசிக்க முடிகின்றது.சாதியஅடக்குமுறை,சாதியஅடக்குமுறைகளுக்கெதிரானபேராட்டஉணர்வு,அடிமைத்தனம்,உயர்சாதிஅமைப்புக்களிடையே தளர்வுநிலை, சாதிப்பிரசினைகளால் ஏற்படும் விளைவுகள் என பல கருத்துக்களை ஒருமுக பார்வையுடன் நாவலில் தி.ஞானசேகரன் விதைத்துள்ளார் என்றே கருதமுடிகிறது. 2ம் உலகப்போரில் ஹிரோசிமா நாகசாகி நகரங்கள்மீது போடப்பட்ட அணுகுண்டுகளின்தாக்கம் இன்றும்அந்நிலங்களில்பரவியுள்ளதுபோலவே தி.ஞானசேகரன் அன்றுகண்ட சாதிப்பிரச்சனைகளின் மறுபிரதிகள்இன்றும் அதே யாழ்ப்பாண சமுதாயத்தினரிடையே வேரூன்றியுள்ளமையை காணமுடிகின்றது. எனவே இந்நாவலை முழுவதுமாக கற்பனையின் அடிநாதமாய் தோன்றிய ஓர் இலக்கியப் படைப்பு என்று கூறிவிட முயாது. யாழ்ப்பாண சமுதாயத்தின் உண்மையின் சாயல்கள் பல இடங்களிலும் பட்டுத்தெறிக்கின்ற தன்மை தி.ஞானசேகரனின் நாவல் பற்றிய புலமையையே பiறைசாற்றுகின்றது எனலாம்.

பார்வதிவீட்டிற்கு வந்த மாணிக்கம் தேனீர் அருந்துவதற்காக “எழுந்து சென்று சுவரின் மேல் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த மூக்குப்பேணியை எடுத்து வந்து பார்வதியிடம் நீட்டினான்”; என ஆசிரியர் கூறுகின்றமை யாழ் சமுதாய அமைப்பினரிடையே இருந்த சாதியம் தொடர்பான அன்றைய நிலையினை எடுத்துக்காட்டுகின்றார். ஆயினும் இன்றைய காலப்பகுதியில் இவற்றின் தாக்கம் குறைவாகவே யாழ் சமுதாயத்தில் உள்ளது எனலாம் எனினும் இந் நாவல் தோன்றிய காலம் நின்று நோக்கில் இது யதார்த்தமே.

“ஏன்டா என்னோட எதிர்த்தோட கதைக்கிறாய் என்னடா நீ அவ்வளவுதூரத்திற்கு வளர்ந்திட்டியோ”…“ஒரு கீழ் சாதி பயலுக்கு இவ்வளவுதுணிவு வந்திட்டுதோ” என்ற துரைசிங்கம் முதலாளியின் வார்த்தைகளும் “எடியேய் எளிய சாதிக்காரன் கடிச்சுப்போட்டு குடுத்த மாங்காயை ஏனடி சாப்பிட்டனி இனிமேல் அவனோட சேர்ந்து பள்ளிக்கூடம் போப்படாது” என பார்வதியை நோக்கி செல்லப்பர் கூறுகின்றமையும் கீழ்சாதிக்காரரை தங்களுக்கு கீழாகவே எப்பவும் நடத்த வேண்டும் என்ற கருத்தியல் மேல்சாதிக்காரரிடையே  நிலவுவதையும் உயர் சாதியினரிடையே காணப்படும் வரட்டு கௌரவங்களையும் எடுத்துகாட்டுவனவாகவே அமைகின்றன.“என்ன பொன்னி இப்பகொஞ்சகாலமாய் நீ என்னைக் கவனிக்கிறதில்லை…”“என்னடி ஒண்டும் விளங்காத மாதிரி கேட்கிறாய்எனக்கூறி தள்ளாடியபடி எழுந்து செல்லப்பர் அவளது கைகளைப்பற்றினார்”; என்பதும் “இல்லை கமக்காரன் இனி மாணிக்கம் வந்திடுவான் நீங்கள் வீட்டுக்கு போங்கோ”எனப்பதற்றத்தடன் அவரது பிடியிலிருந்து தன்னை விலக்கினாள். என்பதும் “கமக்காரனுக்கு இப்பவும் இளமைத்துடிப்பு குறையேல்லை” என தனக்கு தானேகூறி சிரித்துக்கொண்டாள்; என்பதும் கவனிக்கத்தக்கது. உயர் சாதியை சார்ந்தவர்கள் கீழ் சாதிப்பெண்களுடன் பாலியல் நடத்தைகளில் ஈடுபடுவதும் சிலசமயங்களில் அப்பெண்களும் இசைந்து நடந்திருக்கின்றமையையும் இந்நாவலூடே காணமுடிகிறது. சாதாரணமாக ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுகின்ற உணர்வு நிலைப்பாட்டால் உருவாகிய தவறா? அல்லது அவள் கீழ்ச் சாதிப்பெண் என்பதினாலேயே அவள் மீது செல்லப்பர் தனது காம இச்சையை ஒரு போது தீர்த்துக்கொண்டாரா?என்பது சிந்திக்கத்தக்கதே!

சாதிய அடக்கு முறைகளுக்கு எதிராக போராடுகின்ற பாத்திரங்களாக பல இடங்களில் மாணிக்கமும் சில இடங்களில் பார்வதியும் ஆசிரியரால் உலாவ விடப்பட்டள்ளமையைக் காணலாம். மாணிக்கம் பாடசாலைக் கிணற்றில் கொடி பிடித்து தண்ணீர் அள்ளி பருகியதற்காக தலைமை ஆசிரியரிடம் அடிவாங்குவதும் “ஆனால் அவன் அப்போது அழவில்லை” என ஆசிரியர் கூறுவதும் “தனக்கு தண்ணீர் அள்ளிகொடுக்க மறுத்தவதர்களை பழிதீர்த்துவிட்ட திருப்தியுடன் அலட்சியத்துடன் வீரதீரச் செயல் புரிந்துவிட்டதாக அவன் எண்ணினான் எனக்கூறுவதும் குறிப்பிடத்தக்கது. இங்கு மாணவர்கள் அனைவருக்கும் சமத்துவத்தை வழங்கவேண்டிய ஆசிரியரே சாதிபார்த்து பாடசாலையில் தண்டனை வழங்குவதையும் ஒருவிதத்தில் பாடசாலைகள் கூட சாதிய செல்வாக்கிலேயே இயங்கியுள்ளன என சிந்திக்க தூண்டுவதோடு மேன்நிலைசார் சமூகத்தவரின் அடக்குமுறைகளுக்கெதிராக பழிவாங்க வேண்டும் என்ற உணர்வுநிலை கீழ் சாதியை சேர்ந்த பாடசாலைச்சிறுவன் முதற்கொண்;டேஅச்சமுதாயத்தில் இருந்துள்ளது என்பதனையும் புரிந்து கொள்ளமுடிகிறது.

“என்னடா நான் கூப்பிட கூப்பிட பேசாமல்போறாய் என்ன காது அடைச்சுப்போச்சோ உன்ர கொப்பன் கோவிந்தன் எங்க போட்டான்” என துரைசிங்கம் முதலாளி கேட்க அவர் கேட்டவிதம் மாணிக்கனுக்கு ஆத்திரமூட்டுவதாகவே இருந்த போதும் “அவன் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு பதில் சென்னான்” என ஆசிரியர்கூறுவது சாதிய அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழத் துடிக்கும் மனதினை உடையவனாக மாணிக்கம் இருப்பதனையும் இருந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் பதில்சொல்வதையும் காட்டுகின்றது. “ஆச்சி எங்களுக்கு காணியில்லை என்ட படியால் தானே அடிமைச் சீவியம் செய்யவேண்டியிருக்கு”என மாணிக்கம் பொன்னியை நோக்கி கேட்பதிலிருந்து தாழ்த்தப்பட்ட சாதிக்காரர்களுக்கென்று சொந்தமாக அன்றய நிலையில் யாழ் சமுதாயத்தில் காணிகள் இருக்கவில்லை என்பதும் அவர்களது அடிமைத்தன வாழ்க்கைக்கான காரணமும் வெளிப்பட்டு நிற்றலை அவதானிக்கமுடிகின்றது.

“டேய் அவர் ஏதேன் வேலைசொன்னால் செய்து கொடுக்கத்தானே வேணும்…”“பொத்தடா வாயை உனக்கு நாக்கு நீண்டுபோச்சு எங்கட அப்பன் பாட்டன் காலத்திலிருந்து நாங்கள் கமக்காரர் சொன்ன வேலையை செய்துகொண்டு தானே வாறம் நீயெல்லோ புதுசு புதுசாய் கதைக்கிறாய்.  உன்னை படிக்க வைச்சதுதான் பிழையாய் போச்சு”என கோவிந்தன் மாணிக்கனைப் பார்த்து கூறுவதிலிருந்து காலம் காலமாக கீழ் சாதிக்கார மக்கள் உயர்சாதியினர் மத்தியில் அடிமைகளாகவே இருந்துள்ளனர் என்பதனையும் அம்முறைமையை கீழ்ச்சாதிமக்கள் தாமாகவே ஏற்றுநடந்தமையையும் கல்வியறிவற்ற சமுதாயமாகவே வாழ்ந்தார்கள் என்பதனையும் காட்டுவதாகவே அமைகின்றது. பழமையான சமுதாய அமைப்பிலிருந்து புதிய சமுதாயத்தை வேண்டி நிற்கும் ஆசிரியரது எதிர்பார்ப்பு மாணிக்கம் என்ற பாத்திரம் ஊடாக கூறப்படுவதைக்காணலாம்.பழமையான அடிமைத்தனங்களில் இருந்து விடுபடத் துடிப்பவனாகவும் கல்விகற்றவனாகவும் சித்தரிக்கப்படுகின்றான்.

“கிணத்துக்க விழுந்தவனை தூக்க இவன் மாணிக்கத்தை தவிர உங்கவேற ஒருத்தனும் இல்லையோ கொடி பிடித்து கிணற்றில் தண்ணீர் அள்ளக் கூடாதவன் கிணத்துக்க குதிச்செல்லோ தூக்கியிருக்கிறான்” என கூறுவதும் அதற்கு பதிலாக மாணிக்கம் “கிணத்துக்கவிழுந்தவளைகாப்பாத்த ஒருத்தருக்கும் நெஞ்சு துணிவில்லை இப்ப நியாயம் பேசினம்” என கூறுவதும் உயர் சாதி வேளாளர்களது கீழ் சாதி மக்கள் தொடர்பாக இருக்கும் கருத்து நிலையைப் புலப்படுத்துவதோடு மாணிக்கனது கொந்தளிக்கும் மன உணர்வினையும் வெளிக்காட்டி நிற்கின்றமையையும் காணலாம்.“அவங்களை வைக்க வேண்டிய இடத்தில தான் வைக்கணும் இல்லாவிட்டால் தலையிலை ஏறிடுவாங்கள் அவன் மாணிக்கத்துக்கு இந்தவீட்டில கூடினஉரிமை இருக்கிறதாலதான் அவன்ஒருவேளாளரையும்மதிக்கிறானில்லை” என துரைசிங்கம் முதலாளி கூறுவதும் உயர்சாதியினரின் அடக்கு முறையின் சாயலையே காட்டுகிறது. அத்தோடு “நாங்கள் எங்களுடைய ஒற்றுமையை காட்டுறதெண்டால் ஊரில இருக்கிற கீழ்ச்சாதி குடும்பங்கள் எல்லாத்தையும் குடியெழுப்பவேணும் அவங்கள் தோட்டம் செய்யிற குத்தகை காணியளை பறிக்க வேணும், கள்ளுச்சீவிற பனையளை நிப்பாட்ட வேணும்” என துரைசிங்கம் முதலாளி கூறுவதிலிருந்தும் தகழ்த்தப்பட்ட சாதிக்கார மக்களது வாழ்க்கை நிலை முதலைவாயில் அகப்பட்ட மீனாக முழுமையாக உயர்சாதியினரின் கைகளிலேயே தங்கியிருந்தமையை புலப்படுத்துகின்றன்றது. குடியிருக்கின்ற காணியிலிருந்து தோட்டம் செய்கின்ற குத்தகை நிலங்களில் இருந்து கள்ளுச்சீவும் பனைமரம் வரை அனைத்துமே வேளாளர் சொத்துக்களாகவே இருந்துள்ளமையும் கீழ் சாதி மக்களது அடிமைநிலை வாழ்வுக்கு காரணங்களாய் அமைந்தன எனலாம்.

முத்தையன் கட்டிலிருந்து செல்லப்பர் பார்வதியை கூட்டி வந்தபின்பு செல்லப்பரின் நிலை அவமானத்தின் உச்சிக்கு சென்று கோபத்தை கொப்பளிக்கிறது பார்வதியை எட்டி உதைவதும் அவளை பேசுவதுமாக செல்லப்பர் காட்டப்படுவதும் உயர்சாதி குடும்பங்களில் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஏற்படக் கூடிய உண்மை நிலையினையே எடுத்துக்காட்டுகின்றது. “கீழ்ச்சாதிக்காரன்கூட்டிக் கொண்டு போன பெட்டையை ஒருவன் கூட்டிக் கொண்டு வரலாம் என்றால்  கீழ் சாதிக்காரனும் சபைக்கு வரலாம்தானே” என்றகேள்விகள் உயர்சாதிகளுக்குள்ளேயே பிரிவினைகள்இடம்பெறுவதைக்காட்டுகிறது.உயர்சாதியினரேதம்சாதியினரைஅவமானப்படுத்துவதையும் காணமுடிகின்றது இதுவும் யதார்த்தமே. சமசாதிக்காரனே அவமானப்படுத்துவதோடு கீழ்சாதிக்காரன் கூட்டிக்கொண்டு போன காரணத்தால் பார்வதியை தன்னுடனும் வருமாறு அம்பலவாணர் அவளை கேவலப்படுத்துகிற தன்மை உயர்சாதியினரது கீழ்த்தரமான எண்ணங்களையும் உயர்சாதியை சார்ந்த பெண் கீழச்;சாதிக்காரனை காதலித்தால் அவளது நிலை என்ன என்பதனையும் காட்டுகின்றது.

“மாணிக்கத்திடமிருந்து தன்னை பிரித்தெடுத்த மூடத்தனமான சமுதாய அமைப்புக்கு தனது வயிற்றில் வளரும் சிசு ஒரு சவாலாக அமைய வேண்டும் எனப்பார்வதி வைராக்கியம் கொண்டாள்” என ஆசிரியர் கூறுவதும்

“மாணிக்கம் விட்டுசென்ற அவரது சொத்து இந்த சமூகத்திலிருந்து எல்லோரையும் பழிவாங்க வேண்டும்” என அவள் எண்ணுவதும் ஆசிரியர் தான் கூறமுற்பட்ட சமுதாய மாற்றத்தை பார்வதி என்ற உயர்சாதி பெண் மூலமாகவே எடுத்துக் கூறுகின்ற தன்மையை காட்டுகிறது எனலாம். இந்த வகையில் ஒட்டுமொத்தமாக உயர்சாதியை சேர்ந்த அனைவரையும் ஆசிரியர் குறை கூறவிரும்பவில்லையாயினும் கீழ்சாதியினருக்கெதிராக எங்கெல்லாம் அடக்கு முறைகள் காணப்பட்டனவோ அங்கெல்லாம் குரல் கொடுக்க முனைந்துள்ளார் என்றே கூறவேண்டும்.

“இல்லையண்ணை நான் வெளியிடங்களுக்கு போகேக்கை அவன்தான் இங்கைஇவையளுக்கு உதவியாய் இருக்கிறவன் அதுக்காகத்தான் இங்க வந்து போறவன்” என மாணிக்கம் பற்றி செல்லப்பர் துரைசிங்கத்திடம் கூறுவதும் “ஆபத்து நேரத்தில் உதுகளை பாக்கமுடியுமோ அவன் தூக்கினதால இப்பென்ன அவளிலை ஏதோ ஒட்டிப்போச்சோ” என சின்னத்தங்கம் கேட்பதும் உயர்சாதியினரிடையே சாதி தளர்வு நிலை காணப்படுவதைக் காட்டுவதாக அமைகிறது.

“இவங்களோட பகைத்தால் கூலி வேலைக்கு உங்களுக்கு ஆள் கிடையாது நீங்கள் தான் பனையில ஏறி கள்ளு சீவவேண்டிவரும் உங்கட தோட்டம் துரவைப் பாக்கவும் ஆக்களில்லாமல் போகும்” என பொன்னம்பலவாத்தியார் கூறுவதிலிருந்து உயர்சாதி வேளாளர் வாழ்க்கையில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் முக்கியத்துவம் எவ்வாறு இருந்தது என்பதனை ஆசிரியர் உணர்த்த முற்படுவதனை காணமுடிகிறது. மேலும் “இதெல்லாம் சின்னத்தம்பர் காலமாற்றத்தில நடக்கத்தான் செய்யும் அதையாரும் தடுக்கமுடியாது ஆனால் எந்த சூழ்நிலையிலையும் நாங்கள் எங்கட நிதானத்தை இழக்கப்படாது. தனிப்பட்ட ஒருத்தன்ர விசயத்திற்காக ஒரு சமூகத்தை பழிவாங்கப்பிடாது. என சாதிவெறிபிடித்த உயர்சாதி வர்க்கத்திற்கு ஆசிரியர் தன்னிலை நின்று பொன்னம்பலவாத்தியார் மூலமாக அறிவுரை கூற முற்படுகின்றார் என்றே கூறலாம்.

“கோவிந்தன் நாலு பனைஏறி இறங்கிய பின் உச்சி வெயிலில் நின்று தோட்டம் கொத்திவிட்டு வந்ததினால் ஏற்பட்ட களைப்பு” என கூறுவதும் கோவிந்தன் மாணிக்கனை நேக்கி “சும்மா சுத்திதிரியாமல் இரண்டு மரத்தில கள்ளுச்சீவலாம் தோட்டத்தை கொத்தலாம” என கூறுவதும்“நீ போ மச்சான் எனக்கு இன்னும் இரண்டு பனை இருக்கு நேரத்தோட சீவிப்பேட்டுவாறன்” என குட்டியன் கூறுவதும் பள்ளர் எனும் சமுதாயப் பிரிவினரின் தொழில்களை வெளிக்காட்டி நிற்பதோடு முட்டி,பிளா,கள்ளு,பாளைக்கத்தி போன்ற சொல்லாடல்களும் அவர்களது சமுதாயப்பிரிவினை பிரதிபலிப்பவையாக அமைந்துள்ளமையை காணலாம். ஆயினும் எந்த ஒரு இடத்திலும் ஆசிரியர் பள்ளர் என்ற சொல்லை பிரயோகிக்க விரும்பியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் இங்கு கூறப்படுகின்ற கீழ்ச்சாதி என்ற சமுதாயத்தினர் பள்ளர்  சமுதாயப் பிரிவினரே என்பது ஆசிரியரது சொல்லாடல்களிலிருந்து புரிந்து கொயள்ளத்தக்கது.

துரைசிங்கம் முதலாளி தனது மகளின் திருமணத்தின் பொருட்டு காணியினை கோவிந்தனுக்கு விற்க முன்வருவதும் முன்பு எதிர்ப்புக்கள் பலதை முன்வைத்த சின்னத்தம்பர் “பாவம் செல்லப்பர் அநியாயமாக பார்வதியை சாககுடுத்திட்டு இருக்கிறார் அவளை மாணிக்கனோடையே வாழ விட்டிருக்கலாம்” எனக் கூறுவதும் மாணிக்கனது குழந்தையை சமுதாயம் ஏற்றுகொள்வதும் ஆசிரியரின் இலக்கை ஆசிரியர் எட்டி விட்டதன்மையையே வெளிக்காட்டுகிறது எனலாம்.

எனவே மண்வாசனையோடு யதார்த்த பூர்வமாக புதிய சுவடுகள் உருவாக்கம் பெற்றுள்ளது. சாதியப் பிரச்சனைகளால் தோன்றும் மன உணர்வு நிலைப்பட்ட போராட்டங்களையும் சாதிகள் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்களையும் மாற்றங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் மிகவும் சிறப்பான முறையில் இந்நாவல் புலப்படுத்துகிறது.

 

Series Navigation`ஓரியன்’அணுசக்தியே இனி ஆதார சக்தி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *