விஜய் விக்கி
சமபால் ஈர்ப்பு திருமணங்களை அமெரிக்கா அங்கீகரித்து ஏறக்குறைய
ஓராண்டிற்குள், அந்நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் ஓர்லாண்டோ கேளிக்கை
விடுதியில் நடந்தேறியுள்ளது… சமபால் ஈர்ப்பு நபர்கள் வழக்கமாக
சந்தித்துக்கொள்ளும் பிரபலமான ஓர்லாண்டோ கேளிக்கை விடுதியில், ஓமர் மதீன்
என்ற நபர் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியதில் 49 சமபால் ஈர்ப்பினர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தனர், 53 நபர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்… கடந்த ஞாயிற்றுக்குழமையன்று நடந்தேறிய இந்த
கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உட்பட
பலரும் தங்கள் கடுமையான கண்டனத்தை பதிவுசெய்துள்ளனர்… இந்த
தாக்குதல்தான், ஒரு தனிநபரால் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்
எனவும், பாலீர்ப்பு சிறுபான்மையினருக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்
எனவும் அமெரிக்க வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது…
கொலைக்குற்றவாளியான ஓமர் மதீன் ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், அந்த
கொடூர சம்பவத்துக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகவும் தகவல்கள்
வெளியாகியுள்ளன… அமெரிக்காவின் குடியரசுக்கட்சி அதிபர் வேட்பாளர்
ட்ரம்ப், “இத்தகைய தாக்குதல்களை தடுக்கவேண்டுமானால் இசுலாமியர்களை இனி
அமெரிக்காவிற்குள் அனுமதிக்கக்கூடாது” என்று இந்த கொலைக்களத்தை தனக்கான
அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியுள்ளார்… இதற்கு நடுவே, “இசுலாமிய மதம்
சமபால் ஈர்ப்பை குற்றமாக பார்க்கவில்லை!” என்று அமெரிக்காவின் இமாம்
ஒருவர் தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது… ஓர்லாண்டோ ரத்த வாடை
மறைவதற்கு முன்பே, “ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை கொடுக்க
வேண்டும்!” என அரசை வலியுறுத்தி, இசுலாமிய அமைப்பு ஒன்று மதுரை வீதிகளில்
ஒட்டிய போஸ்டர் பரபரப்பை உண்டாக்கியுள்ளது..
இங்கே யாரும் நடந்த அந்த படுகொலைக்கு காரணத்தை தேட விரும்பவில்லை, இனி
அப்படியோர் அசம்பாவிதம் நடக்காமல் எப்படி தற்காத்துக்கொள்வது
என்பதுபற்றியும் ஆராய விரும்பவில்லை.. மாறாக, ஒருவரையொருவர்
குற்றம்சாட்டிக்கொண்டு, கிடைத்தவரையில் லாபம் பார்க்கவே
எத்தனிக்கிறார்கள்..
இங்கே ஒரு சமபால் ஈர்ப்பு நபராக, நடந்த சம்பவங்களுக்கு நான் எந்த
மதத்தையோ, அமைப்பையோ, குற்றம்சாட்ட விரும்பவில்லை… ஆணிவேரின்
பாதிப்பால் ஆட்டம்காணும் மரத்திற்கு, கிளைகளை குற்றம் சொல்லி யாதொரு
பயனும் இல்லை..
இந்த சம்பவத்தின் ஆணிவேர் ஓமர் மதீன் என்னும் தனி நபர்.. முப்பது வயதேயான
ஓமர் ஆப்கானிஸ்தானை பூர்விகமாகக்கொண்டவர், ஏழு வருடங்களுக்கு முன்பு
உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த சித்தோரா யூசிபி என்ற பெண்ணை
மணந்துகொண்டார்.. ஓமர் உடன் வாழ்ந்த ஆரம்ப கால நாட்கள் மகிழ்ச்சியாகவும்,
பிறகு அவருடைய மனநலன் சார்ந்த பிரச்சினைகளால் நிறைய வருத்தங்களோடும்
கழிந்ததாக நாளேடு ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார் யூசிபி.. ஓமர்
மனநோயாளி எனவும், அவர் ஸ்டீராய்ட் மருந்துகள் எடுத்துக்கொண்டவர் என்றும்
கூடுதல் தகவல்களை தெரிவித்துள்ளார்… அதன்பிறகு ஏற்பட்ட மனஸ்தாபங்களால்
இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் யூசிபி
தெரிவித்துள்ளார்..
இவற்றைவிட ஓமர் மதீனைப்பற்றி வெளியான இன்னொரு தகவல்கள்தான் மிகவும்
அதிர்ச்சிகர ரகத்தினை சேர்ந்தது.. “ஒருபால் ஈர்ப்பாளர்கள் மீது அவ்வளவு
கொடூரமான தாக்குதல்களை நடத்திய ஓமரும் ஒரு கே’தான்” என்பதுதான் அந்த
செய்தி… ஓமர் மதீனுடைய நண்பர்கள் முதல் சுற்றத்தார் வரையிலும் பலரும்
அந்த செய்தியை உறுதிசெய்துள்ளனர்.. கே டேட்டிங் ஆப்ஸ்’களில் கணக்கை
ஏற்படுத்தி பல்வேறு நண்பர்களை சந்தித்ததாகவும், பலதரப்பட்ட கே
பார்களுக்கு சென்றிருப்பதாகவும் கூறுகிறார்கள்..
“மதீன் கே’வாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்… ஆனால், அதனை ஒரு அவமானமாக
கருதியதால் தன்னை வெளிப்படுத்திக்கொண்டதில்லை” என்கிறார் முதல் மனைவி
யூசிசிபி..
சம்பவம் நடைபெற்ற ஓர்லாண்டோ கேளிக்கையகத்திலேயே ஓமர் மதீனை பலமுறை
சந்தித்துள்ளதாக, பலரும் தெரிவித்துள்ளனர்..
சம்பவத்தை நேரில் பார்த்த ஜிம் வான் ஹார்ன் என்பவர், அந்த கேளிக்கை
விடுதியில் ஓமர் மதீனை பலமுறை பார்த்துள்ளவர்.. “ஓமர் ஒரு சமபால்
ஈர்ப்புள்ள நபர்தான்.. பலமுறை அங்குவரும் நபர்களுடன் ஓமர் நெருங்கி
பழகுவதை பார்த்திருக்கிறேன்… அவரது நடவடிக்கைகளில் எவ்வித
மாற்றத்தையும் நான் கண்டதில்லை…” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்…
அதேபோல ஓமர் உடன் கே டேட்டிங் ஆப்ஸ் மூலம் அறிமுகமான இரண்டு நபர்களும்,
காவல் நிலையத்தில் தங்களது ஓமர் உடனான பழக்கவழக்கங்கள் பற்றி
கூறியுள்ளனர்..
சமபால் ஈர்ப்பு நபராக இருந்தும் ஏன் ஓமர், தன்னைப்போலவே பாலீர்ப்பு
நாட்டம் கொண்டவர்களை அவ்வளவு கொடூரமாக கொல்லவேண்டும்?… அதுதான் அந்த
ஆணிவேரில் ஏற்பட்ட பழுது!…
உடலியல் ரீதியாக தன்னை சமபால் மீது நாட்டம் கொண்டவனாக ஓமர்
ஏற்றுக்கொண்டாலும், தான் ஏற்றுக்கொண்ட மதத்தின் மீது கொண்ட அதீத பற்றால்
தன்னை முழுமையாக அவரால் ஏற்கமுடியவில்லை… ஒருபக்கம் தனது உடலியல்
மாற்றங்கள் பாலீர்ப்பை ஏற்க வற்புறுத்த, மறுபுறம் மதம் சார்ந்த
நம்பிக்கைகள் அவற்றை புறந்தள்ள போராடியது… இந்த இரண்டு
போராட்டங்களுக்கும் நடுவே சிக்கித்தவித்த ஓமர், ஒருகட்டத்தில் தன்னையே
வெறுக்கத்தொடங்கியுள்ளார்…
Internalized Homophobia என்ற அபாயகரமான மனநிலையின், ஆபத்தான விளைவுதான்
இன்றைக்கு நம் கண் முன்னே நடந்துள்ளது… யாரோ நம்மை வெறுப்பதற்கும்,
தானே தம்மை வெறுப்பதற்கும் உள்ள வேறுபாட்டின் விளைவுதான் இந்த கொடூர
தாக்குதல்…
ஓமர் மதீன் பற்றி இதுவரை வெளியான தகவல்களை வைத்து பார்க்கும்போது, அவர்
Borderline Personality Disorder (BPD) என்னும் மனநல குறைபாடு
கொண்டவராகவே கருதமுடிகிறது.. பொதுவாகவே மனநோய்கள், குறிப்பிட்ட நபருக்கு
மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துவதுதான் இயல்பு… ஆனால், இந்த BPD என்னும்
ஆளுமை குறைபாடு பெரும்பாலும் அந்த நபரை சார்ந்தவர்களையே அதிகம்
பாதிக்கின்றது.. இத்தகைய குறைபாட்டிற்கு ஆளானவர்கள், தங்கள் உணர்வுகளை
கட்டுப்படுத்தும் செயல்திறனை இழந்திருப்பார்கள்.. திடீர் கோபம், சட்டென
எடுக்கும் விபரீத முடிவு என விளைவுகளைப்பற்றி யோசிக்கமாட்டார்கள்.. அதீத
பதற்றம், மனச்சோர்வு என இன்னும் சில மனம் சார்ந்த பாதிப்புகளை
கொண்டிருப்பார்கள்.. தற்கொலை எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்..
இன்னும் சிலரோ, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு தனது வெறுப்பை தணிக்க
முயல்வார்கள்..
இத்தகைய பாதிப்பின் விளிம்பில் ஆட்பட்டிருந்த மதீன்தான் அந்த படுகொலை
சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும்…
மனம் ஒரு காற்றடைத்த பந்து போன்றுதான்.. ஒரு பக்கமாக அழுத்தினால், அது
செலுத்தும் திசையை நோக்கி பயணிக்கும்… இரண்டு புறத்திலிருந்தும்
நேரெதிரே அழுத்தம் கொடுத்தால் என்னவாகும்?.. அழுத்தம் அதிகமாகி, பந்து
வெடிக்கும்… அப்படியொரு திரிசங்கு நிலையில் சிக்கித்தவித்த மதீனின்
மனமும், வெடித்ததன் விளைவுதான் இன்றைக்கு நம் கண் முன்னே கொலைக்களமாய்
விரிந்துள்ளது…
சிறுவயது முதலாகவே தனக்குள் ஏற்பட்டிருக்கும் சமபாலீர்ப்பினை
உணரத்தொடங்க, ஒருகட்டத்தில் அதனை ஏற்று வாழவும் முனைந்ததன் விளைவுதான்,
அவருக்கு ஏற்பட்ட சமபால் உறவு நண்பர்களும், அதனை சார்ந்த
பழக்கவழக்கங்களும்… ஆனால், மதம் சார்ந்து தொடர்ந்து அவர் மனதிற்குள்,
தனது பாலீர்ப்பு பற்றிய குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மையாகி, அது
மனச்சோர்வு நோக்கி அவரை தள்ளியுள்ளது… அதன் நீட்சிதான் ஆளுமை குறைபாடாக
விஸ்தரித்து, ஆபத்திற்கு அடித்தளம் இட்டுள்ளது…
இன்றைக்கு சமபால் ஈர்ப்பை குற்றமாக கருதுகின்ற மதத்திலாக இருக்கட்டும்,
நாட்டிலாக இருக்கட்டும் இத்தகைய ஆளுமை குறைபாட்டு சிக்கல்கள் நிறைய
வளர்ந்துகொண்டே இருக்கின்றது…
BPD எனப்படும் ஆளுமை குறைபாடு இந்தியாவில் எத்தகைய பாதிப்புகளை
ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது தெரியுமா?… அதிலும் குறிப்பாக இந்த
குறைபாடு, பாலீர்ப்பு சிறுபான்மையின சமூகத்தில் கடுமையான விளைவுகளை
ஏற்படுத்தி வருகிறது..
சென்னையில் மட்டும் கடந்த ஆண்டில் பதினாறு சமபால் ஈர்ப்பு இளைஞர்கள்
தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.. ஒருபக்கம் தனது பாலீர்ப்பை ஏற்றாகவேண்டிய
நிர்பந்தம், மறுபக்கம் இந்திய கலாச்சாரம் என்னும் காரணத்தின் வழியே தனது
பாலீர்ப்பை ஏற்க முடியாத அழுத்தம்… விளைவு, மனச்சோர்வு அவர்களை
தற்கொலையை நோக்கி தள்ளிவிடுகிறது…
மதீனின் படுகொலையை கண்டிக்கும் இந்திய அரசு, ஒவ்வொரு நாளும் இங்கே
தற்கொலை செய்துகொண்டிருக்கும் இளைஞர்களை ஏறிட்டுப்பார்க்க தயங்குகிறது…
ஒரு மனநல பாதிப்பு நிறைந்த இளைஞர் சமூகத்தை
உருவாக்கிக்கொண்டிருக்கிறது… ஆனால், இது எதனையும் அவர்கள் ஏற்க
முற்படுவதில்லை..
இங்கே மாற்றுப்பாலீர்ப்புகளை குற்றமென கருதும் பொதுத்தள சமூகம், ஒவ்வொரு
சமபால் ஈர்ப்பு நபர்களிடமும் சுய வெறுப்பை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது…
அது மனநோயாக நீட்சியடையும் தருணத்தில் ஏற்படப்போகும் பாதிப்பு எத்தகையது
என்பதற்கான ஆபத்தான உதாரணம்தான் ஓர்லாண்டோ படுகொலை சம்பவம்…
ஓர்லாண்டோவில் உயிர்நீத்த அந்த ஐம்பது உயிர்களே, பாலீர்ப்பு காரணத்தால்
பலியாகும் கடைசி உயிரிழப்பாக இருக்கவேண்டுமென, இறந்த தோழர்களின்
ஆன்மாக்களை பிராத்திக்கிறேன்!
- குறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 2
- ஓர்லாண்டோ படுகொலை சொல்வது என்ன?
- திருப்பூர் இலக்கிய விருது 2016 விழா
- லெமுரியா முதல் இந்தோனிசியாவில் அகதிகளாயிருப்பது வரை
- அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா * 28/6/16
- “காலத்தால் அழியாத கவிஞன் கண்ணதாசன்”
- `ஓரியன்’ – 2
- தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்
- காப்பியக் காட்சிகள் 9. சிந்தாமணியில் விழாக்கள்
- சூரிய குடும்பத்தின் புதிய ஒன்பதாம் கோளைப் பற்றி ஐயுறும் வானியல் விஞ்ஞானிகள்
- தொடுவானம் – 124. தேசிய கீதத்தில் திராவிடம்
- கனவு இலக்கிய வட்டம் ஜீன் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்
- My two e-books for young adults