சோம. அழகு
மளிகைப் பொருட்கள், நமது வீட்டின் அருகில் நம்மை நம்பித் தொடங்கப்பட்ட, அண்ணாச்சிக் கடையில்தானே வாங்கப்பட வேண்டும். பின் ஏன் இந்த சூப்பர் மார்கெட் எனப்படும் பல்பொருள் அங்காடிகள் மீது தீரா மோகம்? இவை உளவியல் ரீதியாக நம்மை நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைப்படுத்தி ஆட்டுவிப்பதும் தெரியாமல் இல்லை.
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அனைவருக்கும் அண்ணாச்சிக் கடைதான். வீட்டுக்குத் தேவையானவற்றை அம்மா பட்டியலிட்டுத் தர, அப்பா அண்ணாச்சியிடம் அந்தப் பட்டியலைத் தருவார்கள்/வாசிப்பார்கள். அவர்தான் எல்லாவற்றையும் எடுத்துத் தருவார். வாடிக்கையான கடை என்பதால் பொருட்களோடு, அக்கறையான விசாரிப்புகளும் உரிமையோடான கிண்டல்களும் கலந்திருக்கும். தொடர்ந்து 2 வாரம் செல்லாது 3வது வாரம் செல்கையில் நம்மைத் தேடுவதற்கென்று, குடும்பத்திற்கு அப்பாற்பட்ட, இப்போது குடும்பத்தில் ஒருவராகிப் போன அண்ணாச்சி இருக்கிறார் என்னும் நினைப்பே ஒரு சுகத்தைத் தரும்.
இந்தப் பல்பொருள் அங்காடிகளுக்கு 100வது முறையாகச் செல்லும்போது கூட உங்களை யாருக்கும் தெரிந்திருக்காது. எத்தனை முறை சென்றால் என்ன? நாம்தான் யாருடனும் பேசுவதில்லையே? ஆங்காங்கே நாள் முழுக்கக் கால் கடுக்க நிற்கும் பெண்களிடம் ஒரு வார்த்தையாவது பேசியிருப்போமா? ‘துவரம் பருப்பு ஒரு கிலோ பாக்கெட் எங்கே இருக்கு?’, ‘டப்பர்வேர் பாட்டில் இங்கே கிடையாதா?’ போன்ற ‘அக்கறையான’ விசாரிப்புகளைச் சொல்லவில்லை. உரையாடலை விட்டுத் தள்ளுங்கள். ஒரு புன்னகையையாவது உதிர்த்திருப்போமா? அந்தப் பெண்களும் இதற்கெல்லாம் பழகிவிட்டார்கள் என்பது வேறு விஷயம். அல்லது, கால் வலியும் குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலையும் அவர்களுக்குச் சோகத்தினை மட்டுமே நவரசமாகக் கற்பித்திருக்கலாம்.
கிடங்குகளுக்கும் பல்பொருள் அங்காடிகளுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அங்கே கொட்டி வைத்திருப்பார்கள்; இங்கே அடுக்கி வைத்திருப்பார்கள்.
இந்தப் பல்பொருள் ‘கிடங்கு’களுக்குச் செல்வதற்கான ஒரே தகுதி ‘வேண்டிய பொருட்களின் பட்டியல்’ எடுத்துச் செல்லாததுதான். இங்கு தரப்படும் தள்ளுவண்டிகளைத் தள்ளிச் செல்கையில் சவ ஊர்வலத்தில் ஊர்ந்து செல்வது போன்ற உணர்வு. அங்கு நிலவும் மயான அமைதி அதை உறுதி படுத்தித் தொலையும். இருபுறமும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வித விதமான பொருட்களைப் பார்த்துக்கொண்டே மெதுவாக நகர்கையில், விலையைப் பற்றிக் கவலையில்லாமல், எல்லாவற்றையும் வாங்க வேண்டும் என மனதினுள் ஆயிரம் போராட்டம் நடைபெறும். ‘இது உலகமயமாக்கலின் தாக்கம்’ என மூளை கூப்பாடு போடுவதை மனம் கண்டுகொள்ளாதது போல் நடிக்கும்.
அதுதான் உலகமயமாக்கல் என்று சொல்லிவிட்டேனே! எனவே நறுக்கப்பட்ட அத்தனைக் காய்கறிகளும் (வெங்காயம், தக்காளி உட்பட!) நெகிழியினுள் பதப்படுத்தப்பட்டு, பிணங்களைப் போல் கிடக்கும். சவக் கிடங்கேதான்! தேங்காய்த் துருவலையும் இப்படிக் கிடைக்குமாறு செய்ததுதான் உச்சம். இது மட்டுமல்லாது நமது மரபணுக்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத, ஒவ்வாத அயல்நாட்டுச் சிற்றுண்டிகளும் உணவுப் பொருட்களும் இருக்கும். இவை நல்லதல்ல என்று ஒரே அடியாக ஒதுக்கிவிட முடியாது. சமயத்தில் உயிர்காக்கும் உபகரணங்களாகச் செயல்படும். திடீரென மூச்சுத்திணறல் ஏற்படுமாயின், சற்றும் யோசிக்காமல் கடகடவென 20 காற்றடைத்த(!) சிற்றுண்டிப் பாக்கெட்டுகளை அள்ளி ‘டப்’ என மூஞ்சியின் முன் உடைக்கவும். அருமையான ஆக்சிஜன் மாஸ்குகள்!!!
இரண்டு அடுக்குகளுக்கு நடுவே ஊர்ந்து செல்கையில் ‘இடது’பக்கம் முழுவதும் அரை கிலோமீட்டர் தூரத்திற்குப் பல கம்பெனிகளின் ‘நூடுல்ஸ்’ பாக்கெட் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ‘இங்கும் இவ்வளவு பெரிய சீனப் படையெடுப்பா?’ என வெறுத்துப் போய் வலப்பக்கமாகத் திரும்பினேன். அந்தக் கிடங்கின் பணியாளர்கள் தெரிந்து செய்தார்களா, இல்லை தெரியாமல் செய்தார்களா எனத் தெரியாது. வலப்பக்கம் முழுக்க கம்பு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற புல்லரிசிகளையும் எள் உருண்டை, உளுந்தங்களி மாவு…….என நமது மண்ணிற்குரிய பொருட்களாக அடுக்கி வைத்திருந்தார்கள். மெட்ரிக் பள்ளிக் குழந்தைகள் விளையாடுவதைக் காணும் போது ஏற்படும் அந்த ஒரு குதூகல உணர்வு மீண்டும் மேலிட்டது. இன்னும் முழுதாய் நாம் மாறத் தயாரில்லை என உணர்ந்த போது கொஞ்சம் பெருமிதமாக இருந்து. வலப்பக்கம் முழுதாய்ப் பார்த்துவிட்டு, இடதுபுறம் நோக்கி நக்கலும் நையாண்டியும் கலந்த ஏளனச் சிரிப்பை உதிர்த்துவிட்டு நகர்ந்தேன்.
சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள், மற்ற உணவுப்பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், அன்றாடம் பயன்படுத்துபவை, இப்போது வாங்கி வைத்துப் பின் பயன்படாமல் வீட்டில் உறங்கப்போகும் பொருட்கள், நேரடியாகக் குப்பைத்தொட்டிக்குச் செல்லவிருக்கும் பொருட்கள்…….மொத்தத்தில், நாம் உயிர் வாழத் தேவையானவை, தேவையற்றவை – இவை அனைத்தும் உலகின் எல்லா பிராண்டுகளிலும் கிடைக்கும் இடம், இந்தக் கிடங்குகள்.
எனவே, தேவையான பொருட்களை எடுக்கும் போதே அருகிலிருக்கும் தேவையற்ற பொருள்கள் தன்னையும் வாங்கச் சொல்லி அழும் அல்லது உங்களோடுதான் வருவேன் என அடம்பிடிக்கும். நாம்தான் இளகிய மனதுக்காரர்கள் ஆயிற்றே! உயிருள்ள மனிதர் அழப் பொறுப்போம். உயிரற்ற பொருள் அழுவதை எங்ஙனம் பொறுப்போம்? எனவே, அப்பொருளுக்கு நல்லதொரு வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தித் தரும் நல்லெண்ணத்தோடு, 6 மாதக் குழந்தையைப் பாதுகாப்பாகத் தொட்டியில் இடுவதைப் போல, அப்பொருளைத் தள்ளுவண்டியில் கவனமாக வைப்போம். இப்படியாகத் தேவையான பொருட்களை விட தேவையற்ற பொருட்களே வண்டியை நிரப்பியிருக்கும். வண்டியில் இடமில்லை என்ற கவலையே வேண்டாம். தண்டமான பொருட்களை உங்களிடம் தள்ள இரண்டாவது தள்ளுவண்டி உங்களைக் கட்டிக்கொள்ள ஆவலோடு உருண்டு வரும்.
இரண்டு வண்டிகளுடன் பொருட்களின் ரசீதுக்காகக் கணிணியின் முன் அமர்ந்திருக்கும் இயந்திரத்திடம் செல்வோம். அந்த மனித இயந்திரத்திற்கு நமது முகமோ, நாம் யார் என்பதோ முக்கியமில்லை. பொருட்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும் கோடுகளைக் கொண்ட ஸ்டிக்கரும் அதை வாசிக்கும் பார் கோடு ரீடரும்தான் முக்கியம். எந்திரத்தனமாகப் பணியை முடித்து நிமிர்ந்து கூடப் பார்க்காமல் ரசீதை நீட்டும் மனித எந்திரத்திடம் கடன் அட்டையையோ பணத்தையோ நீட்டுவோம். பொருட்களோடு திரும்பிவிடுவோம்.
இவ்வாறு இக்கிடங்குகளில் மனம் போன போக்கில் ஊதாரியாய் அள்ளி வருவதைக் காட்டிலும், அன்னியோன்யமாகப் பழகும் அண்ணாச்சியிடம், 5 ரூபாய் சில்லறை பாக்கி வைத்து, கிண்டலும் கேலியுமாக வாயாடிக் கொண்டே பொருள் வாங்கும் போதுதான் ‘மளிகைப் பொருட்கள்’ வாங்குவதென்பது உயிர்ப்புடன் கூடியதாக இருக்கிறது.
உங்களுக்கும் அப்படித்தானே?
- சோம. அழகு
- நைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு
- குறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 3
- சுழலும் பூமியைச் சுற்றி வரும் நிலவை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின் துணைக்கோள்
- எதுவும் வேண்டாம் சும்மா இரு
- திண்ணை வாசகர்களுக்கு
- கவி நுகர் பொழுது – சொர்ணபாரதி
- கவி நுகர் பொழுது- உமா மோகன்
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2016 மாத இதழ்
- திரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன்
- சூலை – 21. நடிகர் தில்கம் சிவாஜி கணேசன் நினைவு தினம்.
- காசியபன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பேசாத மரங்கள் ‘ தொகுப்பை முன் வைத்து …
- ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு
- சாகும் ஆசை….
- காப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள்
- தொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை
- எல்லாம் நுகர்வுமயம்
- உற்றுக்கேள்
- எனக்குப் பிடித்த சிறுகதைகள்
- பரிதியும் புவி நோக்கிப் பாயும் தீவிரத் தீப்புயல் பாதிப்பு ஒளிப்பிழம்பை [Plasma] உருவாக்கலாம்.
- கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள்
- சூலை – 21. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்
- ஆண் மரம்
- இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00 மணி