சமீபத்தில் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத எனது சொந்த ஊருக்குப்போன போது வீட்டிற்கு பக்கத்து தெருவை கடக்க நேர்ந்தது. அப்போது ஒரு வீட்டின் மாடியில் டி.வி ஆண்டெனாவைப் பொருத்தியிருந்த ஒரு கம்பியை பார்க்க நேர்ந்தது. ஆண்டெனாவில் இருந்து போகும் ஒயரை காணவில்லை. ஆனால், ஒரு கேபிள் டிவி ஒயர் வீட்டிற்குள் போவதை பார்க்க முடிந்தது.(வான் வழியாக வந்ததெல்லாம் கேபிள் வழியாகவும், கேபிள் வழியாக வந்ததெல்லாம் வான் வழியாகவும் வருவதை நினைத்துப்பார்க்க முடிந்தது. உபயம் – சுஜாதா சார்) முன்பு:- படி நிற்கும். நாம் ஏறுவோம். தற்பொழுது:- படி ஏறுகிறது. நாம் நிற்கிறோம். நிற்கும் ஆட்டுக்கல்லில் குழவி சுற்றிய காலம் போய், குழவி நிற்க ஆட்டுக்கல் சுற்றுகிறது. காலம் தான் எப்படி எல்லாம் தலைகீழாக உலகத்தை புரட்டிப்போட்டு விட்டு அமைதியாக எல்லாத்தையும் வேடிக்கை பார்க்கிறது!!!. ஒரு காலத்தில் அந்த ஆண்டெனா எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்று நினைக்கையில் நினைவு பின் நோக்கி சென்றது.
அது தேசியத்தொலைக்காட்சி ஒளிபரப்புகள் மட்டும் டெல்லியிலுருந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த காலம். அப்போது பெரும்பாலும் கிரிக்கெட் மட்டும் தான் டிவியில் பார்த்தார்கள். சிலர் டெல்லி நியூஸ். மொத்தமாக ஊரிலே மூன்றே மூன்று டிவிகள் தான் இருந்தன. டிவி இருக்கும் அந்த மூன்று வீடுகளும் ஊரில் ஒரு லாண்ட்மார்க். கருப்பு வெள்ளை தொலைக்காட்சிதான் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!
ரூபவாஹினி என்ற இலங்கை தொலைக்காட்சி சில சமயங்களில் தெரியும். வெள்ளிக்கிழமையின் பின்னிரவுகளில் தமிழ் படம் போடுவார்கள். அதைப்பார்ப்பதற்கு நான் முதலில் கூறிய வீட்டிற்கு செல்வதுதான் வழக்கம். பெரும்பாலான சமயங்களில் புள்ளி புள்ளியாகதான் படம் தெரியும். அந்த வீட்டில் அண்ணன், தம்பியாக இருவர் இருந்தனர். தம்பி சூட்டிகையானவன். சரியாக படம் தெரியாத நேரங்களில் ஆண்டெனா இருக்கும் சுவற்றில் ஏறி நின்று கொள்வான். அண்ணன் கீழே நின்று டிவியை பார்த்துக்கொண்டிருப்பான். இப்போது தம்பி ஆண்டெனாவை சுற்ற ஆரம்பிப்பான். அண்ணன் சரியாக படம் தெரியும் போது “ஸ்டாப்” சொல்லவேண்டும். அண்ணன் ஒரு சந்தர்ப்பத்தில் படம் சரியாக தெரியும்போது “ஸ்டாப்” என்று மேலே உயரத்தில் இருக்கும் தம்பிக்கு கேட்குமாறு சத்தமாக கத்துவான். அப்போது பார்த்து அவசரத்தில் தம்பி லேசாக ஆண்டெனாவை வேறு பக்கம் திருப்பிவிடுவான். படம் லேசாக புள்ளியுடன் தெரியும். அண்ணன் மிகுந்த கோபத்துடன் தம்பியை திட்டுவான். அட, அறிவுகெட்டவனே! “ஸ்டாப்” சொன்ன உடனே நிறுத்த வேண்டியது தானே என்பான். சரி மீண்டும் சுற்று என்பான். மீண்டும் ஆண்டெனா சுற்றல் ஆரம்பிக்கும். வேடிக்கையாகவும் படம் சரியாக தெரியவேண்டுமே என்ற கவலையுடனும் இருக்கும். சில சமயம் ஓரளவு தெரிந்த படம் ஆண்டெனாவை சுற்ற சுற்ற அதிக புள்ளியுடன் தெரிய ஆரம்பித்து கவலையை அதிகப்படுத்தும். ஒரு வழியாக ஒரு மாதிரியாக சரி செய்து விட்டு தம்பி கீழே இறங்கிவருவான். வந்து டிவியை பார்ப்பான். அண்ணனை திட்ட ஆரம்பிப்பான். பாரு இன்னும் எவ்வளவு புள்ளி புள்ளியா தெரியுது. ஒழுங்கா “ஸ்டாப்” சொல்லி இருந்தா புள்ளியே இருக்காது என்று மனக்குறையுடன் படம் பார்க்க ஆரம்பிப்பான். அது என்னவோ ஆண்டெனாவை சுற்றும் போது ஒழுங்காக தெரியும் படம், அவன் கீழே இறங்கி வந்தவுடன் புள்ளியாகிவிடும். இதில் இன்னும் கொடுமை சில சமயம் காற்று அடித்து ஆண்டெனா திசை மாறி விடும். மீண்டும் சுவரேற்றம். ஆண்டெனா சுற்றல்.
பெரும்பாலும் பாதி படம் முடிவு தெரியாமலேயே முடிந்துவிடும். சில சமயங்களில் அண்ணனும் தம்பியும் கூட்டத்தை சாமாளிக்க காசு வசூலிக்க ஆரம்பித்து விடுவார்கள். தியேட்டருக்கு போவதை விட இது குறைவு என்று சிலர் வருவார்கள். அன்று பார்த்து சோதனையாக படம் சுத்தமாக தெரியாது. காசை நடு இரவில் திருப்பி தந்து விடுவார்கள். பாதி படம் தெரிந்து பாதி தெரியாத நாட்களில் பார்க்க வந்தவர்களுடன் சண்டை ஆரம்பிக்கும். ஒரு வழியாக அடுத்தவாரம் இலவசம் என்ற அறிவுப்புடன் பார்வையாளர்கள் சமாதானமாக செல்வார்கள்.
சில சமயங்களில் டிவி பார்க்க வந்தவர்கள் வீட்டுக்காரர்களின் செருப்பைத் திருடி சென்று விடுவது தனி சோகம்.
ஒரு பொங்கல் நாளில் “மாட்டுக்கார வேலன்” திரைப்படத்துடன் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் ஒளிபரப்பு தமிழகம் முழுமைக்கும் விரிவு படுத்தப்பட்டது. ஊரில் மேலும் சிலர் டிவி வாங்கினார்கள். ஆனாலும் டிவி பற்றாக்குறையாகத்தான் இருந்தது.
நண்பர் ஒருவர் வீட்டிற்கு ஒரு செவ்வாயக்கிழமை அன்று டிவி வந்தது. யாரோ ஒருவர் ஒரு குதிரையில் அமர்ந்து கீழே எதையோ எடுக்கும் விளையாட்டு டெல்லியிலிருந்து ஒளி பரப்பாகிக்கொண்டிருந்தது. என்னவோ தெரியலை நாள் முழுதும் அது தான் ஓடிக்கொண்டிருந்தது. வைத்த கண் வாங்காமல் அதையே நாள் முழுவதும் பார்த்தது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
ஒளியும் ஒலியும் வருவதற்கு வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கவேண்டிய நிலைமையில் இருந்தோம். அப்போதெல்லாம் வாரத்தின் நாட்கள் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியுமுடனும் ஞாயிற்றுக்கிழமை திரைப்படத்துடனும் தான் அடையாளப்படுத்திக்கொண்டு கணக்கிடப்பட்டது. சிற்சில வாரங்களில் வெள்ளிக்கிழமை அன்று புதிதாக வரவிருக்கும் அல்லது அப்போதுதான் வந்து ஓடிக்கொண்டிருக்கும் படங்களில் இருந்து பாடல்களை ஒளிபரப்புவார்கள். பாடலுக்கு முன்பாக பத்து வினாடிகள் படத்தின் ஒரு விளம்பர “ஸ்லைடு” போடுவார்கள். அந்த வாரம் முழுக்க ஊரிலே அந்த ஸ்லைடில் காண்பிக்கப்பட்ட படத்தையும், நடிகர்களையும் பற்றியும் பாட்டை பற்றியும் ஒரே பேச்சாக இருக்கும். பெரும்பாலும் ஐந்து பாடல்கள் தான் போடுவார்கள். என்றைக்காவது ஆறு பாடல்கள் போட்டுவிட்டால் ஊரே அமர்க்களப்படும். சில சமயம் புதுப்பாடல்கள் போடும் போது அந்த ஒரு பாடல் பழைய பாடலாக அமைந்துவிட்டால் போதும் ஊரே அதைப்பற்றி வருத்தப்படும்.
திங்கள் கிழமை அன்று ஒளிபரப்பாகும் சித்திரமாலா நிகழ்ச்சியில் அத்தி பூத்தாற் போல ஒரே ஒரு தமிழ் பாட்டு ஒளிபரப்பாகும். பிற பாடல்கள் எல்லாம், பிற மாநில மொழிப்பாடல்கள். அந்த ஒரு தமிழ் பாட்டும் யாருக்குமே அறிமுகம் இல்லாத பாட்டாகத்தான் இருக்கும். அந்த பாட்டை பார்க்க தவற விட்டவர்கள் படும் வருத்தம் இருக்கிறதே. அப்பாடா!
ஞாயிற்றுக்கிழமைகளின் மாலை வேளைகளில் தெருவே வெறிச்சோடிக்கிடக்கும். அனைவரும் டிவி முன் தான் இருப்பார்கள். மதிய வேளையில் சில சமயங்களில் டெல்லி தொலைக்காட்சி, மொழிவாரிப்பட வரிசையில் மனிதர்கள் நடந்து கொண்டே இருக்கும் விருது பெற்ற தமிழ் படங்களை போடுவார்கள். அன்று ஊருக்கே இரட்டிப்பு சந்தோசம் தான் போங்கள். பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை படங்கள் திரையரங்கை விட்டு ஓடிய படங்களாகவே இருப்பது கூடுதல் சோகம்.
யார் வீட்டில் டிவி இருக்கிறது? யார் வீட்டில் எல்லோரையும் டிவி பார்க்க வருத்தமின்றி அனுமதிக்கிறார்கள்? என்பதெல்லாம் பற்றி ஊரிலே ஒரே பேச்சாக இருக்கும். எல்லாமே கருப்பு – வெள்ளை தான். ஒரு சிலர் கலர் கலர் ஒளி ஊடுருவும் வண்ணக்காகிதங்களை டிவியில் ஒட்டி கலர் டிவி ஆக்குவதும் நடக்கும்.
வீட்டின் உள்ளே இடம் இல்லாமலோ அல்லது உள்ளத்திலே இடம் இல்லாததனாலோ ஒரு சிலர் தெருவோர சன்னலில் நின்று ஒளியும் ஒலியும் பார்ப்பார்கள். (இன்றும் கூட சென்னை மாநகரின் பல டிவி கடைகளில் பலரும் வெளியில் நின்று கிரிக்கெட் பார்ப்பதை பார்க்க முடிகிறது)
நானும் நண்பனும் கிரிக்கெட் விரும்பிகளாக இருந்து ஊரின் கடைசியில் ஒரு வீட்டில் டிவி இருப்பதையும், அந்த வீட்டுக்காரர் கிரிக்கெட் ரசிகர் என்பதையும் கண்டுபிடித்து விட்டோம். எப்போதும் அந்த வீட்டிற்கு தான் கிரிக்கெட் பார்க்க செல்வோம். பின் தொடரும் நண்பர்களை சமாளிக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழியில் அந்த வீட்டை அடைவோம். பிற நண்பர்களிடம் அந்த ரகசிய வீட்டை மறைக்கப்பட்ட பாடு இருக்கிறதே. பெரும்பாடு போங்கள்.
பின்பு, பெரும்பாலான வீடுகளில் டிவி வர ஆரம்பித்தது. தூர்தர்ஸன் மெகா சீரியல்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது. (தூர்தர்ஸனின் விழுதுகள் தான் தமிழின் முதல் மெகா சிரியல் என்று நினைக்கிறேன்.)
பெரும்பாலான வீடுகளில் டிவி வாஙக ஆரம்பித்தார்கள். ஆடம்பரம் அத்தியாவசியமானது. கேபிளும் வந்தது. வண்ணத்தொலைக்காட்சியும் வந்தது. எல்லாரும் பொழுதை மெகா சீரியலிலும், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளிலும் போக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சிறுவர்கள் எல்லாம் தெருவில் விளையாடுவதே இல்லை.
கேபிள் தொழில் நன்றாக வளர்ந்தது. அவரவர்கள் நிலையில் எல்லாரும் காசு பார்த்தார்கள். சாராயக் கடைகளை அரசு நடத்துகிறது. பள்ளிகளை எல்லாம் தனியார் நடத்துகிறார்கள். தமிழக அரசு பரிசு சீட்டெல்லாம் வேறு நடத்தினார்கள். நல்ல வருமானம் இருக்கும் தொழில்களை எல்லாம் அரசு தானே நடத்தும்.
தற்போது வருமானம் மிக்க கேபிள் டிவி அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. “தமிழக அரசு கேபிள் கார்ப்பொரேஷன்” வந்தும் போயும் கொண்டிருக்கிறது. மக்களுக்கு ஏதாவது நல்லது நடந்தால் சரி.
தற்போது நிறைய சானல்களும், வித விதமான நிகழ்ச்சிகளும் வந்துவிட்டன. எதைப்பார்ப்பது எதை விடுவது என்று தெரியாமல் ரிமோட்டுடன் ஒரு ஆடு புலி ஆட்டமே நடக்கிறது. அரசின் வண்ணத்தொலைக்காட்சி வேறு கிடைத்திருக்கிறது. வீட்டிற்கு வீடு இரண்டு டிவிகள் வேறு இருக்கிறது. ஆனாலும் கூட, அன்று சித்திரமாலாவில் அறிமுகமே இல்லாத ஒரே ஒரு தமிழ் பாட்டை பார்த்து முடித்தவுடன் கிடைத்த சந்தோசத்தை இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் மீள் உருவாக்கம் செய்ய முடிந்திருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
குக்கிராமங்களை எப்போதாவது கடந்து செல்லும்போது கவனித்துப்பாருங்கள். கண்டிப்பாக கேபிள் டிவி ஒயரும், குறைந்த பட்சம் ஏதாவது ஒரு கட்சியின் கொடிக்கம்பமும் இருக்கும். அதையும் தாண்டி ஒரு சிறிய கடையும் இருக்கும். அந்த கடையில் என்ன இருக்கிறது என்று பாருங்கள். அக்குவாபீனா, பெப்சி, கோக் என்று ஏதாவது கண்ணில் படும். இந்த அன்னிய நிறுவனங்களின் வீச்சு வியக்கத்தக்கது. வாழ்க உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும்.
சிதிலமடைந்த ஆண்டெனாவின் கம்பி எல்லாவற்றையும் மௌன சாட்சியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது போல தோன்றியது. ஏனோ சுந்தரராமசாமி ஐயாவின் ”ஒரு புளிய மரத்தின் கதை” யில் வரும் புளிய மரம் மனதில் வந்து போனது.
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3
- தோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)
- கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)
- ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு
- நினைவுகளின் சுவட்டில் – (74)
- ஜென் ஒரு புரிதல் பகுதி 6
- தமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்
- ஐ-போன் வியாதி
- வாக்குறுதியின் நகல்..
- நான்(?)
- ஒன்றாய் இலவாய்
- சிறு கவிதைகள்
- ஆதி
- பாசாவின் உறுபங்கம்
- எங்கோ தொலைந்த அவள் . ..
- சொல்வலை வேட்டுவன்
- குவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி
- அறப்போராட்டமாம் !
- பூனையின் தோரணை
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)
- நானும் ஸஃபிய்யாவும்
- காற்றும் நிலவும்
- பொம்மை ஒன்று பாடமறுத்தது
- ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.
- வெறுமை
- எனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)
- சகிப்பு
- கூடு
- மறைபொருள் கண்டுணர்வாய்.
- காலம்
- பிரசவ அறை
- தொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்
- பேசும் படங்கள்
- மகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு
- கலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்
- புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்
- பழமொழிகளில் வரவும் செலவும்
- சொல்
- பஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2
- இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 44