பஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2

This entry is part 41 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

தமனகன் சொல்லிற்று:

காலத்தில் பெய்தமழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பதுபோல் வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்களும் முளைக்கின்றன. நேர்மையுள்ள அறிவாளி அபாயத்தை யறிந்து அபாயத்தையும், உபாயத்தை அறிந்து காரியசித்திக்கு வழியையும் வெளிப்படையாகக் காட்டுகிறான்.

சபையில் நல்லோரால் புகழப்படுகிற குணவான் அந்தக் குணத்தை விருத்தி செய்து காப்பாற்ற வேண்டும்.

பெருவழக்காய்ப் பேசப்படும் சொற்களை இன்னும் கேள்:

அரசன் வீழ்ச்சியை விரும்பாதவன் அரசன் உத்தரவை எதிர்பாராமலே பேசட்டும். அதுவே நல்லவனுக்குத் தர்மம்; மற்றறவையெல்லாம் அதர்மமாகும்.

இதைக்கேட்ட கரடகன், ”அரசர்களைத் திருப்தி செய்வது மிகவும் சிரமமாயிற்றே! ஒரு பழமொழி கூறுவதுபோல்:
சுகபோகத்திலும், வஸ்திரங்கள் அணிவதிலும், கொடூரத்திலும், கோணல் மாணலாகப் போவதிலும், கோபத்திலும், வசியப் படுத்துவதிலும், அரசர்கள் பாம்பைப் போலவே இருக்கிறார்கள்.

(பாம்புக்கும், அரசனுக்கும் சிலேடையாக இந்தச் செய்யுள் உள்ளது. மேலே சொன்னது அரசனைக் குறிக்கும். பாம்பைக் குறித்துச் சொல்வது பின்வருமாறு:

பாம்பு படத்தை உடையது; சட்டையை உரிப்பது; கொடூரமுள்ளது; நெளிந்து செல்வது; கோபமுடையது; வசியப்படுத்தக் கூடியது; எனவே அது அரசனைப் போலிருக்கிறது.)

அரசன் விஷமத்தனமுள்ளவன்; கடின சித்தம் உடையவன்; நீசத்தன்மையற்றவன்; கீழோரால் சூழப்பட்டுள்ளவன்; நாள்தோறும் கஷ்டங்களுக்கு ஆளாகிறவன்; எனவே அரசன் மலையைப் போல் இருக்கிறான்.

(அரசனுக்கும், மலைக்கும் சிலேடையாகச் சொல்லப்பட்டது. மலையைக் குறிக்கும் பொருள் பின்வருமாறு:

மலை அசுத்தமான பூமியுடையது; கடினமான உருவம் பெற்றது; உயர்ந்தது; கீழோரால் மிதிக்கப்படுவது; கொடூரமான மிருகங்களை உடையது. இந்த வகையில் மலை அரசனைப் போலிருக்கிறது.)

நகமுள்ள ஜீவராசிகளிடமும், நதியிடத்திலும், கொம்புள்ள மிருகங்களிடமும், ஆயுதம் தரித்தவனிடமும் நம்பிக்கைவைக்காதே! அவ்விதமே ஸ்திரீகளிடத்திலும், அரசர்களிடத்திலும் நம்பிக்கை வைக்காதே!

என்றது கரடகன்.

அதைக்கேட்ட தமனகன், “அது உண்மைதான்.

ஆனால், ஒருவன் மனத்திலுள்ள எண்ணத்தைத புத்திசாலி ஊகித்தறிந்து அவனை நிச்சயமாகத் தன் வசப்படுத்திக் கொள்கிறான்.

ஒருவன் கோபமாயிருக்கும்போது அவனைக் கெஞ்சி முகஸ்துதி செய்! அவனது நண்பர்களை நேசி! எதிரிகளைத் துவேஷி! அவன் அளித்த வெகுமதியை வாயாரப் புகழ்! இப்படித் தான் அவனை வசியம் செய்ய வேண்டும்; அதற்கு வேறு மாயாஜால வித்தைகள் எதுவும் கிடையாது.

செயலிலோ, நாவன்மையிலோ, கல்வியிலோ சிரேஷ்ட மானவனை அணுகி அவனுக்குச் சேவை செய்! அவனிடம் அந்தத் திறன் மங்கி மறைகிறபோது அவனை விட்டு விலகிப்போ!

பயனுள்ள இடம் பார்த்து சொல்லைப் பிரயோகம் செய்! வெள்ளைத் துணியில்தான் மற்ற சாயங்கள் நன்றாய் ஏறும்.

பிறரின் பலமும் வீர்யமும் அறியாத வரையில் முயற்சி செய்யாதே! எவ்வளவுதான் முயற்சித்துப் பார்த்தாலும் இமய மலைக்கருகில் நிலா சோபிப்பதில்லை,

என்று சொல்லிற்று.

இதைக் கேட்ட கரடகன், ”அதுவே உன் முடிவு என்றால், நீ அரசனிடம் போகலாம். உன் முயற்சி வெற்றியடையட்டும். உன் விருப்பம் நிறைவேறட்டும்! அரசன் அருகிலிருக்கும்போது நீ கவனமாக இரு! உன்னையும் உன் அதிருஷ்டத்தையும் நம்பிப் பிழைப்பவனல்லவா நான்!”

என்று கூறியது.

தமனகன் கரடகனை வணங்கிவிட்டுப் பிங்களனைப் பார்க்கச் சென்றது.

தமனகன் நெருங்குவதைப் பார்த்த பிங்களகன் வாயில்காப்போனிடம், ”கொடியாலாகிய அந்தக் கதவைத் திற! அவன் நமக்கு நன்றாகத் தெரிந்தவன், மந்திரிகுமாரன் தமனகன். தடை செய்யாமல் உள்ளே வரவிடு! அவன் இரண்டாம் வட்டத்தைச் சேர்ந்தவன்” என்று சொல்லியது. பிறகு தமனகன் நுழைந்து, பிங்களகனை வணங்கி, காட்டிய ஆசனத்தில் அமர்ந்தது. பிங்களகனும் வஜ்ராயுதம் போன்ற நகங்கள் அணிந்த தனது வலது கையை உயரத் தூக்கி மரியாதையுடன், ”சௌக்கியந்தானா? உன்னைப் பார்த்து ரொம்பக் காலமாயிற்றே!” என்று கேட்டது.

தமனகன், ”அரசே! என்னால் தங்கள் சமூகத்திற்கு ஒரு பிரேயாஜனமும் இல்லா விட்டாலும் சரியான சமயம் வரும்பொழுது சொல்லித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அரசர்களுக்கு உதவாதது ஒன்றும் இல்லையல்லவா? ஒரு பழமொழி கூறுவதுபோல்:

அரசே! பல்லைக் குத்துவதற்கும் காதைக் குடைவதற்கும் தங்களுக்குத் துரும்பே உபயோகப்படும்பொழுது சொல்லும் செயலு முள்ள மனிதனைப் பற்றிக் கேட்க வேண்டுமா?

மேலும், நாங்கள் ராஜசமூகத்தில் பரம்பரையாக வேலை செய்பவர்கள். ஆபத்துக் காலத்திலும் அரசனைப் பின் தொடருபவர்கள். எங்களுக்கு வேறு கதி கிடையாது. ஒரு பழமொழி கூறுவதுபோல்:

வேலையாட்களையும், நகைகளையும் தகுந்த இடத்தில் வைக்க வேண்டும். நினைத்தபடி யெல்லாம் செய்ய முடியும் என்பதற்காக சூடாமணியைக் காலில் யாராவது கட்டிக் கொள்வார்களா?

பரம்பரையாக வந்த அரசன், பணக்காரன், பெரிய குலத்தினன் யாராயிருந்தாலும் வேலையாட்களின் குண விசேஷங்களை அறிந்திராவிட்டால் அவர்களிடம் வேலையாட்கள் தங்குவதில்லை.

கீழோரால் சமமாக நடத்தப்படுபவனும், சமமானவர்களால் கௌரவிக்கப் படாதவனும், உயர்ந்த நிலையில் வைக்கப்படாதவனும் எஜமானை விட்டு விலகுகிறார்கள்.

தங்க ஆபரணத்தில் பதிக்கத்தக்க ரத்தினத்தைக் கொண்டு போய் வெள்ளீயத்தில் பதித்தால் அது விகாரமாய் விடுவதில்லை. சோபிக்காமல் போய்விடுகிறதில்லை. ஆனால் அதை அணிந்து கொள்கிறவர்களின் குணத்தை அது காட்டிவிடும்.

இவன் புத்திசாலி, இவன் இரக்கமுள்ளனவன், இவன் நம்பத்தகாதவன், இவன் முட்டாள் என்று வேலையாட்களைத் தரம் பிரிக்கத் திறமைபெற்ற அரசன் அந்தந்த வேலைக்கு லாயக்கான ஆட்களைப் பார்த்து நியமிக்கிறான்.

என்னைப் பார்த்து வெகுநாளாயிற்று என்று சொன்னீர்கள். அதற்குக் காரணமும் சொல்கிறேன்:

எங்கு இடதுசாரி வலதுசாரி என்ற வித்தியாசம் இல்லையோ அங்கு மானமுள்ள மனிதன் கணநேரம் கூடத் தங்கமாட்டான்.

எல்லா வேலையாட்களையும் பாகுபாடின்றி ஒரே மாதிரியாக எஜமானர் நடத்தினால் வேலையில் கெட்டிக்காரர்கள் உற்சாகத்தை இழக்கின்றனர்.

சிவந்த கண்ணுக்கும், சிவப்பு ரத்தினத்திற்கும் வித்தியாசம் தெரியாத இடத்தில் ரத்தின வியாபாரம் செய்வது எப்படி?

வேலையாட்கள் இல்லாமல் அரசனில்லை. அரசனில்லாமல் வேலையாட்களுமில்லை; ஆதலால் அவர்களின் பரஸ்பர விவகாரத்தில் ஒரு பந்தம் இருக்க வேண்டும்.

ஆனாலும் வேலைக்காரனின் தரமும் எஜமானரின் குணத்தைப் பொறுத் திருக்கிறது. ஒரு பழமொழி கூறுவதுபோல்:

குதிரை, ஆயுதம், சாஸ்திரம், வீணை, வார்த்தை, ஆண், பெண் ஆகியோர் பிரயோஜனப்படுவதும் படாமற் போவதும் அவர்களை உபயோகிப்பவனின் தரத்தைப் பொறுத்திருக்கிறது.

இன்னொரு விஷயம். இவன் நரிதானே என்று தாங்கள் என்னை அலட்சியம் செய்யலாம். அது சரியல்ல. எவ்விதமெனில்,

பட்டு பூச்சியிலிருந்தும், தங்கம் கல்லிலிருந்தும், தூர்வாப்புல் பசுவின் ரோமத்திலிருந்தும், தாமரை சேற்றிலிருந்தும், சந்திரன் சமுத்திரத்திலிருந்தும், நீலோற்பலம் சாணத்திலிருந்தும், நெருப்பு கட்டையிலிருந்தும், நாகரத்தினம் பாம்பின் தலையிலிருந்தும், கோரோஜனை பசுவின் பித்த ஜலத்திலிருந்தும் உதிக்கின்றன. ஆகவே, குணமுள்ளவர்கள் நம் சொந்தக் குணத்தினாலேயே பிரகாசிக்கிறார்கள். பிறப்பினால் அல்ல.

எலி வீட்டில் பிறந்ததாயிருக்கலாம்; என்றாலும் அது தீங்கு செய்வதால் அதைக் கொல்ல வேண்டும். பூனை வீட்டிலே பிறக்காமல் இருக்கலாம். என்றாலும் அது நன்மை செய்வதால் அதை ஆதரித்து வீட்டோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

திறமையற்றவன் நம்பத்தக்கவனாகவும் திறமையுள்ளவன் கெடுதி செய்பவனாகவும் இருந்தால் என்ன பயன்? அரசனே! திறமை, விசுவாசம், இரண்டுமுள்ள என்னை நீங்கள் அசட்டை செய்யலாகாது.

உலகத்தின் பரம இரகசியத்தை நன்கு அறிந்த அறிஞர்களை அவமதிக்கக் கூடாது. அவர்களுக்குச் செல்வம் புல்லுக்குச் சமானம். ஆகையால் அவர்களைச் சுலபத்தில் கட்டுப்படுத்த முடியாது. புதிதாகப் பெருகும் மத ஜலத்தினால் அழகிய கருத்த கன்னங் களையுடைய யானைகளைத் தாமரைக் கொடிகளால் கட்டிப்போட முடியாது

என்றது தமனகன்.

இதைக் கேட்ட பிங்களகன், ”அப்படி எல்லாம் சொல்லாதே! நீ நம்முடைய மந்திரிகுமாரன், வெகுகாலமாக நம்மிடம் இருப்பவன்” என்றது.

”தங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன்” என்றது தமனகன்.

”நண்பனே! உன் மனதில் இருப்பதைச் சொல்!”

”ஜலம் குடிப்பதற்காக வந்த எஜமானர் இங்கேயே நின்றுவிடுவானேன்?”

பிங்களகன் முகம் மாறுபாடடைந்தது. அதை மறைத்துக்கொண்டு ”அப்படி ஒன்றுமில்லையே!” என்றது.

”பிரபுவே, சொல்லத் தகாததாக இருந்தால் சொல்லாதீர்கள்.

சிலவற்றை மனைவியிடமும், சிலவற்றை நண்பர்களிடமும், சிலவற்றைப் புத்திரனிடமும் ஒருவன் சொல்லவேண்டும். எல்லோரும் அவனுக்கு நம்பிக்கையானவர்களே; ஆனாலும் எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லக் கூடாது”

என்றது தமனகன்.

இதைக்கேட்ட பிங்களகன் பின்வருமாறு எண்ணிற்று: ”இவன் யோக்கியனாகக் காணப்படுகிறான். இவனிடம் என் மனதிலுள்ளதைச் சொல்கிறேன்.

நம்பிக்கையான சிநேகிதனிடமும், குணமுள்ள வேலைக் காரனிடமும், பதிபக்தியுள்ள மனைவியிடமும், வல்லமையுள்ள எஜமானரிடமும் விஷயத்தைச் சொல்வதால் துக்கம் மறைகிறது.

தமனகனே! வெகு தூரத்திலிருந்து வரும் அந்தச் சப்தம் உனக்குக் கேட்கிறதா?” என்று கேட்டது.

”அரசே! கேட்கிறதே, அதற்கென்ன?”
”நண்பனே! இந்தக் காட்டிலிருந்து நான் போய்விட விரும்புகிறேன்.”

”ஏன்?”

”ஏனெனில், நம் காட்டில் அபூர்வமான மிருகம் ஏதோ ஒன்று நுழைந்திருக்கிறது. நாம் கேட்பது அதனுடைய சத்தத்தைத்தான். அந்த சத்தத்திற்குத் தகுந்த குணமும், குணத்திற்குத் தகுந்த பராக்கிரமும் அது பெற்றிருக்க வேண்டும்.”

”சத்தத்தை மட்டும் கேட்டுவிட்டு ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள்?

“வெள்ளம் அணையையும், பிதற்றல் ரகசியத்தையும், பகைமை நட்பையும், வெறும் வார்த்தை கோழையையும் அழித் தொழிக்கின்றன”

என்கிற பழமொழியைக் கேட்டதில்லையா? ஆகவே, முன்னோர்கள் சம்பாதித்து வைத்துப் பரம்பரையாக வந்தடைந்திருக்கிற இந்தக் காட்டை திடீரென்று விட்டுச் செல்வது எஜமானருக்கு உசிதமல்ல.

ஒரு காலை ஊன்றி மற்றொரு காலை எடுத்து வைப்பதுதான் புத்திசாலித் தனம். புதிய வீட்டைப் பார்த்து நிச்சயம் செய்யாமல் பழைய வீட்டைக் கைவிடலாகாது.

மேலும், இங்கே பலவிதமான சத்தங்கள் கேட்கின்றன. அவை வெறும் சத்தமே தவிர பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. உதாரணமாக இடி, புல்லாங்குழல், வீணை, பணவம், மிருதங்கம், மணி, வண்டி, கதவு, இயந்திரம் முதலியவற்றின் சத்தங்கள் கேட்கின்றன. அவற்றைக் கேட்டுப் பயப்பட வேண்டியதில்லை.

சத்ரு பயங்கரமாக இருக்கும்பொழுதும், கோபமாக இருக்கும் பொழுதும், தைரியத்தைக் கைவிடாத அரசன் அவமான மடைவதில்லை

என்று சொல்லி வைத்திருப்பது சரியான பேச்சு.

பிரம்மாவே பயமுறுத்தினாலும் தைரியசாலிகள் தைரியத்தைக் கைவிடுவதில்லை. கோடைக்கால வெய்யில் குட்டையைத்தான் வற்ற அடிக்கும். சிந்து நதியோ என்றும் பெருகியோடிக்கொண்டே இருக்கும்.

கெட்ட காலத்தில் துக்கப்படாமலும், நல்ல காலத்தில் சந்தோஷத்துடனும், போரில் தைரியத்துடனும் இருப்பவனே மூவுலகிற்கும் திலகம் போன்றவன். அப்படிப்பட்ட மகனைத் தாய் அரிதாகத்தான் பெற்றெடுக்கிறாள். பலவீனத்தால் தலைவணங்கு பவனும், தன்மதிப்பு அற்றவனும் புல்லுக்கு ஒப்பான கதியை அடைகிறான்.

இதை மனத்திறக் கொண்டு தாங்கள் இன்னும் தைரியமாக இருக்க வேண்டும். வெறும் சத்தத்தைக் கேட்டு பயப்படக்கூடாது.

“இது கொழுப்பும், மாமிசமும் நிறைந்ததென்று முதலில் நினைத்தேன்; உள்ளே புகுந்து பார்த்தபோது வெறும் தோலும் மரக்கோல்களுமாக இருக்கக் கண்டேன்”

என்றொரு பழமொழி கூறுகிறது” என்றது தமனகன்.

”அது எப்படி?” என்று பிங்களகன் கேட்க, தமனகன் சொல்லிற்று:

Series Navigationசொல்இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *