முருகபூபதி – அவுஸ்திரேலியா
திரும்பிப்பார்க்கின்றேன்
” நினைவாற்றலுக்கு இணையான இன்னொரு பண்பை மனிதரிடம் இனங்காண முடியவில்லை ”
இலங்கையில் 1982 – 1983 காலப்பகுதியில் பாரதி நூற்றாண்டு விழாக்கள் நாடு தழுவிய ரீதியில் நடந்தபொழுது 83 ஜனவரியில் தமிழகத்திலிருந்து வருகைதந்த மூத்த படைப்பாளியும் பாரதி இயல் ஆய்வாளருமான எனது உறவினர் தொ.மு. சி ரகுநாதன் எனக்காக இரண்டு பெறுமதியான நூல்களை கொண்டுவந்து தந்தார்.
ஒன்று அவர் எழுதிய அவரது நெருங்கிய நண்பர் புதுமைப்பித்தன் வரலாறு மற்றது, மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள் என்ற நூல்.
பாரதி நூற்றாண்டை முன்னிட்டு சோவியத் விஞ்ஞானிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் இணைந்த ஒரு குழு நூற்றாண்டை சோவியத்தில் கொண்டாடுவதற்காக மாஸ்கோவில் அமைக்கப்பட்டது.
அந்தக்குழுவில் இணைந்திருந்த சோவியத் அறிஞர்கள் செர்கி ஏ. பரூஜ்தீன் – பேராசிரியர் – இ.பி. செலிஷேவ் கலாநிதி எம்.எஸ். ஆந்திரனோவ் – கலாநிதி விளாதீமிர் ஏ. மகரெங்கோ – கலாநிதி வித்தாலி பெத்ரோவிச் ஃபுர்னிக்கா – கலாநிதி எல். புச்சிக்கினா (பெண்) கலாநிதி செம்யோன் கெர்மனோவிச் ருதின் ( இவரது தமிழ்ப்புனைபெயர் செம்பியன்) கலாநிதி அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி – திருமதி இரினா என். ஸ்மிர்னோவா ஆகியோரின் பெறுமதியான கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந்தன.
பெறுமதியான என்று குறிப்பிடுவதற்குக்காரணம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் எட்டயபுரம் என்ற கிராமத்தில் சுப்பையாவாகப் பிறந்து சென்னையில் திருவல்லிக்கேணியில் மகாகவியாக மறைந்து – இறுதி ஊர்வலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே கலந்துகொண்ட அக்காலத்தில் அந்த உலக மகாகவியின் பெருமை பற்றித்தெரிந்திராத தமிழ் உலகத்திற்கு -ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் கடல் கடந்து வாழ்ந்தவர்கள் அந்த நூற்றாண்டுவேளையில் ஆய்வு செய்து எழுதியமைதான் அந்தப்பெறுமதி.
குறிப்பிட்ட தொகுப்பில் எனது கண்ணில் பட்ட முக்கியமான பெயர் வித்தாலி ஃபுர்னிக்கா. இவர் தமிழக படைப்பாளிகளுடன் மட்டுமல்ல – ஈழத்து இலக்கியவாதிகள் சிலருடனும் கடிதத்தொடர்பில் இருந்தவர்.
இவர் மல்லிகை ஜீவாவுக்கு எழுதியிருந்த கடிதம் ஒன்றையும் பார்த்திருக்கின்றேன். எதிர்பாராத விதமாக எனக்கு 1985 இல் மாஸ்கோவில் நடந்த சர்வதேச இளைஞர் – மாணவர் விழாவுக்குச்செல்வதற்கு அழைப்பு கிடைத்தவுடன் – ருஷ்ய மொழி தெரியாத நாட்டில் இலங்கைத் தமிழ் மாணவர்கள் கற்றுக்கொண்டிருந்தாலும் இலக்கியம் பேசக்கூடியவர் யார் இருப்பார் என்ற யோசனை வந்தது. உடனே யாழ்ப்பாணத்திலிருந்த மல்லிகை ஜீவாவுடன் தொடர்புகொண்டு ஃபுர்னிக்காவின் முகவரியைக் கேட்டேன். அவர் – மாஸ்கோ ராதுகா பதிப்பகத்தின் முகவரியைத் தந்தார்.
ஃபுர்னிக்கா அங்குதான் பணியிலிருக்கிறார் என்ற தகவலையும் சொன்னார்.
உடனே அவசரமாக ஃபுர்னிக்காவுக்கு எனது வருகைபற்றி கடிதம் எழுதினேன்.
மாஸ்கோவுக்கு சென்றதும் நாம் தங்கியிருந்த இஸ்மயிலோவா ஹோட்டலுக்கு சில இலங்கைத் தமிழ் மாணவர்கள் எம்மைத்தேடிக்கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர் ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தியின் மூத்த மகன் பாண்டியன். ( கவிஞர் சேரனின் அண்ணன்) இவருக்கும் ஃபுர்னிக்காவை தெரிந்திருந்தது. அவரே என்னை ராதுகா பதிப்பகத்திற்கு அழைத்துச்சென்றார்.
எங்கள் அன்புக்குப் பாத்திரமான சோவியத் எழுத்தாளரும் தமிழ் இலக்கியத்தின் மீது அளவற்ற அக்கறையும் தமிழ் இலக்கியவாதிகளிடத்தே ஆத்மார்த்தமான நேசிப்பும் கொண்ட விதாலி ஃபுர்னீக்கா நினைவில் கலந்துவிட்ட அற்புதமான மனிதர்.
ஃபுர்னீக்கா, சோவியத் நாட்டில் உக்ரேயன் மாநிலத்தில் 1940 இல் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தமது 25 வயது வாலிபப் பருவத்தில் லெனின் கிராட் நகரில் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த சமயம் – ஒரு நாள் புத்தகக் கடையொன்றுக்குப் போயிருக்கிறார்.
அங்கே ருஷ்ய மொழியில் பெயர்க்கப்பட்ட இந்திய – தமிழ் கவிஞரின் கவிதை நூல் அவர் கண்களுக்கு எதிர்பாராத விதமாக தென்படுகிறது.
அக்கவிதைகளின் ஆசான் எங்கள் மகாகவி பாரதிதான். அந்தச் சர்வதேச கவியின் – சிந்தனைகளும் சர்வதேச வியாபகமாக உருப்பெற்ற கருத்துக்களும் இந்தத் தொழிலாளியை பெரிதும் கவர்ந்து விடுகிறது.
வாழ்வுக்கு வருமானம் தந்துகொண்டிருந்த தொழிலை உதறிவிட்டு, லெனின் கிராட் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவில் மாணவராகச் சேர்ந்துவிடுகிறார் விதாலி ஃபுர்னீக்கா.
அன்று முதல் – அதாவது 1965 ஆம் ஆண்டு முதல் – தமது மறைவு வரையிலும் தமிழையும் தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.
இலக்கிய வட்டாரத்தில் பிரசித்தமான ஃபுர்னீக்காவை தமிழ் மக்களில் எத்தனை பேர் அறிந்துள்ளார்கள் என்பது விமர்சனத்திற்குரியது. எனவே இங்கு அவருக்கு சிறிது அறிமுகம் அவசியம் எனக் கருதுகின்றேன்.
இந்த அறிமுகப்படுத்தல் – அவருக்கு பெருமை சேர்ப்பதாகவும் ‘உணர்ச்சி’ நிலையிலேயே ‘தமிழ்க்கோஷம்’ போட்டுக்கொண்டு அறிவுபூர்வமாகச் சிந்திக்கத் தவறிப்போகின்றவர்கள் கண்டு கொள்ளத் தவறிய அந்த மாமனிதரின் தமிழ்ப்பணியை நினைவு படுத்துவதாகவுமே அமைகிறது.
ஒரு விவசாய பாட்டாளி வர்க்கப் பிரதிநிதி ( இவரது பெற்றோர் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் பண்ணைத் தொழிலாளர்கள் ) – மகாகவி பாரதியின் சிந்தனைகளாலும் செழுமையான கவித்துவத்தினாலும் ஆகர்சிக்கப்பட்டு தமிழைப் பயின்று தமிழ், கலை, இலக்கியங்களையும் படைப்பாளிகளையும், தமிழ் பேசும் மக்களையும் தேடி அலைந்து – தனது தீராத தமிழ்த் தாகத்தைத் தணித்துக்கொள்ள வாழ்நாளில் கால் நூற்றாண்டுக்கும் மேல் பெரும்பகுதி நேரத்தை செலவிட்ட சோவியத் அறிஞரின் சேவை – காலத்தில் பதிவு செய்யப்படவேண்டியது.
‘செம்பியன்’ என தமிழ் இலக்கிய வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட சோவியத் அறிஞர் கலாநிதி செம்யோன் நுதின் அவர்களிடம் 1965 இல் பயிற்சி பெறத் தொடங்கிய ஃபுர்னீக்கா, பின்னர் தமிழகம் வந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் மு.வரதராசனிடம் பயின்றார்.
‘தமிழகப்பித்தன்’ எனப் புனைபெயரும் வைத்துக்கொண்டார்.
சோவியத் விஞ்ஞானப் பேரவையின் அனுசரணையில் இயங்கிய மாஸ்கோ ஓரியண்டல் இன்ஸ்டிடியூட்டில் கலாநிதி பட்டம் பெற்றார். தமது கலாநிதிப் பட்டத்தின் ஆய்வுக்காக ‘தற்காலத் தமிழ் இலக்கியம்’, ஜெயகாந்தனின் படைப்பிலக்கியம் முதலானவற்றைத் தேர்ந்தெடுத்தார். இவர் எழுதிய நூற்றுக் கணக்கான கட்டுரைகள் தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாசாரம் சார்ந்ததாகவே அமைந்தன.
சோவியத் மக்களுக்கு தமிழ் மக்களையும் அவர்தம் கலை, இலக்கியங்களையும் நம்பிக்கைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் சிறப்பாக அறிமுகப்படுத்தியவர்களின் வரிசையில் ஃபுர்னீக்கா பிரதான இடத்தை வகிக்கின்றார்.
பாரதி நூற்றாண்டு கொண்டாடப்பட்ட வேளையில் சோவியத் குழுவின் செயலாளராகவும் பணியாற்றினார்.
ஈழத்து இலக்கியம் தொடர்பாகவும் ஆராய்ந்து – பல ஈழத்து எழுத்தாளர்களைப் பற்றியும் எழுதினார். ஈழத்து படைப்பிலக்கியங்கள் பலவற்றை ருஷ்ய மொழியில் பெயர்த்தவரும் இவர்தான். தமிழகத்திலும் ஈழத்திலும் இவரது நண்பர்கள் பெரும்பாலும் இலக்கியவாதிகளாகவும் பத்திரிகையாளர்களாகவும் மொழிபெயர்ப்பாளர்களாகவும் திகழ்கின்றனர்.
தமிழகத்தில் ஊர் ஊராகச் சுற்றி அலைந்து தகவல்கள் திரட்டி தமிழரின் தொன்மை – நாகரீகம் – நம்பிக்கை, -சடங்குகள் – சம்பிரதாயங்களையெல்லாம் ஆராய்ச்சி செய்து ருஷ்ய மொழியில் அரிய நூல் ஒன்றையும் வெளியிட்டார்.
மாஸ்கோவில் இறங்கியவுடனேயே நான் தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல் அன்பர் ஃபுர்னீக்கா அவர்கள்தான்.
புறப்படுவதற்கு முன்பே நான் அவருக்கு அனுப்பியிருந்த கடிதமும் அவர்வசம் கிடைத்திருந்தது.
ராதுகா என்ற ருஷ்ய மொழி வானவில் என்று அர்த்தம். எனக்கு இதனைச் சொல்லித் தந்தவரும் ஃபுனீர்க்காதான்.
பல சோவியத் இலக்கியங்களை தமிழில் நாம் படிப்பதற்கு இந்தப் பதிப்பகம்தான் காரணம். சிறந்த முறையில் அச்சிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட பல நூல்களை இந்த வானவில் எமக்கு வழங்கியுள்ளது. கொழும்பில் மக்கள் பிரசுராலயத்திலும் சோவியத் தூதரக தகவல் பிரிவிலும் பெற்று படித்திருக்கிறேன்.
மாஸ்கோ வீதிகள் எனக்கு அறிமுகமில்லாதவை. மொழியும் ஒரு பிரச்சினை. எமக்கு வழிகாட்டித் துணையாக நியமிக்கப்பட்டவர்களின் உதவியை நாடியிருக்கலாம். எனினும் ஃபுர்னிக்காவை சந்திக்க வழித்துணையாக மகாகவி உருத்திரமூர்த்தியின் மூத்த புதல்வர் பாண்டியன் உடன்வந்தார்.
இந்த முதல் சந்திப்பு பற்றி ஏற்கனவே, எனது சமதர்ம பூங்காவில் நூலில் குறிப்பிட்டுள்ளேன். அந்த முதல் சந்திப்பு எமக்கிடையே ஏற்படுத்திய அறிமுகம் பின்னாளில் பலன் மிக்கதாய் அமைந்தது குறித்து இன்றும் ஆனந்தமடைகின்றேன்.
இந்த நினைவுக் குறிப்புகளைப் படிப்பதற்கும் படித்துவிட்டு பதில் எழுதுவதற்கும் இன்று எங்கள் ஃபுர்னீக்கா இல்லையே என உணரும்பொழுது சோகம் மனதை அழுத்துகிறது. நினைவுகள் சாசுவதமானவை.
இந்த நினைவுகள் தொடர்பாக ஃபுர்னீக்கா தமது டயறியில் குறித்திருந்ததை அவரது அருமை வாசகர்கள் அறிந்திருக்கலாம். மீண்டும் இங்கு அந்த டயறிக்குறிப்பை காரணத்தோடு தருகின்றேன்.
ஃபுர்னீக்கா எழுதுகிறார் —
” மனிதனின் நினைவாற்றல் மகத்தான சிறப்புமிக்கது. நினைவாற்றல் என்பது முடிவற்றது. அது அப்படித்தான். எப்படிப் பார்த்தாலும் நினைவாற்றலுக்கு இணையான இன்னொரு பண்பை மனிதனிடம் என்னால் இனங்காண முடியவில்லை.
நினைவாற்றல் என்பது மிகக் கடுமையான நீதிபதி. அதுவே நம் மனச்சாட்சி – நம்மோடு எப்போதும் உடனிருக்கும் நண்பன் – நம்மைப் பாதுகாக்கிற தாய் – நம்மைப் பெருமைப்படுத்துகிற தந்தை எல்லாம் நினைவாற்றல்தான் (நட்பில் பூத்த மலர்கள் – ஜெயகாந்தன் – பக்கம் – 5)
ஆம் – ஃபுர்னீக்கா குறிப்பிட்டதைப் போன்றே – அவரது நினைவாற்றலும் உன்னதமானதுதான் என்று என்னால் நிதானிக்க முடிகிறது.
ஃபுர்னீக்காவின் தாயகம் உக்ரேய்ன். தாய் மொழியும் அதுவே.
தமிழுக்குப் பாரதி – வங்கத்திற்கு தாகூர் என்றால் உக்ரேயினுக்கு தராஷ் செவ்ஷென்கோவ்.
நான் மாஸ்கோவில் ஃபுர்னீக்காவை சந்தித்த காலப்பகுதியில் அந்த உக்ரேய்ன் மகாகவியின் 125 ஆம் வருட நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான பூர்வாங்க வேலைகளில் அவர் ஈடுபட்டிருந்தார்.
தராஷ் செவ்ஷென்கோவை உலகின் இதர மொழிகளில் அறிமுகப்படுத்தியவர்கள் யார் ? யார் ? என்று தேடிக் கொண்டிருந்தார் ஃபுர்னீக்கா.
அன்றைய எமது சந்திப்பு அவருக்குப் பெரும் உதவியாக இருந்தது.
“நண்பரே – இலங்கையில் கே.கணேஷ் – எச்.எம்.பி. மொஹிதீன் ஆகியோர் எங்கள் உக்ரேய்ன் மகாகவியைப் பற்றி நன்கு அறிந்து எழுதியவர்கள். அவரின் கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்கள். எனது நீண்ட கால நினைவில் அவர்கள் இருவரும் வாசம் செய்கின்றனர். ஆனால் தொடர்பு கொள்ள கைவசம் முகவரி இல்லை. நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்” என்றார்.
மிகுந்த மனநிறைவுடன் அவர் குறிப்பிட்ட இரண்டு நண்பர்களின் முகவரிகளையும் அனுப்பி வைத்ததுடன் இம்மூவர் மத்தியிலும் நட்புறவு தோன்றத் துணை நின்றேன்.
நண்பர் கே.கணேஷ் இதற்காகவே என்னை மிகுந்த நன்றியுணர்வோடு நேசித்தவர்.
அவர் – தராஸ் செவ்ஷென்கோவை மீண்டும் நினைக்கவும் கவிதைகளைத் தொடர்ந்து மொழி பெயர்க்கவும் அந்த மகாகவியின் 125 ஆவது வருட நினைவு விழாவில் கலந்து கொள்வதற்கு ருஷ்யாவுக்கு பயணமாவதற்கும் நான் ஃபுர்னீக்காவுடன் ஏற்படுத்திக் கொடுத்த தொடர்பும் உறவும்தான் காரணம் என்று அடிக்கடி நினைவுபடுத்தி கடிதங்கள் எழுதினார் கணேஷ்.
அத்துடன் சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 1993 இல் வெளியிட்ட உக்ரேனிய மகாகவி தராஸ் செவ்ஷென்கோ கவிதைகள் ( மொழிபெயர்த்தவர் கணேஷ்) நூலின் முன்னுரையிலும் இந்தத்தொடர்பாடல் பற்றி விரிவாகப்பதிவுசெய்துள்ளார்.
1986 இல் ஒரு சோவியத் குழுவில் அங்கம் வகித்து ஃபுர்னீக்கா குறுகிய கால விஜயம் மேற்கொண்டு கொழும்புக்கு வருகை தந்த சமயம் – முன்னேற்பாடு ஏதும் இன்றி சிறிய கூட்டம் ஒன்றை கொட்டாஞ்சேனையில் நடத்தினோம்.
வலம்புரி கவிதா வட்டம் (வகவம்) மாதாந்தம் நடத்தும் இலக்கியச் சந்திப்பும் கவிதா அமர்வுமே – இவ்வாறு திடீரென ஃபுர்னீக்காவுடனான இலக்கியச் சந்திப்புக் கூட்டமாக அமைந்தது. நானும் நண்பர் பிரேம்ஜியும் கல்கிசையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஃபுர்னிக்காவை அழைத்துக்கொண்டு அந்தப்பிரதேசத்தில் வட்டாரப்பொல வீதியில் வசித்து வந்த நண்பர் எச். எம். பி மொஹிதீனிடம் அழைத்துச்சென்று இருவரையும் அறிமுகப்படுத்தினோம்.
அதுவரையில் எழுத்தினால் மாத்திரமே தெரிந்துவைத்திருந்தவர்களின் அந்தச்சந்திப்பு அவர்களுக்கும் எனக்கும் மறக்கமுடியாத நிகழ்வாகிவிட்டது.
வகவம் கவிஞர்கள் கவிதையால் ஃபுர்னீக்காவுக்கு புகழாரம் சூட்டினார்கள். இந்தப் பயணத்தில் அவர் – கே.கணேஷ் – எச்.எம்.பி.மொஹிதீன் – சில்லையூர் செல்வராசன் – பிரேம்ஜி – சோமகாந்தன் – ராஜஸ்ரீகாந்தன் – மேமன்கவி – ஆசிரியர் இலக்கிய நேசர் மாணிக்கவாசகர் உட்பட பலரையும் சந்தித்து உரையாடினார்.
கால அவகாசம் இன்மையால் யாழ்ப்பாணத்திலும் இன்னும் பல இடங்களிலும் அவர் நேசித்த இலக்கியவாதிகளைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது.
பலரது பெயர்கள் அவர் நாவில் வந்தன. அவர்களையெல்லாம் விசாரித்தார்.
ஃபுர்னீக்காவின் நினைவாற்றல் மகத்தானதுதான். அவரே எழுதியுள்ளவாறு அதற்கு இணையான இன்னொரு பண்பு இல்லைத்தான்.
இந்த நினைவாற்றல் பண்பின் அடையாளமாகத்தான் நாம் இன்று அந்த உக்ரேய்ன் மகாகவி தராஸ் செவ்ஷென்கோவின் கவிதைகளை – கே.கணேஷ் அவர்களினால் தமிழில் பார்க்கின்றோம்.
ஃபுர்னீக்கா சம்பந்தப்பட்ட ஜெயகாந்தனின் நட்பில் பூத்த மலர்கள் நா.முகம்மதுசெரீபு மொழி பெயர்த்த – ஃபுர்னீக்கா ருஷ்ய மொழியில் எழுதிய பிறப்பு முதல் இறப்பு வரை ஆகியவற்றை நண்பர் ராஜஸ்ரீகாந்தன் ஊடாக அனுப்பி வைத்தவரும் கே.கணேஷ்தான்.
கண்டி தலாத்துஓயாவில் வசித்த கணேஷ் அவர்களும் நீர்கொழும்பில் இருந்த நானும் நெருக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளக் காரணமாயிருந்த ஃபுர்னீக்கா எம்மைவிட்டுப் பிரிந்தார் என்ற துயரச் செய்தியை தாங்கி வந்ததும் கணேஷ் எழுதிய கடிதம்தான்.
ஃபுர்னீக்கா எனக்காக தனது கையொப்பத்துடன் வழங்கிய பிறப்பு முதல் இறப்புவரை ருஷ்ய மூல நூலும் எனது குடும்பத்தினருக்காக தந்துவிட்ட பரிசுப் பொருட்களும் இன்றும் எங்களுடன் அவரது சகோதர வாஞ்சையை உணர்த்திக்கொண்டுதானிருக்கின்றன.
தமிழக மற்றும் ஈழத்து படைப்பாளிகள் பலரது படைப்புகளை ஃபுர்னீக்கா ருஷ்ய மொழியில் தந்திருக்கிறார். தமது ஆய்வுக்காக தமிழ்நாட்டின் பல கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து தமது களப்பயிற்சியின் மூலம் அவர் ருஷ்ய மொழியில் எழுதிய குறிப்பிட்ட நூலின் தமிழாக்கம்தான் பிறப்பு முதல் இறப்பு வரை.
செக்கோஸ்லவாக்கியா அறிஞர் டாக்டர் ஹெலேனா ப்ரெய்ன்ஹால் தெரோவா இந்நூலுக்கு மதிப் புரையை எழுதியிருக்கிறார்.
மற்றுமொரு உக்ரேய்னிய அறிஞர் இவான் ஃபிராங்கோவின் கவிதைகள் உக்ரேனியா மகா கவி தராஸ் ஷெவ்சென்கோவின் கவிதைகள் (இந்நூல்களையும் தமிழுக்குத்தந்தவர் கே.கணேஷ்) எனக்கு கணேஷ் தபாலில் அனுப்பியிருந்தார். ஃபுர்னிக்காவின் பிறப்பு முதல் இறப்பு வரையில் நூல் பற்றிய எனது நயப்புரையை மெல்பனில் மருத்துவர் பொன். சத்தியநாதன் நடத்திய தமிழ் உலகம் ( ஆசிரியர் பாடும்மீன் ஸ்ரீகந்தராசா) இதழில் 1994 இல் எழுதியிருக்கின்றேன்.
சமூகவியல் – இனப்பரப்பு இயல் போன்ற இன்னபிற துறைகளில் ஆர்வம் காட்டிவருகின்ற நிபுணர்களுக்கு மட்டுமல்லாது சாதாரணமானவர்களுக்கும் – ஃபுர்னீக்காவின் கூர்ந்து நோக்குகின்ற பார்வையும் விஷயங்களில் நெருக்கமான அறிவும் சந்தேகத்திற்கிடமின்றி ஆர்வத்தை ஏற்படுத்தும் விரிவான ஆரம்பநிலைத்தகவல்களினின்றும் நிறைந்த பயனைப் பெறச்செய்யும் – என்ற செக்கோஸ்லவேக்கிய அறிஞர் தெரோவாவின் கூற்று மிகச்சரியான அனுமானிப்பாகவே – இந்நூலைப்படித்தவுடன் கருதத்தோன்றுகிறது.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் பிடியில் இந்தியா இருந்தசமயம் – முற்றாக ஆய்வு நோக்கத்திற்காக அங்கு செல்ல விரும்பிய ருஷ்ய ஆய்வாளர்களையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சந்தேகக்கண்கொண்டு பார்த்தனர் என்ற தகவலையும் தமது முன்னுரையில் ஃபுர்னிக்கா தெரிவிக்கின்றார்.
ஆழமான தமிழ்க்கலாசாரத்தின் மரபு தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் வேரூன்றி நிற்பதையும் அவர் நன்கு அவதானித்தே இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.
தமிழ்மொழி தொன்மையானதாயும் அதேசமயத்தில் தமிழகத்தில் பிரதேசத்திற்குப்பிரதேசம் அதன் மொழிப்பிரயோகம் மாற்றம் பெறுவது குறித்தும் ஃபுர்னிக்கா விரிவாக ஆராய்கிறார். தமிழ்மொழி செவிக்கு இனிமையாகவும் அதேவேளை அதன் ஒலியலை ஏற்றத்தாழ்வுடையது என்றும் விபரிக்கிறார்.
எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிடும் வாக்கியம் சுவாரஸ்யமானது :- ‘ நான் கிட்டத்தட்ட ஆயிரத்து தொள்ளாயரத்து முப்பத்தெட்டு கட்டடங்கள் பார்த்தேன்.
இந்த வாக்கியத்தின் ஒலிப்பாங்கினையும் அசை அசையாக ஒலிர்கின்ற தன்மையையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். கட்டமரன் என்ற சொல் தமிழில் இருந்தே தோன்றியது என்பதற்கான ஆதாரங்களையும் ஃபுர்னிக்கா குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டில் மக்களின் பெயர் சூட்டும் சம்பிரதாயங்களில் குடும்பப்பெயர்கள் – தந்தை வழிப் பெயர்கள் எவ்விதம் இடத்துக்கிடம் மாற்றம் பெறுகின்றன என்பதற்கும் சில சான்றாதாரங்களை கூறுகின்றார். தமிழக மக்களின் சடங்குகள் – சகுனம் பார்க்கும் இயல்புகள் அனைத்தையும் ஒரு மாணவனாக கூர்ந்து பார்த்து ஆராய்கிறார்.
எந்தக்கட்டத்திலும் அம்மக்களின் வாழ்வை கேலி செய்வதாகவோ – அவர்களின் நம்பிக்கைகளை கிண்டல் செய்வதாகவோ இவரது ஆய்வு அமையவில்லை.
தமிழர் வாழ்க்கையின் சிறப்புத்தன்மை குறித்த அறிமுகமானது ஏராளமான அறிவூட்டத்தக்க செய்திகளைத்தருகிறது. மேலேழுந்த பார்வையாகக் காணும் அந்நியர்க்கு இவை புதிர் போலவும் வழக்கமில்லாதன போலவும் தெரிதல் இயல்பானதே – என்றுதான் தமது முடிபுகளை தீர்மானிக்கிறார் விதாலி ஃபுர்னிக்கா.
பல்வேறு தமிழ் படைப்புகள் சோவியத் மக்களுக்கு அறிமுகமாவதற்கு காரணமாயிருந்த ஃபுர்னீக்கா புரிந்த மகத்தான இலக்கியப் பணிகள் ஏராளம்.
இவற்றுக்கெல்லாம் சிகரமாக – மற்றுமொரு சோவியத் அறிஞர் கலாநிதி எல்.வி.புச்சிகினா அவர்களுடன் இணைந்து மகாகவி பாரதியாரைப் பற்றி ருஷ்ய மொழியில் ஒரு நூலை அவர் எழுதியதாகத் தகவல் கிடைத்தது.
இந்த தகவலைத் தொடர்ந்து அவரது மறைவுச் செய்தியும் வந்தது. தமிழ்க் கூறும் நல்லுலகம் – அமரர் ஃபுர்னீக்காவை என்றென்றும் மானசீகமாக வாழ்த்திக் கொண்டே இருக்கும்.
அவரைப்பற்றி எழுதுவதற்கு நிறைய உண்டு. சுலபமான காரியம் அல்ல. அவரை நினைத்துப் பார்க்கும் போது – தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்றுதல் தமிழர்களுக்கே முன்னுதாரணமானது.
ஃபுர்னீக்கா – எங்கள் இனிய சகோதரனே என்றென்றும் நீங்கள் எம்முடன் இருக்கிறீர்கள்.
பிற்குறிப்பு:
( ஃபுர்னீக்கா எழுதியிருக்கும் பிறப்பு முதல் இறப்புவரை என்ற தமிழக ஆய்வு நூலில் பதிவுசெய்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள புதிர்கள் நிறைந்த கோட்டைப்பிள்ளைமாரின் சுற்றுச்சுவர் எழுப்பிய கோட்டையை தரிசிக்க அங்கு சென்றேன். அதுபற்றியும் இலங்கையில் வெளியாகும் ஞானம் மாத இதழில் பயணியின் பார்வை தொடரில் பதிவுசெய்துள்ளேன்.
—0—
- இரு கோடுகள் (மூன்றாம் பாகம்)
- தா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா?
- கலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்
- நீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்பு
- தேசபக்தி!!
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1
- தாத்தா வீடு
- அழியா ரேகை
- கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)
- பண்ணைக்காரச்சி
- இரண்டு கேரளப் பாடல்கள்
- வேழப்பத்து 14-17
- தளர்வு நியதி
- பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை
- தொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு
- இன்குலாபுக்கு அஞ்சலிகள்
- The Impossible Girl
- கிரகவாசி வருகை
- ஒட்டப்படும் உறவுகள்
- சோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா
- சுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா ?
- முதல்வர் ஜே ஜெயலலிதா மறைவு