100,000 ஆண்டுக்கு ஓர்முறை நேரும் மர்மமான பனியுகச் சுழற்சி எப்படி நிகழ்கிறது ?

This entry is part 9 of 13 in the series 18 டிசம்பர் 2016

6a00d8341bf7f753ef01b8d228d896970c-800wi

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

++++++++++++++++++++

நூறாயிரம் ஆண்டுக் கோர்முறை
நேரும் பனியுகச் சுழற்சி  !
கடல் நீர் சுண்டி,
தமிழகத் தென்கரை நீண்டு
குமரிக் கண்டம்
கூந்தலை விரித்தது!
சூட்டுயுகப் புரட்சிக் கணப்பில்
படிப்படியாய்,
பனிப் பாறைகள் உருகி
நீர் மட்டம், உஷ்ணம் கடலில் உயர
நிலத்தின் நீட்சி மூழ்கும்!
கடல் மடி நிரம்பி
முடிவில் புதைப் பூமியாய்
சமாதி யானது,
குமரிக் கண்டம் !

++++++++++++++

ice-age-image

வடதுருவப் பனியுகம் பரவிய சில பகுதிகள்

கடல் அடித்தள நுண் புதைப்படிவு [Tiny Fossils] விளைவுகளைக் காணும் போது, ஓவ்வோர் 100,000 ஆண்டு கால இடைவெளியிலும், கடல்கள் குளிர்காலத்தில் CO2 வாயுவை உட்கொண்டு, சூழ்வெளியில் குன்றிய வாயுவை மிஞ்ச வைத்துப்  பனித் தட்டுகள் நீண்டும், சுருங்கியும் வருவதை நாங்கள் எடுத்துக் காட்டினோம்.

கடல்கள் CO2 வாயுவை உறிஞ்சுவதாகவும், வெளிவிடுவதாகவும் நாங்கள் கருதினால், தங்கியுள்ள பெருமளவு கார்பன்டையாக்சைடு வாயு கடற் பெருவாய் மூடியாகத் [Ocean Cap] தெரியும்.

பேராசிரியர் கார்ரி லியர் [தலைமை ஆய்வுக் குழுவினர், புவிக்கடல் விஞ்ஞானம்]

nature-of-sediments

கடல் அடித்தள நுண் புதைப்படிவு [Tiny Fossils] இரசாயன நிரப்புகளை ஆராயும்போது, எம் குழுவினர், ஒவ்வோர் 100,000 ஆண்டு காலப் பனியுகச் சுழல்நிகழ்ச்சி இடைவெளியில் மிகுதியான கார்பன்டையாக்சைடு [CO2] வாயு, கடலடி ஆழத்தில் சேமிக்கப் பட்டுள்ளதைக் கண்டுபிடித்தனர். இந்தக் கூற்று மூலம் அறிவது : மிகுதியான CO2 வாயு சூழ்வெளியி லிருந்து, இழுக்கப்பட்டு, கடலடியில் சேர்க்கப் படுகிறது.  இதன் விளைவு : பூமியின் உஷ்ணம் குன்றி, வடகோளப் பகுதியில் அகண்ட பனித் தட்டுகள் பரவிச் சூழ்கின்றன.  பெருங்கடல்கள் சூழ்வெளிக் கரியமில வாயுவை உட்கொண்டும், ஒருசில காலங்களில் வெளியேற்றியும் வருகின்றன. கடற் சூழ்வெளி CO2 வாயுவை உட்கொள்ளும்  போது, பனித்தட்டுகள் நீட்சியாகி, பூகோளத்தைக் குளிர்ச்சி மயமாக்கி விடுகின்றன.  கடல் வாயுவை வெளியேற்றும் போது, பனித்தட்டுகள் சுருங்கிச் சூழ்வெளியில் மிகையான CO2 வாயு சேர்ந்து பூமியைச் சூடாக்குகிறது.

பேராசிரியர் கார்ரி லியர் [தலைமை ஆய்வுக் குழுவினர், புவிக்கடல் விஞ்ஞானம்]

algae-formation-under-sea

நூறாயிரம் ஆண்டுக்கு ஓர்முறை நேரும் பனியுகச் சுழல் நிகழ்ச்சி

40,000 ஆண்டு இடைவெளிக் காலத்தில் நமது பூமியின் பனியுகங்கள் தோன்றுவதாகக் விஞ்ஞானிகளால் மாறுபட்ட முன்னறிவிப்பு முதலில் வெளியானது.  ஆயினும் சுமார் ஒரு மில்லியன் ஆண்டுக்கு முன்னர் [Mid-Paleistocene Transition] ஒரு சமயம் பனியுக இடைவெளிக் காலம் 40,000 ஆண்டிலிருந்து 100,000 ஆண்டாக மாற்றப் பட்டது.

பிரிட்டன் கார்டிஃப் பல்கலைக் கழகத்தின் நிபுணர்கள் நமது பூமியின் பனியுக இடைவெளிக் காலம் ஏன் சுருங்கியும், நீண்டும் வருகிறது என்பதற்கு ஓர் விளக்கம் தந்தனர்.   அந்த மர்மமான நிகழ்ச்சி கடந்த மில்லியன் ஆண்டுகளாய் வட அமெரிக்கா, ஈரோப் & ஆசிய நாடுகளில் நேர்ந்த பனியுகப் படிவு பற்றிய  “நூறாயிரக் காலப் பிரச்சனை” [100,000 Year Problem] என்று குறிப்பிடப்பட்டது.  இதுவரை ஏன் அவ்விதம் நேர்கிறது என்பதற்கு விஞ்ஞானிகளால் காரணம் கூற முடியவில்லை.  சுமார் 100,000 ஆண்டுக்கு ஓர்முறை பூகோளத்தின் காலநிலை சூடேறியும், குளிர்ந்தும் மாறி மாறிச் சுழல் நிகழ்ச்சியாய் நேர்ந்து வருகிறது.  கடந்த பனியுகக் கால [11,000 ஆண்டுகள்] முடிவுக்குப் பிறகு, பூமியின் உஷ்ணம் 16 டிகிரி F [8 டிகிரி C] ஏறியுள்ளது.  கடல்நீர் மட்டம் 300 அடி உயரம் உயர்ந்துள்ளது.

Image result for earth's precession rotation

மிலன்கோவிச் புவி அமைப்புச் சுழற்சிகள்

1920 ஆண்டுகளில் செர்பியன் பூதளப் பௌதிக வானியியல் விஞ்ஞானி [Serbian Geophysicist / Astronomer]  மிலூடின் மிலன்கோவிச் கூறிய கால நிலை மாற்றும் புவிநகர்ச்சி கூட்டு விளைவுக் கோட்பாடு : புவிச் சுற்றுப் பாதை நீள்வட்ட மையப் பிறழ்ச்சி [Orbital Eccentricity], புவி அச்சின் சாய்வு   [Axial Tilt]  & புவி அச்சின் ஆட்டம் [Precession] ஆகியவை பூமியின் பருவகால நிலைகளைப் பெரிதும் பாதிக்கின்றன என்று கூறினார்.

26,000 ஆண்டுக்கு ஓர்முறைப் புவி அச்சின் [Earth’s Axis] சுழற்சி முற்றுப் பெறுகிறது. 100,000 ஆண்டுக்கு ஓர்முறை நீளும் / சுருங்கும் புவியின் நீள்வட்டப் பாதை. [Earth’s Orbit]  21,000 ஆண்டுக்கு இருமுறை புவி அச்சு ஆட்டம் [Wobbling of Earth’a Axis] நிகழ்கிறது.  மேலும் புவி அச்சின் சாய்வு [Axis Tilt], 41,000 ஆண்டுக்கு ஓர்முறை [22.1 முதல் 24.5 வரை] டிகிரிக் கோணம் மாறுகிறது.

பூமியின் தற்காலப் பருவநிலை, பனியுக இடைவெளிக்கு ஊடே சூடேறும் திசைநோக்கிச் செல்கிறது. கடந்த பனியுக நிகழ்ச்சி முடிந்து இப்போது 11,000 ஆண்டுகள் ஆகின்றன.  அதுமுதல் கடல்நீர் மட்டமும், உஷ்ணமும் ஏறிக் கொண்டு வருகின்றன.  பனிக் கிரீடங்கள் பூமியின் துருவங்களில் பதுங்கிக் கொண்டன.  இவற்றோடு மனிதர் உண்டாக்கும் கரி வாயு [CO2] முகில்கள் சேர்ந்து காலநிலைச் சூடேற்றப் பெருக்கத்துக்குக் காரணம் ஆகின்றன.

ice-ages-warming

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறை அரிப்பும், பனிமலைச் சரிப்பும் பூதளத்தின் மேனியைக் கோரமாக்கி அழியாத வரலாற்றுச் சான்றுகளாய் நமக்குக் கற்பாறைகளில் கல்வெட்டு செய்திருக்கிறது! பூகோளத்தில் தோன்றிய பனியுகத்தின் ஆட்சியின் போது, பனித்தாள்கள் [Ice Sheets] கண்டங்களில் படிந்து விட்டுப் போன அடையாளச் சின்னங்கள் அவை

பால் ஃபிரிக்கென்ஸ்

‘யுகம் யுகங்களாய் மெதுவாக பூதளத்தின் முகம் மாறிப் போகும் படைப்பு முடிவு பெறாது நீண்டு சென்றாலும், ஒவ்வொரு பூர்வீகச் சின்னத்தை உண்டாக்கிக் கால வரலாற்றை மாற்றிய தனித்துவ இயக்கம் பிரபஞ்சத்தின் உண்மையான ஓர் ஆற்றல் கதையை நமக்குக் கூறுகிறது ‘.

லோவெல் தாமஸ்

‘தளமட்டம் அதிர்ந்து கோரமாய்ச் சாய்கிறது! பூமி பிளக்கிறது! குன்றில் எரிமலை வெடிக்கிறது! பூதளத்தின் மீது உலவும் மாந்தர், கொந்தளிக்கும் அடித்தட்டு ஆட்டத்தால் குலுக்கப்பட்டு நடுங்குகின்றனர். இயற்கையின் இந்தப் பயங்கரப் பேயாட்டத்தின் காரணத்தை இப்போது நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம் ஆயினும், அவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாத தவிப்பு நிலையில் நாம் இருக்கிறோம் ‘.

நோயல் புஷ்

ஒவ்வோர் ஆயிரமாண்டு [Millennium] பிறப்புக்குப் பிறகும் பூதளத்தின் தளப் பண்புகள் மாறி அவற்றின் தனித்துவச் சின்னங்கள் எல்லாம் மாந்தர் கண்டுபிடிக்க வேண்டும் என்று இயற்கை அன்னை புதையலாக மறைத்து வைத்திருக்கிறாள்! மலைச் சிகரங்களில் பனிமுடி! பூதளக் கண்டங்களில் படிந்துள்ள புழுதி [Sediments]! கடற் தளங்களில் காணப்படும் அற்பச் சிப்பிகள், பூர்வப் படிவங்கள் [Fossils]! மலைப் பாறைகளில் காலச் சிற்பி பதித்துள்ள மிருகங்களின் கூடுகள்! குமுறிய எரிமலை ஆறோட்டத்தின் ஆறிய குழம்புகள்! 1960 ஆம் ஆண்டு முதலாக கடற்தளங்களில் பலமட்ட அடுக்குகளில் நூற்றுக் கணக்கான துளைகளிட்டுக் காலநிலை மாறுபாடு, கடல் மட்ட வேறுபாடு, பூர்வீக உயிரினங்களின் மலர்ச்சி, மறைவு, பூதளத் தட்டுகளின் பிறப்பு, இறப்பு, பெயர்ச்சி, கண்டங்களின் பண்டைய வயது போன்ற புதிர்களைப் பூதளவாதிகள் விஞ்ஞான ரீதியாக விடுவித்திருக்கிறார்கள்.

18,000 ஆண்டுகளுக்கு முன்னே இருந்த பூகோளத்தின் தோற்றமும், சூழ்வெளியும் இன்றைய அமைப்பை விட வேறுபட்டிருந்தன. சூழ்மண்டலத்தின் வாயு உஷ்ணம் சில டிகிரிகள் [2 C to 3 C] சற்று குறைவாக இருந்தது. பனித் திரட்டுகள் உண்டாகிக் கடல்மட்டம் தணிந்திருந்தது. அச்சமயத்தில்தான் பூமியில் பனியுகம் தோன்றி யிருக்க வேண்டும் என்று பூதளவாதிகள் கூறுகிறார்கள். பனியுகத்தின் படர்ந்த உச்சக் கட்டத்தில், வட ஐரோப்பா, கிரீன்லாந்து வட அமெரிக்காவின் வடபுறம் மற்றும் அண்டார்க்டிகா பிரதேசங்கள் பனிமண்டலம் மூடிக் குளிர்ப் பகுதிகளாய் மாறிவிட்டிருந்தன. அப்போது பூதளத்தின் நீர்வளம் சுண்டிச் சுருங்கிக் கடல் மட்டம் சுமார் 300 அடி முதல் 500 அடி வரைத் தணிந்து, உலகக் கண்டங்களின் விளிம்புகள் நீண்டு, ஆசியாவிலிருந்து அமெரிக்காவின் [வடக்கு, தெற்கு] கண்டங்களுக்குப் நிலப்பாலங்கள் [Land Bridges] அமைந்த தென்று கருதப்படுகிறது! அடுத்த 8000 ஆண்டுகள் சூழ்வெளி வெப்பம் படிப்படியாக மிகையாகிப் பனிமலைகள் உருக ஆரம்பித்துக் கடலின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகள் [சுப்பிரீயர், மிச்சிகன், ஹூரான், ஈரி, அண்டாரியோ] போன்ற மாபெரும் சுவைநீர் ஏரிகள் அப்போதுதான் நிரம்பின என்று ஊகிக்கப் படுகிறது.

மேலும் பனியுகத்தின் மத்தியில் பனித்திரட்சிகள் மண்டி நீண்ட காலமாக உச்சநிலை ஏறிப் பின் இறங்கி வெப்பமும், குளிர்ச்சியும் சூழ்வெளியில் மாறி, மாறி மீண்டும் சுற்றியதால், பூமி சூரியனைச் சுற்றிவரும் சுழல்வீதி [Earth ‘s Orbit] வேறானது. பூமியின் சுழல்வீதி மாறிய போது, பரிதியால் ஏற்படும் வெப்பமும், காலநிலைகளும், சூழ்மண்டலும் வேறுபட்டுப் போயின! 100,000 ஆண்டுகளுக்கு முன்பு பரிதியை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbit] சுற்றிவந்த பூமியின் பாதை, பின்னால் ஏறக்குறைய முழு வட்டவீதியாக [Near-Perfect Circular Orbit] மாறிப் போனதாக அறியப்படுகிறது! நீள்வட்டத்தில் பரிதியைக் குவிமையமாகக் [Focus] கொண்டு பூமி சுற்றும் போது, பாதிக் கோளம் ஒரு சமயம் மிக அருகில் சுற்றியும், ஆறு மாதங்களுக்குப் பிறகு வெகு தூரத்திலும் சுற்றியும் வந்துள்ளது! ஆனால் வட்டவீதியில் சுற்றும் போது பாதிக் கோளம் ஏறக்குறைய ஒரே தூரத்தில் ஆண்டு முழுவதும் சுற்றிவரும். தற்போதைய வெப்பச் சூழ்நிலை மாறி ஒருநாள் உஷ்ணம் சில டிகிரிகள் குன்றி மீண்டும் பனியுகம் வரலாம் என்று பூதளவாதிகள் கருதுகின்றனர்.

பூதளக் கண்டங்களில் தோன்றிய பனியுகப் புரட்சி

1960 ஆண்டுகளில் செய்த கடற்தள உளவு ஆராய்ச்சிகளில் 1.7 மைல் ஆழத்தில் தோண்டிய குழி ஒன்றில் 250,000 ஆண்டுகளுக்கு முன்னே புதைந்து போயிருந்த பனிக்கருவை [Ice Cores] எடுத்திருக்கிறார்கள். அது பண்டைய காலத்துச் சூழ்வெளி அமைப்புகள் [Prehistoric Atmospheres], தட்பகால பனிப்பொழிவுகள் [Seasonal Snowfalls], பனிக்குன்றுகள் நொறுக்கிய பாறைகள் [Rocks crushed by Glaciers], எரிமலைச் சாம்பல்கள், காற்றுத் தூசிகள் போன்ற வற்றைக் காட்டும் ‘காலச் சின்னமாய் ‘ [Time Capsule] இருந்துள்ளது! 167 மில்லியன் ஆண்டு களுக்கு முன்னே கடற்பீடக் கருக்கள் [Sea Cores] 1.3 மைல் ஆழம்வரை தொட்டிருக்கின்றன. அவற்றின் மூலம் அந்தக் கால எரிமலைக் குழிகள் [Volcano Trenches], கடலின் அடித்தளம் அமைக்கும் பஸால்ட் துணுக்குகள் [Basalt Pieces], கடற் புழுதிகள் [Marine Sediments], உஷ்ண மாறுதலைக் காட்டும் துருவப் பனிமூட்டம் போன்ற நுண்ணுருச் சிப்பிகள் [Microscopic Shells like Polar Ice] அறியப்பட்டன. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 4 பில்லியன் ஆண்டுகள் வரை நிகழ்ந்த பூகோள வரலாற்றை அறியக் கடற்தளத்தின் அடித் தட்டுகள், கண்டப்பாறை மையங்களின் அரிப்புகள் [Oceanic Crust & Eroded Centers of Continents] ஆகியவை பயன் படுகின்றன! அதற்கும் அப்பால் என்ன நேர்ந்தது என்பதை அறிய பூகோளத்தில் சின்னங்களோ அல்லது பூர்வப் படிவங்களோ இருப்பதாகத் தெரியவில்லை!

ஆஃப்பிரிக்கா, அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா, இந்தியா ஆகிய கண்டங் களில் ஒரே காலத்தில் பனிக்காடுகள் சூழ்ந்திருந்தன என்னும் கருத்து, அக்கண்டங்கள் யாவும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்றாய்ப் பிணைந்திருந்தன என்னும் கோட்பாடை ஒப்புக்கொள்பவர் புரிந்து கொள்ள முடியும். உலகக் கண்டங்கள் தற்போதுள்ள நில அமைப்பில் இருந்து பனிமண்டலத்தால் மூடிக் கிடந்ததாக அனுமானித்தால், பூமத்திய ரேகைக்கு வடபால் இருக்கும் கண்டங்களிலும் பனிமயம் சூழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்விதம் வடகோளத் தில் பனிமயம் சூழ்ந்திருந்ததற்குப் பூதளவாதிகள் எந்த சான்றுகளும் காணவில்லை. மெய்யாக அச்சமயத்தில் வட அமெரிக்கா கண்டம் வெப்பக் கணப்பு சூழ்ந்ததாக இருந்ததாம்!

18,000 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பனியுகம், பூகோளத்தின் சராசரி உஷ்ணம் [சிறிதளவு 2 டிகிரி C (4 டிகிரி F)] குன்றி ஒரு காலத்தில் மீளலாம் என்று பூதளவாதிகள் அஞ்சுகின்றனர்! படையெடுக்கும் பனி மண்டலம் பூகோள வெள்ளத்தைச் சுண்ட வைத்து, கடல்நீர் மட்டம் குன்றிக் கண்டங்களின் சரிவுத் தோள்களை [Continental Shelves] தெரியும்படி ஆக்கிவிடலாம்! நியூயார்க் நகரம் பனிமூட்டமாகித் தடித்த பனித்தட்டு மூடி, எம்பெயர் ஸ்டேட் கட்டிடமே மூழ்கிப் போகலாம்! சிகாகோ, டெட்ராய்ட், டொராண்டோ, மாண்டிரியால் ஆகிய நகரங்களும் பனிச் சமாதியில் அடங்கி விடலாம்! ஜப்பான் ஆசியக் கண்டத்தின் நீட்சிப் பகுதியாகலாம்! இங்கிலாந்திலிருந்து பிரான்சு நாட்டுக்கு நடந்தே செல்லலாம். இந்தியாவிலிருந்து பாத யாத்திரை செய்து இலங்கைக்குப் போகலாம். அதே சமயம் மறுபுறம் பார்த்தால், பூமியின் வெப்பச் சூழ்மண்டலத்தில் ஒரு சில டிகிரி உஷ்ண ஏற்றத்தால் [2 C] துருவப் பனிப்பாறைகள் உருகி, உலக மெங்கும் தணிந்த தளப்பகுதிகள் யாவும் கடல்நீரில் மூழ்கிப் போகலாம்!

பூகோளத்தின் தட்ப வெப்ப நிலைகளை ஏற்றி, இறக்கி உலக மக்களைத் தவிக்க வைக்கும், இயற்கையின் யந்திர ஆற்றல்கள் விந்தையானவை! பூகோளச் சுற்று அச்சின் சரிவு [Tilt of Planet Axis], சுற்றிவரும் சுழல்வீதியின் மாறுபாடு [Changes in Earth ‘s Orbit], பரிதியின் தேமல்களால் [Sunspots] திரளும் கதிர்வீச்சின் உக்கிரம் [Swells of Radiation], எரிமலைகள் கக்கும் கரிமண்டல வாயுக்கள் சூழ்வெளியில் கலப்பு [Volcanic Activity Gas Emissions] ஆகியவை அவற்றில் முக்கிய மானவை! காலச் சிற்பி எரிமலைகளால் எழுப்பியுள்ள கடற்தீவுகளும், கண்டங்களில் உயர்த்தி யுள்ள கோபுரங்களும் உலக விந்தைகளாய் இன்றும் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.

++++++++++++++++

(தொடரும்)

தகவல்:

1. The Continental Mosaic -Reader ‘s Digest Atlas of the World [1987]

2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

3. Earth ‘s Restless Crust -ABC ‘s of Nature, Reader ‘s Digest [1984]

4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader ‘s Digest Publication [1972]

5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia

7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

8. Continental Frift, Geology & Oceanography. [Several Internet Articles]

9. Everyday Geography By: Kevin McKinney (1993)

10 Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia

11 Our Changing Earth By: Tusco Wilson Ph.D. Frontiers of Science, National Geographic Society [1982]

12 This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]

13 Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]

14 Fossils, Annals of Life Written in Rocks By: David Jeffery, National Geographic Society [Aug 1985]

15 The Earth ‘s Fractured Surface By: National Geographic Society [1995]

16 Physical Earth By: National Geographic Society [1998]

17 The Shaping of a Continent, North America ‘s Active West [1995]

18 National Geographic Picture Atlas of our World [1990]

19 Differences Between Continental & Oceanic Islands [www.abdn.ac.uk/zoohons/lecture1]

20 The Evolution of the Sumatran Earthquake Fault System, Indonesia, Andy McCarthy. Ph.D. [July 9, 2002]

21 Isotopic Dating of Sumatran Fault System By: Imtihanah & MPhil

22 The Sumatran Fault System By Professor Kerry Sieh & Danny Natawidjaja [Nov 1999]

23 Kumari Kandam & Lemuria [http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)

24 Kumari Kandam By: Chitta Ranjan Myilvaganan, Sydney, Australia. [Jan 30, 2005]

25 Reader ‘s Digest Publication: The Living Earth Book of Deserts By: Susan Arritt [1993]

26 Physical Earth, By: National Geographic Society, Millennium in Maps [1998]

26[a] http://www.geocraft.com/WVFossils/ice_ages.html  [May 9, 2006]

27.  http://www.dailygalaxy.com/my_weblog/2016/10/solved-mysterious-phenomena-of-earths-100000-year-ice-age-cycle.html?  [October 26, 2016]

28.  http://www.grandunification.com/hypertext/Earths_100000_yr_cycle.html

29. https://en.wikipedia.org/wiki/100,000-year_problem [September 30, 2016]

30.  https://en.wikipedia.org/wiki/Milankovitch_cycles  [December 13, 2016]

31.  http://science.sciencemag.org/content/289/5486/1897

32.  http://science.sciencemag.org/content/289/5486/1897?variant=full-text&sso=1&sso_redirect_count=1&oauth-code=f8bedaea-fc66-46b1-89a1-3fbcfe87e4cd

33.  https://en.wikipedia.org/wiki/Ice_age  [December 12, 2016]

***********************

S. Jayabarathan  [jayabarathans@gmail.com]  (December 16, 2016) [R-1]

Series Navigationதிரும்பிப்பார்க்கின்றேன் – எழுத்தை மாத்திரம் நம்பி வாழ்ந்த மு. கனகராசன்நல்லார் ஒருவர் உளரேல்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *