பிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்

author
0 minutes, 16 seconds Read
This entry is part 1 of 13 in the series 18 டிசம்பர் 2016

tlmd_raulyfideljpg_bim

இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

தனது 90வது வயதில் இயற்கை எய்தினார் பிடல் காஸ்ட்ரோ. சகல இணையத்தளங்களும், பத்திரிகைகளும் அவர் சம்பந்தமான அநேக விடயங்களைப் பிரசுரித்து விட்டனர். குறிப்பாக அவரது பிறப்பு சாதனை சோதனை என அனைத்தையும். இலக்கியப் பிரியர்களான நாம் அவரது அரசியலையும் இலக்கியத்தையும் சிறிய ஆய்வில் ஒப்பிடுவோம்.

இருபதாம் நூற்றாண்டின் தனிச்சிறப்பு மிக்க அரசியல் பிரமுகராக இருந்தவர். 1959ஆம் ஆண்டில் நிகழ்ந்த வெற்றிகரமான புரட்சிக்குத் தலைமை தாங்கியவர். பனிப்போரில் இரண்டு அணுவாயுத நாடுகள் மோதிக்கொண்டிருந்த சமயம் உலக அரசியல் அரங்கில் மிக முக்கியமான மீமனித அறிவாற்றலராகத் (Titan) திகழ்ந்தவர். கம்யூனிஸ்ட்டுகளுக்கும் (Communist Bloc) மேற்குலகுக்கும் இடையிலான கருத்துவேறுபாட்டில் கேந்திரமான ஆட்ட ஜாம்பவான் காஸ்ட்ரோ தான். சமகாலத்தில் ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிகழ்ந்த இடதுசாரிப் புரட்சிகளின் ஆதர்சம் பிடல் என்றால் தகும். கியூபாவின் கடற்கரை தாண்டிய பகுதிகளிலும் பிடலின் செல்வாக்கு எண்ணிலடங்காத வகையில் சென்றடைந்தது. அவரை Charismatic Figure என்றே ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின.  அந்த அளவுக்கு மிடுக்கான அரசியல் தளத்தில் பிடல் இருந்தார் என்பதே இது போன்ற பெருமைகளின் காரணம்.

எவ்வளவு நண்பர்கள் உள்ளனரோ அந்த அளவு எதிரிகளையும் பிடல் சம்பாதித்திருந்தார். குறிப்பாக அவரது சித்தாந்த எதிரிகள். தனது மக்களுக்கான போராட்டத்தை தவிர்க்க முடியாத ஒன்றாக எண்ணியே வாழ்வினைப் புரட்சியில் முன்னிறுத்தினார். வராலாற்றுக் காலங்களை டைனோசர் எங்ஙனம் ஆட்கொண்டதோ, அதேபோல் தான் பிடலும் ஆரம்பகால போராட்ட இயக்கங்கங்கள் ஒவ்வொன்றையும் தன் கொள்கைகளால் ஈர்த்திருந்தார்.

ரஷ்யத் தலைவர்கள் பலர் இவரது வசியத்துக்கு மயங்கியே இருந்தனர். ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் குருஷேவ்  (Nikita Khrushchev) மற்றும் மிகோயன் (Anastas Mikoyan) ஆகியோரைக் குறிப்பிடலாம்.  அத்துடன் ஐரோப்பியப் புத்திஜீவிகள் பலரும் இவரை ஆத்மார்த்தமாக நேசித்தனர். குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் தத்துவ ஞானியும், இருத்தலியம், மீபொருண்மையியல் போன்ற தத்துவங்களைப் பற்றி பெரும் பரிசோதனைகள் செய்தவருமான சீன் பவுல் சர்தர் (Jean Paul Sartire) பிடல் காஸ்ட்ரோவை நேரில் சந்தித்து மேற்கத்திய மார்க்சியம் பற்றிய உரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தார். அதேபோலத் தான் சர்தரின் நெருங்கிய தோழியும், பெண்ணியம், சமூகவியல், மார்க்சிம் பற்றி ஆராய்ந்தவருமான Simon De Beauvoir கூட பிடல் மீது பெருமதிப்புக் கொண்டிருந்தார். இவர்களின் சந்திப்பை ஒரு வாய்ப்பாகக் கருதிய பிடல் தனது கொள்கை சார்ந்த அரசியலை அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார். இன்று வரைக்கும் ஐரோப்பாவில் பிடல் மீதான மதிப்புப் பெருகக் காரணம் இது போன்ற எழுத்தாளர்களின் உண்மை விபரிப்புக்கள் தான் எனில் மிகையன்று.

தீயசக்திகளின் கூடாரம் (Axis of Evil) என்று அமெரிக்க அரசு ஒரு பட்டியலிட்டது. அதில் ஈரான் ஈராக் சிரியா வட கொரியா கியூபா லிபியா போன்ற நாடுகள் இருந்தன. இது புஷ் நிர்வாகத்தில் மிகவும் கடுமையான ஒரு அரசியல் கொள்கையாகத் தொடர்ந்தது. பரக் ஒபாமா நிர்வாகத்தில் கியூபா மீதான நெருக்குதல்கள் சற்று விலகியது. அதுவும் பிடல் தனது அதிகாரத்தை ராவுலிடம் ஒப்படைத்த பிற்பாடுதான் தடைகள் நீக்கப்பட்டு தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தொடர்பினை உலக ஊடகங்கள் பல வரலாற்று முக்கியத்துவம் மிக்க உறவுநிலை நீட்சி (Historic Normalising of Relations) என்றெல்லாம் வர்ணித்தன.
ஆனாலும் பிடல் தனது இறப்பு வரையிலும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு மனநிலையையே பதிவுசெய்தார். தனது 90வது பிறந்தநாளை ஆகஸ்ட் 13 கொண்டாடினார். அதில், “எமக்கு எந்தப் பேரரசின் உதவியும் தேவைப்படாது. நாம் நாமாகவே இருக்க விரும்புகிறோம்” என்று காட்டமாகக் கூறியிருந்தார்.

இப்படி ஐந்து தசாப்தமாக தனது கொள்கைகளை நீட்டித்துக் கொண்டார். இவரின் அணுகுமுறை பல உலக தேசங்களை அச்சம் கொள்ளவே வைத்தது. சர்வதேச அரசியல் ஏகாதிபத்தியத்திடம் ஆட்கொண்டு அடிமையாக இருந்ததே அதற்கான பிரதான காரணம் எனலாம். பிடலின் மூச்சுக்காற்றுக் கூட பிடலின் எதிரி என்று பல உள்ளக இலக்கியவாதிகளும் கருதினர். அவர்களில் சிலரை நாடுகடத்தினார் பிடல். எதுவான போதிலும் சொந்த தேச மக்கள் பிடலை அதிகமாக நேசித்தனர்.

1961 ல் பன்றிகள் வளைகுடா மீதான படையெடுப்பை பிடல் முறியடித்ததாகட்டும், குருஷேவ் அரசு கியூபாவில் ரஷ்ய அணுவாயுதங்களை நிறுவியதாகட்டும் அனைத்துமே அமெரிக்க அரசை எதிர்ப்பதாகவே தனது பிரகடனங்களையும் திட்டங்களையும் வரைந்தார். 1975ல் யாருமே எதிர்பாராத ஒரு காரியத்தைப் பிடல் செய்தார். அங்கோலா நாட்டின் சுதந்திரத்துக்காக 25000 படையினரை அனுப்பினார். அஙகுள்ள இடதுசாரி படையான MPLA க்கு அனுசரணை வழங்கிப் போராடவே அனுப்பினார். இதன் பின்னர்தான் பனிப்போர் சச்சரவுகள் மிகவும் உச்சகட்டத்தை அடையத் தொடங்கியது.

ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கிய இத்தாலியின் தந்தை என வர்ணிக்கப்படுகின்ற கரிபால்டி (Giuseppe Garibaldi) போல காஸ்ட்ரோவும் ஒரு தேசபிதாதான். ஒரு தேசியத் தலைவரின் சிந்தனைகள் அவர் இருந்த காலத்தில் காணப்பட்ட பழமையான கொள்கைகளை நீக்கி மக்களுக்கு புதுமையான நிர்வாக அமைப்பை வழங்குவதேயாகும். அது மக்களின் வாழ்நிலையை உயர்துவதாகவும் இருக்க வேண்டும். இலவசக்கல்வி, அனைவருக்கும் சுகாதாரம் போன்ற செயற்பாடுகளை நிறுவி தடைகளைக் கடந்து பிடல் நாட்டினை வளமாக்கினார்.

பிடல் காஸ்ட்ரோ ஒரு சிறந்த இலக்கிய வாசகர். சேகுவேரா போல அதிக நேரங்கள் புத்தகங்கள் வாசிப்பதில் செலவழித்தார். பிடலின் ஆட்சியில் உள்ளக தேசியவாதம் தழைத்தோங்கியிருந்தது. அதேபோல இறக்குமதி செய்யப்பட்ட பொதுவுடைமைக் கோட்பாடும் பெருமளவில் ஐக்கியமாகியே காணப்பட்டது. இதனை பிடல் இலக்கிய, அரசியல் எழுத்தாளர்களின் படைப்புக்களில் இருந்து பெற்றார் எனலாம். கியூபாவின் தேசிய வீரரும் தேசப்பற்றாளருமான ஜோஸ் மார்ட்டியின்  (Jose Marti) படைப்புக் கொள்கைகளை பிடல் தனது உள்ளக தேசியவாத அரசியல் பிரகடனங்களுக்குப் பயன்படுத்தினார். 19ம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட இவரது வரிகள் உதியிருந்தது. அத்துடன்  தான் வாழ்ந்த சமகாலத்தில் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க புத்திஜீவிகளின் சிந்தனை தரத்தை நிர்ணயித்திருந்தார். ஜோஸ் எழுதிய பிரபலமான குவாண்டனாமெரா என்ற தேசப்பற்றுப் பாடல் இன்றுவரை கியூபாவில் இசைக்கப்படுவதுண்டு. பிடலின் உள்ளக தேசியவாதம் ஜோஸ் மார்டியின் படைப்புக்களை முன்வைத்திருந்தது எனில், அவரது தருவிக்கப்பட்ட பொதுவடைமைக் கோட்பாடு  கார்ல் மார்க்ஸின் அரசியல் கோட்பாட்டிலிருந்தே பிறந்தது. இதுவே பிடலின் மூலப் புரட்சிக்கு பெரும்பங்காற்றியது. இந்த இரண்டு இலக்கியவாதிகளின் கோட்பாடுகளை அவர்களது காலத்து வன்மை எங்ஙனம் இன்னொரு சமூகத்தின் நிலைமையை மாற்றிவிடும் என்பதை உணர்ந்திருந்த பிடல் அதனையே தொடர்ந்து வரித்துக்கொண்டார்.

சமகால அரசியல் இலக்கியத்தின் காத்திரமான புள்ளியே பிடல். கொலம்பிய எழுத்தாளர் கப்ரியல் கார்சியா மார்க்கஸ் இன் நெருங்கிய நண்பராகவும் பெருவேட்கையுள்ள வாசகராகவும் இருந்துள்ளார். “அறிவார்ந்த நட்பு” என்றே தம்முடைய நட்பின் தரத்தை இருவரும் கூறுவர். எப்போது சந்தித்துக் கொண்டாலும் இலக்கியம் பற்றியே உரையாடுவார்களாம். மெஜிக்கல் றியாலிசம் என்ற இலக்கியக் கோட்பாட்டை தமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஏற்பவே உருவாக்கினார் மார்க்கஸ். அதே போலத் தான் பிடல் மீதான நட்பை லத்தீன் அமெரிக்காவின் உணர்வு நிலை நீட்சியாகக் கருதித் தொடர்ந்தார். நூற்றாண்டுகளின் தனிமை என்ற நூல் பற்றி அடிக்கடி பிடல் விவாதிப்பார் என்று மார்க்கஸ் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
பிடலின் நம்பிக்கைக்குரிய ஒருவராக மார்க்கஸ் இருந்தார்.  மார்க்கஸ் இறக்கும் வரை இது தொடர்ந்துள்ளது. மார்க்கஸ் போல இன்னொரு மெஜிக்கல் ரியாலிச எழுத்தாளர் தான் அலியோ கர்பண்ரியர் (Alejo Carpentier). இவர் காஸ்ட்ரோவை ஆதரித்ததால் ஆரம்பகாலத்தில் நாடுகடத்தப்பட்டார். பின்னர் பிடலின் புரட்சி வெற்றிபெற்றவுடன் கியூப தேசிய வெளியீட்டுத் திணைக்களத்தில் தலைமையேற்று அதனை நடாத்தினார். இவரே “The Kingdom Of This World” என்ற பிரபலமான வரலாற்று நூலை எழுதியவராவார்.

பிடல் இலக்கியங்களை நேசிக்கின்ற அளவுக்கு இலக்கிய வாதிகளை நேசிக்கவில்லை என்ற விமர்சனம் ஒன்றுண்டு. இதனை ஆரம்ப காலங்களில் (1964) மறைமுகமாக ஏற்றுக் கொண்டார். லீ லாக்வூட் என்ற Photo Journalist இன் நேர்காணலில் இது தொடர்பாகக் கூறியிருந்தார். இப்போது தான் அரசியல் ரீதியில் நாடு மேலெழுகிறது, ஆதலால் புரட்சிக்கு எதிரான படைப்பிலக்கியம் தேவையற்ற ஒன்று என்று கூறியிருந்தார். ஆனால் காலங்கள் போகப்போக இந்த எதிர்ப்புக் கொள்கையை இலக்கியங்களுக்காக மட்டும் தளர்த்தினார். அதற்கு உதாரணம் தான் கப்ரியல் கார்சியா மார்க்கஸ்- பிடல் நட்பு.

பிடலின் சில சுயசரிதைகள் மற்றும் கட்டுரைகள் அவரால் எழுதப்பட்டுள்ளது. அது வாய்மொழியாகவோ எழுத்தாகவோ இருந்து அண்மைக் காலங்களில் வெளிவந்துள்ளது. இக்னாசியோ ரொமனெற் என்ற பிரான்சு பத்திரிகையாளருடனான நேர்காணல் “நூறு மணி நேரம் பிடலுடன்” என்று வெளியானது. 2008ல் “Peace In Colombia” என்ற கட்டுரைத்தொகுதி பிடலால் எழுதப்பட்டது. கியூபா-கொலம்பியா அரசுகளிடையே நடைபெற்ற பேரம்பேசல்களும், உள்ளக விவகாரங்களும் பற்றிய குறிப்புக்களை வெளிப்படுத்தினார். கொலம்பியாவின் போராளி குழுவான FARC உடனான சமாதான பேச்சுக்கள் பற்றிய விபரங்களும் இடம்பெற்றுள்ளது. “The Strategic Victory” (2010) என்ற நூலில் 1958 காலப்பகுதியில்  சியாரா மயாரா மலையில் ஒளிந்திருந்து பட்டிஸ்ராவின் ஆட்சியைத் தூக்கி எறிந்த தந்திரோபாய எண்ணக்கருக்கள் மற்றும் போராட்ட கஷ்ரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே ஆண்டில் “தந்திரோபாய எதிர்த்தாக்குதல்” (The Strategic Counteroffencive) என்ற முதல் நூலின் இரண்டாம் பாகம் போல வெளியானது. யுத்தசாகசங்கள், இராணுவ அதிகாரங்கள், கடிதங்கள், புகைப்படங்கள் மற்றும் வரைபடங்களின் தொகுதிகள் இடம்பெற்றது. மற்றொரு மிகமுக்கியமான பிடலின் நேர்காணல் வழி சுயசரிதை 2012 ல் வெளியாகியது. கியூபாவின் பத்திரிகையாளர் Katiushka Blanco நேர்முகம் கண்டார். கிட்டத்தட்ட 1000 பக்கங்களாக அமைந்திருந்தது. “Guerilla Of Time” என்ற அந்த நூல் இன்றைய அரசியல் விஞ்ஞானம் கற்கும் மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கு வரப்பிரசாதமான ஒன்று என்றால் அது மிகையல்ல.

இரண்டு நூற்றாண்டுகளாக உயிரோடிருக்கும் போதே அதிகம் பேசப்பட்டவர். ஏகாதிபத்தியத்தால் வஞ்சிக்கப்பட்டவர். ஆனாலும் சோர்ந்து போகாதவர். புரட்சி இயக்கங்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் அவருடைய வாழ்க்கை வரலாறே ஒரு பாடமாகவும் இருக்கும். சர்ச்சைகளுக்குள் நீந்தி கியூப சாம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டியவர் என்றெல்லாம் அவரைப் புகழலாம். ஏனெனின் அவரது எதிரிகள் அந்த அளவுக்குப் பலமானவர்கள். அரசியல் கடந்த இலக்கிய களத்திலும் தன்னை நிரூபித்து, எழுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கி இறப்பு வரை இலக்கியவாதிகளை நேசித்தும் வாழ்ந்தால் பிடல். உலகில் இன்னும்
நூற்றாண்டுகளாகத் தொடரும் அடக்குமுறைகளை இவரது படைப்புக்கள் ஒவ்வொரு தனிநபர் மீதும் தட்டியெழுப்பும் என்பது உறுதி.
=====
By: இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

Series Navigationஅய்யப்ப பணிக்கர் – ஓர் அறிமுகம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *