யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 13

author
1
0 minutes, 35 seconds Read
This entry is part 6 of 13 in the series 18 டிசம்பர் 2016

பி.ஆர்.ஹரன்

 

சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் விலங்குகள் நல அமைப்புகளும் விலங்குகள் நல ஆர்வலர்களும் கோவில் யானைகளைப் பொறுத்தவரையில், ஹிந்து மதத்தின் எந்த நூலிலும் யானைகள் கோவில்களுக்கு அவசியம் என்று கூறவில்லை என்கிற வாதத்தையும் முன்வைக்கிறார்கள். இவர்கள் எந்த அடிப்படையில் இவ்வாதத்தை முன்வைக்கிறார்கள் என்பது தெளிவாகவில்லை. இவர்கள் ஹிந்து மதத்தின் நூல்கள் என்று எவற்றைச் சொல்கிறார்கள் என்பதையும் சரியாக விளக்கவில்லை. ஹிந்து மதம் என்னும் மகாசமுத்திரத்தைப் பல்வேறு நூல்கள் விளக்கிக்கூறுகின்றன. வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள், தர்ம சாஸ்திரங்கள் என்று பல்வேறு விதமான நூல்கள் ஹிந்து தர்மத்தைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன.

%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88

அதோடு மட்டுமல்லாமல், நமது ஆன்மிகப் பாரம்பரியத்திலும் கலாச்சாரப் பழக்க வழக்கங்களிலும் பல விஷயங்கள் நமது நூல்களில் சொல்லப்படாவிட்டாலும், பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. சங்ககாலத்திலிருந்தே பல விஷயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. எனவே நூல்களில் சொல்லப்படவில்லை என்று அவற்றைப் புறந்தள்ள முடியாது; புறந்தள்ளவும் கூடாது. உதாரணத்திற்கு, மணமகள் கழுத்தில் மணமகன் மாங்கல்யம் அணிவிக்கும்போது சொல்லப்படுகின்ற மந்திரம் வேதங்களில் இல்லை. அதனால் அவ்வழக்கத்தைப் புறந்தள்ளி விடமுடியுமா என்ன?

 

ஆகவே பல நூற்றாண்டுகளாக நமது ஆன்மிகப் பாரம்பரியத்தில் கோவில் யானைகளின் பங்கு சிறப்பாகவே இருந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல், ராஜரீக காரியங்களிலும், போர்களிலும் யானைகள் சிறப்பாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனவே,  காட்டு யானைகளை நகர்ப்புறங்களுக்குக் கொண்டுவந்து, ராஜரீக காரியங்களுக்கும், போர்களிலும், கோவில்களில் உற்சவங்களின்போதும் திருவிழாக்கள் சமயங்களிலும் பயன்படுத்துவதற்காக அவைகளுக்குப் பயிற்சி அளித்துப் பழக்கப்படுத்தும் ஒரு கலாச்சாரம் நமது தேசத்தில் பல நூற்றாண்டுகளாக இருந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதற்கான ஏராளமான சான்றுகள் பாரத தேசத்தின் பலமொழிகளின் இலக்கியங்களிலும், கோவில்கள் கல்வெட்டுக்களிலும், கோவில் சிற்பங்களிலும் காணக்கிடைக்கின்றன.

 

அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.

 

சங்ககால இலக்கியங்கள்

%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88

சங்ககால இலக்கியங்களில் புறநானூறு, குறுந்தொகை, பரிபாடல் ஆகிய நூல்களில் யானைகள் பற்றிப் பல விஷயங்கள் கூறப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் யானைகளுக்குப் பல்வேறு பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அவையாவன: யானை, வேழம், களிறு, பிடி, களபம், மாதங்கம், கைம்மா, உம்பர், வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அறுபடை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு, கரி, அஞ்சனம் ஆகியவை. (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88)

 

புறநானூறு

 

புறநானூற்றில் யனை அறிவியல் என்கிற தலைப்பில் புறனாநூற்றில் கூறப்பட்டுள்ள யானைகளைப் பற்றிய பல செய்திகளை இலக்குவனார் திருவள்ளுவன் என்கிற ஆய்வாளர் தன்னுடைய வலைதளத்தில் தெரிவிக்கிறார்.

(http://thiru-padaippugal.blogspot.in/2013/07/science-of-elephant-in-pura-naarnuuru.html) என்கிற அவருடைய வலைதள இணைப்பில் புறநானூற்றில் வரும் பாடல் குறிப்புகள், யானைகளின் தன்மை,   உணவுப் பழக்கம் முதலியனவற்றை நமக்குத் தெரிவிக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

யானைகளை  வளர்க்கவும், போர்த்தொழிலுக்குப் பழக்கவும், யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பழக்கவும் நன்கு அறிந்திருந்தனர் பழந்தமிழர்கள்.

 

உயரமாக இருத்தலால் உம்பல், கரு நிறம் என்பதால் கரி, துதிக்கையுடைய விலங்கு என்பதால் கைம்மா, பெரிய விலங்கு என்பதால் பெருமா, கையையுடைய மலை போன்ற தோற்றத்தைக் கொண்ட விலங்கு என்பதால் கைம்மலை எனவும் மேலும் இவை போன்ற பல காரணப் பெயர்களும் தமிழர்களால் யானைக்குச் சூட்டப்பட்டவையாகும்.

 

இவ்வகைப்பாடல்களும் அவை கூறும் அறிவியல் செய்திகளும், யானை முதலான விலங்கறிவியலில் நம் தமிழ் முன்னோர் சிறப்புற்றிருந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன.

 

யானையின் உருவம் பற்றிப் புறநானூறு

%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88

புறநானூற்றில் பல பாடல்கள் யானையின் உருவம் பற்றிப் பின்வருமாறு வர்ணிக்கின்றன:

 

யானையின் மருப்பு ஒளிரும் வெண்மை மிக்கது; யானையின் மருப்பு நீண்டு வளைந்து இருக்கும்; யானை முகத்தில் புள்ளிகள் இருக்கும்; யானை மருப்பு சொரசொரப்பாக இருக்கும்; நெடியதோற்றம் கொண்டது யானை; மலைபோல் தோற்றமளிக்கும் பெரிய யானை ; யானையின் நெற்றி செந்நிறமாகவும் இருக்கும்; யானையின் செவி, முறம் போல் இருக்கும்; யானையின் கண் சிறியதாக இருக்கும்; யானையின் கை பெரியது; யானையின் கை கரும்பனை போன்று பெரியதாக இருக்கும; யானையின் கால்கள் பருத்து இருக்கும்; யானையின் காலடி உரல் போல் இருக்கும்; யானையின் காலடி பரந்துபட்டிருக்கும்; மதம் கொண்ட யானையின் அடிச்சுவடு தடாரிப்பறையின்   நடுவிலுள்ள கண்பகுதி போன்று இருக்கும். (பல்வேறு பாடல்கள்)

 

யானைச் சித்திரம் பற்றிய புறநானூறு பாடல்

%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88

துதிக்கையை அசைத்து ஆட்டிக்கொண்டு  தலையைத் தூக்கிக் கொண்டு உயர்ந்த நடையுடன், அந்நடைக்கேற்ப அதன்மீது அணியப்பெற்றிருக்கும் இருபுற மணிகளும் மாறி மாறி  ஒலிக்க,  உயர்ந்த மருப்புகளுடன், பிறை போன்ற நெற்றியுடன், சினம் மிகு பார்வையுடன், பரந்த காலால் அடி எடுத்து வைத்து,  பருத்த கழுத்துடன் நடந்து வருகையில் மதநீர் மணத்தால்  மலைத்தேன் எனத் தேனீக்கள் ஆரவாரிக்கும்  வலிமை மிக்க இளங்களிறு, கட்டப்பட்ட கம்பத்தில் தான் நின்ற இடத்திலேயே அசை நடைபோட்டுக்கொண்டுள்ளது என யானையின் முழு உருவத்தை நமக்குப் பல வகையில் புலவர் படம் பிடித்துக்காட்டுகிறார். (யானைச்சித்திரம் – புலவர் குறுங்கோழியூர்க்கிழார் – புறநானூறு 22.1-9)

 

யானையின் திறம் பற்றிப் புறநானூறு  

 

புறநானூற்றில் பல பாடல்கள் யானையின் திறம் பற்றிப் பின்வருமாறு வர்ணிக்கின்றன:

 %e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88

போர்க்களத்தைத் தனதாக்கிக்கொள்ளும் திறன் மிக்கது யானை;  யானைகள் விரைவாகச் செல்லும்; போர்க்களத்தில் தடுத்தாலும் தொடர்ந்து முன்னேறும் யானை; போர்வினைப் பயிற்சி உடைய இனச்சிறப்பு  உடையது யானை; யானை மதம் பொருந்தி இருக்கும்; யானைகள் வினைமாட்சியுடன் திகழ்கின்றன; யானைகளுக்குப் போர்வினைப் பயிற்சி அளித்திருப்பர்  (பல்வேறு பாடல்கள்)

                                                            

 

யானையின் வலிமை பற்றிப் புறநானூறு  

 

கொல்லும் வலிமை மிகுந்த யானை; வீரத்தன்மையைச் சினம் மிகு கண்ணால் வெளிப்படுத்தும் கொல்லும் யானை; முதிர்ந்த  கொம்பினை உடைய கொல்லுங் களிறு; யானை வலிமை மிக்கது; அங்குசத்திற்கு அடங்காத யானை (பல்வேறு பாடல்கள்)

 

யானைகளுக்கு அழகு படுத்துதல் பற்றிப் புறநானூறு 

%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88

யானைக்கு அணிகலன்கள் அணிவித்து  அழகு செய்வர்; யானையின் நெற்றியில் பொற்பட்டம் அணியப்பெற்றிருக்கும்; யானையின் மருப்பில் பொற்பூண் அணிவிக்கப்பெற்றிருக்கும்; யானைக்குப் பொன் அணிகலன் அணிவர்; யானைக்குக் கச்சு அணிவிப்பர்; (வெற்றி பெற்ற புகர் நுதலை உடைய) யானையின் மீது இடப்படும் மணி அதன் இருபுறத்தாள்வரை தாழ்ந்து அமைந்து மணி யோசையை எழுப்பும்; யானையின் கழுத்தில் மணி கட்டியிருப்பர் (பல்வேறு பாடல்கள்)

 

யானைகளைப் பரிசாக அளித்தல் பற்றிப் புறநானூறு 

 

இரவலர்க்கு யானைகளைப் பரிசாக வழங்குவது தமிழ் மன்னர்கள் வழக்கம்; கொங்கரைப் போர்க்களத்தில்  எதிர்த்த பொழுது அவர்கள் போட்டு விட்டுப் போன வேல்களின் எண்ணிக்கையை விட மிகுதியான யானைகளை வேள் ஆய் அண்டிரன் பரிசாக அளித்தான்; பகைவர்களின் யானைகளைக் கொன்று அவற்றின் முகபடாத்தில் உள்ள பொன்னைக் கொண்டு  தாமரைப்பூக்கள் செய்து பாணர்க்குப் பரிசாக வழங்குவதைப் பண்டைத்தமிழர்  மரபாகக்  கொண்டிருந்தனர். (பல்வேறு பாடல்கள்)

 

யானைகளைப் பற்றிப் புறநானூற்றில் காணப்படும் பிற செய்திகள் 

 

யானை மூங்கிலைத் தின்னும்; துன்பத்தால் வருந்தும்  யானை இடியோசைபோல் பிளிறும்; பாகர் இல்லாத யானை மதுச் சகதியில் ஆடும்; யானைகள் நல்லினச்சால்புடையனவாக இருந்தன; கட்டப்பட்டுள்ள கம்பத்தை அறுத்துக்கொண்டு ஓட முயன்று பெருமூச்சு விடும் யானை; யானையின் கழுத்தில் வெற்றி மாலை சூட்டியிருப்பர்; படைக்கொடியையும் வெற்றிக்கொடியையும் யானைகள்மீது கட்டுவர்; யானைகள் மீது மரங்களை ஏற்றி வருவர்; போர்க்களத்தில் வேந்தர்கள் யானை மீது ஏறிப் போரிடுவர்; கருங்கல் பாறைகளுக்கிடையே மேயும் யானைகள் (பல்வேறு பாடல்கள்)

 

யானைகள் பழக்கப்படுத்தப்படுவது பற்றிக் கபிலரின் பாடல்

 

யானைகளைப்பழக்கிக் கட்டுப்படுத்தம் அங்குசம் என்னும் கருவி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான இலக்கணங்கள் இருக்கின்றன. ஒரு கருவிக்கு இலக்கணங்கள் கூறப்பட்டிருக்கின்றது எனும்போது, அந்தக்கருவியைப் பயன்படுத்தும் காரியங்களுக்கும் நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இவ்வுண்மையைத்தான் கபிலரின் பாடல் குறிப்பிடுகிறது.

 

பட்டத்து யானை அல்லது தலைமை யானையை அண்ணல் யானை என்பர்.

யானையைக் கட்டுப்படுத்துவதற்கான அங்குசம், நூல் இலக்கணத்தின் படியும் அழகு புனைந்தும் உருவாக்கப்பட்டது என்பதை பொன்னியற் புனைதோட்டி (கபிலர்: புறநானூறு 14.3) என்னும் தொடர் குறிப்பிடுகிறது. அங்குசம் நூல் இலக்கணத்தின்படி உருவாக்கப்பட்டது எனில், யானை வளர்ப்பிற்கும் நூல்கள் இருந்திருக்க வேண்டும். அவற்றுள் பல அறிவியல் உண்மைகளும் இருந்திருக்கக்கூடும்.

 

புறநானூற்றில் யானைகள் பற்றிய நிபுணர் கருத்து

 

காந்திகிராமம் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஓ.முத்தையா அவர்கள் “தி இந்து” தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறியுள்ளார். (http://goo.gl/GcpTeT)

‘‘அந்தக் காலத்தில் செங்கோல், வெண்கொற்றக்கொடை, முரசம், காவல்மரம், பட்டத்து யானை ஆகியவை ராஜாவுக்கான முக்கிய அடையாளங்களாக இருந்ததை புறநானூறு வழியாக அறிய முடிகிறது. ஒருவன் சிறந்த அரசன் என்பதை அவனுடைய கொடைத் திறன், படைத்திறனை கொண்டே சொல்வார்கள்.

அரசனின் படைகளில் யானைப் படை முக்கியமானது. மலையைத் தாண்டி எதிரிநாட்டுக்குப் படையெடுப்பது எவ்வளவு சிரமமோ, அதுபோல் யானைப் படையைத் தாண்டி ஒரு நாட்டுக்குப் படையெடுப்பது சிரமம். அதனால் எதிரிகளை அழிக்கும் வல்லமை படைத்த யானைக்கும், அரசனைப்போல் சிறப்பான அலங்காரம் செய்வார்கள்”.

 

“யானைக்கென்று சில மொழிகள் உள்ளன. அந்த மொழிகளைச் சொல்லியே யானைகளை மனிதர்கள் பழக்கப்படுத்துகின்றனர். அதில் குறிப்பாக படைக்குரிய யானையாக மாற்ற சில பயிற்சிகளை அளிக்கின்றனர். பனங்குருத்து, இலை தழைகள், பலா, மூங்கில் குருத்துகள், வாழை, தினைப்பயிர்கள் போன்றவற்றை அவை விரும்பிச் சாப்பிடும். அருவிகளால் அடித்துவரப்படும் கொறுக்கன் தட்டைகளை யானைகள் உண்ணும். பெண் யானை இறந்து விட்டால் அதனுடைய ஜோடி ஆண் யானை சாப்பிடாமல் உடல் மெலிந்துவிடும். யானை தூங்கும் போது பெருமூச்சு விட்டே தூங்கும். பெண் யானையால் தண்ணீர் குடிக்க வர முடியாவிட்டால் ஆண் யானை தும்பிக்கையால் நீரை உறிஞ்சி பெண் யானைக்கு கொண்டுபோய் கொடுக்கும்”.

 

“கருவுற்று இருக்கிற பெண் யானையால் உணவைத் தேடி வெளியே செல்ல முடியாது. அது போன்ற நேரத்தில் ஆண் யானை உணவுகளைச் சேகரித்து எடுத்துவந்து ஊட்டும். பெண் யானை மீது ஆண் யானை அந்த அளவுக்கு அன்பு செலுத்தும். ஒருபோதும் யானைகள், தன் இனத்தை (கூட்டத்தை) விட்டுக் கொடுக்காது. எதிரியை அழிக்கிற வரைக்கும் எண்ணத்தை மறக்காது. எதிரியை அழிக்க நினைத்தால் தூக்கத்தில்கூட அதைப் பற்றிய சிந்தனையில் இருக்கும்” என்று யானையைப் பற்றிப் பலவிஷயங்களைக் குறிப்பிடுகிறார் பேராசிரியர் முத்தையா.

 

பரிபாடல்

 

புறநானூற்றுப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள யானைகளைப் பற்றிய செய்திகளைச் சொன்ன பேராசிரியர் கருப்பையா, பரிபாடலில் வரும் ஒரு முக்கிய செய்தியையும் குறிப்பிடுகிறார். “அந்தக் காலத்தில் கோயில் யானையின் வாயில் இருந்து சிந்தும் உணவை எடுத்துச் சாப்பிடத் திருமண மாகாத பெண்களும், திருமணமான பெண்களும் போட்டி போடுவார்கள். அதை எடுத்துச் சாப்பிட்டால் திருமண மாகாத பெண்களுக்கு நல்ல கணவர்கள் கிடைப்பார்கள். திருமணமான பெண்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என யானையைக் கடவுளின் வடிவமாக மக்கள் நினைத்ததாக பரிபாடல் கூறுகிறது” என்று கூறியுள்ள முத்தையா மேலும், “இப்போது யானையை மனிதர்கள் எதிரியாகப் பார்க்கிறார்கள். அந்தக் காலத்தில் யானையின் வலிமை, ஆற்றலை மக்கள் தெரிந்து வைத்திருந்தனர். அவற்றின் வலிமையையும், ஆற்றலையும் மக்கள் பயன்படுத்தினர்” என்றும் கூறுகிறார்.

 

குறுந்தொகை

 

குறுந்தொகையில் யானை பற்றிய குறிப்புகளை ஆய்வு செய்த தமிழ் இலக்கிய ஆர்வலர் சத்தியராஜ் என்பவர் பின்வருமாறு சில முக்கிய குறிப்புகளைத் தருகிறார். 2010-ஆம் ஆண்டு ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலை அறிவியல் கலைக் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு வெளியிடப்பெற்ற அவருடைய முழு ஆய்வறிக்கையையும் http://meyveendu.blogspot.in/2013/08/blog-post_7680.html  என்கிற தளத்தில் காணலாம். சிலவற்றை இங்கே காண்போம்.

குறுந்தொகையில் யானைகளைப் பற்றிய குறிப்புகள் 19 பாடல்களில் அமைந்துள்ளன. அந்தப் பதிவுகளை மரபுநிலை மற்றும் திணைப்பகுப்பு அடிப்படையில் வகைப்படுத்தும்போது யானை பற்றிய பதிவுகள் 64 இடங்களில் அமைந்துள்ளன என்பது தெரிய வருகிறது. அவ்வாறு வகைப்பாடு செய்யும்போது, பொதுப்பெயர் (யானை), இளமைப்பெயர் (கன்று, குழவி), ஆண்பாற்பெயர் (களிறு, வேழம்), பெண்பாற்பெயர் (பிடி, பெட்டை) என்று வழங்கப்பட்டுள்ளது தெரியவருகின்றது.

 

பொதுப்பெயர் (யானை)

 

யானைக்குப் பல்வேறு பெயர்கள் இருந்தாலும், “யானை” என்கிற பொதுப்பெயரையும் சங்ககாலப் புலவர்கள் பயன்படுத்தினர். அதனடிப்படையில் குறுந்தொகையில் முப்பது (30) இடங்களில் யானை பற்றியப் பதிவுகள் அமைந்துள்ளன. இவற்றுள் குறிஞ்சிப் பாடல்களில் 16 இடங்களிலும், முல்லைப்பாடல்களில் ஓரிடத்திலும், மருதப்பாடல்களில் 5 இடங்களிலும், பாலைப் பாடல்களில் 9 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன. நெய்தல் பாடல்களில் யானை பற்றிய பதிவு இடம்பெறாததற்கு திணைசார் வாழ்வியலே காரணமாக இருக்கலாம் என்று சத்தியராஜ் தெரிவிக்கிறார்.

 

இளமைப்பெயர் (கன்று, குழவி)

 

யானைக்குறிய இளமைப் பெயர்களாக கன்று என்றும், குழவி என்றும் தொல்காப்பியம் சொல்கிறது. இவ்விளமைப்பெயர்கள் குறுந்தொகையில் 225:1-2, 394:1 ஆகிய இரு இடங்களில் காணப்பெறுகின்றன.

 

ஆண்பாற்பெயர் (களிறு, வேழம்)

 

யானைக்குறிய ஆண்பாற் பெயராகக் களிறு என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். குறுந்தொகையில் களிறு எனும் ஆண்பாற்பெயர் 32 இடங்களில் காணப்படுகின்றது. அப்பதிவு ஐந்திணைகளிலும் இடம்பெற்றுள்ளது. இவற்றுள் குறிஞ்சிப் பாடல்களில் 10 இடங்களிலும் முல்லை, நெய்தல் பாடல்களில் ஓரிடத்திலும் மருதப் பாடல்களில் இரு இடங்களிலும் பாலைப் பாடல்களில் 8 இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பெண்பாற்பெயர் (பிடிபெட்டை)

 

யானையின் பெண்பாற் பெயராக பிடி என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இப்பெயர் குறுந்தொகையில் பன்னிரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளது. இவற்றுள் குறிஞ்சிப் பாடல்களில் 7 இடங்களிலும், முல்லைப் பாடல்களில் ஓரிடத்திலும் பாலைப் பாடல்களில் 4 இடங்களிலும் அமைந்துள்ளது.

 

படைப்பு நோக்கம்

 

சங்கப்புலவர்கள் யானையைப் பற்றி விரிவாகப் பதிவு செய்ததற்கான காரணங்களையும் தன் ஆய்வில் எடுத்துக்கொண்ட சத்தியராஜ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

 

சங்கப் புலவர்கள் யானையைப் படைத்தமைக்குரிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். அவை: அன்பைப் புலப்படுத்தும் முகமாக, சுற்றத்துடன் இணைந்து வாழும் பாங்கு மக்களிடமும் அமைதல் வேண்டுமென வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. பாலை பாடல்களில் இவ்விரு தன்மைகள் இடம்பெற்றுள்ளன.

 

பெண் யானையின் பசியை நீக்குவதற்காக ஆண் யானை மெல்லிய கிளைகளையுடைய யாமரத்தின் பட்டையை உரித்துஅதன் நீரை,பெண்யானையைப் பருகச் செய்வது அன்பைப் புலப்படுத்துவதாகவும்பாலை நிலத்தில் வளர்ந்த யாமரங்களின் அடிப்பகுதியில் குத்தித் தன் பெரிய சுற்றத்தின் பசியைத் தீர்ப்பதாகவும் அமைந்துள்ளன (நித்தியா அறவேந்தன்,பழந்தமிழகத்தில் வறுமையும் வளமையும்,பக்.3-4) என்று குறித்திருப்பதும் கவனத்திற்குரிய ஒன்றாகும்.

 

இதனைக் குறிக்கும் பாடலடிகள், குறுந்தொகை 37:2-3, 255:4 ஆகியவை.

 

மேலும் பாலைப் பாடல்களில் யானையது பசியின் கொடுந்தன்மையைக் குறிக்கும் குறுந்தொகை 37, 79, 202, 255 ஆகிய பாடல்களும் இடம்பெற்றுள்ளன. சான்றாக, பாலைநிலத்தில் நீரின்மையால் ஓமை மரத்தின் மரப்பட்டையை உரித்து உண்ணும் பசியின் கொடுந்தன்மை இடம்பெற்றுள்ளது. இத்தன்மைகள் சங்க மக்களின் வறுமைநிலையை மறைமுகமாக எடுத்தியம்புவதாகவும் அமைந்துள்ளன.

 

யானைகள் குன்றுகளிலும் மலைகளிலும் சோலைகளிலும் காடுகளிலும் வாழும் தன்மையுடையன என்பதை குறுந்தொகை 88:2-3 பாடல், நெடுநாள் பகையைத் தீர்த்துக் கொள்ளும் யானைகள் வாழுமிடமாக துன்னருஞ் சாரல் என்கிற இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல் அமைந்த பாடலடிகளில் குறிஞ்சிநில மக்களின் வாழ்வியற் சார்புகளைக் காணமுடிகின்றது.

 

சங்ககால மக்களின் வளமை, வறுமை, சமுதாயச் சார்பு, அன்பு வெளிப்படும் தன்மை, வாழிடம் ஆகியனவற்றை எடுத்தியம்புவதாக யானை எனும் கருப்பொருள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

 

கலித்தொகை

 

யானைப்பாகனின் குத்துக்கோலுக்கு அடங்காத யானை கூட யாழின் இனிமையான இசைக்கு மயங்கி அடங்கும் என்று கலித்தொகையின் 2-26-27 பாடல் கூறுகின்றது.

(http://www.gunathamizh.com/2009/11/blog-post_09.html) யானையைப் பழக்கும் பண்பாடு இருந்ததது என்பதை இப்பாடலும் நிரூபிக்கின்றது.

 

 

கலிங்கத்துப்பரணி

 

தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையதளத்தில் பரணி வகைப் பாடல்களில் யானைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சில செய்திகளைப் பார்ப்போம்.

 

இடைக்காலத்தில், பிற்காலச் சோழர்கள் காலத்தில் பரணி வகைப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. அகம் புறம் என்கிற இரண்டு இலக்கிய வகைகளில் புற இலக்கிய வகையைச் சார்ந்தது பரணி. பாட்டுடைத்தலைவனின் வீரத்தை மையக்கருத்தாகக் கொண்டு பாடுவது பரணி. பரணி நக்ஷத்திரத்தில் பிறப்பவன் பெரும் வீரனாவான் என்கிற நம்பிக்கைத் தமிழர்களிடையே உண்டு. காளிக்கும் யமனுக்கும் உகந்தநாளாகப் பரணி கருதப்படுகிறது. பரணியில் அரசனின் வீரத்தையும், போர்க்களத்தில் காளி வழிபாட்டையும் கூறப்படுவது உண்டு.

 

போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பற்றிப் புகழ்ந்து கூறுவதே பரணி ஆகும் என்று இலக்கண விளக்கம் (839-ம் பாடல்) கூறுகிறது. பன்னிரு பாட்டியல் (243-ம் பாடல்) எழுநூறு யானைகளைப் போர்க்களத்தில் கொன்றவனைப் பாடுவதே பரணி என்று கூறுகிறது. அதே பன்னிருபாட்டியல் 242-வது பாடலில் யானைகள் கொல்லப்படாத போர்க்களங்கள் பரணி பாடுவதற்கு ஏற்றவை அல்ல என்று கூறுகின்றது. ( http://www.tamilvu.org/courses/degree/c012/c0124/html/c01241l1.htm )

 

மேற்கண்ட இலக்கியங்கள் மட்டுமல்லாமல் திருக்குறளிலும் சில இடங்களில் யானைகள் பற்றிய குறிப்புகள் உருவகங்களாகவும் குறியீடுகளாகவும் வருகின்றன.

 

இவ்வாறு சங்க இலக்கியங்களில் ஆரம்பித்து நவீன இலக்கியங்கள் வரை யானைகள் பற்றிய குறிப்புகளும் செய்திகளும் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அவை தமிழர்கள் யானைகளைப் பல நூற்றாண்டுகளாகப் பழக்கி வந்துள்ளனர் என்பதைத் தெளிவாகவே உறுதிபடுத்துகின்றன.

 

(தொடரும்)

 

 

 

Series Navigationதொடுவானம் 149. கோர விபத்து‘உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ வெளியீட்டுவிழா
author

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    //ஆகவே பல நூற்றாண்டுகளாக நமது ஆன்மிகப் பாரம்பரியத்தில் கோவில் யானைகளின் பங்கு சிறப்பாகவே இருந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல், ராஜரீக காரியங்களிலும், போர்களிலும் யானைகள் சிறப்பாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.//

    கோயிலில் கொத்தடிமையாக இருக்கும் யானையைக் காப்பாற்றுவதற்கு கட்டுரை எழுதியவர்,இப்பொழுது பாரம்பரியத்தை காப்பற்ற பாடுபடுகிறார்.பரவாயில்லை! யானை காட்டில் இருப்பதிலோ,அல்லது நாட்டில் இருப்பதிலோ யாருக்கும் மாற்று கருத்து இல்லை.அது எங்கிருந்தாலும் நலமோடு இருக்க வேண்டும் என்பதே அனைவரது ஆசை.

    ஆன்மீக பாரம்பரியத்தில், கோயில் யானைகளை குற்றுயுரும் குலையுதிருமாகத்தான் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதா?

    அல்லது ராஜரீக காரியங்களில் யானைகளை பிச்சை எடுக்க விட்டுத்தான் அரசர்கள் பிழைத்தார்களா? ஒன்றும் இல்லை.யானைகளை கொழு கொழு என்று போசாக்குடன் வளர்த்தார்கள்,படை நடத்தினார்கள்.

    இது போல கோயில்களில் யானைகளை கொழு கொழு என வளர்த்து கும்பாபிஷேகம் செய்வதை யாரும் தடுக்கவில்லையே! ஆனால் ஆன்மீகப் போர்வை போர்த்தி சித்திரவதை செய்து சீரழிப்பதையே சாடுகின்றோம்.

    கோயில் கொட்டடியில் யானைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டால்,அரசின் புத்தொளி முகாம் எதற்கு?யானைகளை சுரண்டி வதைத்து,பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவதையே கண்டிக்கிறோம்.

    ஆகவே ஆன்மீக,ராஜரீக வார்த்தைகளைப்போட்டு,யானைகளை மீண்டும் (ஆன்மீக,) சிறையில் தள்ளி சித்திரவதை செய்ய கட்டுரையாளர் முற்பட வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *