தொடுவானம் 156. தேர்வும் சோர்வும்

This entry is part 4 of 14 in the series 5 பெப்ருவரி 2017

டாக்டர் ஜி. ஜான்சன்

156. தேர்வும் சோர்வும்

GH Chennai எழும்பூரில் ” பீப்பல்ஸ் லாட்ஜ் ” என்னும் தங்கும் விடுதியில் அறை எடுத்தோம். இதை மலையாளிகள் நடத்தினர். எதிரே ஒரு மலையாள உணவகம் உள்ளது. இந்தப் பகுதியில் வாடகை ஊர்த்திகளுக்கு பஞ்சம் இல்லை. சென்னை மருத்துவ மனைக்கு கால் மணி நேரத்தில் சென்றுவிடலாம்.
அன்று இரவில் எழும்பூர் புகாரியில் பிரியாணி உண்டோம். அங்கு அது சுவையாக இருக்கும். கடைத்தெருவில் சில பொருட்கள் வாங்கினோம். தேர்வுக்குத் தேவையானவற்றையெல்லாம் படித்து முடித்துவிட்டோம். இரவு அறைக்குத் திரும்பியதும் படுத்து நன்றாகத் தூங்கிவிட்டோம்.
காலையில் உற்சாகமாக சென்னை பொது மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு மருத்துவ வார்டு நோக்கி நடந்தோம். அந்த வார்டு எங்களுக்காக தயார் செய்யப்பட்டிருந்தது. எல்லா படுக்கைகளிலும் நோயாளிகள் இருந்தனர். தேர்வில் பங்கு பெற எங்களுடன் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வந்திருந்தனர்.
தேர்வுகள் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமானது. நான் எனக்குத் தரப்பட்ட கட்டில் எண் எட்டுக்கு சென்றேன். அதில் ஒரு வயதானவர் படுத்திருந்தார். பெயர் முனுசாமி. வயது 65. சென்னையைச் சேர்ந்தவர். முன்பு சென்னை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளி. அவருக்கு கடந்த ஐந்து வருடங்களாக இனிப்பு வியாதி உள்ளது. மாத்திரை சாப்பிடுகிறார். சென்ற மாதம் அவருக்கு திடீர் என்று இடது பக்கத்துக்கு கையும் காலும் பலமின்றி போனது. அதனால் அவரால் நடக்க முடியவில்லை. மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு இரத்தக் கொதிப்பு இல்லை. இதுதான் அவர் மூலமாக நான் கேட்டு அறிந்தவை. இதையே நோயாளியின் சரித்திரம் என்போம்.
முனுசாமிக்கு உள்ளது நரம்பியல் தொடர்பான நோய். இதை சுலபமாக தெரிந்து கொண்டேன். இனி அவரை நான் நரம்பியல் ரீதியில் பரிசோதிக்க வேண்டும்.அவருக்கு பொதுவான மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் அவருடைய கால்களில் வீக்கம் இல்லை. இரத்த சோகை இல்லை. இரத்த அழுத்தம் சராசரி அளவில் இருந்தது. அவருடைய இதயத் துடிப்பும் நன்றாக இருந்தது. இருதயத்தில் வேறு பிரச்னைகள் இல்லை.நரம்பியல் பரிசோதனையில் இடது பக்கம் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.
அவருக்கு நீரிழிவு நோயும் இடது பக்க பக்கவாதமும் உள்ளது என்பதைக் கண்டுபிடித்தது சுலபமாகத்தான் இருந்தது.. ஆனால் பரிசோதனையாளர் என்னிடம் இது உண்டானதின் காரணத்தைக் கேட்பார். பக்கவாதம் பற்றி அனைத்து கேள்விகளும் கேட்பார். இதற்கு செய்யவேண்டிய இதர பரிசோதனைகள் பற்றியும், சிகிச்சை முறைகள் பற்றியும் கேட்பார்.
நரம்பியல் கொஞ்சம் சிக்கலானது. அது மூளையின் எல்லா பகுதிகளுடனும் நெருக்கமானது. அதனால் ஒரு நரம்பு பற்றி கேட்கும்போது அடுத்த நரம்பு பற்றியும் கேள்விகள் கேட்கும் வாய்ப்பு உள்ளது. முனுசாமி பற்றி பொதுவாக நான் விளக்கம் தந்தபின்பு அவர் கேள்விகள் கேட்பார். அநேகமாக நீரிழிவு நோயாளிக்கு பக்க வாதம் எப்படி உண்டானது என்பதைக் கேட்பார். நான் படித்தவற்றை ஒருகணம் மனதில் கொண்டு வந்தேன். நீரிழிவு நோயில் பெரும்பாலும் தமனிகள் பாதிக்கப்படலாம். அவற்றின் உட்சுவர்களில் கொழுப்பு படிந்து அடைப்பை உண்டுபண்ணலாம்.அதுபோன்று மூளையில் உள்ள தமனியில் அடைப்பு உண்டானால் அந்தப்பகுதி மூளையும் பாதிக்கப்படும். அப்படி அப்பகுதி மூளை நரம்புகள் பாதிப்புக்கு உள்ளானால் உடலின் மறு பக்க கையும் காலும் பாதிப்புக்கு உள்ளாகி செயலிழந்துபோகும். இதையே பக்க வாதம் என்கிறோம். முனுசாமிக்கு வலது பக்க மூளையில் அடைப்பு உண்டாகியுள்ளது. அதனால் அவருக்கு இடது பக்க பக்கவாதம் உண்டாகியுள்ளது. இதை நான் இப்படித்தான் தேர்வாளரிடம் விளக்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். அவர் வருகைக்காக காத்திருந்தேன்.அந்த நேரத்தை வீணாக்காமல் முனுசாமியிடம் பேசி வேறு ஏதாவது துப்பு கிடைக்குமா என்று முயன்றேன். புதிதாக ஏதும் கிடைக்கவில்லை.
நான் எதிர்பார்த்தபடியே தேர்வாளர் கேள்விகள் கேட்டார். நிதானமாக பதில் சொன்னேன். இடையில் அவர் மடக்கி என்னிடம் மூளை நரம்புகள் பற்றியும் கேட்டார். நான் அவற்றையும் சரியாகச் சொன்னேன். சுமார் பத்து நிமிடங்கள் என்னிடம் கேள்விகள் கேட்டார். அதன்பின்பு அவர் போகலாம் என்றார். இந்த செயல்முறைத் தேர்வில் நான் வெற்றி பெற்றேன் என்பது தெரிந்தது.
வார்டுக்கு வெளியில் சம்ருதி காத்திருந்தான்.அவனுக்கு இருதய நோயாளியாம். அவருக்கு வால்வு பிரச்னையாம்.அவன் நன்றாகவே பதில் கூறியுள்ளான்.நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடுவானாம்.இருவரும் வாடகை ஊர்தியின் மூலம் எழும்பூர் சென்றோம். இனி மீண்டும் பிற்பகல் இரண்டு மணிக்கு நேர்முகத் தேர்வுக்கு வரவேண்டும்.
விடுதிக்கு எதிரே கேரளா உணவகத்தில் மீன் குழம்புடன் மதிய உணவை உண்டோம். ருசியாக இருந்தது.அறையில் கொஞ்ச நேரம் ஓய்வுக்குப் பின்பு மீண்டும் தேர்வுக்குச் சென்றோம்.
நேர்முகத் தேர்வில் இரண்டு தேர்வாளர்கள் இருப்பார்கள். அவர்கள் இருவரும் மாறி மாறி கேள்விகளைக் கேட்பார்கள். அவர்களிடம் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்களும் செயல்முறைத் தேர்வின் மதிப்பெண்களும் இருக்கும். அதை வைத்து இந்த நேர்முகத் தேர்வில் என்னை மருத்துவப் பாடத்தில் தேர்ச்சி பெற வைக்கலாமா அல்லது தோல்வி பெறச் செய்யலாமா என்று இறுதி முடிவு செய்வார்கள். என்னிடம் நரம்பியல் தொடர்பான நிறைய கேள்விகள் கேட்டனர். நான் சிலவற்றுக்கு நன்றாக பதில் கூறினேன். சிலவற்றில் தடுமாறினேன். அவர்கள் அதை பிடித்துக்கொண்டு மேலும் கடினமான கேள்விகளைக் கேட்கலாயினர். நான் மேலும் தடுமாறிப்போனேன். எழுத்துத் தேர்வில் ” சிரிங்கோமைலியா ” பற்றி சரியாக எழுதாததால் அவர்கள் என்னை கடினமான நரம்பியல் தொடர்பான கேள்விகள் கேட்டு மடக்கிவிட்டனர். இது என்ன சோதனை? மருத்துவத் தேர்வை மீண்டும் எழுத நேருமோ என்று அஞ்சினேன்.அந்த பயம் நிதானமாக நினைவு கூர்ந்து பதில் சொல்லத் தடையானது. என்னிடம் சுமார் பதினைந்து நிமிடங்கள் கேள்விகள் கேட்டனர். பின்னர் என்னைப் போகலாம் என்றனர். திருப்தியில்லாமல் வார்டை விட்டு வெளியேறினேன்.
சம்ருதியும் வெளியே சோகமாகக் காத்திருந்தான். அவனை இருதயம் பற்றிக் கேட்டு மடக்கிவிட்டனராம். தேர்வில் தோல்வியடையச் செய்வதற்காக அவர்கள் அப்படிக் கேட்டதாக அவன் நினைப்பதாகச் சொன்னான்.எங்கள் இருவரின் நிலையும் ஒரே மாதிரிதான் என்று நான் எண்ணியபடியே அவனுக்கு சமாதானம் கூறினேன்.சோகமாகவே எழும்பூர் திரும்பினோம். இரவு உணவு வரை அதுபற்றியே பேசிக்கொண்டிருந்தோம். உணவுக்குப் பின்பு மறுநாள் நடக்கவிருக்கும் அறுவை மருத்துவம் செயல்முறைத் தேர்வு பற்றி பேசலானோம். நாங்கள் ஒருவர் மாறி ஒருவர் கேள்விகள் கேட்டுகொண்டோம். அவற்றுக்கு விடை தெரிகிறதா என்று பார்த்தோம். அப்படி தெரியாமல் போனால் உடன் பாட நூலைப் புரட்டிப் பார்ப்போம். இவ்வாறு தனியாக அமர்ந்து தயார் செய்யாமல் இருவரும் கூட்டாக தயார் செய்தொம். தனியாக இருந்தால் நடந்து முடிந்த மருத்துவத் தேர்வு பற்றியே எண்ணம் வரும் என்பதைத் தவிர்க்க இப்படி இருவரும் சேர்ந்து தயார் செய்தொம்.
இரண்டாம் நாள் செயல்முறைத் தேர்வு. அது அறுவை மருத்துவம். அறுவை மருத்துவ வார்டில் தேர்வு நடைபெற்றது. அங்கும் கட்டிலில் ஒரு நோயாளி அமர்ந்திருந்தார். அவர் ராமசாமி. வயது நாற்பத்தி இரண்டு. தனியார் கம்பெனியில் காவலாளி. அவருக்கு வயிற்றில் கடந்த ஆறு மாதங்களாக வலி. இடையில் வாந்தியும் எடுப்பார். பசி கிடையாது. அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மருந்து மாத்திரைகள் தருகின்றனர். வலி ஓரளவு குறைகிறது. ஆனால் முற்றிலும் குணமாகவில்லை. அறுவை சிகிச்சை செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.அவருக்கு என்ன வியாதி என்பதை அவரிடம் சொல்லவில்லையாம்.அதை நான் நம்பவில்லை. அவருக்கு என்ன வியாதி என்பது நிச்சயம் அவருக்கு இந்த ஆறு மாதங்களில் தெரிந்திருக்கும். எங்களிடம் அதைச் சொல்லக்கூடாது என்று அவருக்கு தெரியப்படுத்தியிருப்பார்கள். நாங்கள் தேர்வுக்கு வந்துள்ள மாணவர்கள் என்பது ராமசாமிக்கு நன்கு தெரியும். அவர் அதைச் சொல்ல மாட்டார்.
இதுபோன்ற நோயாளிகளை பணத்துக்கு இங்கே தேர்வு நாட்களில் அழைத்து படுக்கையில் வைப்பதும் உண்டு. இவர்கள் நிரந்தரமாக மருத்துவ மாணவர்களின் தேர்வுக்காக பயன்படுத்தப்படும் நோயாளிகள். அதனால் அவர்கள் அவ்வளவு எளிதாக தங்களுக்கு உள்ள வியாதியை எங்களிடம் சொல்லமாட்டார்கள்.
சாதாரண கேஸ்ட்ரிக் வலியை இப்படி தேர்வுக்கு வைக்கமாட்டார்கள். அப்படியானால் அவருக்கு உள்ளது கேஸ்ட்ரிக் வலி இல்லை. இது வேறு வகையான வயிற்று வலி. வயிற்றில் பொதுவாக கேஸ்ட்ரிக் வலி, பித்தப்பை வலி, கணையத்தில் வலி, சிறுநீரக வலி, குடல் வால் வலி ஆகியவை தோன்றலாம். வயிற்றில் அல்லது குடலில் புற்று நோய் உண்டானாலும் வயிறு வலிக்கலாம். இவற்றில் இவருக்கு என்ன வலி என்பதை நான் அவரிடம் மேலும் கேள்விகள் கேட்டுதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதோடு அவருடைய வயிற்றை நன்றாக பரிசோதிக்க வேண்டும். அதில் கல்லீரல் வீக்கம், பித்தப்பையில் கற்கள், சிறுநீரகக் கற்கள் அல்லது வீக்கம், அப்பெண்டிக்ஸ் அழற்சி வலி போன்றவை உள்ளதா என்பதைக் கண்டறியவேண்டும். அதுபோன்றே இரைப்பைப் பகுதியில் கட்டி அல்லது வலி உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும். வயிற்றின் எந்தப் பகுதியில் வலியோ அல்லது வீக்கமோ, கட்டியோ உள்ளதென்று தெரியவந்தால் நோய் என்னவென்பதைக் கூறிவிடலாம்.
நான் ராமசாமியிடம் புகைக்கும் பழக்கமும், குடிக்கும் பழக்கமும் உள்ளதா என்று கேட்டேன். அவர் ஆம் என்றார். அவர் தினமும் இரவில் சாராயம் குடிப்பாராம். சுமார் பத்து வருடங்கள் அப்படியாம். அன்றாடம் இரண்டு பாக்கட் சிகரெட் புகைப்பாராம். காரமான உணவு பிடிக்குமாம். அவருடைய வயிற்றின் நடுப்பகுதியில்தான் வலி கடுமையாக இருந்தது. அழுத்தினால் அங்கு அதிகம் வலித்தது.எனக்கு ஓரளவு அவருக்கு உள்ளது என்ன என்பது தெரியலாயிற்று.
சோதனையாளர் வந்தார். ராமசாமி பற்றி கூறுமாறு சொன்னார். நான் அவருடைய நோயின் அறிகுறிகளையும், பரிசோதனையின் முடிவுகளையும், செய்யவேண்டிய இரத்தப் பரிசோதனைகளையும், சொல்லி அவருக்கு ” பேன்கிரியட்டைட்டீஸ் ” உள்ளது என்று கூறினேன். அது கணைய அழற்சி நோய். அதிகமாக மது அருந்துவதால் வருவது. அதை இரத்தப் பரிசோதனை மூலமாகவும் அல்ட்ராசவுண்டு பரிசோதனையின் மூலமாகவும் நிச்சயப்படுத்தலாம் என்று சொல்லி முடித்தேன்.அவர் என் பதிலில் திருப்தி கொண்டவர் போல் காணப்பட்டார். அது எனக்கு தைரியத்தைத் தந்தது. அவர் மேற்கொண்டு கணையம் பற்றி கேட்ட இதர கேள்விகளுக்கும் தக்க பதில்களைக் கூறினேன். அவர் எனக்கு விடை தந்தார். நான் இதில் தேர்ச்சி பெற்றுவிட்டேன். இனி பிற்பகலில் நேர்முகத் தேர்விலும் நன்றாகச் செய்தால் போதும்.. அறுவை மருத்துவத்தில் தேர்ச்கி அடைந்துவிடலாம். ஆனால் அதற்குமுன்பு எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். அது பிற்பகலில் தெரிந்துவிடும். தேர்வாளர்கள் கேட்கும் கேள்விகளிலிருந்தே அது தெரிந்துவிடும்.
வழக்கம்போல் சம்ருதி வெளியில் காத்திருந்தான். அவனும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டான். இருவரும் எழும்பூர் நோக்கி விரைந்தோம். உணவு உண்டபின் நேர்முகத் தேர்வுக்கு தயார் ஆனோம்.
நேர்முகத் தேர்வாளர்கள் இருவர். அவர்கள் வேறு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் முன் என்னுடைய எழுத்துத் தேர்வின் முடிவும், செயல்முறைத் தேர்வு முடிவும் இருந்தது. இந்தத் தேர்வில் நான் தேர்ச்சி பெற வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்துகொண்டுதான் கேள்விகள் கேட்பார்கள்.அவர்கள் என்னிடம் கணையம் பற்றி கேள்விகள் கேட்கவில்லை. ” ப்ரோஸ்டேட் ” பற்றி கேட்கலாயினர். அது சிறுநீரகக் குழாயையைச் சுற்றி ஆண்களுக்கு இருக்கும் உறுப்பு. அது கொஞ்சம் சிக்கலானது. அது பற்றி நான் படித்திருந்தேன். அனால் அவர்கள் அதில் உண்டாகும் வீக்கங்களையும் அதற்கான அறுவைச் சிகிச்சை முறைகளையும் கேட்டனர். அதில் நான் தடுமாறிவிட்டேன். பின்பு தையாய்டு சுரப்பி பற்றியும் கேட்டனர். அதுவும் சிக்கலான ஒரு சுரப்பிதான். அதிலும் நான் திருப்தியாக செய்யவில்லை. எனக்கு அப்போதே தெரிந்துவிட்டது. எழுத்துத் தேர்வில் நான் தேறவில்லை என்பது. அதில் எனக்கு அன்றே சந்தேகம் இருந்தது. அதில் தேறவில்லையெனில் நேர்முகத் தேர்வில் கடினமாகக் கேட்டு நம்மைத் திணற அடித்துவிடுவார்கள். அதிலிருந்து நாம் முடிவைத் தெரிந்துகொள்ளலாம்.
அன்றும் சம்ருதி சோர்வுடன்தான் காணப்பட்டான். அவனையும் தேர்வாளர்கள் மடக்கி விட்டனர். இருவரும் அதுபற்றி பேசியவண்ணம் எழும்பூர் திரும்பினோம். ஒன்றாக இரவு உணவு அருந்தினோம். நாளை கடைசித் தேர்வு. அது பிரசவமும் மகளிர் இயல் நோயும். முன்பே நாங்கள் இருவரும் எழுத்துத் தேர்வில் நன்றாக செய்திருந்தோம். இரவில் அது பற்றி கேள்விகள் கேட்டு படித்தவற்றை நினைவில் கொண்டு வந்தோம்.
இறுதித் தேர்வுக்கு மிகுந்த நமபிக்கையுடன் புறப்பட்டோம். செயல்முறைத் தேர்வுக்கு ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண். அவரைப் பரிசோதனை செய்துவிட்டு காத்திருந்தேன். தேர்வாளர் வந்தார். குழந்தையின் நிலை பற்றி கேள்விகள் கேட்டார். நான் பரிசோதனைகளின் முடிவை அவருக்கு எடுத்துரைத்தேன். அவர் குழந்தை கருவறையில் தங்கும் நிலைகள் பற்றி கேட்டார். நான் சரியாகவே பதில் கூறினேன். பின்பு எப்படி பிரசவம் பார்ப்பது என்பது பற்றி கேட்டார். அதுபோல் அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் சுலபமாகவே இருந்தன. பின்பு கருப்பையில் ” ஃபை பிராய்ட் ” கட்டி உள்ள ஒரு பெண்ணை பரிசோதனை செய்யச் சொல்லி அதுபற்றி கேள்விகள் கேட்டார்.நான் அது பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்ததால் சுலபமாக பதில் கூறினேன். அவர் திருப்தி அடைந்துள்ளதை அவரின் முகபாவம் காட்டியது. அவர் போகலாம் என்று விடை தந்தார். இந்த செயல்முறைத் தேர்வில் நான் தேறிவிட்டேன். இனி பிற்பகல் நடக்கவுள்ள நேர்முகத் தேர்வுதான் பாக்கி. அதிலும் நன்றாகச் செய்தால் இந்தப் பாடத்தில் நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடலாம்.
உற்சாகத்துடன் தேர்வுக்கூடத்துக்கு திரும்பினோம். என்னிடம் பிரசவம் பற்றியும் கருப்பை புற்று நோய் பற்றியும் கேள்விகள் கேட்டனர். நான் சுலபமாக பதில் கூறினேன். அவர்கள் என்னை வாழ்த்தி விடை தந்தனர். நான் இந்தப் பாடத்தில் முழுமையாகத் தேறிவிட்டேன்! இந்தப் படத்திலாவது தேர்ச்சி பெற்றோமே என்று பெருமூச்சு விட்டபடி வெளியே வந்தேன்.
சம்ருதியும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டான். அவனும் தேர்ச்சிபெற்றுவிட்டதாகக் கூறினான். எழும்பூர் புறப்பட்டோம்.
ஒரு வழியாக எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வுகள் முடிந்துவிட்டன. இனி ஒரு மாதத்திற்கு கவலை இல்லை. அதன்பின்புதான் முடிவுகள் வெளிவரும். வரப்போகும் கவலையை அதுவரைத் தள்ளிப்போடலாம்! இடைப்பட்ட காலத்தில் கவலையை மறந்து மகிழலாம். அதற்கு விடுதியில் ஒரு வழி வைத்துள்ளனர்.
அதுதான் பிரியாவிடை விருந்து. இறுதித் தேர்வுக்குப்பின்பு தேர்ச்சியுற்றவர்கள் விடுதியை விட்டு வெளியேறிவிடுவார்கள். தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும் அங்கேயே தங்கி மீண்டும் ஆறு மாதங்களில் தேர்வு எழுதுவார்கள். இதனால் நாங்கள் விடுதியிலிருந்து பிரிந்து செல்ல நேரிடும். கடந்த ஐந்தரை வருடங்கள் விடுதியில் ஒன்றாக வாழ்ந்துள்ளோம். இப்போது பிரியும் நேரம். ஆதலால் பிரியாவிடை விருந்தை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்வோம்.அப்போது வகுப்பு மாணவிகளை அல்லது சீனியர் ஜுனியர் பெண்களை விருந்தாளியாக அழைத்துக்கொள்ளலாம்.
பிரிந்து செல்லும் சோகம் ஒருபுறம் இருந்தாலும் அதை இந்த பிரியாவிடை விருந்தின் மூலம் மகிழ்ச்சியாகவே கொண்டாடுவோம்! விடுதி வாழக்கையில் அது மறக்கமுடியாத நாள்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationதோழி கூற்றுப் பத்துஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *