தமிழரல்லாத தமிழ்க்கவிஞர்  மேமன் கவி ” குத்தியானா,  ஜூனாகட் , பாட்வா – ஆகிய பாரத கிராமத்து தத்துவங்களை பத்திரமாய் காத்தவர்களின் மேமன் புத்திரன்”

author
0 minutes, 3 seconds Read
This entry is part 2 of 14 in the series 7 மே 2017

மேமன்கவி01

  முருகபூபதி — அவுஸ்திரேலியா

நாகம்மா….  ஒரு   தாம்பாளமும்   செவ்வரத்தம்   பூவும்   கொண்டு  வாரும் குரல்   கேட்டு  ஓடோடி   வருகின்றார்    எங்கள்   இரசிகமணி    கனகசெந்திநாதனின்    மனைவி.     எம்மைப் பார்த்து  அமைதியான   புன்னகை.

இவரைத்  தெரியும் தானே..? –   இது   முருகபூபதி.    இவர்   தம்பி   செல்வம்.  இவர்    தம்பையா.    இங்க   பாரும்….  இன்றைக்கு   எங்கட   வீட்டுக்கு    ஒரு தமிழரல்லாத    தமிழ்க்கவிஞர்    வந்திருக்கிறார்…  இவர்தான்    மேமன்கவி.

கனகசெந்திநாதன்     அமர்ந்தவாறு    அனைவரையும்    இல்லத்தரசிக்கு அறிமுகப்படுத்துகிறார்.

மேமன்கவி   எழுந்து    அந்தத்   தாயை   வணங்குகிறான்.

இருங்கோ…. என்ன …. கூப்பிட்டியள்…. கணவன்    பக்கம்   முகம்   திரும்புகிறார்  திருமதி கனகசெந்திநாதன்.

                  “என்ன விளங்கவில்லையோ….. கெதியாய்போய்….. தாம்பாளமும்     வாசலில்   ஒரு   செவ்வரத்தம்  பூவும்   பறித்துக் கொண்டு வாரும் கனகசெந்தி   மீண்டும்   கட்டளை   பிறப்பிக்கின்றார்.

அம்மையாரும்  கணவரின்    கட்டளையை    நிறைவேற்றிவிட்டு   பவ்வியமாக    ஒதுங்கி நிற்கிறார்.    அழகிய   பித்தளைத்    தாம்பாளத்தில்     செவ்வரத்தம்பூ    சிரிக்கின்றது.

தம்பி  அந்த  மலருக்குப் பக்கத்தில்   உமது   கவிதை மலரை வையும்.

மேமன்கவி    தனது   முதலாவது   (யுகராகங்கள்)   கவிதைத்   தொகுதியை  வைத்து   –  தாம்பாளத்தை   தூக்கியவாறு    அடுத்து   என்ன   செய்வது  எனத் தெரியாமல்    தயங்குகின்றான்.

தம்பி   எனக்கு    எழும்பமுடியாது  இனி   அந்தத்   தட்டத்தை  என்னிட்டத் தாரும்.

மேமன்கவியும்   அவ்வாறே  செய்கின்றான்.

கனகசெந்தியின்   நடுங்கும்   வலது  கரம்  அந்த   அழகிய  மலரை மேமன்கவியின்   தலையில்   வைத்து   ஆசிர்வதிக்கின்றது.

நன்றாக   இருக்கவேண்டும்   தொடர்ந்தும்    எழுத வேண்டும்.    எனது   வாழ்த்துக்கள்    என்றும்    உண்டு.

கவிதை   நூலை   அவர்  எடுத்துக் கொள்கிறார்.

இந்த  அதியற்புதக் காட்சியைக்  கண்டு  எனது  கண்கள்   பனிக்கின்றன. கனகசெந்திக்கே    உரித்தான   இந்தக் குணாதிசயம்   எம்மில்    எத்தனை பேருக்குண்டு…?  அவர்   மறக்க முடியாத   மனிதர்.”

இந்த வரிகள்  நான் முன்னர் எழுதியிருந்த நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ( பாரிஸ் ஈழாடு இதழில் ) தொடரின் முதலாவது அங்கத்தில் இரசிகமணி கனகசெந்தி நாதன் அவர்கள் பற்றிய பதிவில் இடம்பெற்றுள்ளது.

மேற்குறித்த சம்பவம் 1976 ஆம் ஆண்டு குரும்பசிட்டியில் நடந்தது. அதற்குச்சிலவருடங்களுக்கு  முன்னர்தான் மேமன்கவி மல்லிகையில் அறிமுகமானார். அவ்வாறு இவர் அறிமுகப்படுத்தப்பட்டபோது மல்லிகை ஜீவா இவரை இளம்தளிர் என்றே குறிப்பிட்டார்.

1972 காலப்பகுதியில்  கொழும்பில் நடக்கும் இலக்கியக்கூட்டங்களுக்கு இவர் வருவார். அப்பொழுது இவருக்கு 15 வயதுதானிருக்கும். பால்வடியும் முகம். ஆனால், இன்று அவரது முகம் தாடி மலர்ந்த முகமாகிவிட்டது.

எழுத்தாளர்களுடன் அன்போடு பழகுவார். கூட்டங்களில் நிகழ்த்தப்படும் உரைகளை ஆர்வமுடன் ரசிப்பார். கொழும்பில் வெள்ளவத்தை விஜயலக்‌ஷ்மி புத்தகசாலை, ரகுநாதன் பதிப்பகம், மலேவீதி ரட்ணா ஸ்ரோஸ், ஆதிருப்பள்ளித்தெரு ஜெயா புத்தக நிலையம், ரெயின்போ அச்சகத்தின் அரசுவெளியீடு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக அமைந்திருந்த ராஜேஸ்வரி பவான், லக்‌ஷமி பவான், ஆனந்த பவான் முதலானவற்றிலும் இவரை அடிக்கடி காணலாம்.

அங்கெல்லாம் புதிதாக தமிழகத்திலிருந்து வரும் நூல்களையும் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களையும்,  இதழ்களையும் பணம்கொடுத்து வாங்குவார். எப்பொழுதும் இவர் கரத்தில் ஏதும் நூல்கள், இதழ்கள் இருக்கும். அவர் அவற்றோடுதான் வாழ்கிறாரோ… என்றும் ஒரு சந்தேகம் எனது மனதில் துளிர்க்கும்.

இவ்வாறுதான் மேமன்கவி ஏறக்குறைய 43 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு மட்டுமல்ல,  ஏனைய கொழும்பு வாழ் இலக்கியவாதிகளுக்கும் அறிமுகமானார்.

அதனால்தான் இவரை இனம்கண்டுகொண்ட மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா தமது இதழில் இளம் தளிர் என்று அறிமுகப்படுத்திவிட்டு 1976 மார்ச் மாதம் வெளியான இதழில் மல்லிகைப்பந்தலின் கொடிக்கால்கள் என்ற அவரது பத்தியில் இவர் பற்றி மேலும் சிறப்பான அறிமுகத்தை பதிவுசெய்திருந்தார்.

கடந்துசென்ற 43 வருடகாலத்தில்  நெஞ்சத்துக்கு நெருக்கமாகவும் அதனால் வாஞ்சையுடனும் அதேவேளை உரிமையுடன் “வாடா… போடா… ” என்று உரசிக்கொண்டும்  இந்த இலக்கிய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

தமிழரல்லாத தமிழர் என்ற அடைமொழியுடன் எம்மால் ஆழ்ந்து நேசிக்கப்படும் மேமன் கவியின் இயற்பெயர் அப்துல் கரீம் அப்துல் ரஸாக். நாம் அவரை மேமன் என்றே செல்லமாக அழைப்போம்.

ஒருநாள் இவர் வசித்த மட்டக்குளி இல்லத்திற்குச்சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு,  இவரை விசாரித்தபோது    ” மேமன் இருக்கிறாரா…?” என்று கேட்டேன்.

இவரது சகோதரி, ” இங்கே எல்லோரும் மேமன் இனத்தவர்தான். நீங்கள் யாரைக்கேட்கிறீர்கள்…? ” என்றார்.

உடனே நான் “மேமன் கவி. கவிதையெல்லாம் எழுதுவாரே….!!! ” என்றேன். “யாரு… பாபுவா…?  அவனுக்கு  மேமன்கவி என்றும் ஒரு பெயர் இருக்கா…? ” என்று ஆச்சரியப்பட்டார் அந்தச்சகோதரி.  எனவே,  இலக்கிய உலகில் இவர் மேமன்கவி, வீட்டில் பாபு. பிறப்புச்சான்றிதழில் அப்துல் கரீம் அப்துல் ரஸாக்.

இவ்வாறு எமக்கெல்லாம் அறிமுகமாகியருக்கும் மேமன் கவி அவர்கள் எந்த மேடையில்  தோன்றினாலும்  முதலில் ” குத்தியானா ஜூனாகட் பாட்வா – ஆகிய பாரத கிராமத்து தத்துவங்களை பத்திரமாய் காத்தவர்களின் – மேமன் புத்திரன் நான். சத்யமாய் பண்டிதன் அல்ல வித்துவமாய் எண்ணியதை கவி சித்திரங்களாக்கிவிட புறப்பட்டுள்ளேன் மனிதர்களைத்தேடி-” எனப்பாடிவிட்டே உரையாற்றுவார்.

இவரது தாய்மொழிக்கு வரிவடிவம் இல்லை என்பது எமக்கெல்லாம் பேராச்சரியம். அதேசமயம் இவர் 1974 இல் சுதந்திரன் பத்திரிகையில் எழுதிய முதல் கவிதை தமிழே என் மூச்சு  என்பதை அறியும்போது பேராச்சரியம் பன்மடங்காக அதிகரிக்கிறது.

இலக்கியப்பிரதியில் இவர் தேர்ந்து எடுத்துக்கொண்டது அக்காலகட்டத்தின் புதுக்கவிதையாக இருந்தபோதிலும்,  படிப்படியாக கட்டுரைகளும், விமர்சனங்களும், திரைப்படங்கள், நூல்கள்  தொடர்பான மதிப்பீடுகளும் எழுதி  பரிமாணம் பெற்று நம்மத்தியில் முழுமையான படைப்பாளியாக வளர்ச்சி பெற்றவர்.

துரிதகதியில்  தமிழ் இலக்கியங்களை பயின்று, 1970 களில் புற்றீசலாகக்கிளம்பிய புதுக்கவிதைதுறையில் ஈடுபட்டு குறுகியகாலத்துள் தனது பெயரை அதில் தக்கவைத்துக்கொண்டார். கவியரங்குகளில் கலக்கினார். எங்கள் நீர்கொழும்பூருக்கும் பல தடவை மேமன்கவியை அழைத்திருக்கின்றேன். அங்கு அவருக்கு ரசிகர்கள் பெருகினர். நீர்கொழும்புக்கு இவர் பிரவேசித்த காலம் முதல் எமது குடும்ப நண்பராகவும் நெருங்கியவர்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பணிகளிலும் இணைந்திருந்தார். மல்லிகையால் அறிமுகமாகி வளர்ந்த மேமன்கவி  காலப்போக்கில் மல்லிகை ஜீவாவின் ஆத்மநண்பராகவும் –   சுருக்கமாகச்சொன்னால் ஜீவாவின் செயலாளராகவும்  உருமாறினார்.   நண்பர் கவிஞர்  ஈழவாணன் நடத்திய அக்னி புதுக்கவிதை இதழிலும் பக்கபலமாக நின்றார்.  ஈழவாணனுக்கு  ஆதரவும்  ஒத்துழைப்பும் வழங்கினார்.

எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம்  1976 இல் மேமன்கவியின் முதலாவது தொகுப்பு யுகராகங்கள் நூலை வெளியிட்டது. இதற்கு எமது  நண்பரும்  இன்றைய தமைசார் பேராசிரியருமான   எம்.ஏ. நுஃமான்  அவர்கள்  முன்னுரை வழங்கினார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் அதற்கு அறிமுகநிகழ்வு நடத்தினோம். அதற்காக என்னுடன் மேமன்கவியும் பயணித்தார். அதுதான் இவரது முதலாவது யாழ்ப்பாணப் பயணம். அன்றுதான் இவர் முதல் முதலில் பனைமரத்தையும் தரிசித்தார்.

அச்சமயம் எங்கள் வீரகேசரி பிரதம ஆசிரியர் (அமரர்)  திரு. க. சிவப்பிரகாசம் சோவியத் நாட்டிற்குச்சென்று வந்து சிரித்தன செம்மலர்கள் என்ற பயணத்தொடரை எழுதிக்கொண்டிருந்தார். அந்த அருட்டுணர்வில், தனது யாழ்ப்பாணப் பயணத்தைப்பற்றி ” சிரித்தன பனைமரங்கள்” என்ற தொடரை எழுதவிரும்புவதாகச்சொன்னார்.

ஆனால், இதுவரையில் இவர் இதனை எழுதவில்லை. எனினும் யாழ்ப்பாணத்தில் வதியும் இலக்கியவாதிகள் அனைவருடனும் இவர் தனது தாடியை தடவித்தடவி  சிரித்துக்கொண்டே  இருக்கிறார்.

அந்த முதல் பயணத்தில்தான் குரும்பசிட்டிக்கு இவரை அழைத்துச்சென்று இரசிகமணி கனகசெந்திநாதன் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.   மேமன்கவியின் ஆற்றலை இனம்கண்டுகொண்ட எங்கள் மூத்த கவிஞர் இ.முருகையன் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்:

” மேமன் கவி எங்களது சிறப்பான அவதானிப்புக்கு உள்ளாகிறார். வேறொரு மொழியைத் தாய் மொழியாகக்கொண்ட அவர், தாம் கற்றறிந்த  இரண்டாம் மொழியின் வாயிலாக, தலைநகரத்துப் பட்டினப்பாக்கத்து  நிலைகளைப்படமாக்கும்போது, குழந்தைகளின்  மழலைகளைக்கேட்டுச்சுவைக்கும் அநுபவம் போல்வதொரு நயம் தோன்றவே செய்கிறது. ஆனால், அவர் கலப்பு  உருவகங்களை ( அல்லது படிமங்களை) அள்ளி அடுக்கி  அடுக்கிச் சொல்லும்போது  நாம் திகைத்து திணறிப்போய்விடுகிறோம். படிமங்களை ஆக்குவதில் அப்படியான ஆசை அவருக்கு. படிமங்களைப்பெருந்தொகையிலே செட்டுமட்டில்லாமல் அள்ளி வீசுவதில் ஓர் அநாயசமான ஆற்றலும் அவருக்கு உண்டு”

இலங்கையிலும் தமிழகத்திலும் 1970 இற்குப்பின்னர் புதுக்கவிதைத்துறையில் பேரெழுச்சி தோன்றியது. சர்ச்சைகளும் தோன்றின. மரபைத்தெரிந்துகொண்டு மீறவேண்டும் என்ற தொனியில் எதிர்வினைகள் வந்தன.

ஒற்றை இரட்டை வரிகளிலும் புதுக்கவிதைகள் வெளியாகின. தமிழகத்தில் வானம்பாடிகள் உருவாகினர். அதன் தாக்கம் ஈழத்திலும் எதிரொலித்தது. மேமன்கவியும் இந்த அலையில் பூத்த மலராக இலக்கிய உலகில் மணம் பரப்பினார். இவரது கவிதைத்தொகுப்புகளுக்கு, கவிஞர்கள் வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான் முதலான தமிழக கவியாளுமைகளும் முன்னுரை தந்தனர்.

சுமார் 300 கவிதைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் பல இசைப்பாடல்களும்  எழுதியிருக்கும் மேமன்கவியின் நூல்களின் வரிசையில்  யுகராகங்கள் (1976) ஹீரோசிமாவின் ஹீரோக்கள் (1982) இயந்திரச்சூரியன் (1982) நாளைய நோக்கிய இன்றில் ( 1990) மீண்டும் வாசிப்பதற்காக (1999) உனக்கு எதிரான வன்முறை (2005) ஒரு வாசகனின் பிரதிகள் (2010) மொழிவேலி கடந்து (2013)  ஆகியன இடம்பெற்றுள்ளன.

இவற்றில் யுகராகங்கள் , உனக்கு எதிரான வன்முறை முதலான நூல்கள் வெளியான தருணங்களில் நான் இவருடன் இருந்தேன். அந்த நிகழ்ச்சிகளில் உரையாற்றும் வாய்ப்பையும்  இவர் எனக்குத்தந்திருந்தார்.

நாளைய நோக்கிய இன்றில் நூலுக்கு இலங்கை தேசிய சாகித்திய விருது 1992  இல்  இவருக்குக் கிடைத்தபோது தொலை தூரத்திலிருந்து வாழ்த்தினேன்.

இவரது கவிதைகள் சில சிங்களம், ஆங்கிலம் மற்றும் ருஷ்யமொழிகளுக்கும் பெயர்க்கப்பட்டிருப்பதாக அறிகின்றோம். தேசிய கல்வி நிறுவனம் வெளியிட்ட ஆசிரியர் பயிற்சி நூலிலும் இவரது கவிதை இடம்பெற்றிருக்கிறது. சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவர் தமது கலைமாணி பாடநெறிக்காக இவரை ஆய்வுசெய்து கட்டுரை எழுதியிருக்கிறார்.

இதில் என்ன அதிசயம் என்றால்— மேமன்கவி கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்புவரையில்தான் கல்வி கற்றார். பின்னர் தந்தையாரின் வர்த்தகத்தை கவனிக்கத்தொடங்கினார்.

ஈழத்து இலக்கிய உலகில் தான் கடந்துவந்த பாதையில் பல தடங்களைப்பதிவுசெய்திருக்கும் மேமன்கவி அவர்களுக்கு ஏப்ரில் 29 ஆம் திகதி 60 வயதாகிறது.

கடந்த  ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில், வெள்ளவத்தை தமிழ்ச்சங்க மண்டபத்தில் மேமன் கவியின் மணி விழாவில் இவரது ஆதிகளின் புதைகுழியிலிருந்து புதிய கவிதைத்தொகுதியும், மனித நேய நேசகன் மணிவிழா மலரும் வெளியிடப்பட்டது.

—-0—-

 

 

Series Navigationஇந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் வெள்ளிக்கு விண்ணுளவி அனுப்பத் திட்டமிடுகிறதுதிடீர் மழை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *