“இன்பப் புதையல்”

author
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 19 in the series 28 மே 2017

என்.துளசி அண்ணாமலை

“வானதி…என் கன்னுக்குட்டி, எங்கே இருக்கே?”

வீட்டுக்குள் வரும்போதே பாசத்துடன் மகளின் பெயரைச் சொல்லி அழைத்தவாறே வந்த கணவனைக் கோபப்பார்வையோடு எதிர்கொண்டாள் ராஜி.

அந்தப் பார்வை தன்னை ஒன்றும் செய்யாது என்ற பதில் பார்வையை வீசிவிட்டு, மகளைத் தேடினான் பிரபு.

வழக்கமாக வானதி ஒளிந்து கொள்ளும் இடங்களைத் தேடிப் பார்த்தவன், அவளைக் காணாது, மனைவியைப் பார்த்தான்.

அவளோ மோவாயில் இடித்துக் கொண்டே சமையற்கட்டுக்குள் புகுந்து கொண்டாள். இது தினமும் நடக்கும் செயல்தான். ஆனாலும் இன்று ராஜியின் முறைப்பில் கொஞ்சம் கூடுதலான கோபம் தெரிந்தது.

‘சரி, இனி இவளைக் கேட்டுப் பிரயோசனம் இல்லை. நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும்.’ என்ற முடிவுக்கு வந்தான்.

தான் கையோடு கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு பெரிய பொட்டலத்தை வெளியே எடுத்தான்.

“ஹூம்… வானதிப் பாப்பாவுக்கு என்று இந்த சக்லெட், பொம்மை எல்லாம் வாங்கி வந்தேன். இப்போ வானதியக் கண்டு பிடிக்க முடியவில்லையே? சரி, பக்கத்து வீட்டு குமாருக்குக் கொடுத்துவிட வேண்டியதுதான்.” என்று சத்தமாகக் கூறிவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தான்.

அவன் எதிர்பார்த்தது நடந்தது.

பூசை அறையிலிருந்து வானதிப் பாப்பா ஓடிவந்து சாக்லெட்டையும் பொம்மையையும் சட்டென்று பிடுங்கிக் கொண்டு, “எனக்குத்தான். நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்.” என்றாள் வீம்புடன்.

சிரித்துக் கொண்டே மகளைத் தூக்கிக் கொண்டான் பிரபு. வானதியின் உடலில் இருந்து வெளிப்பட்ட பவுடர் வாசமும் கூந்தலில் இருந்து வந்த வாசனைத் தைலத்தின் நறுமணமும் அவனுக்கு உகந்ததாக இருந்தது.

சட்டென்று கன்னத்தோடு கன்னம் வைத்து, பின்னர் அன்பு முத்தங்களைப் பொழிந்தான். வானதியின் சுருண்ட கூந்தல் சுருள் சுருளாகக் கன்னங்களிலும் கழுத்தோரங்களிலும் புரண்டு கொண்டிருந்த அழகு மனதைக் கொள்ளை கொண்டது.

மகளைத் தூக்கிக் கொண்டு சோபாவில் வந்தமர்ந்தான். குழந்தை அவன் மடிமீது அமர்ந்து கொண்டாள். அவனிடம் சொல்ல அவளுக்கு நிறைய செய்திகள் இருந்தன.

கரிய கூந்தலை ஒதுக்கிவிட்டு, அந்த அழகு முகத்தை ஏந்தினான்.
“என்னம்மா நடந்தது? அம்மா அடிச்சாங்களா?” என்று வினவினான். அது ஒன்றே போதுமானதாக இருந்தது வானதிக்கு.

சட்டென்று கையிலிருந்த பொருட்களை நாற்காலியின் மீதே விட்டுவிட்டு
கீழே இறங்கி அவனுக்கு எதிரே நின்று கொண்டு, இடுப்பில் இருகைகளை யும் வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

அவள் பேசத்தயாராகி விட்டாள் என்று உணர்ந்தவனாக, அவனும் கேட்கத் தயாரானான். ஐந்து வயது வானதியின் மழலையைக் கேட்கக் கசக்குமா என்ன?

“அப்பா! இன்னிக்கி பள்ளிக்கூடத்துல என்ன நடந்துச்சு தெரியுமா?” பெரிய மனுசி தோரணையில் கேட்டாள்.

“தெரியாதே! என் செல்லக் கன்னுக்குட்டி சொன்னாதானே தெரியும்?”

“எம் பக்கத்தில உக்காருவானே ரேஷ்மன். அவன் என்னோட புத்தகத்தக் கிழிச்சிட்டான்.”

“ஐயையோ! அப்புறம்?”

“ஒடனே எனக்குக் கோபம் வந்திடுச்சிப்பா. நான் அவனப் புடிச்சி கீழே தள்ளிட்டேன்.”

“அதானே…நீ என் செல்லக் குட்டியாச்சே! சும்மாவா? அப்புறம்?”

“ஒடனே டீச்சர் வந்து, என்னை கையை நீட்டச் சொல்லி, ரூலர்ல அடிச்சாங்க!”

“என்னாது? அடிச்சாங்களா? எங்கே, கையக் காட்டு, பார்க்கலாம்.”

நீட்டிய கைகளைப் பார்த்த பிரபுவின் விழிகள் கலங்கின. கைகளின் உட்புறங்கள் சிவந்து, வரிவரியாய்க் கோடுகள் தெரிந்தன. ஆயினும், தன் கண்ணீரை மகளுக்கு முன் காட்டிக் கொள்ளவில்லை. கைகளைப் பற்றி முத்தமிட்டான்.

“ரொம்ப வலிக்குதாடா செல்லம்? இனிமே நீ ரேஷ்மன அடிக்கக்கூடாது. கீழே பிடிச்சி தள்ளக்கூடாது. உங்கூடப் படிக்கிற பிள்ளைங்ககிட்ட அன்பா பழகனும்.
நட்பா இருக்கனும். சரியா?”

வானதி ‘சரி’ யென்று தலையாட்டும்போதே, ராஜி ரௌத்திரத்தாரியாக அங்கு வந்து நின்றாள்.

“பள்ளிக்கூடத்தில உங்க பொண்ணு என்ன செஞ்சிட்டு வந்திருக்கிறா தெரியுமா? அது தெரியாம கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க?”

மனைவியை முறைத்துப் பார்த்தான் பிரபு. அந்த நேரத்தில் அவளைப் பார்க்கவே பிடிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் மகளைக் குறை சொல்லுவதே அவளுக்கு வேலையாகிவிட்டது. மகள் என்ற அன்போ, பாசமோ கிஞ்சிற்றும் இல்லையே!

சட்டென்று மகளைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தான். வாசலை ஒட்டிய தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த ஊஞ்சல் அவர்களை ‘வாங்க, வாங்க’ என்று அழைப்பதைப் போல அசைந்து ஆடியது.

வானதியை மடியில் வத்துக் கொண்ட நிலையில், பிரபு ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான். அவனுடைய மனம் கனத்துப் போயிருந்தது. வயதான பின்னர் அவர்களுடைய வாழ்க்கையில் இன்பப்புதையலாக, என்றென்றும் போற்றிக் காக்கவேண்டிய பொக்கிஷமாக வந்த குழந்தை. இளமை தந்த சுகத்தில் வாழ்க்கையை இழந்த இளம் பெண் ஒருத்தி வேண்டாம் என்று வீசியெறிந்த குழந்தை. அது தனக்கு இறைவன் தந்த வரப்பிரசாதம் என்று போற்றிப் பாதுகாத்து வளர்க்கும் செல்வம். இனி ராஜிக்குக் குழந்தையே பிறக்காது என்ற நிதர்சனமான உண்மைக்குப் பிறகு கிடைத்த அந்த ஒரு குழந்தையை அன்போடும் பாசத்தோடும் வளர்க்க, ராஜிக்குப் பொறுமை இல்லை. அன்பில்லை. மனதில் கிஞ்சிற்றும் பாசமில்லை.

‘வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவள் பெற்ற குழந்தை! அப்பன் பெயர் தெரியாத அழுக்கு! அதற்கா நான் அம்மாவாக இருக்கவேண்டும்? அது ஒருக்காலும் நடக்காது!’ என்று என்றோ தீர்க்கமாக தீர்மானம் செய்து விட்டாளே! அவளுக்கா உள்ளத்தில் பாச ஊற்று ஊறும்?

ஆனால் அதே சமயத்தில் தன் உடன்பிறந்தவர்களின் பிள்ளைகள் வந்து விட்டலோ, வீடே இரண்டு பட்டுவிடும். அவர்களுக்குப், பிடித்த உணவுவகைகள், விளையாட்டுப் பொருட்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்து, கையில் இருக்கும் காசை முடித்துவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பாள்.

“அப்பா, கை வலிக்குதுப்பா!” என்ற மகளின் மழலைக் குரல் அவன் கவனத்தை ஈர்த்தது. குனிந்து மகளைப் பார்த்தான். குவளைமலர் விழிகளை மேலும் மலர்த்தி, அவனை ஏக்கத்துடன் பார்த்தாள்.

அந்தப் பார்வையின் தாக்கம் அவனை என்னவோ செய்தது. தன்னை நோக்கி நீட்டிய அவளுடைய கரங்களை அன்புடன் பற்றிக் கொண்டான்.

“ஆசிரியை உன் ரெண்டு கையிலயும் அடிச்சிட்டாங்களே? நாளைக்கு நான் பள்ளிக்கூடத்துக்கு வந்து ஆசிரியயைக் கேட்கிறேன். நீ அழாதே செல்லக்குட்டி.”

“ஹூகும்…வேண்டாம்ப்பா. ஆசிரியை இந்தக் கையில ஒரு அடிதான் அடிச்சாங்க.”

பிரபு திடுக்கிட்டான்.

“அப்படீன்னா கையில எப்படி இவ்வளவு காயம் வந்துச்சும்மா?”

சில கணங்கள் அப்பாவைப் பார்த்துவிட்டு, “அம்மாதான் அடிச்சாங்கப்பா. நான் ‘சோரி, சோரி’ன்னு சொல்லியும் அம்மா ரோத்தான்ல அடிச்சிட்டாங்கப்பா. ரொம்ப வலிக்குதுப்பா.”

குழந்தையின் விழிகளில் மளுக்கென்று கண்ணீர் பெருகி, வெள்ளிமணிகளாய் கன்னங்களில் வழிந்தோடியது.

பிரபுவின் இதயமே கசந்தது. ‘இப்படியும் ஒருத்தி இருப்பாளா? சே, என்ன கல்மனசு இவளுக்கு? ராட்சஷி! இவள் திருந்தவே மாட்டாளா?’

பிரபுவுக்கு முன்பொரு சமயம் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

வானதிக்கு, தான் பார்த்த சம்பவங்களை அப்படியே கதைபோல சொல்லும் ஆற்றல் அதிகம். அதுவும் நாடகபாணியில் நடித்துக் காட்டுவதில் மிகவும் கெட்டிக்காரி.

சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட ஒரு சம்பவம். மலேசியாவே பார்த்துப் பதறி அழுத காட்சி அது!

பேரங்காடியில் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட ஒரு சிறுமியை, கடத்தியவன் எவ்வாறு அடித்து சித்திரவதை செய்து, கிள்ளான் ஆற்றில் தூக்கி வீசினான் என்று பாவத்தோடு வானதி விளக்கியது இந்தப் பிறவி முழுமைக்கும் மறக்காது!

ஆனால் அதைக் கேட்டு மற்றவர்கள் பாராட்டிப் பேசியபோது, ராஜிமட்டும் என்ன செய்தாள், தெரியுமா? நாளிதழை மொத்தமாகச் சுருட்டி, பலங்கொண்ட மட்டும் வானதியின் முகத்தில் பட் பட்டென்று பலமுறை அடித்தாளே! அது ஒருக்காலும் மன்னிக்கமுடியாத செயல்!

அதுமட்டுமா? அழகான வானதியின் கன்னத்தில் பழுக்கக் காய்ச்சிய கரண்டியால் சூடு போட்டு ரசித்தாளே? இவளுக்கு என்ன, மனநோயா என்று பலமுறை யோசித்ததுண்டு. எவ்வளவு அறிவுறுத்தியும் அவள் திருந்துவதாக இல்லை. வானதி மனப்பாடமாகப் பேசும் வசனங்களைக் கேட்டால், உடனே முகத்திலும் வாயிலும் அடித்து, “பேசாதே! வாயை மூடு!” என்று கண்டிப்பாள்.

சில சமயங்களில் தான் வேலைக்குச் சென்றிருக்கும் வேளைகளில், குழந்தையை எப்படியெல்லாம் அடித்துச் சித்திரவதை செய்கிறாளோ என்ற கவலையே பெரிதும் வாட்டியது. அதற்கேற்றாற் போல இன்றைய சம்பவம் நடந்திருக்கின்றதே!

இதற்கு என்னதான் முடிவு? எப்படி தீர்வு காண்பது? பேசாமல் அம்மாவிடம் அனுப்பி வைத்து விடுவோமா? என் ஏக்கத்தைவிட, வானதியின் பாதுகாப்புதானே மிகமுக்கியம்?’

மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

“செல்லம், நாம கடவுள்கிட்ட வேண்டிக்குவோம். இனிமே அம்மா அடிக்கக் கூடாது, சாமின்னு கும்பிடுவோம். சரியா?”

நிமிர்ந்து தந்தையை பார்த்தவள், சில கணங்களுக்குப் பின்னர், “சரீப்பா!” என்றவாறு கைகளை நெஞ்சுக்கு நேராகக் குவித்து, விழிகளை மூடி, இறைவனை வணங்கினாள். மகளின் அந்தச் செயல், மனதை நெகிழச் செய்தது.

பிரபுவும் மனதுக்குள் இறைவனை இறைஞ்சினான். சில நிமிடங்களுக்குப் பிறகு விழிகளைத் திறந்தபோது, வானதி, “அப்பா, தெரியாமா? அந்த வீட்டுல நிறைய பேபிங்க வந்திருக்காங்க…..நான் பார்த்தேனே?” என்றாள் ஆர்வத்துடன்.

“ஆமாண்டா செல்லம்! எதிர்வீட்டுல மூனு பாப்பாங்க இருக்காங்க. நானும் பார்த்தேனே.” என்றான்.

“அப்பா! இனிமே நான் பள்ளிக்கூடம் விட்டு வந்தா, அவங்களோட வெளையாடலாமா?”

“ஓ…வெளையாடலாமே! ஆனா, அந்தப் பாப்பாங்களால ஓட முடியாதே. உட்கார்ந்துதான் வெளையாடனும். நம்மளோட பொம்மைகளையெல்லாம் எடுத்துக்கிட்டுப் போய் வெளையாடலாம். ஆனா, முதல்ல அந்தப் பாப்பாங்களோட அம்மாகிட்ட அனுமதி கேட்கனும், என்ன? அதுவரைக்கும் பொறுமையா இருக்கனும், சரியா?”

பிரபு சொல்லிக் கொண்டிருக்கும்போது, உள்ளில் இருந்து ராஜி வந்தாள். அவளும் வானதி சொன்னதைக் கேட்டாள்.

“ஆமாம். இப்போது அது ஒன்னுதான் கொறைச்சல். பேசாம வாயை மூடிக் கொண்டு இரு, தெரியுதா?” என்று வெடித்தாள்.

பிரபு அவளை வெறுப்புடன் பார்த்தாள்.

“ஏன்? அந்தப் பிள்ளைகளைப் போல நம்முடைய குழந்தையும் இருந்தால், உனக்கு நிம்மதியாக இருக்கும் இல்லையா? அப்படி இருந்தால், வானதி ஓடமாட்டாள், ஓடியாடி விளையாடமாட்டாள். பாடமாட்டாள். கதை சொல்லமாட்டாள். பசிச்சா பால் வேணும்னு கேட்டு அழமாட்டாள். தூங்குகிறாளா, முழிச்சிக்கிட்டு இருக்கிறாளா என்று கவலைப்பட வேண்டாம். வேளைக்கு பாலோ, சோறோ கொடுக்க வேண்டாம். நிம்மதியா பக்கத்து வீட்டுல போய் உட்கார்ந்துகிட்டு வெட்டிக்கதை பேசலாம். இல்லையென்றால், டீவியில மெகா சீரியல் பார்க்கலாம். யார் மேலயாவது வெறுப்புவந்தால், உடனே குழந்தையை வெறி அடங்கிறவரைக்கும் அடிக்கலாம். சூடுவைக்கலாம். இன்னும் கொஞ்சம் ஒருபடி முன்னேறி, கொதிக்கிற சுடுதண்ணியையோ, எண்ணையையோ அந்தக் குழந்தை மேல கொட்டலாம். எப்பவல்லாம் உனக்கு வெறி பிடிக்கிறதோ, அப்பவல்லாம் நியூஸ் பேப்பர சுருட்டி, குழந்தையோட மொகத்துல அடிக்கலாம். இதற்கெல்லாம் வசதி என்னன்னா, நம்ம குழந்தை, எதிர்வீட்டுக் குழந்தைங்க மாதிரி மனவளர்ச்சியோ, உடல் வளர்ச்சியோ இல்லாமல் இருந்தால், உனக்கு சொர்க்கவாசலே திறந்த மாதிரி இருக்கும். வாழ்க்கையே இன்பப் புதையலாத் தெரியும், இல்லையா? என்ன செய்வது, நமக்கு அழகான, அறிவாளியான குழந்தை வந்து வாய்ச்சிடுச்சே! இறைவா! வளர்ச்சி இல்லாத அந்த மூன்று குழந்தைகளை அந்தத் தாய் என்னமாய் அன்போடும் பாசத்தோடும் பார்த்துப் பார்த்து வளர்க்கிறாங்க! அவங்களுக்கு என் வானதி மகளாப் பிறந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக அவளை வளர்ப்பாங்க? வானதி! நீ கொடுத்து வைக்கலம்மா! நீ சொன்னபடி, வா, நாம் போய் கடவுளை வேண்டுவோம்.”

பிரபு வானதியுடன் வீட்டுக்குள் சென்றான்.

அவன் சொன்ன வாக்கியங்களின் சாராம்சம் செவிவழி இதயத்துக்குள் மெதுமெதுவாக இறங்க, யாரோ தன் முகத்தில் பலங்கொண்டமட்டும் அறைந்தாற்போல அதிர்ந்து போய் நின்றாள் ராஜி.

ஆக்கம்: என்.துளசி அண்ணாமலை
செனவாங், மலேசியா

Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *