சங்க இலக்கியத்தில் மறவர்

author
2
0 minutes, 8 seconds Read
This entry is part 11 of 12 in the series 16 ஜூலை 2017
மீனாட்சிசுந்தரமூர்த்தி
மூன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்து அகமென்றும், புறமென்றும் பகுத்து வாழ்க்கை என்னும் உரைகல்லில் தரம் பார்த்து வாழ்ந்தவர் தமிழர். முன்னர் இவர் கண்டது குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை,கைக்கிளை,
பெருந்திணை எனஅகத்திற்குஏழுதிணையும்,வெட்சி,வஞ்சி
உழிஞை,தும்பை,(நிலம் உள்ள முதல் நான்கனுக்கு)
வாகை(பாலைக்கு, நிலமற்றது,மழையின்றி வறட்சியால் குறிஞ்சியும் முல்லையுமே பாலையாகும்)
பாடாண்(கைக்கிளை என்னும் ஒருதலைக் காமத்திற்கு)
காஞ்சி(பெருந்திணை என்னும் பொருந்தாக் காமத்திற்கு)
எனப் புறத்திற்கு ஏழு திணையுமாகும் என்பார் தொல்காப்பியர்.
இனக்குழுக்கள் முடியாட்சியாக உலகெங்கும் மலர்ச்சி பெற்றிருந்த காலமது.மக்கள்தம் வாழ்வும் காதல்(அகம்)
வீரம்(புறம்)எனக் கண்ணிரண்டானது.
வீரம் ` மறம்` எனவும் குறிக்கப்பெற்றது.பதினெண் மேற்கணக்கு நூல்களான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் மறம் பற்றியும் மறவர்களைப் பற்றியும் அதிகம் பேசுகின்றன.
மறவர்கள் எனும் சொல் மறத்தை(வீரம்) உடையவர்கள்
எனவும், மக்களில் ஒரு பிரிவினர் எனவும் சுட்டப்பெறுகிறது.
இங்கு நாம் முதலில் வீரர் எனக் காட்டும் சான்றுகள் காண்போம்.இவர்கள் வாட்குடி மறவர்,வெட்சி மறவர்,கரந்தை மறவர், வாகை மறவர் முதலாக பத்து பிரிவினர் ஆவர்.சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவினை வாழ்த்திப் பாடிய பேய்மகள் இளவெயினியார்
   ` மறம் பாடிய பாடினியும்மே
    ஏறுடைய விழுக்கழஞ்சின்
    சீறுடைய இழை பெற்றிசினே `(புறம் 11) மன்னனின் வீரம் பாடிய பாடினி பொன்னாலான அணிகலன் பெற்றாள் என்கிறாள்.
 சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை தாமப்பல் கண்ணனார் வாகைத்திணை அரசவாகைத் துறையில்
பாடிய பாடலில்
           தேர்வண் கிள்ளி தம்பி வார்கோல்
            கொடுமர மறவர் பெரும (புறம் 43)
என வீரர்களின் தலைவன் என்கிறார்.
அதியமானை ஔவையார் வாகைத்திணை அரசவாகைத்
துறையில் அவனோடு போரிட்ட மன்னர்,
          மறங்கந்தாக நல்லமர் வீழ்ந்த
         நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென
         வாள்போழ்ந்(து) அடக்கலும் உய்ந்தனர் (புறம் 93)
என்கிறார்.வீரமரணம் அடையாது நோய்வாய்ப்பட்டு இறப்பது இழுக்கென்பது மரபு.
ஆடுதுறை மாசாத்தனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளி வளவன் இறந்தபோது,
  திணை-பொதுவியல் ,  துறை-கையறுநிலை
`நனிபேதையே நயனில் கூற்றம்
————————————
ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும்
—————————————–
————–கடந்தட்டு என்றும்நின்
வாடுபசி அருத்திய`(புறம் 227)
                     மன்னனை நன்றியின்றி உயிர் கொண்டனையே என்கிறார்.
கோடை பாடிய பெரும்பூதனார்,
திணை-கரந்தை,  துறை-செருமலைதல்
`ஏறுடைப் பெருநிறை பெயர்தரப் பெயராது
இலைபுதைப் பெருங்காட்டு தலைகரந் திருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்`(புறம்259)
முன்னரே கூறிய பகைவரின் ஆநிறை கவர்ந்து மீட்க வரும்
கரந்தைமறவரைத்தாக்கிடகாட்டினில்மறைந்திருக்கிருக்கும்
வெட்சி மறவர்கள் இவர்கள்.
கழாத்தலையார் பாடிய பாடல்,
திணை-கரந்தை,  துறை-கையறுநிலை
`சிறுவர் தாயே பேரிற் பெண்டே
நோகோ யானே நோக்குமதி நீயே
மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை
இன்னிசை கேட்ட துன்னரும் மறவர்`(புறம் 270)
`உமை` என்னும் போர் முரசத்தின்ஒலி இன்னிசையாகப்
போருக்கெழும் மறவர்களை வென்று மறக்குடிப் பெண்ணின் மகன் மாண்டதைச் சொல்லும்.
`
விரியூர் நக்கனார் பாடல்,
 திணை-வாகை, துறை-மூதின்முல்லை
(போரில் வென்று வந்த தொன்மை வாய்ந்த மறக்குடி வீரனின் வாளின் சிறப்பு கூறல்)
`பிறவேல் போலா தாகி இவ்வூர்
 மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே`(புறம் 332)
சேரமான் வெல்கெழு குட்டனை பரணர் பாடிய பாடல்,
 திணை-வாகை, துறை-மறக்களவழி
`நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள்மின் னாக`(புறம்-369)
போர்க்களத்தை ஏர்க்களமாகச் சொல்லும்.
இங்ஙனம் வீரம் செறிந்த மறவர்களுக்காக எழுந்தவையே
நடுகற்கள்.இவற்றைப் பற்றிய செய்திகளைஇலக்கியங்கள்
பரவலாகப் பேசுகின்றன.
`பீடும் பெயரும் எழுதி பீலி
சூட்டிய பிறங்கு நிலை நடுகல்`
   வீரனின் பெயர்,சந்தித்த போர்க்களங்கள்,வீரமரணம் எய்தியது என்பன எழுதப்பெற்று நாற்சந்தி,முச்சந்திகளில்
மயிலின் தோகையால் அலங்கரித்து நடப்படும்.
`விழுத்தொடை மறவர் வில்லிடத்
தொலைந்தோர் எழுத்துடை நடுகல்`(ஐங்குறு நூறு-352)
`மரம்கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்`(அகம்-343)
இத்தகு நடுகற் கல்வெட்டுகள் 2006ல் புலிமான் கோம்பை (தேனி),தாதப்பட்டி(திண்டுக்கல்)
2012ல் பொற்பனைக்கோட்டை (புதுக்கோட்டை) ஆகிய
இடங்களில் கிடைத்துள்ளன.
இனி மறவர் எனப்படுபவர் ஓர் இனம் எனக்
கொண்டு அறியவரும் செய்திகள் காண்போம்.
பாலை நிலமக்கள் மறவர்,மறத்தியர் ஆவர்.இவர்களின்
தொழில வழிச்செல்வோரை மறித்துக் கொள்ளையடிப்பது
ஆகும்.இவர்களின் தெய்வம் கொற்றவை,இவர்கள் மன்னர்களின் படைத் தளபதிகளாகவும் இருந்தனர்
.
துவர்செய் ஆடைச் செந்தொடை மறவர்`(நற்றிணை-33)
`வருநர்ப் பார்க்கும் வங்கண் ஆடவர்`(குறுந்தொகை-274)
இவை வழிப்பறி செய்தமைக்குச் சான்றாம்.
மூவேந்தர்தம் படைத்தளபதிகளாய் இருந்தமைக்குச்
சான
சான்றுகளாவன,
`மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும்`(அகம்-27)
`திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்`(புறம்-179)
இவன் நாலைக்கிழவன் நாகன்.
`இழையணி யானைச் சோழன் மறவன்` (அகம்-326)
இவன் பொருநர்க் கிழவன் பழையன்.
`வசையில் வெம்போர் வானவன் மறவன்` (அகம்-143)
இவன் சேரர் படைத்தலைவன் பிட்டன்.
மறவர்களின் ஆயுதம் வளரி என்பதாகும்.மானுடவியல்
கூற்றின்படி மனிதனின் முதல் ஆயுதம் ஈட்டி, இரண்டாவது
ஆயுதம் ஆஸ்த்திரேலிய,எத்தியோப்பிய,நைஜீரிய,ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் ஆயுதமான ` பூமராங்` என்பதாகும். இது
நம் மறவர்களின் வளரியே.
வளரி இளம்பிறை வடிவமானது.போர்க்களத்தில் தப்பி ஓடுபவர்களைப் பிடிக்க உதவும் வளைதடி போன்றது.
`கிடின்என இடிக்கும் கோல்தோடி மறவர்`(நற்றிணை-48)
இதனை ஒத்திருக்கும் ஆயுதங்கள் வளைதடி,பாறாவளை,சுழல்படை,படைவட்டம் என்பனவாம்.இலக்கியங்களில் இது திகிரி எனவும் குறிக்கப்பெறுகிறது.
`மறப்போர் அகுதை குண்டுநீர் வரைப்பின் கூடல்`என்பது
குறிக்கும் அகுதை என்பவன் பயன்படுத்திய ஆயுதம்,
பொன்புனை திகிரி(உலோகத்தாலான சக்ராயுதம்) எனப்
படுகிறது. (புறம்-233)
மறவர்களின் ஓர் பிரிவினரான  அகத்தா மறவர்களின்
மூதாதையாக இவனைக் கொள்வர்.இவர்களின் மண்டபம்
திருப்பரங்குன்றக் கோயில் அருகில் உள்ளது.இவர்கள்
திருப்பரங்குன்றம்,திருச்சுழி,வருசநாடு,வத்திராயிருப்பு,
அருப்புக்கோட்டை போன்றபகுதிகளில்காணப்படுகின்றனர்
 வளரியை வேட்டையின்போது பயன் படுத்துகின்றனர்.
வளரி எறிதல் போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன.
இராமநாதபுரம் சேதுபதி,புலித்தேவர் மருதுசகோதரர்கள் மற்றும் அவர்களின் படைத்தளபதிகளான வைத்தியலிங்கம்,தொண்டைமான் ஆகியோர் வளரியையே
படைக்கலனாகக் கொண்டிருந்தமை தெரியவருகிறது.
 இத்தகு பெருமை வாய்ந்தவர் நாம்,கல் தோன்றி மண் தோன்றும் முன்னர் வாளோடு தோன்றி உலகிற்கு நயத்தக்க நாகரிகம் சொன்னவர் நம் முன்னோர்.
இவர்களைப் போல் நாம் வீரம் விளைக்க வேண்டாம்.
கண்ணெதிரில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு நெட்டைப் புலம்பலோடு நின்றுவிடாமல் எதிர்க்குரலாவது
எழுப்பலாம் அல்லவா?

(இக்கட்டுரை  01-07-17 அன்று புதுவை குறளிசைக்கூடு என்னும் இலக்கிய அமைப்பில் நான் பேசியது.)

மீனாட்சிசுந்தரமூர்த்தி
அலைபேசி-9791707673
Series Navigationநவீனத் தமிழ்க்கவிதைப் புலத்தில் ஈழத்துப்பெண் கவிஞர்கள்கடல் கொண்ட மனிதர்கள் : சூறாவளி(குறுநாவல்) [ஆசிரியர் லெ கிளேஸியோ, பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு சு. ஆ வெங்கட சுப்புராய நாயகர்]
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    வளவ. துரையன் says:

    பேச்சுக்காக எடுத்த குறிப்புகள் கட்டுரையின் ஆக்கத்தின் போது விரிவாக்கப்படவேண்டும் கட்டுரை மீனாட்சியின் உழைப்பைத் தெரிவிக்கிறது. பாடல்களுக்கு விளக்கங்கள் அளித்திருக்கலாம்

  2. Avatar
    BSV says:

    //கண்ணெதிரில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு நெட்டைப் புலம்பலோடு நின்றுவிடாமல் எதிர்க்குரலாவது
    எழுப்பலாம் அல்லவா?//

    எழுப்பலாம்தான். ஆனால் குண்டர்சட்டத்தில் பிணையில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்கப்படுவீர்கள். :-)

Leave a Reply to BSV Cancel reply

Your email address will not be published. Required fields are marked *