“In spite of language, in spite of intelligence and intuition and sympathy, one can never really communicate anything to anybody. The essential substance of every thought and feeling remains incommunicable, locked up in the impenetrable strong room of the individual soul and body. Our life is a sentence of perpetual solitary confinement.”
_ ALDOUS HUXLEY (Noteworthy English writer, novelist, philosopher)
”மொழி, அறிவு, உள்ளுணர்வு இரக்கம் எல்லாம் இருப்பினும் ஒருவரால் ஒருபோதும் எதையும் எவர்க்கும் சொல்லிவிட இயலாது. எந்தவொரு எண்ணத்தின் அடிப்படையான சாரமும் உணர்வும் பிறரிடம் தெரிவித்துவிட முடியாததாகவே இருக்கின்றன; ஒவ்வொரு தனி ஆன்மா, உடலின் ஊடுருவ முடியாத உறுதியான அறையில் பூட்டப்பட்டிருக்கின்றன. நம் வாழ்க்கை என்றுமானவொரு தனிமைச் சிறைவாச தண்டனை.”
(மொழிபெயர்த்ததைத் திருப்பி வாசிக்கும்போது அதை இன்னும் நன்றாக மொழிபெயர்க்க முடியும், மொழிபெயர்க்கவேண்டும் என்று தோன்றியது. அடுத்தமுறை – நாளையோ, நான்கு வருடங்கள் கழித்தோ – மொழிபெயர்க்கும்போது இப்போதைய மொழிபெயர்ப்பு நிச்சயம் வேறுவிதமாக மாறியிருக்கும் என்று தோன்றியது. – latha ramakrishnan)
மேற்கண்ட வரிகளில் ஆல்டஸ் ஹக்ஸ்லி வரைபடமிட்டுக் காட்டியிருக்கும், தனிவழிப் பாதையில் போய்க்கொண்டிருந்தார் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்).
மனதிற்குள் நிறைந்து தளும்பி நிற்குமோர் உணர்வு, அதை வாய்மொழியாக வெளிப்படுத்துவதற்கு சரியான வார்த்தைகள் அல்லது எண்ணத்தெளிவு கிடைக்காமல் தொண்டைக்குழிக்குள் சிக்கிக்கொண்டு மூச்சடைத்துக் கொண்டிருக்கையில் ஆல்டஸ் ஹக்ஸ்லி அதை அத்தனை அனாயாசமாக, அத்தனை துல்லியமாக வெகுகாலத்திற்கு முன்பே எழுதிவைத்துவிட்டுப் போயிருப்பதை ‘கூகுள் சர்ச்’இல் கண்டெடுக்க நேர்ந்தது புதையல்களிலெல்லாம் தலையாய புதையலாக மனதை நெகிழச் செய்து நிலைகுலையவைத்ததில் ஏற்பட்ட நிறைவுக்கு ஒரு வாசகராகிய தன்னால் என்ன கைம்மாறு செய்துவிட முடியும் என்று எண்ணி யெண்ணிப் பரிதவித்துப் போனார். அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.)
ஒரு மொழிபெயர்ப்பாளராக அந்த வரிகளைத் தமிழாக்கம் செய்யும் ஆர்வம் தவிர்க்கமுடியாமல் எழுந்தது….
எங்கு பார்த்தாலும் அருவமாய்க் காத்திருக்கும் கல்லெறிகைகள் (கல்லெறி கைகள் / கல்லெறிகைகள்) ஒரு சொல்லைச் சுட்டியே மொழிபெயர்ப்பு மொத்தத்தையும் சொத்தையாக்கிக் காட்டுவதில் கருமமே கண்ணாயினர்…..
ஒரு கணம் சற்றே தயங்கிய கை மறுகணம் தன் கைவசப்பட்ட மொழியாக்கத்தைச் செய்து முடித்தது.
”மொழி, அறிவு, உள்ளுணர்வு இரக்கம் எல்லாம் இருப்பினும் ஒருவரால் ஒருபோதும் எதையும் எவர்க்கும் சொல்லிவிட இயலாது. எந்தவொரு எண்ணத்தின் அடிப்படையான சாரமும் உணர்வும் பிறரிடம் தெரிவித்துவிட முடியாததாகவே இருக்கின்றன; ஒவ்வொரு தனி ஆன்மா, உடலின் ஊடுருவ முடியாத உறுதியான அறையில் பூட்டப்பட்டிருக்கின்றன. நம் வாழ்க்கை என்றுமானவொரு தனிமைச் சிறைவாச தண்டனை.”
மொழிபெயர்த்ததைத் திருப்பி வாசிக்கும்போது அதை இன்னும் நன்றாக மொழிபெயர்க்க முடியும், மொழிபெயர்க்கவேண்டும் என்று தோன்றியது. அடுத்தமுறை – நாளையோ, நான்கு வருடங்கள் கழித்தோ – மொழிபெயர்க்கும்போது இப்போதைய மொழிபெயர்ப்பு நிச்சயம் வேறுவிதமாக மாறியிருக்கும் என்று தோன்றியது.
தன் மொழிபெயர்ப்பு குறித்த அரைகுறை நிறைவு ணர்வோடு மீண்டும் நடக்கத்தொடங்கியபோது தன்னை யாரோ பின்னுக்கிழுத்து சுரீரென்று எதையோ தன் மேற்கைக்குள் தைப்பதுபோல் உணர்ந்தார் அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.)
வழக்கம்போல் ஓர் அருவக்கை. ஆனால், வழக்கத்திற்கு மாறாக அந்த அருவக்கையில் கல்லுக்கு பதிலாக கூரான ஊசியிருந்தது.
தன்னையுமறியாமல் பின்னுக் நகர்ந்துகொண்டவர் ”என்ன செய்கிறீர்கள்?” என்றார்.
“பார்த்தால் தெரியவில்லை? உன்னைப் பொருட்படுத்து கிறேன்.”
ஒன்றும் புரியாமல் முகமென்று தோராயமாகக் கணக்கிட்டுக்கொண்ட ஒரு வெற்றிடத்தை நோக்கி அண்ணாந்து பார்த்தவாறு கூறினார்: “என்ன சொல்கி றீர்கள்?”
“என்ன கருமாந்திரத்துக்கு எழுதுகிறாய் நீ? எட்டியுதைத்தால் எகிறிப்போய் எங்கேயோ குப்புற விழுவாய் – செய்யவா?”
அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய படைப்பாளி (ஒரு மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.) “எனக்கு எழுதப் பிடிக்கும் , எழுதுகிறேன் _” என்று சொல்லி முடிப்பதற்குள்
“ என்னது? எழுதப் பிடிக்குமா? என் அனுமதி கேட்காமல் எப்படி எழுதுவாய் நீ. அத்தனை ‘தில்’லா உனக்கு?” என்ற கேள்வி ஓர் அணுகுண்டுபோல் பாய்ந்துவந்து தாக்கியது.
அதிர்ச்சியில் உறைந்துபோன அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.)க்கு எதுவும் புரியவில்லை.
“என்ன இப்பிடிப் பேயடித்தாற்போல் பார்க்கிறாய்? உன்னுடைய அந்தப் புத்தகத்தில் ‘சொன்னான்’ என்று எழுதாமல் ‘கூறினான்’ என்று எழுதியிருக்கிறாயே கூறுகெட்டு… வெட்கமாயில்லை?”
“கூறினான் என்று எழுதினால் என்ன தப்பு?” என்று இவரால் கேட்காமலிருக்க முடியவில்லை.
“எதிர்த்துப் பேசினால், ஒரே அப்பு அப்பிடுவேன். அதுசரி, மூலநூலில் பேச்சுவழக்கில் இருக்கும் உரையாடலை செந்தமிழில் மொழிபெயர்த்திருக்கிறாயே – என்ன திமிர் உனக்கு”
சன்னக் குரலில் பதிலளித்தார் இவர். “இதில் என்ன திமிர் இருக்கிறது? மூலமொழியில் பயன்படுத்தப்படும் வட்டார வழக்கு எனக்குத் தெரியாது. நான் இலக்குமொழியில் எனக்குத் தெரிந்த வட்டாரவழக்கில் எழுதினால், மூல நூலில் இடம்பெறும் வட்டார வழக்கு இது இல்லை என்று திட்டித் தீர்ப்பீர்களே!”
“திட்டித் தீர்ப்போம்தான் – இரண்டு தட்டு தட்டவும் செய்வோம். ஒண்டியாளாக, எந்தக் குழுமத்தையும் சேராதவர்களாக இருந்தால் எங்கள் வேலை இன்னமும் சுலபம். தேவைப்பட்டால் ஒரே போடாப் போட்டு ஆளைத் தீர்த்துக்கட்டுவதும் உண்டுதான். என் பலத்தைப் பார்க்கிறாயா_”
அருவக்கை இவரின் தோளைப் பிடித்துத் தள்ள, நிலைகுலைந்து விழப்பார்த்தார் . அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.)
“இந்தா, நட்புக்கரம் நீட்டுகிறேன். பிடித்துக்கொள். இதோ, இன்னொரு கையால் இன்னொரு முறை ஊசியால் குத்தப்போகிறேன். நான் எந்த அளவுக்கு உன்னை ஊசியால் குத்துகிறேனோ அந்த அளவுக்கு உன்னைப் பொருட்படுத்துகிறேன் என்று அர்த்தம். புரிந்துகொள்”
ஊசி குத்திய இடம் வலித்தது. தன்னை நோக்கி நீண்ட ஆனானப்பட்ட நட்புக்கரத்தை ஏற்காமல் தட்டிவிட்டார்.
“நாலெழுத்து எழுதிவிட்டால் உன் தலையில் கிரீடம் ஏறிவிட்ட மிதப்பா?” அருவக் கையின் குரல் சீறியது.
சீக்கிரம் போயாகவேண்டும். செய்யவேண்டிய எழுத்துவேலையை இன்றே செய்துகொடுத்தால்தான் இரண்டு பிறவிகளுக்குப் பிறகாவது ஏதாவது சன்மானம் கிடைக்க வழியுண்டு….
.“நீ ஒரு எழுத்தும் எழுதாமலேயே நொடியில் நீதிதேவன் ஆகிவிட்ட மிதப்பில் பேசுகிறாயே – அது மட்டும் நியாயமா? – தன்னை மீறிக் கேட்டுவிட்டார் அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.)
அருவக்கைக்குரிய புருவங்கள் நெரிந்து கண்களில் தீப்பொறி பறப்பதை சுற்றிலும் பரவிய வெப்பக்காற்றால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
“முதலில் இதற்கு பதில் சொல். மூலநூலில் ஆப்பிரிக்காவில் கதை நடைபெற்றால் மொழிபெயர்ப்பில் அந்த வட்டார வழக்கை நீ கொண்டுவரத்தான் வேண்டும். அதைச் செய்தால்தான் மரியாதை”
“விமானத்தில் ஆப்பிரிக்காவிற்குச் செல்ல எனக்குப் பணவசதியில்லை. ரயிலில் செல்வதுபோல் விமானத்தில் ’வித் அவுட்’இல் செல்லமுடியுமா தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் என் புரவலராக மாறி எனக்கு நிதியுதவி செய்ய முன்வந்தாலும் வயதான அப்பாவையும்,நோயாளி வாழ்க்கைத்துணையையும் தவிக்கவிட்டு என்னால் ஆப்பிரிக்காவுக்கெல்லாம் செல்ல முடியாது” என்று இவர் உதடுகளுக்குள்ளாய் முணுமுணுத்துக் கொண்டபடி, “அது மிகவும் சிரமம்” என்று பலவீனமாய் முனகினார்.
“சைத்தானே, சொல்வதைச் சப்தமாகச் சொல். இல்லையென்றால், நீ செத்தாய்”, என்று இரைந்தது அந்த அருவக்கையின் குரல்.
“நான் சொல்லவந்தது இதுதான்: நான் மொழிபெயர்த்தி ருக்கும் அந்தக் கதை கனவுக்குள்ளான கனவுக்குள் நிகழ்கிறது”
”புத்திசாலித்தனமாக பதிலளிப்பதாக நினைப்பா? இந்த வழியாக எத்தனையோ பேர் போகிறார்கள் – வருகிறார்கள். எவராவது உன்னைச் சீந்த்தியிருக்கி றார்களா. நான் தான் உன்னைப் பொருட்படுத்துகிறேன். புரிந்துகொள். என்னிடம் நன்றிபாராட்டாமல் எதிர்ப்பு காட்டி எகிறி குதிக்கிறாயே, முட்டாளா நீ” என்று சீறியது அருவக்கைக்குரல்.
வலியையும் மீறி, பசிமயக்கத்தையும் மீறி இவர் முகத்தில் ஒரு புன்முறுவல் பூக்கிறது.
“என்ன எழுதிக்கிழித்துவிட்டாய் என்று, அல்லது மொழிபெயர்த்துக் கிழித்துவிட்டாய் என்று இளிக்கிறாய்?”
அருவக்கையின் குரலில் தொனித்த ஆங்காரமும் அகங்காரமும் இவருடைய புன்முறுவலை அதிகப் பிரகாசமாக்கின.
“கோபிகிருஷ்ணனின் ஒரு கதையில் வரும் பாத்திரம் அடிக்கொருமுறை ‘ரிலாக்ஸேஷன்’ என்ற வார்த்தையை தன் போக்கில் சொல்லிக்கொண்டிருக்கும். அது நினைவுக்கு வந்தது.”
”இதை நான் சொல்லவில்லை கூமுட்டை. நான் மதிக்கும் படைப்பாளி கூறினார். ஒரு படைப்பை ஒட்டுமொத்தமாகப் புறமொதுக்கிவிடும் சூழலில் அதை யாராவது வசைபாடினால், அதன்மீது யாராவது சேற்றை வாரியிறைத்தால் – நம் எழுத்தை இவராவது பொருட்படுத்துகிறாரே என்று எழுத்தாளர் நன்றி பாராட்டவேண்டுமே தவிர கோபத்தில் எகிறிக் குதிக்கலாகாது என்று சொல்லியிருக்கிறார் தெரியுமா?”
அயர்ந்துபோய்விட்டார் அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.) தன் காலை இடறிவிட்டு ‘நன்றியில் மண்டியிட்டுத் தெண்டனிட்டதாக’க் காட்டப்பட்டுவிடுமோ என்ற திகில் பரவ, தன்னிச்சையாக ஓரடி பின்னால் நகர்ந்து கொண்டார். அருவக் கையின் அருவ முகமிருக்கும் வெற்றிடத்தைக் குத்துமதிப்பாக ஏறிட்டுப் பார்த்துக்கொண்டே சொன்னார்:
“நீங்கள் மிகவும் மதிக்கும் அந்தப் படைப்பாளி எந்தத் தருணத்தில் அப்படிச் சொன்னார் என்று நீங்கள் அவசியம் எண்ணிப்பார்க்கவேண்டும். அதைவிட அவசியம், நீங்கள் மிகவும் மதிக்கும் அந்தப் படைப்பாளி எந்தத் தருணத்தி லாவது உங்களை மாதிரி ஊசி குத்திக்குத்தி ’பொருட்ப டுத்தியிருக்கிறாரா’ என்றும் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்…”
“எனக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு நீ பெரிய ‘பிஸ்தா’வா? வருகிறேன், அடுத்த தடவை துருப்பிடித்த ஊசிகளாக எடுத்துக்கொண்டு வந்து உன்னை இன்னும் நான்குமுறை ஊசியால் வலிக்க வலிக்கக் குத்தி நான் ‘பொருட்படுத்தினால்தான் உனக்கு புத்தி வரும்…”
”இன்னுமொன்றும் சொல்லவேண்டும். நான் எகிறி குதிக்கிறேன் என்று சொல்லும் நீங்கள் இப்படி எகிறி எகிறி குதிக்கலாமா? உபதேசம் ஊருக்கு மட்டும்தானா?” என்று அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாள ராகவும் இருக்கலாம்.) கேட்க, எரித்துவிடுவதாய் முறைத்து அப்பாலேகியது அருவக்கை.
பின்னால் ஆல்டஸ் ஹக்ஸ்லி நிழலாய்த் தொடரும் நிம்மதியில் அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.) மேலே நடக்கலானார்.
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- கவிதை
- ஆல்டஸ் ஹக்ஸ்லியும் அருவக் கைக் கூர் ஊசியும்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20 (முற்றும் )
- உறவின் திரிபு !
- குறிவைக்கப்படும் தலித் செயல்பாட்டாளர்கள்..
- தொடுவானம் 178. காதலே தெய்வீகக் காதலே
- காதல் நாற்பது கவிதைகள் நூல் வடிவில்
- உலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கல சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.
- நவீனத் தமிழ்க்கவிதைப் புலத்தில் ஈழத்துப்பெண் கவிஞர்கள்
- சங்க இலக்கியத்தில் மறவர்
- கடல் கொண்ட மனிதர்கள் : சூறாவளி(குறுநாவல்) [ஆசிரியர் லெ கிளேஸியோ, பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு சு. ஆ வெங்கட சுப்புராய நாயகர்]