கவிநுகர் பொழுது-20 (கவிஞர் இளங்கவி அருள் எழுதிய நான் மூனறாம் கண் நூலினை முன்வைத்து)

This entry is part 4 of 6 in the series 30 ஜூலை 2017

இளங்கவி அருள்

புதுச்சேரியில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு விழா உரையின் கட்டுரை வடிவமாக, இதனைக் கொள்ளலாம்.

கவிஞர் இளங்கவி அருள் எழுதிய ஆறாவது கவிதைத் தொகுப்பு நான் மூன்றாவது  கண். சென்னை, முரண் களரிப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இவரின் முந்தைய தொகுப்புகளையும் நான் வாசித்திருக்கிறேன். ஏற்கனவே இவரின் கவிதைகளோடு பரிச்சயம் உண்டு. இவரின் பேரன்பின் மிச்சம் என்கிற கவிதை நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கிறேன். இப்போது இந்நூல் வெளியீட்டு விழாவில் பங்கு கொண்டு பேசுவதற்கான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. இதே அரங்கில் நடந்த நேற்று மாலை நடைபெற்ற வாணிதாசன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன். இப்போது இளங்கவி அருளின் நூல் குறித்துப் பேசுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஓர் இரவில் இரு தலைமுறை கடந்து வாணிதாசன் குறித்தும் அவரின் பெயரன் குறித்தும் அடுத்தடுத்து உரையாற்ற நேர்ந்தது இயல்பானது தானெனினும் ஆச்சர்யமாய் இருக்கிறது. இலக்கியத்தால் மட்டுமன்றி உறவு முறையிலும் வாணிதாசனின் பெயரன் இவர். ஒரு இலக்கிய உணர்விழையின் தொடர்ச்சி இவர்.

கவிஞர் இளங்கவி அருள் கவிதைகளால் மட்டுமன்றி பழக்கத்தின் வாயிலாகவும் என்னோடு தொடர்ந்து நெருக்கத்தைப் பேணுபவர். பல்வேறு தருணங்களில் பாண்டிச்சேரி வந்திருக்கிறேன். காரணங்கள் பலவாயினும் இவரின் பொருட்டே,இவரின் சந்திப்பிற்காவே கூட வந்திருக்கிறேன். சந்திப்புகளின் போது இலக்கியம் குறித்து நிறைய பேசுவார். இலக்கியத்தின் எல்லா தளங்களிலும் கருத்துகளை முன் வைக்கிற அளவு விரிந்த வாசிப்பு கொண்டவர். இப்போது ,’நான் உனது மூன்றாம் கண்’, என்னும் நூலினை வெளியிடுகிறார்.மகிழ்ச்சி.

மூன்றாம் கண் என்பது என்ன?

கண்ணுடையோர் என்போர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையோர் கல்லா தவர்

என்று வள்ளுவன் சொல்வான்.

உலகின் காட்சிகளைக் காண்பதற்கான கருவி கண். அதனால் தான் கண் முன் நிகழ்ந்தது, கண்ணால பார்த்தியா என்பன போன்ற உரையாடல்களைக் கேட்க முடிகிறது. ஆனால் அப்படிக் காட்சியைக் காண்பதும் சாட்சியாக மாறுவதும் மட்டுமே கண்களின் பயனாகுமா? அருள் பார்வை என்று ஒன்று இருக்கிறதே? கண்களுக்கு என தனித்த செயல், ஆழமான செயல் பாடு இருக்கிறது.

நூல் அட்டை

இரண்டு கண்களுக்குத் தான் மேற்சொன்னவையெல்லாம். மூன்றாம் கண் என்பது முற்றிலும் புனைவால் ஆனது. ஞானக் கண்ணாகவும் கொள்ளலாம். நெற்றிக் கண்ணாகவும் கொள்ளலாம். அறிவு சார்ந்தது ஞானக்கண். குற்றம் காண்பது நெற்றிக்கண்.ஞானக்கண் பொறுமையைப் போதிப்பதெனில் நெற்றிக்கண் தீப்பொறி கக்குவது. எனவே ஒருவரின் மூன்றாவது கண்ணாக விளங்குவதென்பது குற்றம் காண்பதற்கென முடிவு செய்யத் தேவையில்லை. அன்பின் அரவணைப்பில் உருவாகும் ஞான வெளியாகவும் இருக்கலாம் தானே.

இந்தத் தொகுப்பில் இருக்கிற கவிதைகளை வாசிக்கிற போது ஒரு சுழற்சி தெரிகிறது. மீளவியலாத் தருணங்களின் நெருக்கடி தெரிகிறது. வாழ்க்கையென்பது மிகப்பெரிய பயணமெனில் அதில் இளைப்பாறுதலுக்கான தருணங்கள் வாய்ப்பது எத்தனை முக்கியமானது. இடைவெளிகளில் அது வாய்க்க வேண்டும். ஆனால் அத்தகையத் தருணங்களை வழங்காத வாழ்வின் சூழல் நம்மை நிந்திப்பது. பயணத்தைச் சோர்வின் ஊடாகவே நடத்தக் கட்டாயப் படுத்துவது.

இவரின் கவிதைகள் போலித்தனங்களின் மீது தன் அதிருப்தியை முன்வைக்கின்றன. இங்கே சக மனிதன் மீதான அக்கறையும் நம்பிக்கையும் என்னவாக இருக்கிறது?

மனிதத் தன்மை என்னவென்பதைப்

பிளாஸ்டிக் புல்களுக்கு நீரையும்

தோல் பொம்மைகளுக்கு உணவையும்

கண்ணாடிப் பறவைகளுக்குத் தானியத்தையும்

மரப்பாச்சிகளுக்கு ஒப்பனையையும்

யாத்திரிகர்கள் சேகரித்து விட்டார்கள்

பெயரிடப்படாத விலங்கின் தன்மையை

மனிதம்.

என்று இவர் எழுதுவது போலிகளின் மீதான அக்கறை தான் போற்றப்படுகின்றன என்பதைப் பேசும்.

உயிர்களிடத்தில் அன்பு வேணும்

என்பான் பாரதி. இங்கே உயிர்களற்ற ஜடப் பொருள்கள் மீது தான் அன்பும் அக்கறையும் பாவிக்கப் படுகின்றன வெனில் அது எதன் பொருட்டு? ஜடப் பொருள்கள் மீது கொண்ட பயன் எதிர்பார்க்கும் மனோநிலை. அன்பின் பேரால் நடக்கிற பேரம். ஆனால் அதற்குப் பெயர் மனிதம் என்று சூட்டுகிறார்கள் என்பது தான் கொடுமை.

நட்பு என்பது என்ன?மனிதனுக்குக் கிடைத்திருக்கிற ஆகச் சிரந்த வரம். இவ்வாழ்வில் நாம் தேர்ந்தெடுக்கிற உறவு. அந்த உறவு விலகும் போது எழும் உணர்வு வடு ஏற்படுத்திவிடக் கூடியது. அதனை ஒரு சுய விமர்சனத்திர்கு உட் படுத்துவது எத்தனை பெரிய நேர்மை.

துயரம் என்பதை அறியாத நான்

எனக்குள் இருக்கும் மிருகத்தை

வெளிப்படுத்தி விடுகிறேன்

இப் பரிதாப நிலையில்

என்னைவிட்டு விலகியவனை

பிரபஞ்சத்தின் மூலை முடுக்கெல்லாம்

தேடி அலைகிறேன்

 

விலகியது அவனின் குற்றமன்று. மிருகத்தை வெளிப்படுத்தியதால் விலகியிருக்கிறான். மிருகக் குணத்தை வெளிப்படுத்தியதன் தவறை உணர்ந்ததால் விலகியவனை பிரபஞ்சத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடியலைகிறது மனம்.

இமையின் பாரம் தாங்காமல்

கண்கள் அழுவது போல்

நட்பின் துயரத்தை

மேகங்களில் எழுதினேன்

அவன் மழையாய்ப் பொழிகிறான்

என்னை நனைக்காமல்

என்று இந்த துயரின் பாடலை முடிக்கிறார். பிரபஞ்சம் முழுக்கத் தேடி அலைந்த பின்னும் கண்ணில் படாத நட்பு உருவாக்கும் துயரம், ஆம். நட்பின் துயரத்தை என்கிறார். அந்த நட்பின் துயரத்தை மேகத்தில் எழுதுகிறார். மேகத்தில் எழுதும் அன்பின் மொழி மழையாய்ப் பொழிகிறது.

நட்பு என்பது தொடர்புகளால் மட்டும் உறுதி செய்யப் படுவதில்லை. தொடர்பின்மைகளாலும் தான். நெருக்கத்தின் போது பகிரப்படும் உண்மைகள் விலகலின் போது வேற்று வடிவம் கொண்டு பேசப்படுவது துரோகம் இல்லையா?

துரோகத்தின் சாட்சிகள் என்றொரு கவிதை.

சிலரைக் காணும் போதெல்லாம்

தொட்டால் சிணுங்கியைப் போல்

சுருங்கி விடுகிறது என் மனம்

எந்த நஞ்சும் உயிரைக் கொல்லாது

நீ சிதறிய வார்த்தைகளைத் தவிர

நம்பியவர்களின் துரோகத்தைப் போல உலகில் வலியேற்படுத்துவது உலகில் ஏதுமில்லை. துரோகத்தால் நேரும் துயரத்தைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம். துரோகம் இழைத்து விட்டார்களே என்னும் துயரத்தைத் தான் தாங்க முடியாது. சொற்கள் பிழையாக மாறி இம்சிக்கின்றன.

                        உன்னை நேசித்தது சுயமல்ல

மனிதன் என்ற ஈரம்

எதற்காக என்னை நீங்கள்

மதில் சுமந்து திரிய வேண்டும்

எதற்காக தினம் நீங்கள்

குசலம் விசாரித்தீர்

நானோ கடவுளின் பிழை

பிழைகள் நிகழ்த்திய பின்

உன் காலடியில் கைதியாய் நின்றேன்

நீ உதிர்த்த அந்த நிமிடச் சொல்லை

சுவாசமின்றி எதிர் பார்த்தேன்

நான் மரணமடைந்த பின்

என்னை ஏன் மீட்டீர்

எனக்குப் புரிய வில்லை

உயிர்த்தெழத் தெரியாத பிணத்திற்கு

இனி தேவைப் படாது உனதன்பு

வாழும் காலத்தில் எல்லா விதமான கொடுமைகளையும் நிகழ்த்துபவர்கள் தான் மரணத்திற்குப் பின் அஞ்சலியில் புகழ்கிறார்கள். ஆனால் மரணத்தின் பின் வழங்கப்படும் அன்பால் மரணமுற்றவர்க்கு யாது பயன்?ஆனால் அந்த விஷயத்தைப் பேசுவதாகத் தெரியவில்லை. இக்கவிதை சொல்லின் பிழையால் நேர்ந்த மனத்தின் மரணத்தைப் பேசுவதாகவே படுகிறது.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.

பொசுக்கி விட்டபின் சாம்பல் மேட்டில் எதனைக்கட்டியெழுப்பி விட முடியும்.

இவருக்கு,அன்பு, மானுடம், நட்பு இவற்றின் மீது தீராத பிரியம் இருக்கிறது. அவற்றிற்கு மாறான சூழல் உருவாகிற போதெல்லாம் பதற்றமடைகிறது கவிமனம். உலகில் பேணும் உறவுகளில் தான் எவ்வளவு சிக்கல்கள். வெள்ளந்தியான மனம் இந்தச் சமூகத்தில் பரிகாசதிற்குரியதாகுமெனில் எத்தனை பெரிய துயர் அது. நிகழும் போது மட்டுமல்ல. நினைவின் போதும் அது துயர் தருவது.

உன்னை நினைவு படுத்திய எலும்புத் துண்டாய்

என் கண்ணுக்குள் வாழும்

பெயர் தெரியாத உருவத்தை

தினமும் எரியூட்டுகிறேன் ரகசியமாக

கண்ணீர் துளிகளாலும், காமத்தாலும்

இந்த மனம் எதை மறக்க வேண்டுமோ அதனை நினவில் கொள்ளும். ஞாபகத்தில் வைக்க வேண்டியவையை மறந்து போகும். அதனால் தேவையற்ற நினைவுகளை எரியூட்டுவது அவசியமாகிறதோ?

இவரின் கோபம் வார்த்தைகளின் வாயிலாக கொப்பளிக்கிறது. ஒரு சமூக மனச்சமனின்மை தொடர்ந்து அச்சுறுத்துகிறது.

 

“இளங்கவி அருளின் படைப்புலகம் உறவுகளின் சிக்கல்களை, வாழ்வின் அபத்தங்களைப் பேசுகிறது.அன்புதான் சகலமும் என்று நம்பிக்கொண்டிருந்த வாழ்க்கையில், உறவுகள் அனைத்தும் போலித்தனமாக இருந்தால், இந்த வாழ்க்கைக்கான அர்த்தம் தான் என்ன என்ரு தேடுகின்றன இவரின் கவிதைகள்.”என்கிறார் இரவிக்குமார் தனது முன்னுரையில்.அது தான் இவரின் கவிதைகளின் தேங்கியிருக்கும் உணர்ச்சி.

இவர் இந்தக்கவிதைகளி எழுதும் விதமான மனிதர்களைச் சந்தித்திருக்ககூடும். யாரின் மீதான கவனக் குவிப்போ இந்தக் கவிதைகள் உருவாகக் காரணமாகியிருக்கலாம். ஆனால் அத்தகைய மனிதர்களை மனித மனங்களை நாம் எதிர் கொள்கிற போது நம்மின் அனுபவமாக மாறி பெருந்துயரை உருவாக்கி விடக்கூடும்.

எத்தனை முறைதான்

கொல்லாமல் விடுவது

அந்தச் சிவப்பு எறும்பை

அதன் இம்சைகளின் வலிகளை

யாரிடம் சொல்லி ஆறுதல்

அடைவது?

பரிகாசங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை

அது கோமாளித்தனமோ

அடிப்படையில் பெரும் கோபமோ

அதீத அன்போ

பெரும் பொறுமையோ

ஏதோ ஒன்றாக இருக்கலாம்

தொல்லைகளை எதிர் கொள்வதும் அதில் இருந்து மீள வழி தெரியாத சிக்கலும் கையறுநிலயும் கொண்ட வரிகள்.

என் தலையை நசுக்கி விட்டாள்

ஒரு சொல்லால்

நான் பிழைத்துக் கொண்டேன்

என்கிறார்.

என்னைக் கண்டதும் பீதியடைகிறார்கள்

நிராகரிப்பின் வலி கொடூரமானது

இவற்றையெல்லாம் உணர்ந்த நண்பனை

தேடிக் களைத்து நித்திரையில் இருக்கிறேன்

யார் நண்பன்?

என்ற கேள்வி இவருக்கு எழுகிறது.

 

இந்தத் தொகுப்பில் முழுக்க சக மனிதர்கள் நிகழ்த்திய துரோகம் நிராகரிப்பு போலித்தனம் போன்றவற்றையும் அவை ஏற்படுத்திய மனக்காயங்கள் ,அந்தக் காயங்கள் ஏற்படுத்திய வலி ஆகியவையே பிரதான மாக இருக்கின்றன.

 

ஆயிகுளம் போன்ற வரலாற்றைப் பிரதி செய்யும் கவிதையை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.

இளங்கவி அருள் மொழிதலில் ஒரு இறுக்கமான உத்தியைக் கையாண்டிருப்பதாகப் படுகிறது. அது கவிதைகளுக்கு ஒரு அடர்த்தியைத் தருகிறது.

 

பெரும்பாலும் அனுபவங்களைப் புனைவின் வழி படைப்புச் சாத்தியாமாக்கும் போது அது வாசகனிடத்தில் பெரும் உணர்வை உருவாக்கும்.  அப்படி சத்தியத்தைக் கொண்டிருக்கும் இவரின் வார்த்தைகள் படிக்கும் போது அதன் உணர்வுகளை ந-அம்முள் ஏற்படுத்துகின்றன. இளங்கவி அருள் கவிஞர் என்பதினும் என் நண்பர்.  அவரின் படைப்புகள் எல்லா நிலையிலும் வெற்றி பெற வேண்டும்.

 

என் அன்பும் வாழ்த்துகளும் எப்போதும் உண்டு.

Series Navigationதொடுவானம் 180. இருமணம் கலந்தால் திருமணம்கவிநுகர் பொழுது-21 (பா.இரவிக்குமாரின்,’கைரேகைக் கொடியில் கனவுப் பூ’, நூலினை முன் வைத்து)
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *