“நீட்”டாய் தெரியும் அசிங்கங்கள்…

author
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 12 in the series 10 செப்டம்பர் 2017

குமரன்

“நீதி உயர்ந்த மதி கல்வி” என்று பாடியவனின் இறுதி யாத்திரையில் பத்து பேர் கூட கலந்து கொள்ளாத அளவு பக்குவம் பெற்ற பெருமைமிகு தமிழினம் இல்லையா நாம்? நமக்கு வாய்க்கும் கல்விக் கொள்கைகளின் லட்சணமும் அதற்குத் தகுந்தாற் போல் தான் இருக்கும். இதன் சமீபத்திய உதாரணம் தான் “நீட்” சம்பந்தப்பட்ட குளறுபடிகளும் அதைத் தொடர்ந்து நேர்ந்த மாணவியின் மரணமும்.

1176 மதிப்பெண்கள் என்பது அசாத்திய உழைப்பின் மூலம் மட்டுமே சாத்தியப்படுகின்ற ஒன்று. அதிலும் ஒரு வறுமையுற்ற குடும்பத்திலிருந்து ஒரு பெண் அதை சாதிக்கிறார் என்றால் அது வணக்கத்திற்குரியது. அத்தகைய உரம் படைத்த பெண் தற்கொலை செய்து கொள்கிறார் என்ற செய்தி மிகுந்த துயரம் அளிப்பது. சமூக பிரக்ஞை உள்ள எவரின் தூக்கத்தையும் தொலைக்கும் வலிமையுள்ளது. அவரின் பிரிவினால் வாடும் குடும்பத்தினருக்கு எந்தவித ஆறுதல் அளித்தாலும் மீட்க முடியா இழப்பு அது. ஆனால்…

பற்றியெரிந்த ஒரு தளிரின் நுனி மட்டுமே இது. ஒரு “காட்டை”யே கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் சத்தமின்றி எரித்து முடித்திருக்கிறோம் நாம் என்று நமக்குத் தெரியுமா? அக்காட்டில் பலவகை “சாதி” மலர்கள் மொக்கிலேயே கருகியது தெரியுமா? கருகுதல் பல வகை. வேண்டிய கல்வி மறுக்கப்படுவது அதிலொரு வகை…சமூகநீதியாம் சமூக நீதி…இது அரசியல்வாதிகள் தங்கள் ஆதாயத்திற்காக பயன்பாட்டில் கொண‌ர்ந்த சொல். மேடை பேச்சாலும் அலங்கார வார்த்தைகளாலும் அழிந்த மாநிலம் நமது தமிழ்நாடு. மக்களைச் சுற்றி ஒரு மாபெரும் சதிவலை பின்னப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று நாம் உணர வேண்டும். அனைத்து விதமான சுரண்டல்களையும் அள்ளிக் கொள்ள ஏதுவாக பின்னப்பட்ட சதிவலையில் கல்வியை வியாபாரம் ஆக்கும் வலையும் ஒன்று. இதற்கு தனிமனிதன் துவங்கி இம்மாநிலத்தின், இச்சமூகத்தின் ஒவ்வொரு ஒவ்வொரு அங்கமும் பொறுப்பு ஏற்க வேண்டும். கல்வி என்பதை அவரவர் லாபத்திற்கேற்ற கடைச்சரக்காக்கி விற்க முயன்ற அவலத்தின் அடுத்த கட்டமே இது. எத்தனை வீரியம் மிக்க விஷம் பாய்ந்த வேர் இது?

மாணவர்கள் எந்த தேர்வு எழுத வேண்டும், தேர்ச்சியின் விதிமுறைகள், அளவீடுகள் என்ன என்று அனைத்தையும் அரசியல்வாதிகள் முடிவு செய்வது என்பது சமூகத்திற்கு கிடைத்த சாபம். “எந்தத் தேர்வை எப்படி வைத்தாலும் எதிர்கொள்வேன் நான்” என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் கல்விக்குரிய அடிப்படை கட்டுமானங்களை செய்து தராத அரசுகளின் கையாலாகாதனத்தின் விளைவு தான் இது. கட்டமைப்பு பற்றிய கவலையின்றி, சிந்தனையின்றி, திட்டமின்றி, திடமின்றி கூச்சல் போட்டென்ன பயன்? உணர்ச்சிவசப்பட்டு உரக்கப் பேசும் தலைவர்கள் நமக்குத் தேவையில்லை. நம் கல்வி கற்பழிக்கப்பட்டு வெகுநாளாகி விட்டது. அந்தத் கொடூரத்தில் நம் பங்கும் உண்டு.

முதலில் நம்மிடமிருந்து துவங்குவோம். எல்கேஜிக்கு எதற்கு இத்தனை ஆயிரம் என்று கேள்வி கேட்டதுண்டா நாம்? விலை அதிகமென்றால் “விஷயமும்” நிறைய இருக்கும் என்ற முட்டாள்தனத்திற்கு விலைபோன நாம் எப்போது திருந்தப் போகிறோம்? “மாரல் சயின்ஸ்” என்றொரு வகுப்பு இருந்ததே…யாரைக் கேட்டு அது காணாமல் போனது? கண்டு கொண்டோமா நாம்? மதிகெட்டு திரியும் சமூகத்திற்கு மாரல் எதற்கு என்று விட்டு விட்டோமா? ஆறாம் வகுப்பிலேயே ஐஐடிக்கு கோச்சிங், ஒன்பதாம் வகுப்பு துவங்கி பன்னிரண்டுக்கான பயமுறுத்தல், பன்னிரண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் பறிபோய்விடும் வாழ்வு என்றெல்லாம் சொல்லிச் சொல்லி மந்திரிக்கப்பட்ட கோழிகள் போல் நம் பிள்ளைகளை திரியவிட்டு அதைப்பார்த்து பெருமையும் மகிழ்வும் பொங்கி வழியும் பெற்றோர் ஒரு வகை. மாதத் தேர்வுக்கு கூட மகன் மகளுடன் தானும் லீவு போட்டு சீனி வெடியை சீனா போர் கணக்காய் பில்டப் கொடுக்கும் பெற்றோர்கள் இன்னோர் வகை. பணம் தான் செலவு செய்கிறோமே, நன்றாகத் தான் வருவார்கள் என்று தானுண்டு தன் “வேலை”யுண்டு என்றிருக்கும் பெற்றோர் மற்றோர் வகை. இவற்றில் எல்லாம் தப்பித்தாலும், பொறியியல் அல்லது மருத்துவம் இல்லையென்றால் இவ்வாழ்க்கையே வீண் என்ற பொறியில் வீழும் பெற்றோர் மீதமுள்ள வகை. வறுமையில் உழலும் குடும்பமோ, வசதியான குடும்பமோ…சிறார்கள் பற்றிய சீரிய சிந்தனை ஏதுமின்றி பால்யத்தை சூறையாடும் அரக்கர்கள் ஆகி விட்டோம் நாம்.

கல்வி என்பது பணம் ஈட்டும் கருவி என்பதையன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே…இது பெற்றோர்களுக்கும் பொருந்தும், கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். “இடையில்” இருப்போர்களுக்கும் பொருந்தும். எனவே தான் எத்தனை “கிடைக்கும்” என்பதை பொறுத்து எத்தனை “கொடுக்க” வேண்டும் என்ற சமன்பாடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை அறியாமலோ அல்லது அறிந்தும் தட்டிக்கேட்கின்ற முதுகெலும்பு அற்ற சமுதாயமாகவோ மாறி விட்டோம் நாம். எனவே தான், கடிவாளம் போட்ட குதிரையாய் இன்ஜினியரிங், மருத்துவம் நோக்கி படையெடுப்பு நிகழ்கிறது. சரி இத்தனை கொடூரங்களுக்குப் பின்னும் இவற்றை படித்து வெளிவரும் கூட்டம் எத்தகையது? தான் நினைத்ததை ஆணித்தரமாக கோர்வையாக ஒரு நிமிடத்திற்கு கூட சுயசிந்தனையுடன் பேசத்தெரியாத பெரும்பான்மை கூட்டம் தான் இன்று “இன்ஜினியரிங் படிச்சும் வேலையில்லை” என்று நம்பிக்கை இழந்து கூவிக் கொண்டிருக்கிறது. இது யார் தவறு? மாளிகை போன்று கல்லூரி கட்டப்பட்டிருந்தால் போதுமா? உள்ளிருக்கும் ஆசிரியரின் தரம் யாதென்று ஊரறியுமே… போன வருட சீனியர் இந்த வருட ஆசிரியர். விளங்குமோ படிப்பும் சமூகமும்? “இந்த வார எலிமினேஷன் யார்” என்பதையே சமூகத்தின் முன் நிற்கும் முக்கிய விவாதப் பொருள் போல் ஆக்கி  வாழ்க்கையை ஓட்டும் விவேகமற்ற மாநிலத்தில் கல்வி என்ற பெயரில் நடக்கும் கூத்துக்கள் மூலம் விவேகானந்தர்களா உருவாவார்கள்?

ஜல்லிக் கட்டு போல் இதற்கும் போராட்டம் நடக்குமோ என்று எதிர்பார்க்கிறார்கள் பலர். நம் போன்ற முதிர்வற்ற சமூகத்தில் அது சாத்தியமல்ல. நம் ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு “catharsis”. அதாவது “சுமை நீக்கி”. ஊழல்களினாலும் சமூக அவலங்களினாலும் உள்ளேயே கொதித்துக் கொண்டிருந்த பலருக்கு ஒரு வடிகாலாக கிடைத்தது அப்போராட்டம். “இறக்கி” வைத்து “தீர்த்துக்” கொண்டார்கள். எனவே தான் அப்போராட்டம் ஏதோ உலகையே திருப்பிப் போட்டது போன்ற உவகையையும் பெருமிதத்தையும் பலருக்குத் தந்தது. அவ்வளவு தான்…. பழைய குருடி கதவைத் திறடி கதையாக நம் “வசதியான வளை”க்குள் திரும்பி வந்தாயிற்று. இனி மீண்டும் உதிரத்தில் உப்பு ஊறுவதற்கு பல மாமாங்கம் ஆகலாம் அதற்குள் பல சேதாரம் நேரலாம்…எதையும் கண்டுகொள்ள மாட்டோம் அதுவரையில் நாம். “எதுவும் கடந்து போகும்” என்பது நம் தாரக மந்திரமில்லையா?

1176 போன்ற‌ மதிப்பெண் பெற்ற ஒருவர் எத்தகைய சாதியென்றாலும் அவர் வேண்டிய கல்வி கிடைக்க வழி செய்வதே சமூக நீதி என்று எப்போது நாம் அனைவரும் உணர்கிறோமோ, அனைத்து வகை கல்விக்கூடங்களுக்கும் ஒரே தரம், ஒரே கட்டணம்  என்ற நிலையை எப்போது நாம் அடைகிறோமோ அதற்கான செயல் வழித் திட்டங்களை எப்போது நாம் அமைக்கிறோமோ அப்போது தான் நமக்கு விடிவு காலம்.

Series Navigationஅவள் ஒரு பெண்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *