தொடுவானம் 191. சீனியர் ஹவுஸ் சர்ஜன்

This entry is part 2 of 11 in the series 15 அக்டோபர் 2017

191. சீனியர் ஹவுஸ் சர்ஜன்
cmc__(3)
நிதானமாக செயல்படலாம் என்ற முடிவுடன் வேலூரில் இருந்த எஸ்தர் என்னும் உறவினர் வீட்டில் தங்கினேன்.அவர் அண்ணிக்கு நெருங்கிய உறவினர். என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவருடைய கணவர் வில்சன் வேலூரில் பணி புரிந்தார். அவர்களுக்கு மூன்று பெண்களும் ஒரு மகனும் இருந்தனர்.சிறிய வீடுதான். அதில் ஒரு அறையில் நான் தங்கினேன்.நான் கல்லூரியில் படித்தபோது இங்கே அவ்வப்போது வருவதுண்டு.
அன்று காலையிலேயே மருத்துவமனை சென்றேன். இயக்குனர் டாக்டர் எல்.பி.எம். ஜோசப்.. அவரிடம்தான் நான் அறுவை மருத்துவம் பயின்றதோடு ” ஹவுஸ் சர்ஜனாகவும் ” பயிற்சி பெற்றுள்ளேன். என்னைக் கண்ட அவர் ஆர்வமுடன் வரவேற்றார். எங்கு பணிபுரிவதாகக் கேட்டார். நான் திருமணம் செய்துகொள்ள மலேசியா சென்றதையும், கோவையில் வேலை இல்லாமல் போனதையும் சொன்னேன். என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்டார். நான் வந்த நோக்கத்தைக் கூறினேன். அவர் உடனடியாக என்னை ” சீனியர் ஹவுஸ் சர்ஜனாக ” ( Senior House- Surgeon ) நியமனம் செய்தார். ஒரு துறையில் நிபுணத்துவ மேற்படிப்பு படிக்க வேண்டுமென்றால், ஒரு வருடம் சீனியர் ஹவுஸ் சர்ஜனாக பயிற்சி பெற்றாக வேண்டும். இதை மூத்த மனை மருத்துவம் என்றும் கூறலாம். என்னை கதிரியக்கப் பண்டுவத் துறையில் ( Radio – Therapy Department ) பணி புரியச் சொன்னார். நான் சரியென்று அதை ஏற்றுக்கொண்டேன். அங்கு ஒரு வருடம் பயிற்சி பெற்றபின்பு அத் துறையில் நிபுணத்துவம் பயிலலாம் என்றும் வாக்களித்தார். அது நல்லது என்று தெரிந்தது.அடுத்த வாரமே பணியில் சேர்ந்துகொள்ளலாம் என்றும் கூறினார்.உடன் சேரும் கடிதம் தந்தார். நான் அதைப் பெற்றுக்கொண்டு நன்றி கூறினேன். ஒரு பெரும் பாரம் குறைந்ததை உணர்ந்தேன். திருமணம் ஆகிய பின்பு வேலை இல்லாமல் எப்படி இருப்பது என்னும் கவலை தீர்ந்தது.
அங்கிருந்து நேராக கதிரியக்க பண்டுவப் பிரிவிற்குச் சென்றேன்.அதன் தலைமை மருத்துவர் டாக்டர் பரம் சிங்கைச் சந்தித்து கடிதத்தைத் தந்தேன். அவர் என்னை இன்முகத்துடன் வரவேற்றார். அடுத்தவாரம் சேர்த்துக்கொள்ளலாம் என்றார். இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றால் பெரிய மருத்துவமனைகளில் வேலை கிடைக்கும் என்றார். நான் அவரிடமிருந்து விடை பெற்று எஸ்தர் வீட் டுக்குத் திரும்பினேன்.
அன்று மாலையில் மீண்டும் தொடர் வண்டி ஏறி சிதம்பரம் புறப்பட்டேன். என்னுடைய மனதில் ஒரு உறுத்தல் எழுந்தது. கதிரியக்க பண்டுவத்தில் நிபுணத்துவம் பெற்றால் பெரும்பாலும் புற்று நோயாளிகளைத்தான் காண நேரிடும். வேறு நோயாளிகளைக் காண இயலாது. அதோடு இது இயந்திரம் பயன்படுத்தி சிகிச்சை செய்யும் துறை. எனக்கு பொது மருத்துவம் பயிலவே ஆசை. ஆனால் அதில் இடம் கிடைப்பது சிரமம். அதனால்தான் டாக்டர் ஜோசப் அதை எனக்குத் தர இயலவில்லை. தற்போது எனக்கு வேறு வழியில்லை. முதலில் கிடைத்துள்ள கதிரியக்க பண்டுவத்தில் சேர்ந்துகொண்டு அதன்பின்பு வேறு துறை கிடைக்குமா என்று பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
தெம்மூர் வந்ததும் அவளிடம் வேலூரில் வேலை கிடைத்துள்ளதாகக் கூறினேன். இன்னும் சில நாட்களில் அங்கு புறப்படலாம் என்றும் தெரிவித்தேன். அண்ணனுக்கு கடிதம் எழுதினேன். அங்கு நான் பயிற்சி பெறுவதால் மாதச் சம்பளம் குறைவுதான். அதனால் அண்ணனிடம் கொஞ்சம் உதவியும் கேட்டேன்.
அந்த வார இறுதியில் சனிக்கிழமை புறப்பட்டால் ஞாயிற்றுக்கிழமை அங்கு தங்க ஆண் மருத்துவர் விடுதியில் அறை கேட்டு பெறலாம். திங்கள் வேலைக்குச் செல்லலாம்.
நாங்கள் சிதம்பரம் சென்று தேவையான சில பொருட்களை வாங்கிக்கொண்டோம். பிரயாணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்து சனிக்கிழமைக்காகக் காத்திருந்தோம்.
கூண்டு வண்டியில் பெட்டிகளையும்,இதர சாமான்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம். அம்மா, அத்தை, இராஜகிளி, தங்கைகள், உறவினர் சிலர் எங்களை வாசலில் நின்று வழியனுப்பினர். பால்பிள்ளை வண்டியை ஓட்டினான். தவர்த்தாம்பட்டில் நாங்கள் இருவரும் பேருந்தில் ஏறினோம். பால்பிள்ளை வண்டியை சிதம்பரம் ரயிலடிக்குக் கொண்டுவருவான்.
அன்று இரவு முழுதும் நாங்கள் இருவரும் திருப்பதி துரித பிரயாணிகள் தொடர் வண்டியில் உல்லாசமாகப் பிரயாணம் செய்தோம். இந்த முறை நான் நாவல் படிக்கவில்லை. புது மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன்.நள்ளிரவுக்குப்பின்பு தொடர்வண்டியின் தாலாட்டில் சுகமாகத் தூங்கினோம்.
விடிந்தபோதும் அந்த பனி மூட்டத்தையும் பொருட்படுத்தாமல் வண்டி ஓடிக்கொண்டிருந்தது.கிராமங்களும் வயல்வெளிகளும் தொலைவில் உயர்ந்த மலைகளும் வரைந்த ஓவியங்களாக காட்சி தந்தன. சன்னலைத் திறந்ததும் சிலுசிலுவென குளிர் காற்று உள்ளே வீசியது. அந்த புத்துணர்ச்சியுடன் பிரயாணமும் ஒரு முடிவுக்கு வந்தது. வேலூர் கண்டோன்மெண்ட் தொடர்வண்டி நிலையம் வந்துவிட்டது.
வாடகை ஊர்தி மூலம் சி. .எம். சி. மருத்துவமனை ஆண்கள் மருத்துவர் விடுதிக்குச் சென்றோம். அங்கு விடுதி உணவகத்தில் பசியாறினோம். விடுதியின் செயலரை அணுகி அறை கேட்டேன்.அவர் என்னுடைய சீனியர்தான்.ஆனால் அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியை உண்டுபண்ணியது. காலியான அறை இல்லையாம். நான் மட்டும் இன்னொருவரின் அறையில் தங்கலாம் என்றார். மனைவியை வெளியில் தங்கவைத்துக்கொள்ளச் சொன்னார். இது எப்படி சாத்தியமாகும். நாங்கள் புதிதாக மணமுடித்துள்ளோம் இரு வாரங்கள்தான் ஆகிறது. எப்படி இவளை வெளியே தங்க விடுவது. வேறு வழியில்லை என்றால் எஸ்தர் வீட்டில் தங்க வைக்கலாம்.ஆனால் அங்கு இவளுக்கு போதுமான வசதி இருக்காது. நான் எவ்வளவோ மன்றாடியபோதும் பிரயோசனம் இல்லை. உண்மையில் அங்கு காலி அறைகள் இல்லைதான். என்ன செய்வது என்ற யோசனையில் அங்கேயே கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டேன்.
அந்த நேரம் உணவகத்தில் பசியாற டி.ஆர்.பெஞ்சமின் வந்தான்! எங்களைக் கண்டு அதிர்ந்துபோய் நின்றுவிட்டான் அவனால் நம்பமுடியவில்லை. அவன் என் வகுப்பில் ஆறு வருடங்கள் இருந்தவன். எனக்கு மிகவும் நெருங்கிய நண்பன். நான் ஹவுஸ் சர்ஜன் பயிற்சியை முடித்துவிட்டேன்.அவன் இன்னும் முடிக்கவில்லை. இன்னும் மூன்று மாதங்கள் அவனுக்கு உள்ளது. எதற்கு வந்துள்ளதாகக் கேட்டான். நான் மனைவியை அறிமுகம் செய்தேன். அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவனுக்கு இன்னும் மணமாகவில்லை. நான் நடந்தவற்றைச் சொல்லி, நாங்கள் இருவரும் தங்க அறை கிடைக்கவில்லை என்பதைச் சொன்னேன். அவன் நேராக விடுதிச் செயலரிடம் சென்று பேசினான். தன்னுடைய அறையில் எங்களைத் தங்க வைத்துக்கொள்வதாகக் கூறினான். விடுதி செயலரும் சம்மதம் தெரிவித்தார்.நான் பெருமூச்சு விட்டேன். நல்ல வேலையாக நாங்கள் தங்கும் பிரச்னை தீர்ந்தது.
பெஞ்சமின் பசியாறினான். நாங்கள் மீண்டும் காப்பி அருந்தினோம். அதன்பின்பு எங்களை அழைத்துக்கொண்டு அவனுடைய அறைக்குக் கொண்டு சென்றான். அது நான்காம் மாடியில் இருந்தது. இருவர் தங்கும் அறைதான். நாங்கள் வரவில்லையெனில் வேறொரு மருத்துவர் அவனுடன் தங்க வருவார். நாங்கள் இருவரும் இணைபிரியா நண்பர்கள் என்பதால் கொஞ்சமும் யோசிக்காமல் எங்களை வைத்துக்கொள்ள சம்மதித்துள்ளான். நாங்கள் இருவரும் வேலைக்கு இரவிலும் பகலிலும் சென்றுவிடுவோம். இவள்தான் பெரும்பாலான நேரம் அறையில் இருப்பாள். இவள் இருப்பதால் அவனுக்கு ஏதும் இடைஞ்சல் இருக்காது. .
இது மாதிரி மூவர் யாரும் அங்கு தயங்கியதில்லை. எங்களுக்கு மட்டும் தனி சலுகை வழங்கப்பட்டது. நாங்கள் சாமான்களை எடுத்துக்கொண்டு நான்காம் மாடிக்குச் சென்றோம். அந்த அறை ஒரு மூலையில் இருந்ததால் சற்று பெரிதாக இருந்தது. இரண்டு கட்டில்கள் இருந்தன.அவன் ஒரு ஓரத்தில் ஒரு கட்டிளைப் போட்டுக்கொண்டான். இன்னொரு கட்டிலை நாங்கள் அதுபோன்றே எதிப்புறம் ஓரத்தில் போட்டுக்கொண்டோம். நடுவில் ஒரு கொடிக் கயறு கட்டி ஒரு சேலையை அதில் கட்டி தொங்கவிட்டோம். அது கொஞ்சம் மறைவை உண்டுபண்ணியது.
அறைக்குள் ஒரு குளியல் அறையும் கழிவறையும் இருந்தது. ஒரு மேசை இருந்தது.இரண்டு நாற்காலிகள் இயந்தன. அன்று கடைத்தெருவுக்குச் சென்று ஒரு மடக்கு கட்டிலும், மெத்தையும், படுக்கை விரிப்புகள்,போர்வைகள்,பிளாஸ்டிக் மேசை, நாற்காலிகள் வாங்கி வந்தோம். மதிய உணவுக்கு நாங்கள் மூவரும் விடுதி உணவகம் சென்றோம்.. அன்றைய இரவு உணவுக்கு வெளியில் சென்று வந்தோம். அத்துடன் தேவையான சில சாமான்களும் வாங்கினோம். குறிப்பாக சுடுநீர் கொதி கெண்டி ( kettle ), கரண்டிகள், . எவர்சில்வர் தட்டு, டம்ளர் போன்றவையும் வாங்கினோம்.
மறுநாள் காலையில் பெஞ்சமினும் நானும் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டோம். அவள் தனியாக அறையில் இருந்தாள். அவளுக்கு சமையல், துணி துவைக்கும் வேலைகள் இல்லை.நாங்கள் விடுதி உணவகத்தில் மூன்று வேளையும் உணவு உண்ணலாம். மாத இறுதியில் பணம் கட்டிவிடலாம். அன்றாடம் துணிகளை துவைக்கும் ஆள் வந்து போவான். அடுத்த நாள் அவற்றைத் தந்துவிடுவான். அவனுக்கு உடனுக்குடன் பணம் தந்துவிடலாம்.அறையில் காப்பித்தூள், தேநீர் தூள், ரொட்டி, பிஸ்கட்,கேக் போன்றவை வைத்திருந்தோம்.
நாங்கள் மருத்துவமனையிலிருந்து மதிய உணவுக்கு வரும்போது அவள் உணவகத்தில் காத்திருப்பாள். உணவுக்குப்பின்பு அறைக்குச் சென்று ஒய்வு எடுத்தபின்பு நாங்கள் இருவரும் மருத்துவமனை சென்றுவிடுவோம். அவள் அறையில் ஓய்வெடுப்பாள். மாலை ஐந்து மணிக்கு நாங்கள் இருவரும் மீண்டும் திரும்பியதும், குளித்துவிட்டு இரவு ஏழு மணிபோல் உணவகம் செல்வோம்.
நான் கதிரியக்கப் பண்டுவப் பிரிவில் செய்ததால் இரவில் எனக்கு வேலை இல்லை. நான் அவளுடன் அறையில் தங்குவேன்.அல்லது அவளை அழைத்துக்கொண்டு வேலூர் டவுனுக்குச் சென்றுவருவேன். ஆனால் பெஞ்சமினுக்கு இரவு வேலையும் இருந்தது. அவன் இரவில் அவ்வப்போது மருத்துவமனை சென்று வருவான். நாங்கள் இருவரும் தூங்கியபின்பும் அவன் போவதும் வருவதுமாக இருப்பான்.
அவ்வாறு ஒரு மாதம் ஓடியது. மாத இறுதியில் சம்பளம் கிடைத்தது. அந்த மாதத்துக்கு அது போதுமானதுதான். அதில் பெரும் பங்கு உணவகத்துக்குச் சென்றுவிட்டது. அறைக்கு வாடகை இல்லை.அது இலவசம்.
மாதத் தொடக்கத்திலேயே என்னை இயக்குனர் டாக்டர் ஜோசப் அவருடைய அலுவலகத்துக்கு வரச் சொன்னார். நான் குழப்பத்துடத்தான் அவரைக் காணச் சென்றேன். அவர் என்னை வேறு பிரிவில் மருத்துவர் தேவை என்பதால் அங்கு மாற்றுவதாகக் கூறினார். அது மகப்பேறும் மகளிர் நோய்கள் பிரிவாகும். அதில் நிபுணத்துவம் பெற்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எங்கு வேண்டுமானாலும் ஒரு கிளினிக் அல்லது நர்சிங் ஹோம் நடத்தலாம்.பெரிய மருத்துவமனையிலும் வேலை செய்யலாம். மிஷன் மருத்துவமனையிலும் பணிபுரியலாம். இது எனக்குக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு. இதை நான் பயன்படுத்தி இத் துறையில் நிபுணத்துவம் பெறலாம். இந்த ஒரு வருடம் பயிற்சி முடித்தபின்பு அடுத்த வருடம் அதற்கு மனு செய்யலாம். அதில் இரண்டு வருடம் பயிலவேண்டும். அதன்பின்பு வேண்டுமானால் சிங்கப்பூர் அல்லது மலேசியா சென்று வேலைக்கு முயன்று பார்க்கலாம். நான் அவருக்கு நன்றி சொன்னேன். அவர் எனக்கு கடிதம் தந்தார். நாளையே அங்கு சேரும்படி அதில் எழுதியிருந்தார்.
ஒரேயொரு சிரமம்தான் இருந்தது. இதில் இரவில் ஓய்வு கிடையாது. பிரசவம் எந்த நேரத்திலும் நடக்கும். அப்போதெல்லாம் நான் பிரசவ அறைக்குச் சென்றுவர வேண்டும். அப்போது இரவில் அவள் தனியாக இருக்க நேரிடும். என்ன செய்வது. ஒரு துறையில் நிபுணத்துவம் பெற வேண்டுமெனில் இதுபோன்ற சிரமங்களைக் கண்டுகொள்ளக்கூடாது. ஆகவே அதைப் பெரிதுபடுத்தவில்லை. .

பெஞ்சமின் அவளிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொண்டான். இவ்வாறு இணைபிரியா நண்பனுடன் நான் மணமானபின்பும் சேர்ந்து வாழ்ந்தது மறக்க முடியாத அனுபவமே!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationபிராந்தியவாதம், சிவசேனா, திமுக பாஜக – சில குறிப்புகள்உயரம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *