தொடுவானம் 198. வளமான வளாகம்

This entry is part 2 of 11 in the series 3 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன்

198. வளமான வளாகம்

SMH Chapel திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையில் வாழ்க்கை மிகவும் இன்பமாகக் கழிந்தது. மருத்துவர்களுக்குள் நல்லுறவு நிலவியது. வேலூரில் படித்த மருத்துவர்கள் அதிகம் என்பதால் நாங்கள்ஒரு குடும்பம்போல் செயல்பட்டோம். டாக்டர் ராமசாமி வேலூரில் படிக்கவில்லை.. அவர் பாண்டியில் படித்தவர்.அடிக்கடி மருத்துவர்களின் வீடுகளில் விருந்துகள் நடந்தன. ஒரு நல்ல மருத்துவக் குழுவாக நாங்கள் செயல்பட்டோம். தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் செல்லையா அனைவரையும் அணைத்துச் செல்லும் தலைவராகச் செயல்பட்டார்.
சுற்று வட்டார கிராமத்து மக்கள் பெரிதும் பயன்பட்டனர். டாக்டர் செல்லையா திறமைமிக்க அறுவை மருத்துவர். எத்தகைய அவசர அறுவை சிகிச்சையையும் இரவு பகல் எந்த நேரத்திலும் உடனுக்குடன் செய்து முடிக்கும் ஆர்வம் கொண்டவர். அவரிடம் வந்தால் எத்தகைய நோயும் குணமாகும் என்ற நம்பிக்கை மக்களையே நிலவியது. அவரின் புகழ் பரவி விளங்கியது. அவருக்காகவே பலர் தேடி வந்தனர். குறிப்பாக காரைக்குடியிலிருந்தும், தேவகோட்டையிலிருந்தும், கண்டரமாணிக்கத்திலுருந்தும் ஏராளமான வசதிமிக்க செட்டியார்கள் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் பெரும்பாலும் செட்டி வார்டில் அறைகள் எடுத்துக்கொண்டு அங்கேயே குடும்பத்துடன் தங்கினர்.நோயாளி குடும்பத்துடன் இருந்து சிகிச்சைப் பெறுவது பல வகைகளில் நன்மையானது. மனோவியல் ரீதியாகவும் அது பயனானது. அவர்கள் அங்கேயே சமைத்து உண்டனர்.டாக்டர் செல்லையாவால் திருப்பத்தூர் மிஷன் மருத்துவமனை பசும்பொன் மாவட்டத்தில் பெரும் புகழும் பெற்று விளங்கியது.
டாக்டர் ஃரடரிக் ஜான் செல்லையாவிடம் அறுவை மருத்துவம் பயின்று வந்தார். டாக்டர் செல்லையாவும் அவருக்கு வாய்ப்புகள் தந்தார். அதே நிலைதான் டாக்டர் செல்லப்பாவுக்கும். அந்த மூவரும் சேர்ந்து அறுவை மருத்துவப் பிரிவை திறம்பட நடத்திவந்தனர். அறுவை சிகிச்சை எனில் மக்கள் இங்கு தேடி வந்தனர்.
மருத்துவப் பிரிவில் டாக்டர் பார்த் சுவீடன் தேசத்தவர் என்றாலும் அறுவை மருத்துவம்போன்று மக்களைக் கவரமுடியவில்லை. சில வசதியான செட்டியார்கள் வெள்ளைக்கார டாக்டரைத் தேடிவந்தனர். அப்போது நானும் கூட இருந்தேன். ஆனால் டாக்டர் செல்லையாவின் புகழ்போல் டாக்டர் பார்த் பெறவில்லை. டாக்டர் பார்த் ஒரு வினோத பழக்கம் கொண்டவர். நோயாளி மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்தால் அவர் அதற்காகப் போராடி உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடமாட்டார். அப்போதெல்லாம் என்னிடம், ” Truly he will die .” ( நிச்சயமாக அவர் இறந்துவிடுவார் ) என்று சொல்லிவிடுவார். அதைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு ஒருமாதிரி இருக்கும். நாட்கள் ஆகஆக அவர் மருத்துவத்தைவிட பயிற்சி மருத்துவத்தில் அதிக ஆர்வம் கொண்டவராகத்தெரிந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர் அங்கு சென்று மரக்கட்டைகளை இழைத்து மெழுகுவர்த்தி தண்டுகள் செய்துகொண்டிருப்பார்.அவர் அவ்வாறு செயல்பட்டது எனக்கு சாதகமானது. நான் முழுக்க முழுக்க தனியாக மருத்துவ வார்டுகளைக் கண்காணிப்பது போன்று மருத்துவச் சிகிச்சையில் தீவிரமாக ஈடுபட்டேன்.எனக்குத் துணையாக மருத்துவ நூல்கள் உதவின. நோயாளிகளும் என் சிகிச்சையில் நம்பிக்கைக் கொண்டனர்.
டாக்டர் ராமசாமி அறுவைச் சிகிச்சையில்தான் இருந்தார். அவருக்கு அதில் அலாதிப் பிரியம். ஆனால் அவருக்கு அப்போது அதிகம் வாய்ப்பு கிட்டவில்லை. அவர் என்னுடன் நெருங்கிப் பழகலானார். சில நாட்களில் அவருடன் நான் திரைப்படங்கள் காணச் செல்வேன். அப்போது தங்கமணி, மஞ்சுளா என்னும் இரண்டு திரைப்பட அரங்குகள் திருப்பத்தூரில் இருந்தன. சற்று தொலைவில் இருந்தாலும் நடந்தே செல்வோம்.
டாக்டர் ஃரெடரிக் ஜான் எனக்கு மருத்துவக் கல்லூரியில் மூன்று வருடம் சீனியர். டாக்டர் செல்லப்பா இரண்டு வருடம் சீனியர். ஆதலால் அவர்கள் இருவரிடமும் நான் மிகவும் மரியாதையுடனே நடந்துவந்தேன்.எங்கள் கல்லூரியின் பாரம்பரியம் அப்படி! கூடுமானவரை நான் இந்த வாய்ப்பை என்னுடைய மருத்துவ ஞானத்தை வளர்த்துக்கொள்ளவே பயன்படுத்தினேன்.
அங்கு சேர்ந்த ஒரு வாரத்தில் எனக்கு இரவு வேலை பார்க்கும் பணியும் தரப்பட்டது. டாக்டர் செல்லையாவைத் தவிர மற்ற அனைவரும் வேலை நேரம் போக மீத நேரத்தில் வரும் அவசர நோயாளிகளைக் காணவேண்டும். மதியம் ஒன்றிலிருந்து மூன்று வரையும் மாலை ஐந்திலிருந்து மறுநாள் காலை எட்டு மனை வரையும். அந்த நேரத்தில் மருத்துவமனை அனைத்தையும் அந்த ஒரு மருத்துவர்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். மற்றவர்கள்சற்று ஓய்வாக இருக்கலாம். ஆனால் அவர்களும் எதற்கும் தயாராகவே இருக்கவேண்டும்.
மதியம் ஒரு மணிக்கு அல்லது மாலை ஐந்து மணிக்கு மருத்துவர்கள் அனைவரும் இல்லம் திரும்பிவிடுவார்கள்.அதன் பிறகு சில நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக வருவார்கள். அவர்கள் நேராக பி. வார்டுக்கு வரவேண்டும். அங்கு அவசர சிகிச்சை அறையில் பத்து ரூபாய் கட்டி பதியவேண்டும்.அங்குள்ள தாதியர் அவசர சிகிச்சை குறிப்பேட்டில் நோயாளி பற்றிய குறிப்புகளை எழுதிக்கொண்டு ஒரு தாதியர் மாணவியிடம் தருவார். அவர் அப்போது எந்த மருத்துவர் அவசர சிகிச்சைக்கு வருவார் என்பதை அங்குள்ள பட்டியலில் பார்த்துவிட்டு அந்த மருத்துவரின் இல்லம் வருவார். மருத்துவர் உடன் வார்டுக்குச் சென்று அந்த நோயாளியைப் பார்க்கவேண்டும். அவரால் சிகிச்சை தரமுடியும் எனில் மருந்துகள் தருவார். அதற்கான தொகையை வார்டு தாதியர் வாங்குவார். ஒருவேளை நோயாளியை வார்டில் அனுமத்திக்க வேண்டுமெனில் அவரை அனுமதிப்பார். அப்படி செய்யும்போது அது மருத்துவ வார்டு எனில் டாக்டர் பார்த்துக்கு தெரிவிக்கப்படும். அறுவை மருத்துவ வார்டு எனில் டாக்டர் செல்லையாவுக்கு தெரிவிக்கப்படும். அவர்கள் அந்த நோயாளியை வார்டில் வந்து பார்த்துக்கொள்வார்கள். பிரசவம் பார்க்க வருபவர்கள் நேராக பிரசவ வார்டுக்குச் செல்வார்கள்.அவர்களை இதுபோன்றே அங்கு பணியாற்றும் பெண் மருத்துவர்கள் சென்று பிரசவம் பார்ப்பார்கள். அல்லது அறுவை சிகிச்சைக் கூடத்துக்குக் கொண்டு சென்று சிசேரியன் அறுவை மூலம் குழந்தையை வெளியில் எடுப்பார்கள்.இதுவே அவசர சிகிச்சை செய்யும் விதமாக அங்கு பின்பற்றப்பட்டது. மருத்துவர்களின் வீடுகள் அனைத்துமே பி வார்டின் அருகிலேயே இருந்ததால் சற்று நேரத்தில் செவிலிய மாணவிகள் மருத்துவரை அழைக்க வந்துவிடுவார்கள். இவ்வாறு இரவில் எந்த நேரத்திலும் அவர்கள் அழைக்க வருவார்கள்.
தாதியர் பயிற்சி மாணவிகளுக்கு பாடம் எடுக்க சில மருத்துவர்கள் சென்று வந்தார்கள். வகுப்புகள் தாதியர் பயிற்சிப் பள்ளியில் நடைபெறும். பொது மருத்துவம், அறுவை மருத்துவம், மகப்பேறும் மகளிர் நோயியல் பாடங்கள் மருத்துவர்களால் எடுக்கப்பட்டன.
விழியிழந்தோர் பள்ளிக்கும் ஒரு மருத்துவர் வாரம் ஒருநாள் சென்று வருவார். அங்குள்ள குழநதைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படும்.
இங்கு நடக்கும் அனைத்து பணிகளும் மனிதாபிமான அடிப்படையில் நடந்தன. மருத்துவர்கள் அனைவரும் அன்பும் நேர்மையும் பண்பும் கொண்டவர்கள்களாகவே சிறப்புடன் பணியாற்றினார்கள். சுற்று வட்டார கிராம மக்கள் நிறைவான மருத்துவ வசதியை இங்கு பெற்று மனநிறைவுடன் இல்லம் திரும்பினர்.
ஒரு நாள் மாலையில் பாலராஜுடன் கிறிஸ்டோபர் வந்தார். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் போன்று தெரிந்தது. நாங்கள் மூவரும் மருத்துவமனை ஊழியர்கள் தங்கும் வீடுகளைச் சுற்றிப்பார்த்தோம்.பள்ளியின் பின்பக்கத்தில் இருந்த ஐந்து வீடுகளில் ஜெயக்கொடி, சாந்தா, ஜெசிக்கா போன்ற சீனியர் தாதியர் குடியிருந்தனர். அந்த வரிசையில் இருந்த கடைசி வீடு கண் மருத்துவருக்காக காலியாக இருந்தது. அது மற்ற வீடுகளைவிட சற்று பெரியது. அதைத் தாண்டி வலதுபக்கத்திலிருந்த சாலையில் நடந்தோம். அங்கிருந்த முதல் வீட்டில் பால்ராஜ் குடியிருந்தார். அவர் தன்னுடைய அம்மாவை அறிமுகம் செய்துவைத்தார். அவருக்கு நேர் எதிரில் தேவஇரக்கம் குடியிருந்தார். மார்ட்டின் வீடு அங்குதான் இருந்தது. அவர்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அதே பகுதியில் ஆபிரகாம் வீடும் ஞானவரம் வீடும் இருந்தன. அவர்கள் இருவரும் மின்சார பிரிவில் பணிபுரிகின்றனர். பர்னபாஸ் என்பவர்தான் மின்சார பிரிவின் பொறியாளர். அவர் வெளியில் குடியிருந்தார். தொடர்ந்து நடந்தோம். அங்கு தனித்தனி வீடுகள் இருந்தன. அவற்றில் சீஸ்டர் பாலின், சந்திரா விக்லீஸ், வசந்திரா, அமரஜோதி, ஆகியோர் குடியிருந்தனர். அங்கு ஒரு மூலையில் ஒரு பெரிய வீடு உயரமாகக் காணப்பட்டது. அதில்தான் கிறிஸ்டோபர் உள்ளார். அதைத் தாண்டி சென்றபோது ஃபிராங்க்ளின் வீடும் அவருக்கு எதிரில் பாலசுந்தரம் வீடும் இருந்தன. அதன் வலது பக்கத்தில் மைக்கல் வீடும் டேனியல் வீடும் இருந்தன. அப்பகுதியில் பரிசோதனைக்கூட பயிற்சி மாணவர்கள் தங்கும் விடுதி இருந்தது.
தொடர்ந்து நடந்தால் கடைநிலை ஊழியர்களின் வீடுகள் வரிசையாக காணப்பட்டன. அங்கு சுமார் இருபது வீடுகள் இருந்தன. அவை அனைத்தும் சிறிய வீடுகள். நீளமான கட்டிடங்களில் வரிசையாக வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அங்குதான் துணி சலவை செய்பவர்களும், துப்புரவு பணியாளர்களும், மருத்துவமனையின் உதவியாளர்களும் ஆயாக்களும் குடியிருந்தனர். அங்கிருந்து மீண்டும் சமாதானபுரத்தினுள் நுழைந்தோம். அங்கு இன்னும் சிறிய வீடுகளில் சில முன்னாள் தொழுநோயாளிகளும் குடியிருந்தனர். அவர்களில் சாமுவேல், பணையன், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கினர். மோசஸ் என்பவர் குடும்பத்துடன் குடியிருந்தார். அவருடைய மகன் ஒரு மருத்துவர். சில குறவர்களும்கூட அங்கு குடியிருந்தனர்.அவர்களில் ஆமோஸ் என்பவரும் அவரின் மனைவி எலிசபெத்தும் துப்புரவு வேலை செய்தனர். இங்கு வந்துள்ள சுவீடன் நாட்டு மிஷனரிகள் இவ்வாறு தொழுநோயாளிகளுக்கும் குறவர்களுக்கும் வேலை தந்து மறுவாழ்வு தந்துள்ளனர்.இத்தகைய மனிதாபிமான செயலைக்கண்டு நான் வியந்துபோனேன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationநான் யார்வாழ்க்கைப் பந்தயம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *