தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

ஈரமுடன் வாழ்வோம்

பிச்சினிக்காடு இளங்கோ

Spread the love

பிச்சினிக்காடு இளங்கோ
(சிங்கப்பூர்)

பரந்துகிடக்கும் உலகில்
பரவியிருக்கும் தமிழர்களின்
தமிழ் தலைநிமிர
தமிழ்த்தலை நிமிர
தமிழர்களின் நிலையுயர
எழுதுகோலை மட்டுமே
தலைவணங்கவைக்கும்
வணங்காமுடிகளே!
உலகின்
எல்லா மூலைகளிலிருந்தும்
தமிழ்வெளிச்சம் பரப்பும்
தமிழ்மூளைகளே!
மூளைச்சூரியன்களே
நிலாக்களே! நித்திலங்களே!
நம்மைச்சந்திக்க வைத்த-தமிழைச்
சிந்திக்கவைத்த
திருமூலர்களே!

மாநாட்டு மூலவர்களே
முனைப்புடன்
முன்னின்றுழைத்த முன்னோடிகளே!

அரசுமொழியாய்த்
தமிழ் முரசுகொட்டும்
அதிபர் பதவியும்
அரிய பதவியும்
தமிழர்க்குக் கிட்டும்
அதிசய நாடாம்

கடல்நுரை கொலுசணிந்த
கன்னி
கட்டடக்கவிதைகளின் தொகுப்பு
கப்பல் வாத்துகளின்
விளையாட்டு மைதானம்
பன்னாட்டு விமானங்களின் வேடந்தாங்கல்
செடிகொடிகளின்
சிகைஅலங்கார நிலையம்
உலகின் எந்த மூலையில்
முதலுதவி தேவையெனில்
முதலில் உதவும் நாடாம்
முதலுலக நாடாம்
சிங்கப்பூரின்
சிறப்பு வணக்கம்

எங்கே வாழ்ந்தாலும்
இனிநாம் நண்பர்கள்
எங்கே இருந்தாலும்
என்றும்நாம் தமிழர்கள்

நிறத்தால் இனத்தால்
நிலத்தால் மதத்தால்
பிரிந்து கிடந்தாலும்-மனம்
விரிந்து கிடப்போம்

ஊரொன்று உலகொன்று
உணரத்தான் இவ்வாழ்க்கை
யாரென்று எவரென்று- கேள்வி
கேட்பதல்ல வாழ்க்கை

பேதம் என்பது
பேய்களின் வேதம்
சேதம் என்பதே
பேய்தரும் பாடம்

வேரொன்று நமக்கென்றால்?
வேறென்ன தமிழ்தான்!
வேருக்குத் தேவை
தமிழ்ப்பணி நீர்தான்

தமிழ்வேர் தழைப்பதற்கு
தலைப்பணியாம்
தமிழ்ப்பணியும்
தமிழர் பணியும்
தமிழோடு மனிதமும்
உலகோடு தமிழனும்

வாழும் நெறியை
வாழ்ந்து காட்டுவோம்
நாளைய தலைமுறைக்கு
வழித்தடம் போடுவோம்

மொழி நமக்கு
வாகனம் அல்ல
வாழ்க்கை!

மொழி நமக்கு
ஊடகம் அல்ல
உயிர்!

மொழி நமக்கு
முகமும் முகவரியும்

ஆம்!
தமிழ்தான் தமிழரின்
முகவரி

முகவரி இழக்காமல்
முனைமழுங்கிப் போகாமல்
அகமும் புறமும்
ஆழிபோல் ஈரமுடன் வழ்வோம் வளர்வோம்

பிச்சினிக்காடு இளங்கொ (சிங்கப்பூர்) 26.5.2017

Series Navigationமௌனித்துவிட்ட கலகக்குரல்- கவிஞர் ஏ. இக்பால் ( 1938 – 2017 ) நினைவுகள்வளையாபதியில் பெண்ணியம்.

One Comment for “ஈரமுடன் வாழ்வோம்”

 • meenal says:

  கடல்நுரை கொலுசணிந்த
  கன்னி
  கட்டடக்கவிதைகளின் தொகுப்பு
  கப்பல் வாத்துகளின்
  விளையாட்டு மைதானம்
  பன்னாட்டு விமானங்களின் வேடந்தாங்கல்
  செடிகொடிகளின்
  சிகைஅலங்கார நிலையம்

  கற்பனை நன்று


Leave a Comment

Archives