அக்னி பரிட்சை என்னும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்வில் திரு சீமான் தனக்கே உரிய கோபத்தோடும் உணர்ச்சியோடும் “தம்பி”யாக எதிரே உட்கார்ந்திருந்த பேட்டியாளரிடம் சொன்ன விஷயங்கள் உங்களுக்கு புதியதாக இருந்திருக்காது. ஏனெனில் இலுமினாட்டி என்பது பரவலாக தமிழில் புழங்கிவரும் சொல்லாக கடந்த சில வருடங்களில் ஆகியிருக்கிறது.
இலுமினாட்டி என்று தமிழில் எழுதி கூகுளில் தேடினார் 32800 பதிவுகள் இருக்கின்றன என்று சொல்லுகிறது.
இந்த இலுமினாட்டி என்பது அமெரிக்க புராடஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் பரப்பிய கட்டுக்கதை. முக்கியமாக உலகமயமாக்கப்படும் அமெரிக்க பொருளாதாரத்துக்கு எதிராகவும், அமெரிக்காவிலிருந்து வெளியேறும் வேலைவாய்ப்புகளுக்கு எதிராகவும், வட அமெரிக்க வியாபார ஒப்பந்தம் (nafta) உருவாக்கிய கிளிண்டன், அல் கோர் போன்ற அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகவும், அந்த ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க பணக்காரர்களுக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட இந்த கட்டுகதையில் போப்பாண்டவர் (கத்தோலிக்கர்), யூத மதத்தை சேர்ந்த வியாபாரிகள் ஆகியோரும் வில்லன்களாக இருப்பார்கள்.
இலுமினாட்டி என்பது இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளில் பிரபலமாக ஆவதற்கு ராபர்ட் லுட்லம் போன்ற மர்மக்கதை எழுத்தாளர்களின் புத்தகங்களும் ஒரு காரணம். ராபர்ட் லுட்லம் போன்ற மர்மக்கதை எழுத்தாளர்களின் கதைகளில் அழிவு கொலை தீமை கழகம் (அகொதீக) போன்ற மர்மமான அமைப்புகள் உலக பொருளாதாரம் போன்றவற்றை ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்டிருக்கும். இதனை எதிர்த்து கதாநாயகன் வீரதீரமாக போரிட்டு சதிகளை முறியடிப்பார்.
இந்த பின்னணியில் பார்த்தால், ஏன் சீமான் அவர்கள் ஜார்ஜ் புஷ், போப்பாண்டவர் ஆகியோருடன் சேர்த்து திரு ரஜினிகாந்த் அவர்களையும் கோர்த்துவிட்டார் என்று புரிந்துகொள்ளலாம்.
முதலில் அவர் காட்டிய இலுமினாட்டி படங்களை பார்ப்போம். ஜார்ஜ் புஷ், அவரது மனைவியார் ஆகியோர் பாபா முத்திரையை காட்டுகிறார்கள். ஜார்ஜ் புஷ் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்தவர். டெக்ஸாஸில் புகழ்பெற்ற புட்பால் விளையாட்டுக்குழுவின் பெயர் டெக்ஸாஸ் லாங்ஹார்ன் என்பது. Texas Longhorn என்பது டெக்ஸாஸ் மாநிலத்தின் புகழ்பெற்ற மாடு. இதன் நீண்ட கொம்புகளால எளிதில் அடையாளம் காணக்கூடியவை. இந்த மாட்டை அடையாளமாக வைத்திருக்கும் டெக்ஸாஸ் லாங்க்ஹார்ன் புட்பால் விளையாட்டுக்குழுவின் அடையாளம் அந்த மாட்டின் முகத்தை ஞாபகப்படுத்தும் விரல் முத்திரை. அந்த விளையாட்டுக்குழுவின் ஆதரவாளர்கள் அந்த விரல் முத்திரையை காட்டுவார்கள். அவர்களுக்கு பாபாவையோ அல்லது இலுமினாட்டியையோ தெரிந்திருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.
நார்வே நாட்டுக்காரர்கள் ஜார்ஜ் புஷ்ஷின் விரல் சைகையை சாத்தான் முத்திரை என்று தவறாக கருதினார்கள் என்ற செய்தி இங்கே
அமெரிக்க ஊமையர் மொழி கைவிரல்களை வைத்து பேசுவதை அடையாளமாக கொண்டது. அமெரிக்க ஊமையர் மொழியில் இந்த பாபா முத்திரை i love you என்ற பொருள் கொண்டது. இந்த விரல் முத்திரை பிலிப்பைன்ஸ் நாட்டில் பிரபலமானது.
போப்பாண்டவர் பிலிப்பைன்ஸ் சென்றபோது அங்கு கூட்டத்தில் இந்த விரல் முத்திரையை காட்டினார்.
அதன் இணைப்பு இங்கே
இதில் முக்கியம் என்னவென்றால், புராடஸ்டண்ட் கிறிஸ்துவத்தில் மிக முக்கியமான எதிரி போப்பாண்டவர் மட்டுமல்ல, யூதர்களும்தான். யூதர்களுக்கு எதிராக மார்ட்டின் லூதர் எழுதியவையே பின்னாளில் யூதர்களுக்கு எதிராக பெரும் பேரழிவை ஏற்படுத்த ஊக்குவித்தன என்றும் வரலாற்றாசிரியர்கள் சொல்வார்கள். அதனை அடியொற்றியே சீமானும் யூதர்கள் தவிர வேறு யாரும் போப்பாண்டவர்கள் ஆக முடியாது என்ற பொய்யையும், போப்பாண்டவர் காட்டும் ஐ லவ் யூ விரல் முத்திரையை evil என்றும் சொல்லுகிறார். அதற்கு அவரது கிறிஸ்துவ வளர்ப்பு காரணமாக இருக்கலாம்.
இணையத்தில் சீமான் ஒரு விரலை உயர்த்தி காட்டி பேசும் புகைப்படத்தையும் isis அமைப்பில் காட்டும் ஒரு விரல் (ஏகத்துவம்) சின்னத்தையும் ஒப்பிட்டு, சீமான் “நான் உங்களை சேர்ந்தவன்” என்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு சொல்லுகிறார் என்று கிண்டல் பண்ணியிருக்கிறார்கள். அது கிண்டல் தான். தீவிரமாக எடுத்துகொள்ளாதீர்கள்.
சீமான் அக்னி பரிட்சை நிகழ்வில் பேசியதை யூட்யூபில் புதிய தலைமுறை நிறுவனம் பகிர்ந்திருக்கிறது. அதற்கு பின்னூட்டம் எழுதியவர்கள் சீமான் இப்படி “உண்மைகளை” சொன்னதற்காக புல்லரித்து புளகாங்கிதம் அடைந்து தமிழ் தாய்மொழி இல்லாதவர்களை எல்லாம் தமிழ்நாட்டிலிருந்து துரத்துவோம் என்று கூக்குரல் இடுகிறார்கள். (அது தனது கோரிக்கையாக சீமான் இதுவரை சொல்லவில்லை என்பது ஒரு ஆறுதல்)
__
திரு சீமானின் முக்கியமான கொள்கை ஒன்றே ஒன்றுதான். அது தமிழ்நாட்டை தமிழர்கள் ஆள வேண்டும் என்பது. தற்போதைய முதல்வரும் துணை முதல்வரும் அக்மார்க் தமிழர்கள்தான். ஆனால் அதுவல்ல அவரது கோரிக்கை. தான் முதல்வராக ஆகவேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. அதற்குத்தான் தமிழன் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை. தொடர்ச்சியாக எம்ஜியார் தமிழக முதல்வராக ஆகிகொண்டிருந்தபோது கலைஞர் கருணாநிதி, தமிழன் தமிழ்நாட்டின் முதல்வராக ஆகக்கூடாதா என்று கெஞ்சினார். அதற்கு கலைஞர் குடும்பத்தினரை வடுகர் என்று எதிர்ப்பிரச்சாரம் செய்தார் எம்ஜியார்.
ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி, வைகோ, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் தமிழர்கள் இல்லை என்ற பிரச்சாரத்தை வெற்றிகரமாக நடத்திமுடித்துவிட்டார்கள். இதெல்லாம் அவலமான அரசியல்கள். கமலஹாசனும் அக்மார்க் தமிழர்தான். தமிழ்நாட்டில் இருக்கும் பல கட்சிகளின் தலைவர்களும் அக்மார்க் தமிழர்கள்தான். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்கள் அன்புமணி, ராமதாஸ் ஆகியோர். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, ஹெச் ராஜா போன்றோர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் திருமாவளவன், ரவிக்குமார் போன்றோர், கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் நல்லகண்ணு, முத்தரசன் போன்றோர், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா போன்றோர் இவ்வளவு பேரும் அக்மார்க் தமிழர்கள்தானே? தமிழர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்றால், நல்லக்கண்ணுவை முதல்வராக ஆக்குவேன் என்று ரஜினிகாந்த் சொல்லி ஆதரவளிக்கவேண்டியதுதானே என்று கேட்கும் சீமான் போன்றவர்கள் இத்தனை அக்மார்க் தமிழர்களில் ஒருவருக்கு ஆதரவளிக்க வேண்டியதுதானெ? பிரச்னை தமிழர் ஆள வேண்டும் என்பதல்ல, தான் ஆள வேண்டும் என்பது. இதற்கு தமிழ் அடையாளம் ஒரு ஸ்டெப்னி.
இந்த கோரிக்கைக்குக் காரணம் தனிநபர் துதியும், தனிநபர்கள் நடத்தும் கட்சிகளுக்கு மக்கள் வரலாற்று காரணங்களால் ஆதரவளித்ததுதான் இல்லையா? ஆனால் “கன்னட ஜெயலலிதா”வுக்கு மாற்று “தெலுங்கு கருணாநிதி” என்ற நிலையை உருவாக்கியது அதிமுகவும் திமுகவும்தானே? தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் இல்லாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பாஜக போன்ற தேசிய கட்சிகள் ஆட்சியில் இருந்திருந்தால், அடிக்கடி முதல்வர்கள் மாற்றப்பட்டிருப்பார்கள். ஏராளமான அக்மார்க் தமிழர்கள் முதல்வர்களாக இருந்திருப்பார்கள். இந்த வடுகர், அன்னியர், தமிழர் ஆகிய கோஷங்கள் இன்றைக்கு போல வலுவாக இருந்திருக்காது என்பது ஒரு முரண்நகை.
உதாரணமாக கர்னாடகாவில் தரம் சிங் என்ற காங்கிரஸ் முதல்வர் ஆட்சியில் இருந்தார். வீட்டில் இந்தி பேசும் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்த கன்னடர். ஆனால், அவர் அக்மார்க் கன்னடர் அல்ல; ஆகையால் அவர் முதல்வராக ஆகக்கூடாது என்ற கோஷம் கர்னாடகாவில் எழவே இல்லை.
கலைஞரும் எம்ஜியாரும் ஜெயலலிதாவும் மாறி மாறி 1969லிருந்து சுமார் 46 வருடங்கள் ஆண்டிருக்கிறார்கள். “தமிழ் முதல்வர்” கோரிக்கையாளர்களின் பார்வையில் இவர்கள் மூவருமே தமிழர்கள் அல்லர். இவ்வாறு வேறெந்த ஜாதியும் குலமும் இனக்குழுவும் முதல்வர் முத்திரை இல்லாமல் போனதால், அந்தந்த ஜாதி அமைப்புகள் அரசியல்கட்சிகளாக பரிணாமம் பெற்று தங்கள் கோரிக்கைகளை முதல்வர் முத்திரை மூலம் பெற வேண்டும் என்ற ஆசையில் ”தமிழ் முதல்வர்” கோரிக்கையின் பின்னால் நிற்கிறார்கள்.
ஆனால் ஏன் இந்த இனக்குழு அடிப்படையிலான கட்சிகள் அந்தந்த இனக்குழுக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களை முழுமையாக கைப்பற்றவில்லை? பெண்ணாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மூன்றாவது இடத்தை பிடித்தார். ஏன்?
ஏனெனில், ஜெயலலிதாவோ அல்லது கருணாநிதியோ அல்லது எம்ஜியாரோ ஆட்சியில் இருந்தாலும், அதிகாரப்பரவல் என்பது அந்தந்த ஜாதியினருக்கும் இனக்குழுக்களுக்கும் முழுமையான அளவிலேயே நடந்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஜெயலலிதா தான் கன்னட பார்ப்பனர் என்பதால் கன்னட பார்ப்பனர்களுக்கு மட்டுமே படியளக்கவில்லை. கருணாநிதி வெள்ளாளர் என்பதால் வெள்ளாளர்களுக்கு மட்டுமே கொட்டி கொடுக்கவில்லை. எம்ஜியார் மலையாளி என்பதால் மலையாளிகளுக்கு தமிழகத்தை பட்டா போட்டு கொடுத்துவிடவில்லை. சொல்லப்போனால் இவ்வாறு மிகமிகசிறுபான்மையாக இருந்ததே இவர்களது பலம்.
தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர ஜாதி உணர்வு காரணமாக பல ஜாதிகளின் நோக்கம் தான் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை மற்றொரு பலமான ஜாதி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான். அதனால், எல்லாருக்கும் பொதுவாக இருக்கக்கூடிய மிகச்சிறு சிறுபான்மையை சேர்ந்த ஒருவர் நடுவராக இருக்க தகுதி பெற்றவராகிவிடுகிறார்.
ஆகையால் அதிகாரப்பரவலை இப்படிப்பட்டவர்கள் உறுதி செய்துவிடுகிறார்கள். கருணாநிதியும் ஜெயலலிதாவும் எம்ஜியாரும் எல்லா சமூகத்தினருக்குமான அதிகாரப்பரவலை உறுதி செய்திருக்கவில்லை என்றால் அவர்கள் வெற்றி பெற்றிருக்கமுடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஆகையால் தமிழன் அரசாள வேண்டும் என்று கலைஞர் சொன்னதும், தமிழன் அரசாளக்கூடாதா என்ற சீமானின் புலம்பலும் தன்னுடைய ஜாதி அடையாளத்தையும் மற்றவர்களின் ஜாதி அடையாளங்களையும் மறைக்கவும் பூசி மொழுகவுமான ஒரு உத்திதானே தவிர உண்மையான கோரிக்கை அல்ல.
இந்த நோக்கில் திராவிட கொள்கையும் தமிழ் கொள்கையும் ஒரே மாதிரியானவை. ஜாதிகளை மறைத்துகொண்டு திராவிடம் என்ற அடிப்படையில் தனக்கு ஓட்டுப்போடவேண்டும் என்று கேட்ட கலைஞர் அண்ணா போன்றவர்களுக்கும், ஜாதிகளை விட்டுவிட்டு தமிழன் என்ற அடிப்படையில் தனக்கு ஓட்டுப்போடவேண்டும் என்று கேட்கும் சீமானுக்கும் வித்தியாசம் இல்லை. யார் வில்லன்கள் என்பதுதான் வித்தியாசம்.
ஒரு பேச்சுக்கு சீமான் அவர்களை நாடார் ஜாதியை சேர்ந்தவர் என்று வைத்துகொள்வோம். சீமான் அவர்கள் முதல்வராக ஆகிவிட்டால், மற்ற ஜாதிக்காரர்கள் “தமிழால் வீழ்ந்தோம்” என்று கட்டுரைகள் எழுதுவார்களா மாட்டார்களா? எப்படி மற்ற மொழி பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிராக ”திராவிடத்தால் வீழ்ந்தோம்” கருத்தும், அதன் டெமகாகரி சீமானும் வருகிறார்களோ அதே போல “தமிழால் வீழ்ந்தோம்” என்று மற்ற ஜாதிக்காரர்கள் வரமாட்டார்களா?
இன்று அனைத்து பிராந்திய கட்சிகளுமே தனிநபர் அல்லது தனி குடும்ப அமைப்புகளாகவே இருக்கும் சூழ்நிலையில் எப்படி இவை அனைத்து ஜாதிகளுக்கும் முதல்வராகும் வாய்ப்பு (அது ஒரு சிம்பாலிக்கான பதவியாக இருந்தாலும்) கிடைக்கும்?
இதற்கு முன்னரே சொன்னது போல தீர்வுகள் உண்டு. அது கம்யூனிஸ்டு, பாஜக, காங்கிரஸ் போன்ற பிராந்திய கட்சிகள் அல்லாத கட்சிகளை ஆதரிப்பது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் முதல்வர் பதவி வர வாய்ப்பு உண்டு என்றால் அது மஹாராஷ்டிரத்தில் முஸ்லீமான அப்துர்ரஹ்மான் அந்துலே அவர்களை முதல்வராக்கிய காங்கிரஸாலோ, அல்லது உம்மன் சாண்டி என்ற கிறிஸ்துவரை முதல்வராக்கிய காங்கிரஸாலோ, அல்லது 1970இலேயே தாழ்த்தப்பட்டவரான கர்ப்பூரிதாகூரை பிகாரின் முதல்வராக்கிய காங்கிரஸாலோ, பிற்படுத்தப்பட்டவரான, பெரும்பான்மை சமூகத்தின் உறுப்பினரல்லாத யோகி ஆதித்யநாத் அவர்களை முதல்வராக்கிய பாஜகவாலோ, ஜாட்களே ஆட்சி செய்து வந்த ஹரியானாவில் கட்டார் அவர்களை முதல்வராக ஆக்கிய பாஜகவாலோ தான் முடியும்.
ஆகவே உண்மையிலேயே அதிகாரப்பரவல் வேண்டும், தமிழர்களின் அனைத்து ஜாதியினருக்கும் மதத்தினருக்கும் முதல்வராக ஆக வாய்ப்பு இருக்கவேண்டும் என்று கருதுபவர்கள் ஆதரிக்கவேண்டிய கட்சி காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவையே.
- சீமானின் புலம்பல் வினோதங்கள்
- இரவு
- திருமண தடை நீக்கும் சுலோகம்
- செந்நிறக்கோள் செவ்வாயில் எதிர்கால மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் அண்டவெளித் திட்ட முதற் சோதிப்பு
- தொடுவானம் 203. எனக்கொரு மகன் பிறந்தான் …
- காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்.வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (1)
- குடல் வால் அழற்சி ( Appendicitis )
- ஓடிப் போய்விடு உயிருடன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- குறிப்புகள் அற்ற குறியீடுகள்!
- சிறுவெண் காக்கைப் பத்து
- மகிழ்ச்சியின் விலை !
- ஆவணப்படம் வெளியீடு /கல்விக்கருத்தரங்கம்