தொடுவானம் 205. உரிமைக் குரல்.

This entry is part 9 of 10 in the series 21 ஜனவரி 2018
 

 படம்: சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை E வார்டு.

          முன்பே முடிவு செய்தபடி டாக்டர் செல்லையா காரைக்குடிக்குச் சென்றுவிட்டார். அங்கு தனியாக சொந்த நர்சிங் ஹோம் திறந்துவிட்டார்.
          வேலூரில் எம்.எஸ். படித்து முடித்து டாக்டர் ஃபிரெடரிக் ஜான் தலைமை மருத்துவர் ஆனார். அவரும் அவருடைய மனைவி இந்திராவும் பங்களாவில் குடியேறினர். டாக்டர் ஜான் அறுவை மருத்துவமும் பி.வார்டு. எப் வார்டுகளையும் பார்த்துக்கொண்டார். டாக்டர் செல்லப்பாவும் டாக்டர் ராமசாமியும் அவருக்கு உதவினார்கள். டாக்டர் இந்திரா டி.ஜி.ஓ. பயின்றவர். அவர் பிரசவ வார்டில் பணிபுரிந்தார்.
          டாக்டர் செல்லப்பாவும் ஆலிஸும் ஜான் இருந்த வீட்டில் குடி புகுந்தனர். டாக்டர் ராமசாமி அந்த வீட்டிலேயே தொடர்ந்து இருக்கப்போவதாகக் கூறிவிட்டார். அதனால் செல்லப்பா காலிசெய்த பெரிய வீடடை நான் கேட்டேன். அது எனக்குக் கிடைத்துவிட்டது. அந்த வீட்டில் மாடியில் இரண்டு படுக்கை அறைகள் உள்ளன. அங்கேயே குளியல் அறையும் உள்ளது. கீழே பெரிய கூடம். சமையல் அறை, குளியல் அறையும் இருந்தன.
          கலைமகள் சரளாவுடன் தொடர்ந்து தட்டச்சு பயின்றுகொண்டிருந்தாள். என் மனைவி தொடர்ந்து மலேசியாவில்தான் இருந்தாள்.
          உசிலம்பட்டி ஆசிரியை பயிற்சிப் பள்ளிக்கு மனு செய்திருந்தோம்.அதன் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. அன்று கலைமகளை அழைத்துக்கொண்டு பேருந்து மூலம் உசிலம்பட்டிக்குச் சென்றேன். அந்த நேர்முகத் தேர்வு செய்வோர் அனைவருக்கும் அண்ணனை நன்றாகத் தெரிந்திருந்தது. நான் அவருடைய தம்பிதான் என்றும் அறிமுகம் செய்துகொண்டேன். அவர்கள் குடும்ப பின்னணி பற்றித்தான் அதிகம் கேட்டனர். கலைமகள் யார் என்று தெரிந்தும்கூட அவர்கள் தேர்வு செய்யவில்லை. நாங்கள் வசதியான குடும்பம் என்று சொன்னார்கள்.அதோடு கலைமகளை பல்கலைக்கழகத்தில் சேர்த்துவிடுமாறும் அறிவுரை கூறினார். அது எனக்கு பெருத்த ஏமாற்றம். சோகத்துடன் திருப்பத்தூர் திரும்பினோம்.
          அதோடு நான் விடவில்லை. கலைமகளை ஆசிரியை ஆகத்தான் ஆசை. அதனால் பரங்கிப்பேட்டையில் உள்ள ஆசிரியை பயிற்சிப்பள்ளிக்கு விண்ணப்பம் செய்தோம். . அங்கும் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது.அதன் தலைமை ஆசிரியை எங்களுக்கு தூரத்துச் சொந்தம். சென்னையில் ஞானப்பிரகாசம் தாத்தாவுக்கு நெருங்கிய உறவினர். அவர் அங்கு புரசைவாக்கத்தில் உள்ள தரங்கை அச்சகத்தில் மேலாளராகப் பணிபுரிந்தார். நான் அவரைப் பற்றி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்தேன். ஆனால் அங்கும் கலைமகளைத் தேர்வு செய்யவில்லை. மனம் உடைந்துபோன நிலையில் தெம்மூரில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு திருப்பத்தூர் திரும்பிவிட்டோம்.
          டாக்டர் ஃபிரெடரிக் ஜான் டாக்டர் செல்லையா போன்று இல்லை. எல்லாவற்றையும் தன்னுடைய கண்காணிப்பில் வைத்துக்கொள்ள விரும்பினார். அதனால் என்னுடைய பணியில் தலையிடுவதை நான் உணர்ந்தேன்.
          நான் தொழுநோய்ப் பிரிவில் சுதந்திரமாக இயங்கினேன். வாரத்தில் சில நாட்கள் களப்பணியில் சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்று வந்தேன். தொழுநோய் வெளிநோயாளிப் பிரிவிலும் வார்டிலும் பணிபுரிந்தேன். புண்களுக்கு கட்டுகள் போட்டேன். ஆனால் டாக்டர் ஃபிரெடரிக் ஜான் அவர்தான் இனிமேல் தொழுநோய்ப் பிரிவின் பொறுப்பாளர் என்று என்னிடம் கூறிவிட்டார். அவர் கை விரல்கள் முடங்கிய தொழுநோயாளிகளுக்கு EF4T என்னும் அறுவைச் சிகிச்சை மூலம் முடங்கிய விரல்களை நீட்டினார்.அதற்கான பயிற்சியை அவர் கரிகிரியில் பெற்றிருந்தார். அதை வைத்து அவர் உரிமை கொண்டாடினார். உண்மையில் மத்திய அரசின் தொழுநோய் SET திட்டத்தில் என்னுடைய பெயர்தான் இருந்தது. அதற்கு மானியமாக மாதம் 500 ரூபாய் தருகிறார்கள். ஆனால் நான் அதைப் பெறவில்லை. அவர் அதைப் பெற்றுக்கொண்டார். ஆனால் அத் திட்டத்தின் கீழ் அவர் களப்பணிக்குச் செல்வதில்லை. அவர் தலைமை மருத்துவ அதிகாரியாக இருப்பதால் அவரிடம்  வாதிட நான் விரும்பவில்லை. மௌனமாக என் பணியைத் தொடர்ந்தேன். இருந்தாலும் மனத்தில் அந்த உறுத்தல் இருக்கவே செய்தது.
          டாக்டர் செல்லப்பாவிடமும் ஆலிஸிடமும்  கூறினேன். அவர்கள் பொறுமையாக இருக்கச் சொன்னார்கள். பால்ராஜிடமும் கிறிஸ்டோபரிடமும்   இதைச் சொன்னபோது அவர்கள் வெகுண்டு எழுந்தனர். அது SET திட்டத்தின்கீழ் மத்திய அரசு களப்பணி செய்யும் டாக்டருக்கு வழங்கப்படும் தொகை என்று பால்ராஜ் கூறினார். என்னை கரிகிரி சென்று தொழுநோய் பயிற்சி பெறுமாறு கிறிஸ்டோபர் சொன்னார். அனால் நான் அப்படிச் செல்லவேண்டுமானால் டாக்டர் ஜான்தான் என்னை முழு சம்பளத்துடன் அனுப்பவேண்டும். அவர் அப்படிச் செய்து தான் வாங்கும் அந்த ஐந்நூறு ரூபாயை இழப்பாரா என்பது சந்தேகமே!
          ஒரு நாள் மாலையில் நாங்கள் மூவரும் பேசிக்கொண்டே சமாதானபுரத்தைத் தாண்டி மரங்கள் நிறைந்த மேட்டுக்குச் சென்றோம். அப்போது கிறிஷ்டோபர் மனமகிழ் மன்றம் பற்றி பேசலானார்.
          ” டாக்டர். மனமகிழ் மன்றத்துக்கு எல்லா ஊழியர்களிடமும் மாதந்தோறும் சந்தா வசூலிக்கப்படுகிறது. ஆனால் எப்போதுமே தலைமை மருத்துவர் காட்டும் நபரே அதன் செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார். இப்போது உள்ள பாலசுந்தரமும் அப்படிதான் வந்தார். ” கிறிஸ்டோபர் இவ்வாறு ஆரம்பித்தார்.
          ” ஆமாம் டாக்டர். அவர் வயதில் மூத்தவர். அவருக்கும் மனமகிழ் மன்றத்துக்கும் சம்பந்தமே இல்லை. அதன் செயலராக இருக்க கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவர். ” பால்ராஜ் தொடர்ந்தார்.
          ” அதற்கு நாம் என்ன செய்வது?  தலைமை மருத்துவர் அவருடைய அதிகாரத்தை இதில் பயன்படுத்துகிறார்.  ” இதை  நான் சொன்னேன்..
          ” இந்த முறை தேர்தலில் அவரை மாற்றியாக வேண்டும். ” என்றார் கிறிஸ்டோபர்.
          ” ஆமாம்  டாக்டர். அப்டித்தான் செய்யவேண்டும். ஆனால் தலைமை மருத்துவர் அதை விரும்ப மாட்டார். அவர் பாலசுந்தரமே இருக்கட்டும் என்றுதான் கூறுவார். வேறு யாரையாவது நாம் தேர்ந்தெடுத்தால் அவருக்கு விரோதமாக செயல்படுவதாகவே ஆகும். அதற்கு நாம் தயாராகவும் இருக்கவேண்டும். ” இது பால்ராஜின் கருத்து.
          ” தேர்தல் ஜனநாயக முறையில் நடந்தாகவேண்டும். தலைமை மருத்துவர் சொல்லும் ஆளையே தேர்ந்தெடுப்பது அடக்குமுறையாகும். இந்த தடவை அதற்கு இடம் தரக் கூடாது. பாலசுந்தரத்தை நாம் மாற்றியே ஆகவேண்டும். ” ஆவேசமானார் கிறிஸ்டோபர்.
          ” அப்படி மாற்றுவதென்றால் அவரை எதிர்த்து போட்டியிட துணிச்சலானவர் தேவை. தலைமை மருத்துவ அதிகாரியின் கோபத்திற்கும் அதன் பின் விளைவிற்கும் அவர் தயாராக இருக்கவேண்டுமே? ” நான் எச்சரித்தேன்.
          ” அதற்கு நீங்கள்தான் பொருத்தமானவர் டாக்டர். ” என்றார் கிறிஸ்டோபர்.
          அது கேட்டு நான் திடுக்கிட்டேன். அவ்வாறு பதவி வேண்டும் என்று நான் எண்ணியதில்லை.
          ” என்ன டாக்டர் யோசனை? நீங்கள் சரி என்று மட்டும் சொல்லுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ” என்றார் பால்ராஜ்.
          ” நான் நின்றால் ஊழியர்கள் விரும்புவார்களா? “
          ” இப்போது இருக்கும் நிலையில் ஊழியர்கள் அனைவருக்கும் உங்களைப் பிடித்துள்ளது. காரணம் நீங்கள் அனைவரிடமும் அன்பாகப் பழகுகிறீர்கள். நீங்கள் தேர்தலில் நிற்பது தெரிந்தால் அனைத்து வாக்குகளும்  உங்களுக்குத்தான் டாக்டர். ” என்றார் கிறிஸ்டோபர்.
          ” அப்படி நான் ஜெயித்துவிட்டால் எனக்கும் தலைமை மருத்துவருக்கும் நேரடியான பகை உண்டாகும் அல்லவா? ” நான் கேட்டேன்.
         ” இப்போது மட்டும் அவர் உங்களிடம் நட்பாகவா உள்ளார் டாக்டர்? தொழுநோய் பிரச்னை ஒன்றே போதாதா டாக்டர்? ” பால்ராஜ் தான் அவ்வாறு கூறினார்.
         ” நீங்கள் சரி என்று சொல்லுங்கள் டாக்டர். இந்த மாற்றத்தை  நாங்கள் செய்து காட்டுகிறோம். ” ஆர்வமூட்டினார் கிறிஸ்டோபர்.
          ” நீங்கள் ஜெயித்தபின் ஊழியர்கள் உங்களோடு இன்னும் நெருக்கமாக ஆகிவிடுவார்கள் டாக்டர். மருத்துவமனையில் ஊழியர்களின் உரிமைக் குரலாக ஆகிவிடுவீர்கள் டாக்டர்! ” பால்ராஜ் தைரியமூட்டினார்.
          அவர்கள் சொல்வது சரி என தோன்றியது. மருத்துவமனை ஊழியர்கள் அனைவரிடமிருந்தும் சந்தா கட்டாயமாக சம்பளத்தில் பிடிக்கப்படுகிறது. அத்தகைய மாற்றம் ஜனநாயக ரீதியில்தான் செய்யப்படவேண்டும். அந்த மன்றத்தால் ஊழியர்களுக்கு மன மகிழ்ச்சியைத் தரும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யவேண்டும். அவ்வாறு செயல்பட தலைமை மருத்துவரின் தலையீடு இருக்கக்கூடாது. சுதந்திரமாக  செயல்படக்கூடிய ஒரு செயலர் தேவை. தற்போதைய நிலையில் அதை என்னால்தான் செய்ய இயலும். வேறு யாரும் துணிவுடன் போட்டியிட முன்வரமாட்டார்கள். நான் செயலராவதுதான்  ஊழியர்களுக்கு நல்லது.
        ” சரி. நானே போட்டியிட்டு செயலர் ஆகிறேன். ” என்னுடைய சம்மதத்ததைத் தெரிவித்தேன்.
        இருவரும் என்னை கைகுலுக்கி வாழ்த்தினர்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationவிவிலியம் உணா்த்தும் வாழ்வியல் தன்மைகள்பொங்கல்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *