நிலாந்தனின் கவிதைகள்: ஒரு பார்வை

author
0 minutes, 2 seconds Read
This entry is part 11 of 14 in the series 18 பெப்ருவரி 2018

சுயாந்தன்

கவிதைகளில் சில பரிசோதனை முயற்சிகளைச் செய்தவர் நிலாந்தன். அந்தப் பரிசோதனைகள் நிலம்- போர்- வாழ்வியல்- வரலாறு- இயற்கை என்ற விடயங்களுக்குள் மொழியை அடக்கியதாகவும், அதன் வாசிப்பானது உணர்வுகளை அறிவுத்தளத்தில் விரிப்பதாகவும் இருக்கக்கூடியது. ஏற்கனவே அவருடைய வன்னி மான்மியம் பற்றி பதிவு செய்துள்ளேன். தமிழக இதழ்களில் ஈழத்துக் கவிஞர்கள் ஒரு பார்வை என்று சிற்றிதழ்களில் எழுதும்போது நிலாந்தனின் பெயர் பல இடங்களில் விடுபட்டுள்ளது. அதனையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டவேண்டும். நிலாந்தன் கவிஞராக மட்டுமல்ல அரசியல் பத்திகள், ஓவியங்கள், அரசியல் ஆய்வுக்கட்டுரைகள், யதார்த்த அரசியலின் சாத்தியங்கள் பற்றி நிறையவே எழுதியுள்ளார். அவை பல தளங்களிலும் விவாதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அறிவுபூர்வமான யதார்த்த உள்ளடக்கத்துக்காக இன்றும் அந்தக் கருத்துக்களைத் தூசிதட்டலாம்.

1. மண்பட்டினங்கள்
2. வன்னி மான்மியம்
3. யாழ்ப்பாணமே ஓ… எனது யாழ்ப்பாணமே
4. யுகபுராணம்.
இதில் யுகபுராணம் தவிர ஏனைய மூன்று கவிதைத் தொகுப்புக்களையும் வாசிப்புக்கு உள்ளாக்கியுள்ளேன். வன்னி மான்மியம் நான்கு நீள் கவிதைகளை உள்ளடக்கியது அதனுள் ஒன்றாக மண்பட்டினங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதில் நான்குமே பரிசோதனைகள்தான்.
1. மண் பட்டினங்கள்.
2. பாலியம்மன் பள்ளு அல்லது ஓயாத அலைகள் மூன்று.
3. வன்னி நாச்சியாரின் சாபம்.
4. மடுவுக்குப் போதல்.

இவற்றை “பரிசோதனை செய்யப்பட்ட நீள்கவிதைகள்” என்றே சொல்லவேண்டும். இப்படியான பரிசோதனைகளை ஈழத்துக்கவிதைகளில் ஆரம்பத்தில் செய்தவர் நிலாந்தன் தான். அவை பிசிறுதட்டாத மொழியின் அழகியல் தரம் மிக்கவை. மிகத் தாமதமாகவே நிலாந்தனை வாசித்துள்ளேன் என்ற குற்றவுணர்வு ஒரு பக்கம் இருந்தாலும், அந்தத் தாமதம்தான் அவர் படைப்புகள் மீதான பார்வையை ஒன்றிக்கச் செய்துள்ளது என்பதஉடன் குற்றவுணர்வு நீங்கிவிடுகிறது.

எதற்கு இந்த மூன்று தொகுப்புகளும் முக்கியமானவை. சமகாலத்தில் எழுதுபவர்கள் இவற்றைத் தாண்டி வந்து விட்டார்கள்தானே. இந்தக் கவிதைகளில் அப்படியென்ன சிறப்புள்ளது. இவற்றைக் கேட்டுப் பதில் கிடைக்காதவர்களுக்காக இதனை பதிவுசெய்கிறேன்.
1. நிலாந்தன் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். யுத்த இடப்பெயர்வுகள் அவரது பிற்கால வாழ்விடத்தை வன்னிக்கு மாற்றிவிடுகிறது. அவரது கவிதை எழுத்துக்கள் யாழ்ப்பாணப் புலமைத்துவத்திலிருந்தும் வன்னியின் வாழ்வியல் கூறுகளிலிருந்தும் கிடைத்தவை. அவை முற்றிலுமாக வன்னியைச் சித்தரித்தவை. அதனைச் சரியான முறையில் வெளிப்படுத்திய ஈழத்தவர்கள் குறைவு என்றே நினைக்கிறேன். ஏராளமான ஈழக் கவிதைகள் வாசித்துள்ளேன். அவை மரபின் தொடர்ச்சியாகவோ உணர்வை மட்டுமே ஊட்டும் Conservative கவிதைகளாகவோதான் இருந்துள்ளன. ஆனால் நிலாந்தனிடமிருந்து நமக்குக் கிடைத்தவை பரிசோதனையை மையப்படுத்திய மிகப் புதுமையான கவிதைகள். பனங்காமம், பெரியமடு, ஓமந்தை, மல்லாவி, வவுனிக்குளம் போன்ற இடங்களுக்குப் பிரயாணம் செய்யும் போது எனக்கு ஞாபகம் வருவது நிலாந்தனின் கவிதைகள்தான்.
2. போராளிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் யுத்தம் நடந்த காலத்தில் அநேக போராளிகள் ஒட்டுமொத்தச் சிங்களவர்களையும் எதிரியாகவும், அரசபடைகள் அனைத்துத் தமிழர்களையும் அழிக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் இயங்கி வந்தனர். ஆனால் ஒரு அறிவுபூர்வமான கவிஞனால் அப்படிப் பார்க்க முடியாது. அவர்களும் மனிதர்கள்தான். நாங்களும் மனிதர்கள்தான் என்ற பார்வையில்தான் நிலாந்தன் கவிதைகள் இருந்துள்ளன. அதேவேளை மக்களின் துயரங்களையும் அவர்களது இழப்புக்களையும் பதிவுசெய்ய மறக்கவில்லை. இதனை இரண்டாம் உலகமகா யுத்தம் பற்றி வெளிவந்த Fury (2014) என்ற டேவிட் ஆயர் இயக்கிய படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கவிதையின் உள்ளோட்டங்கள் புரிய அந்தப் படத்தின் காட்சிகள் உதவக்கூடும்.
3. ஈழத்தின் அநேக கவிதைப் படைப்பாளிகள் இன்று விட்டுச் செல்லும் விடயம் நிலம்சார்ந்த இயற்கைப் பொருட்கள், அடையாளங்கள். அவற்றைப் பலர் செயற்கைப் படுத்தியே கவிதையாக்கி உள்ளனர். நிலாந்தனின் கவிதைகள் அந்த இயற்கைத்தன்மையை பரிசோதனைக் கவிதைகள் செய்தபோதும் விட்டுச் செல்லவில்லை. உதாரணமாக, ஊமத்தங்கூவை, ஆட்காட்டி, கொட்டைப்பாக்குக் குருவி, சுடலைக்குருவி, மருதமரம் போன்ற வன்னிக்கென்றே பிரத்தியேகமானவற்றைத் தனது எழுத்தில் குறித்துள்ளார்.
4. வன்னியின் நடுவால் பாய்ந்துபோகும் ஒரு ஆற்றை வைத்துக்கொண்டு அதன் இருபக்கமும் பரந்துள்ள ஊர்களையும் மக்களின் வாழ்வையும் அதற்குள் இதுகாறும் நடந்தேறிய வரலாற்றுச் சம்பவங்களையும் நாடகம், கதை, கவிதை, வரலாறு என்று பரிசோதித்து எழுதுவது என்பது சாதாரணமானதல்ல. மொழியின் அழகியல் கைவரப்பெற்ற வரலாறு, நாடகம் போன்ற துறைகளில் பரீட்சயமுள்ள ஒருவரால்தான் இதனைச் சாத்தியமாக்க முடியும். பாலி ஆறு ஒரு குறியீடு என்றால் அதன் இரு மருங்குமுள்ள ஊர்கள் துணைக்குறியீடு. அந்தத் துணைக்குறியீடுகளிலுள்ள வாழ்க்கையை, அவலங்களை, இயற்கையை விபரிப்பதில் ஈழத்துக்கவிதைகளில் பரிசோதனை முயற்சி என்று செய்த முன்னோடி நிலாந்தன் தான். அவர்தான் முதலுமானவர்.
5. இலங்கையில் நடந்த ஆகப்பெரிய exodus யாழ்ப்பாணத் தமிழரின் இடப்பெயர்வு. இதனை கி.மு 1580-1200 காலப்பகுதியில் மத்தியகிழக்கில் நிகழ்ந்த மாபெரும் இடப்பெயர்வுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். இந்த வரலாற்றுப் புரிதல் எந்த இடத்திலும் கவிதையை ஒரு வரலாறு போன்ற பழமைவாதக் காட்சிக்குள் நிறுத்தவில்லை. வரலாற்றைக் கவிதையில் அழகுணர்வூட்டிப் பதிவு செய்வதற்கு நல்ல உதாரணம் “யாழ்ப்பாணமே ஓ.. எனது யாழ்ப்பாணமே” தொகுப்பு. மண்பட்டினங்கள் முழுமையான பரிசோதனைகளாலானவை.
6. இந்தக் கவிதைத்தொகுப்புகள் மூன்றுமே ஒரு காலத்தின் அறிவுபூர்வமான வெளிப்பாடுகள். வழக்கம்போல யுத்தகாலக் கவிதைகளல்ல. உணர்வு உரு ஏத்தும் கவிதைகளல்ல. அறிவுத்தளத்தில் சிந்திக்கச் செய்தவை. பல இடங்களில் நினைத்துப் பார்க்க வைத்தவை. இந்த மண்ணின் வாழ்வியலை இப்படியும் பரிசோதனைகளில் கூறலாம் என்று தெளிவுபடுத்தியவை. அதனால் கடந்த காலங்களில் எழுதப்பட்ட மிக வித்தியாசமான, படைப்பூக்கவுணர்வைப் பெருகவைக்கும் ஈழத்துக் கவிதைகளாக நிலாந்தனின் கவிதைகளை முன்மொழியலாம். யாரும் வெளிப்படுத்தாத கவிதை யுக்தியை முதன் முதலில் பிரயோகித்தவர் என்ற ரீதியில் ஈழக்கவிதைகளில் நிலாந்தன் அடிக்கடி பேசப்பட வேண்டியவர்.

நிலாந்தன் இதுவரை எழுதிய அனைத்துக் கவிதைகளையும் ஒருசேரத் தொகுக்கும் பணிகள் நிகழ்ந்தால் ஆக்கபூர்வமாக இருக்கும்.
===
நிலாந்தனின் கவிதை ஒன்று.
===
பாலியம்மன் பள்ளு.
=
1
மின்மினிப் பூச்சிகளைச் சூடிய
முதுபாலை மரத்தின்
கீழிருக்கிறேன்
முன்னால்
வவுனிக்குளம்
எல்லாளன் கட்டியதென்று
சொல்லுகிறார்கள்.
கனகராயன் குளத்தில்
மழை பெய்தால்
வவுனிக்குளம் நிரம்புமாம்
வவுனிக்குளம் நிரம்பினால்
பாலியாறு பெருகுமாம்
பாலியாறு பெருகினால்
பாலியம்மன் உருக்கொள்வாள்
பாலியம்மன் உருக்கொண்டால்
படை திரளும்
படை பெருகும்
போர் மூளும்.
2.
வவுனிக்குளத்துக்கு
எத்தனை வயதிருக்கும்?
தெரியாது
சிலசமயம்
குளத்து மேட்டை மேவியெழும்
முதுமரங்களுக்குத் தெரிந்திருக்கும்.
அவற்றின்
வேர்களை யரித்தோடும்
பாலியாற்றுக்குத் தெரிந்திருக்கும்
நிச்சயமாக
பாலியம்மனுக்குத் தெரிந்திருக்கும்.
அவள் தானே
எல்லாளன் படைதிரட்ட
தேர்க்கொடியிலேறி அமர்ந்தாள்.
இப்பொழுதும் கேட்கிறது
கொலுசுச் சத்தம்
இப்பொழுதும் கேட்கிறது
உடுக்கினிசை
பாலியம்மன் ஆடுகிறாள்
உருவேற உருவேற
பாலியாறு பெருகியோடுகிறது
தொட்டாச்சிணுங்கி வெளி முழுதும்
நெல் மணிகள்
பாலியாற்றின் தீரமெல்லாம்
படை வீரர்
எல்லாளன் படை கொண்டு வருகிறான்
கெமுனுவின் நகரை நோக்கி
கெமுனுவுக்கு நித்திரையில்லை
உடுக்கும் கொலுசும்
இதயத்தைப் பிளப்பது போலிருக்கிறது
எங்கே துயில்வது?
கால்களை மேலும் மேலும் மடக்கி
கெமுனு
துயிலாதே புரள்கிறான்
எல்லாளன் படை
வருகிறது.
3.
கொட்டைப் பாக்குக் குருவி
காடு விடு தூது
காட்டின் புதிரும் சோகமும்
முதுமரங்களின் அமைதியும் கம்பீரமும்
அதன் குரலாயினவோ
“வாடா பாப்பம் கொட்டைப் பாக்கா”
ஒரு வரிப்பாடல்
திடீரெனக் கேட்டால்
எவனோ
நாடிழந்தலையும் அரசனின்
சோகப்பாடல் போலிருக்கும்
உற்றுக்கேட்டால்
வன்னியரின் தாய்ப்பாடல்
இதுவோவென்று தோன்றும்
“வாடா பாப்பம் கொட்டைப்பாக்கா”
“வாடா பாப்பம் கெமுனு குமாரா”
குளத்து மேட்டில்
பட்டுத் திரும்பி
காட்டினிருளில் கரைகிறது
ஒரு நன்னிமித்தமாக.
“வாடா பாப்பம் கெமுனு குமாரா”
முதிய எல்லாளன்
கெமுனு நகரின் மீது
படைகொண்டு போனான்
ஒரு தனியுத்தத்தில்
கெமுனு
அவனை சூழ்ச்சியால் கொன்றான்
யானை சறுக்கியது.
தொட்டாச்சிணுங்கி
வயல் வெளியெல்லாம் பரவ
பாலியம்மன் தவஞ் செய்யலானாள்…
கொட்டைப் பாக்குக் குருவியின்
குரலில்
தவிப்புக் கூடியது.
4.
எல்லாளன் திரும்பி வரவில்லை
வவுனிக்குளம்
அவனது ஞாபகங்களால்
நிறைந்து தளும்பியது…

Series Navigationஆதவனும் பெண்களும்: சில குறிப்புகள்ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் வழங்கும் விழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *