தலைச் சுற்றல் ( VERTIGO )

This entry is part 8 of 12 in the series 3 மார்ச் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

” வெர்ட்டைகோ ” என்பது தலை சுற்றல். எது தலை சுற்றல் என்பதில் சிறு குழப்பம் நிலவுகிறது. மயக்கம், பித்தம் ,கிறுகிறுப்பு , கிறக்கம் என்றெல்லாம் தலை சுற்றலைக் கூறுவதுண்டு. தலைச் சுற்றல் இருவகையானது. முதல் வகையில் நாம் சுற்றுவதான உணர்வு. இரண்டாவது நம்மைச் சுற்றியுள்ளவை சுற்றுவது போன்ற உணர்வு.
தலைச் சுற்றல் பொதுவாக காதில் பிரச்னை இருந்தால் ஏற்படும். பூமியின் ஈர்ப்புச் சக்திக்கு ஏற்ப நேராக நிற்பதற்கும், கீழே விழுந்துவிடாமல் நடப்பதற்கும் காதுகளில் உள்ள வெஸ்டிபுலார் உறுப்பு பயன்படுகிறது..அதில் பிரச்னை உண்டானால் தலைச் சுற்றல் உண்டாகும். இதுபோன்று பின்வரும் காரணங்களாலும் தலைச் சுற்றல் உண்டாகும்.
* BPPV – Benign Paroxysmal Positional Vertigo. – இதை மிதமான அவ்வப்போது தோன்றும் தலைச் சுற்றல் எனலாம். இதில் நுண்ணிய கால்சியம் பொடிகள் உள் காதின் குழாய்களில் படிந்துவிடுவதால் உண்டாகிறது. நாம் விழுந்து விடாமல் நடந்து செல்வதற்கு உள் காது முக்கியமானது.அங்கிருந்து நரம்புகள் மூளைக்கு செய்தி அனுப்புகின்றன. அதன் மூலமே நம்முடைய தலையையும் உடலையும் பூமியின் ஈர்ப்புச் சக்திக்கு இணங்க நிமிர்ந்து நடக்கிறோம். உட்காருவதும் படுப்பதும் எழுவதும் எல்லாம் இதனால்தான்.இதில் கோளாறு உண்டானால் தலைச் சுற்றல் உண்டாகும்.இந்த பிரச்னை வயது காரணமாகவும் உண்டாகலாம்.
* Meniere” s Disease – மெனியர் நோய் – இதில் உள் காதில் நீர் தேக்கமுற்று காதினுள் நிலவும் சமமான அழுத்தத்தில் மாற்றத்தை உண்டாக்கும். இதனால் தலைச் சுற்றல், காதில் ஓசை, காது கேளாமை போன்ற அறிகுறிகள் தென்படும்.
* காதுக்குள் நரம்பு அழற்சி – பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் இது உண்டாகிறது. இதில் உள் காதில் வைரஸ் தொற்று உண்டாகி நரம்புகளைத் தாக்குவதால் உடல் சமமான நிலையில் இருப்பது பாதிப்புக்கு உள்ளாகிறது. அதனால் தலைச் சுற்றும், காது வலியும் உண்டாகிறது.
இவை தவிர வேறு சில காரணங்களாலும் தலைச் சுற்றல் உண்டாகலாம். அவை வருமாறு:
* விபத்து – தலையில் அல்லது கழுத்தில் அடி.
* மூளையில் கட்டி.
* சில மருந்து வகைகள் காது நரம்புகளைப் பாதிப்புக்கு உள்ளாக்கும்.
* ஒற்றைத்தலைவலி
அறிகுறிகள்
* சுற்றும் உணர்வு
* தள்ளுதல் போன்ற உணர்வு.
*அசைவது போன்ற உணர்வு.
* நிற்பதில் நடப்பதில் தடுமாற்றம்.
* ஒரு பக்கமாக இழுப்பது.
* குமட்டல்
* கண்களில் அசைவு.
* தலைவலி.
* வியர்வை.
* காதில் தொடர்ந்து ஒலி
* காது கேளாமை .
இத்தகைய அறிகுறிகள் சில நிமிடங்கள் முதல் சில மணிநேரம் வரை தொடர்ந்து பின்பு இல்லாமல் போய் மீண்டும் உண்டாகலாம்.

சிகிச்சை முறைகள்
தலைச் சுற்றல் உண்டாவதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை தருவதுதான் முறை. சில சமயங்களில் தலைச் சுற்றல் தானாக மறைந்துவிடும். மூளை வேறு வழிகளில் காதால் உண்டான பிரச்னைக்கு ஈடு தரும் வகையில் செயல்படும். அதனால் தலைச் சுற்றல் குறைந்துவிடும்.
* Vestibular Rehabilitation -காது நரம்புகளுக்கு பயிற்சி முறை – இதன் மூலம் காதிலிருந்து மூளைக்கு செல்லும் தகவல்கள் சரியாகலாம்.
* Canalith Repositioning Maneuvers – இதில் தலையையும் கழுத்தையும் சில கோணங்களில் திருப்பி பயிற்சி தருவதின் மூலம் காத்து குழாய்களில் அடைபட்டுள்ள கால்சியம் வெளியேற்றப்படுகிறது.
*மருந்துகள் – தலைச் கற்றலுக்கு சில மருந்துகள் தரலாம். அதோடு கிருமிகள் காரணம் என்றால் அதற்கு எண்டிபையாட்டிக் மருந்தும் ஸ்டீராய்டு மருந்துகளும் தரலாம்.
* அறுவை சிகிச்சை – மூளைக் கட்டிகள் காரணம் எனில் அவற்றை அகற்ற அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.

( முடிந்தது )

Series Navigationஅகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்வழக்கு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *