தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

அந்தரங்கம்

Spread the love

சு. இராமகோபால்

அந்தரங்கம்

சிந்தனைக்குச் சிரிப்பு
ஶ்ரீரங்கம் தெரிகிறது
என் மனதில் புகுந்து வாழும்
ரீங்கார வண்டுகளே
இன்று எந்தன்
சிந்தனையே சிரிப்பே

வந்தே
மாதரம் பிறக்குமுன்னர்
வந்ததிந்த சிரிப்பு
தந்தையின் நாமமே
தரணியெங்கும் படர்ச்சி
விந்தை விந்தை விந்தை
வீதியெல்லாம் வண்டுகள்

ஐந்தே
நாகங்க ளாடுகின்ற
அரண்மனையில் தனிக்குடிப்பு
சிந்தனையின் வீதியே
சந்நிதியின் திறப்பு
வாசல் வாசல் வாசல்
வழிவதெல்லாம் வானீர்

மூன்றே
முகங்களும் தோன்றுதற்கு
முருகு கண்ட இருட்டு
சிரிப்பினின் திரட்டே
ஶ்ரீரங்கம் வருவதற்குக்
திக்கு திக்கு திக்கு
தெளிவதற்குத் தருக்கம்

ஒன்றே
உரிமையின் அறுவடைக்கு
ஓடிச்சென்ற கன்று
ஓமென்ற ரீங்காரம்
ஒலிக்கின்ற ஓடைகள்
கோலம் கோலம் கோலம்
கூடாத நெய்தல்

பந்தே
பாதம் நீத்துப் பறக்குமென்று
பகுத்தறிவு தொட்ட சிந்தை
சிந்தாத தொண்டையிலே
தேங்கிவிட்ட நஞ்சுப்
பொங்கல் பொங்கல் பொங்கல்
போதைமனச் சிலிர்ப்பு

சந்தே
சகுணத்தின் கிரீடமென்று
சந்தை கொண்ட மண்டலம்
சாகுந் தலையரங்கம்
சாந்தி மாயை தேடும்
மந்தை மந்தை மந்தை
மங்களத்தின் சரடு

சான்றே
சத்திய மாகுமென்று
சடமுனிகள் தெளித்த தீர்த்தம்
குளித்த காடு சிந்தை
குலவியாடும் வண்டு
வாசம் வாசம் வாசம்
வகுத்தலிலே பெருக்கல்

அன்றே
அரங்கவாசம் முடிந்ததென்று
அறியாமலின்றும் பொறிக்கும் தீ
ஆதவனின் சிரிப்பு
அகங்காரச் சிந்தை
சோகம் சோகம் சோகம்
சுற்றுவதால் வெற்றி

சிந்தனைக்குத் தேன்சிரிப்பு
ரீங்கார வண்டுகளே
என்மனதில் நின்றுவாழும்
திருவரங்கம் தெரிகிறது
திருப்பாதை தேடுகின்றேன்
திருப்பாவை தேடுகின்றேன்

Series Navigation“பிரபல” என்றோர் அடைமொழிகடலைக் கொழுக்கட்டையாக்கிய கவிராசன்

Leave a Comment

Archives