கடலூர் முதல் காசி வரை

This entry is part 17 of 19 in the series 15 ஏப்ரல் 2018

02-02-18 : இன்றுதான் பயணம் தொடங்குகிறது. காலை 6.45. மணிக்கே எங்கள் வழக்கமான தானி [ஆட்டோ] ஓட்டுநர் மனோகர் வீட்டிற்கு வந்து விட்டார். எம்மைக் கொண்டு போய் திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையதில் சேர்த்து  விட்டார். நடைமேடை வரையில் எம் பைகளையும் சுமந்துகொண்டு வந்து வைப்பது அவரின் வழக்கம். வழக்கம் போல திருச்செந்தூரிலிருந்து சென்னை வரை செல்லும் விரைவு வண்டி 7.40 மணிக்கு வந்தது. நேற்றும் அதற்கு முன் நாளும் அது 9 மணிக்குதான் வந்தது. எங்களுக்கு முன்பதிவு உறுதியாகாததால் இரண்டு சீட்டுகள் எடுத்துக் கொள்ளும் படி பயண அமைப்பாளர் திரு பாய் அவர்கள் கூறி விட்டார். அதன்படி சீட்டுகள் எடுத்துக் கொண்டு வந்தேன்.

”நீங்கள் எஸ் 7 பெட்டியில் ஏறுங்கள்; அதில்தான் நான் இருப்பேன் “ என்றும் அவர் கூறினார், நிலையத்திற்கு எம்மை வழியனுப்ப திருவாளர்கள் நரசிம்மன், சுரேஷ், கணேசன், குமரப்பா ஆகியோரும் வந்திருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் இப்பயண அமைப்பாளர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வண்டியில் ஏறியதும் இன்முகத்துடன் பாயும் மற்றொரு அமைப்பாளரான திரு நாகராஜனும் வரவேற்றனர். அவர்களுடன் கும்பகோணத்தைச்சேர்ந்த மற்றொருவர் கையில் கட்டைவிரலில் கட்டுடன் இருந்தார். அவர் வெளிநாட்டிலிருந்து கும்பகோணம் வந்துள்ளார். பாய் அவர்களுக்கு நெருக்கம் போல் இருக்கிறது. பயணத்திற்கு நான்கைந்து நாள்கள் முன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கீழே விழுந்து கைகட்டைவிரல் சேரும் இடத்தில் விரிசல் ஏற்பட்டு விட்டது. அத்துடனே வந்துள்ளார். அது மட்டுமன்று; அத்துடன் அவர் செய்த சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கது.

சற்று நேரத்தில் வந்த திரு சிவா அவர்களுக்காக வைத்திருந்த சிற்றுண்டியை எமக்குத் தந்து உபசரித்தார். அவர்கள் விழுப்புரத்தில் வாங்கிக் கொண்டார்கள். வண்டி எழும்பூரை 11 மணிக்குப் போய்ச் சேர்ந்தது. இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் வண்டி ஏற வேண்டும். எனவே எழும்பூர் நிலையத்திலிலேயே மதிய உணவை முடித்துக் கொண்டு மாலை 4 மணிக்கு சென்ட்ரலை அடைந்தோம். எம் மூத்த மகன் எழிலன் இரவு 9 மணி வண்டியில் கோவை செல்ல வேண்டியவன் அங்கு வந்திருந்தான். மேலும் இரு பெண்மணிகளை நேராக சென்னைக்கே ஒருவரை அவரின் மகளும் மற்றவரை அவரின் மருமகனும் கொண்டு வந்து விட்டனர். ஜி.டி விரைவு வண்டி இரவு 7 மணிக்குக் கிளம்பியது. 7.30 மணிக்கு இரவு சிற்றுண்டியாகக் கிச்சடி சட்டினியுடன் அளித்தனர். இரவுப் பயணம் தொடங்கியது.

=================================================================================

03-03-18 : இன்று பயணத்தின் இரண்டாவது நாள். இன்று முழுவதும் இரயில் பயணம்தான். காலையில் ஏழரை மணிக்குச் சிற்றுண்டியும், பகல் ஒரு மணிக்கு மதிய உணவும் இரவு ஏழரைமணிக்குச் சிற்றுண்டியும் வழங்கபட்டன. சரியான நேரத்துக்கு தரமான உணவளிப்பதும், தங்குவதற்கு வசதியான அறைகள் [இருவருக்கு ஒன்று அல்லது நால்வருக்கு ஒன்று] ஏற்பாடு செய்வதும் போக்குவரத்துக்கு நேர்த்தியான பேருந்துகள் தருவதும், பார்க்க வேண்டிய இடங்களுக்குத் தாங்களே கூடவந்து இருந்து அவசரப்படாமல் காண்பித்து வருவதும் இப்பயண ஏற்பாட்டாளர்களிடம் காணப்படும் பாராட்டத்தக்க அம்சமாகும். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், மற்றும் பத்ரிநாத் ஆகிய இடங்களுக்குச் சிறப்பாக இவர்கள் அழைத்துச் சென்றார்கள். அதனால்தான் நான் மீண்டும் இவர்கள் மூலமே பயணம் செய்ய  முடிவெடுத்தேன். அவர்களின் முகவரி: சூப்பர் யாத்ரா ஏஜன்சி, எண்; 97, நாகேஸ்வரன் தெற்கு வீதி, கும்பகோணம். 612 001; தொடர்புக்கு: 94438 75802;

94427 42662. 0435-2400557. நள்ளிரவு தாண்டி 2.45 மணிக்கு ஆக்ராவை அடைந்தோம்.

===================================================================================

04-03-18 : இன்று மூன்றாவது நாள்.  ஆக்ரா ரயில் நிலையத்தின் வெளியே எமக்காக இரு பேருந்துகள் காத்திருந்தன. வெளியே வந்து அவற்றில் ஏறி அறையை அடைந்தபோது மணி 4 ஆகிவிட்டது. ஆக்ராவில் நாங்கள் தங்கி இருந்த விடுதியின் பெயர் மற்றும் முகவரி: HOTEL CHANAKYA; Shaheed Nagar Crossing, Nea All India Radio. Shamshabad Road, AGRA. 0562-4007939; 0562-2232527; 91 9068281999.  சற்று நேரம் படுத்திருந்தபின் காலைக் காப்பி வந்தது. குடித்துக் குளித்துத் தயாரானோம். காலைச் சிற்றுண்டி சூடான இட்லி, சட்னி சாம்பார், மிளகாய்ப்பொடியுடன் வழங்கப்பட்டது. கூடவே இனிப்பும் வடையும் உண்டு. காலை 8.30 மணிக்குப் பேருந்துகளில் தாஜ்மகாலை அடைந்தோம். நுழைவுக்கட்டணம் [ரூ50] செலுத்திச் சற்று நடந்து சென்றால் சலவைக்கல்லால் கட்டப்பட்ட அக்காதல் மாளிகை காட்சியளித்தது.

அதற்குச் சற்று தள்ளி தொழுகைக்கான ஒரு மசூதி உள்ளது. அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. தாஜ்மகாலில் சுமார் இரண்டு மணிநேரம் செலவிட்டோம். அதைச் சுற்றிலும் பூங்கா உள்ளது. நல்ல வெயில் சுட்டெரித்தது. படிக்கட்டுகள் ஏறிச் சென்றதும் காலில் போட்டிருக்கும் மிதியடி அல்லது பூட்ஸ் மேலேயே பாலித்தின் உறை ஒன்று அணிந்து கொள்ளவேண்டும். மேலே விரைவில் அசுத்தமாகிவிடும் என மிதியடியுடன் வர அனுமதி இல்லை. அந்த உறையை விடுதிக்கு வெளியேயே ஒருவர் 10 ரூ என்று விற்க வாங்கிவிட்டோம். முதலிலேயே இதைப் பயண ஏற்பட்டாளர்கள் சொல்லி விட்டனர்.

உலக அதிசயங்களில் ஒன்றாக அது இருப்பது ஏனென்று அருகில் போய்ப்பார்த்த பின்தான் புரிந்தது. பக்கத்திலேயே அதிகம் நீரில்லாத யமுனை இருந்தது. அதன் கரையில்தானே தாஜ்மகால் உள்ளது. உள்ளே அருகருகே உறங்கிக் கொண்டிருக்கும் மும்தாஜ் மற்றும் ஷாஜகான் கல்லறைகள் பார்த்தோம். அங்கு அமைதி நிலவியது. ஷாஜகானின் கல்லறை சற்று உயரமாக இருக்கிறது. தாஜ்மகாலின் வெண்மைகூடச் சற்று மாசடைந்துள்ளது என  ஆய்வாளர்கள் சொல்வது உண்மையே. நிறம் சற்று மங்கித்தான் இருக்கிறது. 11  ஆண்டுகளில் ஷாஜகானுக்குப் பத்துக் குழந்தைகளை  முஜ்தாஜ் பெற்றுக்கொடுத்தார் என்று கூறுகிறார்கள். அப்படியும் அழகிழக்காத தன் மனைவி மீது மிகுந்த ஆசை கொண்டிருந்ததால்தான் இக்காதல் மாளிகையை ஷாஜகான் கட்டினான்.

எனக்கென்னவோ தாஜ்மகால் தன் அழகுடன் உள்ளார்ந்த ஒரு சோகத்துடன் இருப்பதாகவே தோண்றியது. ஆனால் தன் இறுதிக்காலத்தில் மகனாலேயே அருகில் இருந்த கோட்டையில் சிறைவைக்கப்பட்ட ஷாஜகான் சிறைச் சுவரின் துவாரம் மூலம்தான் இம்மாளிகையைக் கண்டு உருகி மரணம் அடைந்தாராம். ஒருவழியாய் தாஜ்மகாலைப் பிரிந்து விடுதி சென்று மதிய உணவுண்டு சுமைகளைப் பேருந்தில் ஏற்றி அக்பர் கோட்டை என்றும் ஆக்ரா கோட்டை என்றும் சொல்லப்படும் கோட்டையை அடைந்தோம். அது மிகப்பெரியது. நிறைய வழிகள் பூங்காக்கள், அறைகள் உள்ளன. சுற்றிப் பார்க்கக் பார்க்கக்க் கால்கள் வலிக்கத் தொடங்கி விட்டன. ஷாஜகான் அடைக்கப்படிருந்த அறையைப் பார்க்க அனுமதி இல்லை. அது பூட்டப்பட்டுள்ளது.

மாலை வரும் முன் கிளம்பி மதுராவை அடைந்தோம். அறைகளில் சுமைகளை வைத்து விட்டு விடுதிக்குச் சற்று தொலைவில் உள்ள கண்ணன் பிறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிலுக்குச் சென்றோம். கண்ணன் பிறந்த சிறைச்சாலை இன்னும் அப்படியே உள்ளது. மேலே விதானம் வளைவாக உள்ள வட்டமான பெரிய அறை. ஒரே வழிதான் உள்ளது. சுவரில் உயரத்தில் நான்கு கம்பிகள் கொண்ட ஒரு சிறிய சன்னல் இருந்தது. அதன் வழியாகத்தான் அக்காலத்தில் வெளிச்சம் மற்றும் காற்று வருமாம்.

கண்ணன் பிறந்தவுடன் அவரை வசுதேவர் இந்த வழியாகத்தான் எடுத்துச் சென்றார் என  அடைக்கப்பட்டிருந்த ஓர் இடத்தைக் காட்டுகிறார்கள். அது சுவராகவே உள்ளது. அக்கோயிலில் கண்ணன் ராதா திருவுருவங்கள் உள்ள ஒரு பெரிய அரங்கத்தில் மாலை வேளைகளில் ஆரத்தி ஒரு மணி நேர இடைவெளியில் காட்டுகிறார்கள். ஒரே நேரத்தில் 4 சன்னதிகளில் 15 மணித்துளிகள் காட்டப்படும் ஆரத்தி பார்க்க வேண்டிய ஒன்று. அனைவரும் கண்ணன் பெயர் சொல்லிக் கோஷமிடுகிறார்கள். எங்கும் பஜனைமயம்தான். ஒரு கோஷ்டி ஒர் அறையில் பஜனை செய்து கொண்டிருந்தது. பக்கத்திலேயே கண்ணன் கோவர்த்தனமலையைத் தாங்கும் வடிவுள்ள ஓர் சன்னதி உள்ளது. சற்றுத் தள்ளி துளசி மாடம் இருக்கிறது.

இக்கோயிலின் ஒரு பக்கத்தை இடித்து ஔரங்கசீப் கட்டிய மசூதியும் உள்ளது. இப்பொழுதும் அங்கு தொழுகை நடக்கிறது.  செயற்கையாக இருள் ஏற்படுத்தி வளைந்து செல்லும் வழிகளுடன் குகைகள் அமைத்து வனம் போலஓர் அமைப்பை விலங்குகளின் உருவங்களுடன் ஏற்படுத்தி உள்ளார்கள். பார்க்க அழகாக உள்ளது. அத்துடன் விடுதி திரும்பினோம். இரவு சிற்றுண்டி முடித்து உறங்கத் தொடங்கினோம்.

============================================================================

05-03-18 இன்று பயணத்தின் நான்காவது  நாள். காலையில் 5 மணிக்கே புறப்பட வேண்டும் எனக் கூறியிருந்தனர். விடியல் 4.20க்கே எழுந்து விட்டோம். பெரும்பாலும் யாருமே தாமதம் செய்யாமல் கிளம்பி விடுகின்றனர். அப்பொழுதுதானே பயணம் திட்டமிட்டபடி நடக்கும். இன்று டில்லி சுற்றிப்பார்த்துவிட்டு இரவு குருக்ஷேத்திரம் சென்று தங்கத் திட்டம்.

காலை 8.30 மணிக்கு ராஜ்காட் அருகில் உள்ள ஓர் திறந்த வெளியில் பேருந்தை நிறுத்தினார்கள். எல்லாருக்கும் இனிப்புடன் இட்லி சட்னி, மற்றும் மிளகாய்ப்பொடியுடன் வழங்கப்பட்டது. அந்த இடமும் ராஜ்காட்டைச் சேர்ந்ததுதானாம். காவலாளிகள் இருவர் வந்து இவ்விடத்தில் யாரும் சாப்பிடக்கூடாது எனத் தெரிவிக்க நாங்கள் வழக்கமாக வந்து சாப்பிடும் இடம் இது என பயண அமைப்பாளர்கள் கூற அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் பாதிப்பேர் அங்கேயே சாப்பிட மற்றவர்க்குச் சற்றுத் தள்ளி சாலையின் ஓரத்தில் பறிமாறப்பட்டது. சிற்றுண்டி முடித்தவர்கள் காந்திஜி நினைவிடமான ஜாஜ்காட்டுக்கு நட்ந்து சென்றோம். வழியிலேயே வலப்பக்கம் முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் நினைவிடம் “கிசான் காட்” என்னும் பெயரில் உள்ளது. 13 நாள்கள் அவர் பிரதமாராக இருந்தார். ஆதரவு அளித்துப் பின் ஆதரவைக் காங்கிரஸ் கட்சி விலக்கிக்கொண்டதால் அவர் பதவி விலகினார். தமிழ்நாட்டின் அன்றைய அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியவாணிமுத்து அம்மையாரும், பாலாபழனூரும் அந்த அமைச்சரவையில் இருந்தனர்.

ராஜ்காட் மிக அமைதியாகத் தூய்மையாக இருந்தது. கருப்பு சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது. எப்பொழுதும் அதன் மீது ஒரு ஜோதி எரிந்துகொண்டே உள்ளது. நினைவிடத்தை மேலிருந்து சுற்றிவர வட்டமான மேடை போன்ற அகலமான பாதை இருந்தது. நிறைய பேர் நடை பழகிக்கொண்டிருந்தனர். அங்கு நிற்கும்போதே காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. பின்னர் அங்கிருந்து பேருந்தில் கிளம்பினோம்.

வண்டியில் இருந்த வழிகாட்டி நாடாளுமன்ற உறுப்பின்ரகளின் வீடுகள் [மாளிகைகள்] மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கின் அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம் ஆகியவற்றைப் பேருந்தில் இருந்தவாறே பார்க்க வைத்தார். டில்லியில் முக்கியமான சுற்றுலா இடங்களுக்கு நாங்கள் சென்றிருந்த திங்கட்  இழமை விடுமுறையாம். எனவே  இந்திரா வீட்டருகே கூடச் செல்லமுடியவில்லை. எனவே குதுப்மினார் பார்க்க முடிவு செய்தோம். இது பயணத் திட்டத்தில் இல்லாதது.

குதுப்மினார் என்றதுமே சற்று உயரமான வட்ட உருளை வடிவக் கட்டடம் தான் நினைவுக்கு வரும். அது ஒன்றுதான் அங்கு உருப்படியாய் இருக்கிறது. மற்றவை எல்லாம் வெற்றுச் சுவர்களாய் நிற்கின்றன. அங்கு பெரிய அரண்மனை இருந்திருக்க வேண்டும். துருப்பிடிக்காத பெரிய இரும்புத் தூணையும் பார்த்தோம். அங்கேயே மதிய உணவளித்தனர். மாலை  4 மணிக்கு  அங்கிருந்து கிளம்பி இரவு 8.30 மணிக்குக் குருக்ஷேத்திரம் அடைந்தோம்.

விடுதிக்குச் சென்று விட்டோம். பேருந்தில் இருந்த சுமைகளை யாருமே எடுக்கவில்லை. விசாரித்ததில் ”நாளைக் காலை சீக்கிரம் கிளம்பவேண்டும். எனவே மாற்று உடைகளை மட்டும் முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்” எனச் சொல்லியிருக்கிறார்கள். நான்தான் கவனிக்கவில்லை. பின்னர் எனக்குத் தெரிந்த் அரைகுறை இந்தியில் பேருந்தின் உதவியாளரிடம் கெஞ்சி  என் ஒரு பையை எடுத்தேன். இருட்டில் மற்றொன்றை எடுக்க வில்லை. அதில்தான் சோப்பு, பற்பசை, சீப்பு எண்ணெய் இருந்தன. இரவு சிற்றுண்டி முடித்துக் கடைகள் மிக அருகே இருந்ததால் அவற்றைப் போய் வாங்கி வந்தேன். விடுதி அறை நன்கு இருந்தது. உறக்கம் வந்தது.

==================================================================================

06-03-18 இன்று பயணத்தின் ஐந்தாவது நாள்.

காலையில் காப்பியும் சிற்றுண்டியாக பூரி உருளைக்கிழங்கும் அளிக்கப்பட்டன. சிற்றுண்டி உண்டு குருக்ஷேத்திரத்தைச் சுற்றிப்பார்க்கத் தொடங்கினோம். மிகப்பெரிய பாரதப்போர் நடந்த இடம் எதுவுமே தெரியாததுபோல அமைதியாக இருந்தது. இந்த இடத்தில்தான் எத்தனை போர்வீர்ர்கள், குதிரைகள், யானைகள் ரதங்கள் ஓடின சண்டையிட்டன என்று நினைக்கும்போது நாமும் அங்கே நிற்கிறோமே என்று பெருமிதம் அடைந்தாலும் பாசத்தையே வேரறுத்த இடம்தானே இது என்ற நினைப்பும் வந்த்து. இன்னும் இங்கே துச்சாதனன். கர்ணன், துரோணர், அபிமன்யூ போன்றோரின் ஆவிகள் சுற்றிக்கொண்டுதானே இருக்கும் என்றும் எண்ணத் தொடங்கியது. உறவுடன் போர் செய்ய மாட்டேன் என மறுத்த அருச்சுனனுக்குக் கீதையைச் சொல்லிக் கண்ணன் போர் செய்ய வைத்த இடத்தைப் பார்த்தோம். அந்த இடத்தில் ஒரு பெரிய தேரும் அதில் கண்ணன் அருச்சுனனுக்குக் கீதோபதேசம் செய்யும் காட்சியும் சிலைகளாக அமைக்கப்பட்டிருந்தன.

பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்த இடத்தில் அக்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் பஞ்ச பாண்டவரும் கண்ணனும் நிற்கின்றனர். சில சிறிய சன்னதிகள் உள்ளன. குறிப்பிடத்தக்கது ஒரு மரத்தின் மீது தலை மட்டும் உள்ள ஓர் உருவம் உள்ள சன்னதியாகும். அதன் வாயிலில் ‘பர்பரி’ என இந்தியில் எழுதப்பட்டிருந்தது. யோசித்த பிறகு அது ‘பார்பாரிகாவின் கருவறை எனப்புரிந்தது.

பார்பாரிகா என்பவன் பீமனுக்குப் பேரன் ஆவான். அதாவது கடோத்கஜனின் மைந்தன். அவனை வெல்லக் கண்ணனாலும் முடியாது. அவனைத் தம் பக்கம் சேர்க்கக் கண்ணன் எண்ணும்போது அவன் ‘நான் நியாயம் எப்பக்கம் இருக்கிறதோ அங்கு இருந்து போர் செய்வேன் என்கிறான். கண்ணனுக்குப் பயம் வருகிறது. ஏனெனில் பாண்டவரும் சில சமயங்களில் போர் நியாயத்தை மீறவேண்டி வரும். அப்பொழுது இவன் கௌரவர் பக்கம் போய்ச்சேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று நினக்கிறான். அதனால் பார்பாரிகாவைத் தானே தன் தலையை அறுத்துக் கொள்ளும் ஒரு சூழ்நிலையை உருவாக்கி விடுகிறான் அப்பொழுது பார்பாரிகா தன் தலை மட்டும் உயிரோடு இருந்து போர் முழுதும் காண வேண்டும் என வரம் வேண்டுகிறான். அப்படியே நடக்கிறது. இன்றும் குஜராத் மாநிலத்தில் மலை மீது பார்பாரிக்காவுக்கு ஒரு கோயில் உள்ளதாம் அங்கு ஆண்டுக்கொருமுறை ஒரு பெரிய திருவிழாவே நடக்கிறதாம். இது நம்மூர் அரவான் கதை போல இருக்கிறது.

குருக்ஷேத்திரத்தில் செயற்கையாக ஒரு மகாபாரதப் போர்க்களத்தையே ஏற்படுத்தி உள்ளனர். அங்கு பகதத்தன் யானை மீதிருந்து செய்யும் போர், அபிமன்யூ வதம், பீஷ்மர் சக்கரம் எடுத்து வருதல், கர்ணன் தேர்ச்சக்கரம் புதைதல், போன்றவை ஆறடி உயரங்களில் வண்னத்தில் வரையப்பட்டுள்ளன. அவற்றுகுச் சற்று முன்பாக போர்க்களமே அமைக்கப்பட்டுள்ளது. எல்லாம் ஆள் உயரப் போர் வீர்ர்கள், போர் செய்பவர்கள், தலையின்றி ரத்தம் வழிந்து கிடப்பவர்கள், வெட்டுண்ட கால்கள், கைகள், குதிரைகள், யானைகள் எல்லாம் பார்ப்பதற்கு உண்மை உருவங்களாகவே காட்சியளிக்கின்றன. பின்னணியில் போர்வீர்ர்களின் கூச்சலும் குதிரை கனைக்கும் ஒலிகள், யானைகள் பிளிறும் ஒலிகள், தேர் உருளும் சத்தம் போன்றவையும் கேட்பதால் நாம் போர்க்களத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. இங்கு நடக்கும் முப்பரிமாண ஒலி ஒளிக்காட்சி மிக அருமையாக இருக்குமாம். குருக்ஷேத்திரம் எல்லாம் நாம் தனியாகச் சென்று பார்ப்பதென்பது கைகூடாத செயல்.

விடுதிக்கு வந்து மதியம் சாம்பார், ரசம், மோர், பொரியல் கூட்டுடன் மதிய உணவை முடித்தோம். பிண் நெடும் பயணமாகப் பேருந்தில் மதியம் 2.20க்குப் புறப்பட்டு இரவு 9.15க்கு ஹரித்வார் சென்றோம். எல்லாருக்கும் அரிசி உப்புமா வழங்கப்பட்டது.   இரவில் கூட உறங்கும்போது பாரதப் போரே வந்து சென்றது.

=====================================================================================

07-03-18 இன்று பயணத்தின் ஆறாவது நாள். காலையில் கங்கைக் குளியலுக்காகச் சென்றோம். எப்பொழுதும் ஹரித்வாரில் தங்கும் விடுதி கங்கை நதிக்கு மிக அருகில் இருக்கும். கடந்த முறை பத்ரிநாத்-கேதார்நாத் பயணத்தின் போது ஹரித்வாருக்கு  இக்குழுமூலம் வந்து தங்கியிருக்கிறேன். இப்பொழுதும் அதே விடுதிதான். பெயர் : HOTEL PARADES; Near Ramlila Bhavan, HARIDWAR 249 401. 01334-226140;  9012711122; இங்கிருந்து கங்கைக்கரையின் பிர்லா படித்துறைக்குக் குளிக்க நடந்தே போய்விடலாம். மிக அருகில் உள்ளது. இவ்விடுதி கடைகளுக்கும் அருகில் உள்ளது.

அனைவரும் காலையிலேயே குளித்து ஹரித்வாரின் மானசாதேவிக் கோயில் பார்க்கச் சென்று விட்டனர். அது மலைமீது உள்ளது. அங்கு நெற்றிப்பொட்டுகளை வைத்து வேண்டிக்கொள்ள வேண்டும். பயணம் செய்ய வின்ச் வசதி உள்ளது. நாங்கள் கடந்த முறை பார்த்துவிட்டதால் இம்முறை வரவில்லை என்று சொல்லி விட்டோம். எனவே காலை பொறுமையாக ஏழு மணிக்கு எழுந்திருந்து  குளிக்கக் கிளம்பினோம். செல்ல வழி தெரியும் என்றாலும் விடுதி உரிமையாளரிடம் கேட்க அவரும் வழிகாட்டினார். அதுதான் தவறாகிப் போய்விட்ட்து. ஏனெனில் அவர் காட்டியது பெரும்பாலான பயணிகள் சென்று குளிக்கும் படித்துறை. சுமார் அரைமணிநேரம் நடந்து செல்ல வேண்டியதாகி விட்ட்து. அங்கோ இறங்க முடியவே இல்லை. குளிக்க ஒரே ஒரு படிக்கட்டுதான். அதற்கடுத்துக் கம்பிகள் போட்டு விட்டார்கள். ஏனெனில் கங்கையின் வேகம் மிக அதிகம். அப்படிக்கட்டிலும் அரையடி தண்ணீரே ஓடிக்கொண்டிருந்தது. எப்படியோ சமாளித்து நீரை மொண்டு கொட்டிக்கொண்டு குளித்து முடித்தோம்.

விடுதிக்கு வந்தோம் அங்கு எமக்காகப் பொங்கல் சட்னியுடன் எடுத்து வைத்திருந்தனர். பயண ஏற்பாட்டாளர் பாய் அவர்கள் எங்களை வேறு இரண்டு இடங்கள் அவசியம் பார்க்கவேண்டியவை. விடுதியில் சும்மா இருப்பதைவிட அங்கு போய் வாருங்கள் எனக் கூறினார். போய்ப் பார்த்து வர ஆட்டோ வசதி ஏற்படுத்தித் தந்தார். ‘பாவன்தாம்’ என்று ஒரு தனியார் கோயில் இருக்கிறது. ஹரித்வாரிலிருந்து ரிஷிகேஷ் போகும் வரையில் ஹரித்வாருக்கு சற்று வெளியில் உள்ளது. முழுக்கக் கண்ணாடிகளாலானது. எல்லா சன்னதிகளுமே கண்ணாடிகளால் செய்யப்பட்டவை. மிக நேர்த்தியாக மகாவிஷ்ணு, இராமர், சீதை அனுமன், கண்ணன் மற்றும் தசாவாதரங்கள் போன்று சன்னதிகள் இருந்தன.

கண்ணாடிச் சன்னதியில் உள்நுழைய முடியாது. வெளியில் நின்று பக்கவாட்டில் தலையை நீட்டி எட்டிப்பார்த்தால் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை தற்பொழுது நாம் பார்க்கும் சன்னதியே கண்ணாடிகளில் தெரிகிறது. மிகவும் செலவு மற்றும் கவனமாகத் தனியார் ஒருவர் தன் அன்னையின் நினைவாக இக்கோயிலை உருவாக்கி உள்ளார்.

அதன்பின்னர் ’கந்தல்’ என்னும் இடத்திற்குச் சென்றோம். இந்த இடம் பார்வதி தன் முற் பிறப்பில் தட்சனுக்கு மகளாகச் சதிதேவியாகப் பிறந்து பின்னர் தீயில் மூழ்கி மறந்த இடமென்றும் சொல்கிறார்க்ஜள் மிகப்பழ்மையான் ஆலயம். கோயிலின் நுழையும் முன்னர் சிவபெருமான் தன் கையில் பார்வதியைத் தூக்கிக்கொண்டு இருக்கும் பிரம்மாண்டமான உரு இருக்கிறது. சிவனின் முகத்தில் கோபம், வருத்தம் எல்லாம் குடிகொண்டுள்ளன. அக்கோயில் இருக்கும் இடத்திற்குப் பேருந்துகள் செல்ல முடியாது. பேருந்தைத் தொலைவிலேயே நிறுத்தி விட்டு நடந்துதான் வரவேண்டும். ஆட்டோக்கள்தாம் வரும். பார்க்க வேண்டிய அந்த இரு இடங்களைப் பார்த்தபின்னர் விடுதிக்குத் திரும்பினோம்.

மதிய உணவாக பீட்ரூட் பொரியலுடன், மோர்க்குழம்பும், ரசம், மோர், பரிமாறினார்கள். மாலை 4 மணிக்கே அனைவரும் ஹரித்வாரில் உள்ள ஒரு அம்மன் கோயில் பார்த்தபின்பு அனைவரும் கங்கைகரை ஆரத்தி பார்க்கச் சென்றனர். நாங்கள் கடந்த முறையே பார்த்து விட்டோம். கங்கை ஆரத்தி ஹரித்வாரில்தான் முதலில் தொடங்கப்பட்டதாம். பிறகுதான் காசியிலும் ஆரம்பித்தார்களாம்.  ஆரத்தி காட்டுக் கரைக்கு எதிர்க்கரையில் அனைவரும் வந்து இரண்டு மணிநேரம் முன்னரே அமர்ந்து விடுகிறர்கள். 6.30 மணிக்குக் காட்டத் தொடங்கி அரை மணி நேரம் நீடிக்கிறது. காட்டி முடிந்த்தும் பார்க்கவந்த கூட்டத்தில் நம் குழுவைத் தவற விடாமல் நீந்தி வருவது சற்றுக் கடினம்தான்.

நாங்கள் இருவரும் பிர்லா படித்துறைக்குச் சென்று அமர்ந்து கங்கயையே பார்த்துக் கொண்டிருந்தோம். இப்படித்துறையில் ஒரு சிறிய கங்காதேவிக்கோயில் உள்ளது. கங்கையின் அழகு ஹரித்வாரில்தான் தெரியும். சுமார் அரை கிலோமீட்டர் அகலம், நல்ல ஆழம். ஆனால் அமைதியாக ஓடிக்கொண்டிருந்ததைப் பார்க்க நேரமே போனது தெரியவில்லை. சற்று இருட்டிய பின்தான் விடுதி திரும்பினோம். இரவு உணவாக ஊத்தப்பம் அளித்தனர். உண்டு உறங்கினோம்

=========================================================

08-03-18 இன்று பயணத்தின் ஏழாவது நாள். அறைக்கே வழக்கம் போலக் காப்பி வந்தது.காலையிலேயே அருகிலேயே உள்ள பிர்லா படித்துறைக்குப் போய்க் குளித்து வந்தோம். காலைச் சிற்றுண்டியாக இட்லி அளிக்கப்பட்டது. அனைவரும் ரிஷிகேஷ் சென்று விட்டனர். நாங்கள் கடந்த முறை வந்த போதே அங்குச் சென்று குளித்து வந்தோம். நிறைய கோயில்கள்.

பெரிய படகு ஒன்றில் அக்கரைக்குச்சென்று குளிக்க வேண்டும் பாதுகாப்பாய்க்குளிக்கப் படித்துறையில் பிடித்துக் கொள்ள சங்கிலிகள் போட்டிருப்பார்கள். அகலம் ஆழம் அதிகம். நல்ல வெயில் வந்துவிடும் சற்றுத்தொலைவு நடந்துதான் செல்ல வேண்டும். ஒரு காலத்தில் ரிஷிகேஷ் முழுக்கத் துறவிகளே இருப்பார்களாம். இப்போது அவ்வளவு அதிகமில்லை. பெரும்பாலும் இறுதிக்காலத்தில் சாமியாராக நினைப்பவர்கள் ரிஷிகேஷ் போய்விடுவார்களாம். தங்க நிறைய மடங்களுண்டு. குளிக்கக் கங்கையுண்டு; உணவளிக்க அன்னதானச் சத்திரங்களுண்டு.

கண்ணதாசனின் செப்புமொழிதான் ரிஷிகேஷ் என்றதும் நினைவுக்கு வருகிறது. அவர் இப்படி எழுதி உள்ளார். “பேசாமல் சாமியாராகி ரிஷிகேஷ் போய்விடலாமா என்று  தோன்றுகிறது. கூடவே ஓர் எண்ணம். போகும்போது எந்தெந்தப் பெண்களை அழைத்துச் செல்லலாம்?”

காலை பத்து மணிக்கு மீண்டும் பிர்லா படித்துறைக்குச் சென்று கங்கையின் அழகைப் பார்த்துக்கொண்டே துணிகளைக் காய வைத்தோம். மதியம் சாம்பார், ரசம், மோர், பொரியலுடன் உனவு அளிக்கப்பட்டது. சற்று ஓய்வெடுத்தபின் சேவை சிற்றுண்டி முடித்து, பல வண்டிகளில் ஏறி ஹரித்வார் தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்றோம். கயாவிற்கு ரயிலில் செல்ல வேண்டும். ஹரித்வாருக்கு இரவு 9 மணிக்கு வரவேண்டிய ரயில் [எண்: 13010] 3 மணிநேரம் தாமதமாக வந்தது. வந்தவுடன் ஏறிப்படுத்து உறங்கினோம்.

==============================================================================

09-03-18 இன்று பயணத்தின் எட்டாவது நாள். இன்று குறிப்பிடும்படியாக ஒன்றும் இல்லை. முழுக்க ரயில் பயணம். சரியாக நேரம் தவறாமல் ரயிலிலும் உணவு வழங்கினார்கள். காலையில் இட்லி சிற்றுண்டி; மதியம் புளிசாதம் வற்றலுடன், தயிர் சாதம் ஊறுகாயுடன் இரவு சிற்றுண்டியாகச் சப்பாத்தி. தற்பொழுது வண்டி 8 மணி நேரம் தாமதமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது.

===============================================================================

10-03-18 இன்று பயணத்தின் ஒன்பதாவது நாள்

இரயில் மிகத்தாமதமாக புத்த கயாவை காலை 6 மணிக்கு அடைந்தது. அறைக்குச் சென்று காப்பி குடித்த பின்னர் ஆட்டோக்களில் கிளம்பினோம். அவரவர்க்கு ஏற்ற முறையில் முன்னோர்களுக்குத் திதி கொடுத்துப் பிண்டம் கொடுக்கப்பயண ஏற்பாட்டாளர்களே வழி காட்டினர். அதற்குத் தனி இடம் உள்ளது. அங்கு இருக்கின்ற பல்குனி ஆற்றில் நீரே ஓடாதாம். அதற்கு ஒரு புராணக்கதை கூறுகிறார்கள். ஒரு முறை இராமனும் சீதாபிராட்டியும் இங்கு தன் முன்னோர்களுக்குப் பிண்டம் கொடுக்க வந்தார்களாம்.

இராமன் சில ஏற்பாடுகளைச் செய்யச் சென்றபோது அங்கு வந்த தயரதன் ”எனக்குப் பசிக்கிறது; சீக்கிரம் பிண்டம் கொடு” என்று கேட்டாராம். அதற்கு சீதை ”சற்றுப்பொறுங்கள் இராமர் வரட்டும்” எனக் ,கூற தயரதர் ”நான் அவனிடம் சொல்லிக்கொள்கிறேன்? என்று கூறினாராம் எனவே சீதை அங்கிருந்த மரத்தையும் பல்குனி ஆற்றையும் சாட்சியாக வைத்துப் பிண்டம் கொடுத்தார்களாம். பின் இராமர் வந்து தயரதன் வந்ததை நம்பவில்லையாம். அப்பொழுது சாட்சிகளை அழைக்க பல்குனி ஆறு சாட்சி சொல்லவில்லையாம். எனவெ அதில் நீரே ஓடாதென்று சீதை சாபம் கொடுத்து விட்டார்களாம். ஆனால் ஆலமரம் சாட்சி சொன்னதாம்.

இப்பொழுதும் அந்த ஆலமரம் அங்குள்ளது. அதைத்தான் அட்சய வடம் என்று அழைக்கிறார்கள். அதற்கும் 32 பிண்டங்கள் போடுகிறார்கள். எங்களிடம் 3500 ரூபாய் வாங்கிக்கொண்டு ஹோமம்  வளர்த்துத் திதி கொடுக்க ஏற்பாடுகள் செய்தார்கள். வேறு இருவருக்கும் உணவளித்து எங்கள் இருவருக்கும் உணவளித்தனர். பிண்டங்கள் மொத்தம் 96 செய்யச்சொல்கின்றனர் அவற்றை மூன்றாகப் பிரித்து முதல் 32ஐ மாட்டுக்கும் அடுத்த 32ஐ அங்கிருக்கும் மகாவிஷ்ணு ஆலயத்தில் உள்ள விஷ்ணு பாதத்திற்கும் போடச் சொல்கிறார்கள். இங்குதான் ஏதேனும் ஒரு இலை, பழம் காய் ஆகியவற்றை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதி மேற்கொள்ளச் சொல்கிறர்கள்.

நாங்கள் ஆல இலை, நாவற்பழம், புடலங்காய் முதலியவற்றைச் சொன்னோம். பின் வேறு ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளித்தனர். அதற்குள் மற்றவர் சென்று விட எங்களை ஓர் ஆட்டோ வைத்து எங்கள் விடுதிக்கு அனுப்பினர். அப்போது மதியம் மணி இரண்டாகி விட்டது. சற்று நேரத்தில் கிளம்பி மிகப்பெரிய புத்தர் சிலை உள்ள கோயிலுகு நடந்தே சென்றோம். புத்தர் சிலை ஆலயத்தின் நடுவில் வெட்ட வெளியில் உள்ளது. அதைச் சுற்றி அவரின் சீடர்கள் பலரின் ஆள் உயரச் சிலைகள் உள்ளன. கோயிலின் உள்ளே புத்தரின் வாழ்க்கை வரலாறு சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளது. பிறகு தாய்லாந்து சிங்கப்பூர் பர்மா ஆகிய நாடுகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் கோயில்களைக் கண்டோம். நாங்கள் இருவரும் இரவு பால், பழம் மட்டும் உணவாக மேற்கொண்டோம். இரவு 7.30 க்குப் பேருந்தில் புறப்பட்டோம். இரவு முழுக்கக் காசி நோக்கிப் பயணம்.

==============================================================================

11-03-18 இன்று பயணத்தின் பத்தாவது நாள்.

காலை 5 மணிக்குக் காசி அடைந்தோம். அறைகள் சற்றுக் கிடைப்பதில் தாமதம். நாங்கள் பைகளை சமைக்கும் கூடத்திலேயே  வைக்க நேர்ந்தது. கங்கைக் கரைக்கு அருகில் அனுமான் காட்டில் தங்கியிருந்தோம். காசியைப் பற்றிச் சொல்ல வேண்டும். காந்தியடிகள் முதன்முதலில் காசி வந்ததைப் பற்றி ஒரு பதிவு செய்திருந்தார்.

அதில், “காந்தி இந்தியாவின் தூய்மையற்ற நகரங்களில் ஒன்று” என்று எழுதியிருப்பார். நான் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர் முக்திநாத் பயணத்தின்போது ஒரு முறை காசி வந்துள்ளேன். அப்பயணம் பற்றி ஒரு நூலும் எழுதி உள்ளேன். அன்று அதில் குறிப்பிட்டிருந்ததைப் போல காசி இன்னும் தூய்மையின்றியே இருந்தது.  எங்கும் பான்பாராக் எச்சில்கள்; வீதியின் குறுக்கே நகர மறுக்கும் மாடுகள்; அவை போட்ட சாணங்கள். கோயிலைச் சுற்றிலும் சிறு கடைகள் சூழ்ந்துள்ள நெருக்கமான மிகக் குறுகிய சுமார் ஆறடிக்கும் குறைவான அகலமுள்ள தெருக்கள்; அவற்றிலேயே விரைவாகச்செல்லும் இரு சக்கர வாகனங்கள்; அத்தெருக்களில் மிக வேகமாகத் தூக்கிச் செல்லப்படும் பிரேதங்கள்;

இங்கு தேநீர்க்கடைகளில் எல்லாம் கரி அடுப்புகளையே பயன்படுத்துகிறார்கள். அவற்றில் பெரிய வாணலிகளையும் இட்லிப் பானைகளையும் ஏற்றுகிறார்கள். கரி என்பது நம்மூர் அடுப்புக்கரி அன்று,. மண்ணிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கரி. அதைச் சிறு துணுக்குகளாக உடைத்துப் போட்டு பற்ற வைத்து எரிக்கிறார்கள்.  அவற்றின் தணல் மிக்க வெப்பம் அளிக்கிறது. அடுப்பின் வாசலில் உள்ளே காற்று வீச சிறிய ஓரடி விட்டம் உள்ள மின் விசிறி பயன் படுத்துகிறார்கள். பெரும்பாலும் கெட்டிலில் தேநீர் போட்டுச் சூடாக்கி வைத்திருக்கிறார்கள். சருக்கரை கலக்காத தேநீர் வேண்டும் எனில் உடனே ஒரு தேநீருக்காகக் கூடப் பால் காய்ச்சிப் போட்டுத் தருகிறார்கள்.

காப்பி குடித்துப் பின்னர் கங்கையில் குளிக்கக் கிளம்பினோம். நடந்து செல்லும் தொலைவில்தான் இருந்தது. கங்கையில் சுமார் முக்கால் கிலோமீட்டர் அகலத்துக்குத்தான் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. பார்த்தால் பாவமாக இருந்தது. ஹரித்வாரில் நிறையத் தண்ணீருடன் அழகாக இருந்தவளா இவள் என்னும் வியப்பு ஏற்பட்ட்து. இங்கு வருவதற்குள் இவ்வளவு மாற்றமா? நாம் சிறு வயதில் வற்றாத கங்கை எனப்படித்தது நினைவுக்கு வந்தது. இங்கு குளிக்கையில் இராமேசுவரத்திலிருந்து கொண்டுவந்த மண்ணைக் கரைத்து விட்டோம்

குளித்துப் பின்னர் விடுதிக்கு வந்து காலைச் சிற்றுண்டியாகப் பூரி உண்டோம். பிறகு காசி விஸ்வநாதரைப் பார்க்கச் சென்றால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருந்தது. கடந்த முறை நான் இங்கு வந்த அன்று விநாயக சதுர்த்தி. எனவே கூட்டமே இல்லை. கோயிலிலேயே நாங்கள் பத்துப் பேர்தான் இருந்தோம். இம்முறை 9.20. க்கு வரிசையில் நின்றவர்கள் மதியம் இரண்டு மனீக்குத்தான் வெளியே வந்தோம். அதுவும் நான் சென்ற போது7 மூல விஸ்வநாதர்  இருக்கும் சன்னதியின் உள்ளேயே  விடவில்லை. உள்ளே யாரோ இருந்து பூசை செய்துகொண்டிருந்தனர் சிறிய சிவலிங்கம் தெரியாமல் மலர்களால் சுற்றப்பட்டிருந்த்து. எனவே வெளியில் வந்தவன் காவலர்க்குத் ந்டெரியாமல் மீண்டும் எங்களைச் சேர்ந்தவர்கள் நின்றிருந்த இடத்தில் வரிசையில் சேர்ந்துய் கொண்டேன். இந்த முறை மூலவர் [சுமார் ஓரடி  உயரம்தான் இருக்கும்] தரிசனம் கிடைத்தது. அதுவும் கடந்த முறை வந்த போது நாமே தொட முடிந்தது. இப்பொழுது லிங்கத்தைச் சுற்றிலும் மூன்றடி உயரத்திற்குக் கம்பி வேலி போட்டு விட்டார்கள். சற்றுத் தூக்கித்தான் கொண்டு வந்த நீரை அனைவரும் அபிஷேகம் செய்தனர்.

வரும் வழியில் உள்ள அன்னபூரணி அம்மன் கோயில் தரிசித்தோம். பின்னர் விசாலாட்சி அம்மனையும் தரிசித்துத் திரும்பினோம். மதியம் விடுதியில் சாம்பார், பொரியல், ரசம் மோருடன் நல்ல உணவு கொடுத்தனர். காத்திருந்தற்குப் பலனாக தங்குவதற்கு நல்ல அறை கிடைத்தது.  காசியிஉல் நாங்கள் தங்கியிருந்த இடம் : TAMILWADU GUEST HOUSE PVT. LTD. B. 6/79, HARICHANDRA GHAT, SONARPURA, VARANASI. Office: 0542-2276777; 7081973181, 8935095225. E-mail: tamilnaduguesthouse@gmail.com இரவு ஊத்தப்பம் அளித்தனர்.

===============================================================

12-03-18 இன்று பயணத்தின் பதினோராவது நாள்

ஏற்கனவே திட்டமிட்டமிடபடி இன்று காசியைச் சுற்றிப் பார்க்க வேண்டும். ஆனால் இன்று பாரதப் பிரதமர் மோடி அவர்களும் பிரான்சு அதிபரும் காசி வருவதால் பயணத்திட்டத்தில் சற்று மாறுதல் செய்யவேண்டி இருந்தது. 14ஆம் தேதியில்தான் காசியில் திதி கொடுக்க முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது இன்றே திதிகொடுக்க ஏற்பாடுகள் செய்து விட்டனர். நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அடுத்த வீட்டில்தான் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர் முகவரி : B.Suresh shastri, B.4/9, Sree Krishna Niwas, Hanuman Ghat, Varanasi-221 001 [U.P] Mob: 9415304785; 8090213724; 8576030311.

முதல்நாள் இரவே அவரிடம் பேச பாய் என்னை சிவாவுடன் அனுப்பினார். அவர் விவரமாக ”என்ன செய்யப் போகிறீர்கள்” எனக்கேட்டார். நான் விவரம் சொன்னவுடன் ”5500 ரூ ஆகும் நாங்கள் 11 பேருக்கும் உங்கள் இருவருக்கும் உணவளிப்போம். நாளை பகல் 10 மணிக்கு வந்து விடுங்கள். முடிய மதியம் 2 மணி ஆகும்” என்றார். நான் ”இருவருக்குக் கொடுக்க வேட்டிகள், இரு விளக்குகள், இரு தம்ளர்கள் வாங்கி வந்துள்ளேன்” என்றேன். ”கொடுத்து விடுங்கள்; அதற்காக ரூபாய் குறையாது” என்றார். நானும் ”காசிக்குக் கொடுக்க என வாங்கி வந்ததைத் திரும்ப எடுத்துக் கொண்டு போவதில்லை. எனவே கொடுத்து விடுகிறேன்” எனறு கூறிவிட்டேன்.

காலை சரியான நேரத்தில் காப்பி வந்தது. 8 மணிக்கு நாங்கள் அந்த சாஸ்திரி வீட்டுக்குச் சென்றோம். மற்றவர்களை அமரவைத்து அவர் திதி தரும் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தார். ஒரு பித்தளைச் சொம்பு கொடுத்து, “போய்க் கங்கையில் குளித்து இதில் கங்கை நீரை எடுத்துக்கொண்டு 10 மணிக்கு வந்தால் போதும்” என்று சொன்னார்.

கங்கை ஆனாலும் கீழே ஓடிக்கொண்டிருந்த்து. நிறைய படிக்கட்டுகள். முட்டிவலி அதிகமான என் மனைவி ஒவ்வொரு படிக்கட்டாக உட்கர்ந்து இறங்கியும்  ஏறும்போது கைகளையும் பயன்படுத்தித்தான் ஏற வேண்டியும் இருந்தது. 10.20.க்கு அவர் வீட்டுக்குச் சென்றோம். சடங்குகள் எதையும் விட்டுவிடாமல் மனத்துக்கு நிறைவாய்ச் செய்தார். சடங்குகள் முடியும்போது மதிய உணவும் சாப்பிட 11 பேர்களும் வந்தனர். எங்களையும் அமரவைத்து உணவளித்தனர். சமையல் நன்றாகவே இருந்தது. எல்லாமே நிறைய நிறையவே பரிமாறினர். உண்டபின் நாங்கள் 2 மணியளவில் வீட்டைவிட்டு வெளியே வரவும் “மோடி வருகிறார், மோடி வருகிறார்” என்று அனைவரும் கங்கையை நோக்கி ஓடவும் சரியாக இருந்தது. நாங்களும்  கங்கைக் கரைப் படிக்கட்டுகளில் போய் அமர்ந்து கொண்டோம். பிரான்சு அதிபருடன் மோடி இருக்கும் இரண்டு பெரிய பேனர்கள் கங்கைக் கரையில் இருந்தன. காசியில் வேறு சுவர் எழுத்துகளோ சுவரொட்டிகளோ கொடிகளோ காணப்படவில்லை.

அதை விட வியப்பு; மோடி வர 5 மணித்துளிகளுக்கு  முன் ஒரு பிரேதத்தைக் கொண்டுவந்து குளிப்பாட்டி எரிக்க ஆயத்தமானார்கள். குளிப்பாட்டுதல் எனில் அப்படியே பாடையுடன் சேர்த்துக் கங்கை நீரில் அமிழ்த்தி எடுக்கிறார்கள். காசியில் இறந்த உடலை அரைமணிநேரம்தான் வீடுகளில் வைத்திருப்பார்களாம் பிறகு ஒரு சிவப்புத்துணியால் போர்த்திக் கங்கை கரைக்கு எடுத்துக் கொண்டு வந்து விடுவார்களாம். இங்கே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வைத்துக்கொண்டிருப்பார்களாம்.

2.45க்கு மோடியும் பிரான்சு அதிபரும் அலங்கரிக்க[ப்[பட்ட ஒரு பெரிய படகில் கங்கையின் நடுவில் கைகளை ஆட்டிக்கொண்டே வந்தார்கள். சுற்றிலும் பாதுகாப்பிற்கு நிறைய சிறிய படகுகள். மோடி இருந்த படகு போலவே இன்னும் இரண்டு பெரிய படகுகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. எதில் அவர் ஏறுவார் என்பது ரகசியமாக வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

பயனத்தில் வந்தவர்கள் பெரும்பாலானோர் தங்கியிருந்தது சங்கரமடம் பக்கத்தில் இருந்த ஒரு விடுதி. அதற்கு எதிரில்தான் பாரதியார் காசியில் சிறிதுகாலம் வசித்த வீடு உள்ளது. வீடு மிகவும் பழமையாகி விட்டது. இன்னும் பழைய தோற்றத்துடன் இருக்கிறது. தற்பொழுது பாரதியாரின் தங்கை மகன் அங்கு தன் மகன் மருமகளுடன் வசித்து வருகிறார். அவர் பெயர் கிருஷ்ணன். உள்ளே சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தேன், அவருக்கு வயது 80 இருக்கலாம். தெளிவாகப் பேசினார். உள்ளே ஒரு சிறிய சிவன் கோயில் உள்ளது. கூடத்தில் சிறிய நந்தியும் உள்ளது.

மாலையில் என் மனைவி அந்த வீட்டு மருமகளுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவர் வீடு முழுதும் சுற்றிக் காண்பித்தார். பாரதி திரைப்படத்தில் அந்த வீட்டை நன்கு காண்பித்திருக்கிறார்களாம், யார் வந்தாலும் சுற்றிக் காண்பிக்கிறார்களாம். அரசு நினைவில்லமாக்க அந்த வீட்டைக் கேட்கிறதாம். அவர்கள் ”இது பாரதியின் சொந்த வீடு இல்லை. பட்டா எங்கள் பேரில் இருக்கிறது; தந்துவிட்டு நாங்கள் எங்கே போவோம்” எனக் கேட்கிறார்கள். மேலும் அவர்களுக்குக் கடைவீதியில் இருந்த ஓர் இடத்தைக் காஞ்சிப் பெரியவர் வந்து கேட்டதால் ஒரு கோயில் கட்டக் கொடுத்தார்களாம், அக்கோயிலுக்கும் நாங்கள் சென்று வந்தோம். அக்கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த தங்கள் சொந்த இடத்தையும் பாரதியாருக்குச் சிலை வைக்கத் தந்திருக்கிறார்கள். அங்கு அமைக்கப்பட்டுள்ள பாரதியாரின் மார்பளவு சிலையையும் போய்ப் பார்த்தோம். அந்த வீட்டின் வாசலில் பாரதி வசித்த வீடு என்று ஒரு பலகையாவது நம் அரசு வைக்கலாம்.

பாரதியார் இந்த அனுமான் காட்டில் நீங்கள் போன படிக்கட்டுகளின் வழியாய்ப் போய்த்தான் குளிப்பார் என்றார்கள். மூடநம்பிக்கைகளை வெறுத்துத் தன் பூணூலை விடுத்து மீசை வைத்துக் கொண்ட இடத்தில் நான் நின்றிருக்கிறேன் எனபது பெருமிதமாக இருந்தது

இரவு பாலும் பழங்களும் உண்டு முடித்தோம்.

====================================================================

13-03-18 இன்று பயணத்தின் பன்னிரண்டாவது நாள்

காலை 3 மணிக்கே அறைக்குக் காப்பி வந்துவிட்டது. அலகாபாத் சென்று திரிவேணி சங்கமத்தில் நீராட வேண்டும். பேருந்தில் அதிகாலை 3.45 மணிக்குப் புறப்பட்டோம். அலகாபாத்தில் ஒரு சத்திரத்தில் தங்கிக் காலைக்கடன்கள் முடித்துக்கொண்டோம். சமையல்காரர்கள் அங்கு சிற்றுண்டி மற்றும் உணவு சமைக்கத் தங்கி விட்டனர். பேருந்திலேயே கங்கைக் கரையை அடைந்தோம். கங்கை ஆற்றை ஒட்டினாற்போல ஒரு பெரிய கோட்டை இருந்தது. அதுதான் அக்பர் கட்டியதாம். அது தற்போது அரசின் ஆயுதக்கிடங்காகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பின் பயண ஏற்பாட்டாளர்களே அவர்கள் செலவில் படகுகளை ஏற்படுத்தப் படகுகளில் பயணம் செய்து திரிவேணி சங்கமத்தை அடைந்தோம். யமுனை தனியாக வருவது தெரிகிறது. கங்கையுடன் கலக்கும் இடத்திலும் தண்ணீர் மிகக்குறைவுதான். கலக்கும் இடம்சற்றுப் பள்ளத்தில் இருந்தது. இறங்கினோம். இடுப்பளவு ஆழத்தில் நின்றுகொண்டு குளித்தோம். இராமேசுவரத்திலிருந்து கொண்டுவந்த மற்றொரு பிரிவு மண்ணை இங்கு கரைத்தோம். பிறகு ஈர உடையுடனேயே வந்திருந்த தம்பதியர் அனைவரும் வரிசையாக அமர்ந்தோம். அங்கு சடங்குகள் செய்ய ஒருவரை ஏற்படுத்தி இருந்தனர்.

அவர் முதலில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் நலங்கு இடச்செய்தார். குங்குமம், சந்தனம் எல்லாம் கொடுத்தார். பின்னர் கணவன் மடியில் மனைவியை அமரச் செய்தார். ஏற்கனவே தயாராக வைத்திருந்த மஞ்சள் கட்டப்பட்டுள்ள மஞ்சள் கயிற்றைத் திருமாங்கல்யமாக மனைவி கழுத்தில் கட்டச் சொன்னார். அதன் பிறகு சிறிய கத்தரிக்கோல் கொடுத்தார். அதனால் கணவன் மனைவியின் தலைமுடியின் நுனியில் அரை அங்குலம் கத்தரித்து எடுத்து மனைவியின் உள்ளங்கையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். பின் இருவரும் சேர்ந்து போய் மறுபடியும் சங்கமத்தில் முழுக வேண்டும் என்றார். அப்பொழுது தண்ணீரின் மேற்பரப்பில் முடியுடன் உள்ளங்கையை முடியுடன் வைத்து அமிழ முடியானது தண்ணீரின் அடியில் போய்விடும் என்றார். அப்படியே செய்து முடித்து உலர்ந்த ஆடைகள் அணிந்து கொண்டோம்.

சிலர் ரவிக்கைத்துணியும் மஞ்சள் குங்குமங்களும் மாங்கல்யக் கயிறும் சுமங்கலிப் பெண்களுக்குத் தந்தனர். விடுதிக்குப் போன பின்னர் எங்கள் இருவருக்கும் இரு தம்பதியர்  வேட்டி புடவைகள் தந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.  படகுகளில் ஏறிப் பேருந்து இடத்திற்குச் சென்றோம். அங்கு தயாராகப் பொங்கல் சட்னியுடன் கொண்டு வந்திருந்தனர். குளித்து முடித்த அனைவருக்கும் அது அமிழ்தமாக இருந்தது.  பின் நடந்தே பாதாள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றோம். நல்ல கூட்டம். அருகிலேயே இருந்த சங்கர மடம் சார்ந்த கோயிலுக்கும் சென்று வந்தோம். பின்னர் பேருந்தில் ஏறி நேரு அவதரித்த இடமான ஆனந்த பவனம் சென்றோம். 70களில்தான் அது இந்திராகாந்தி அவர்களால் அரசிடம் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. நிறைய புகைப்படங்கள். நேரு இந்திரா, மோதிலால் நேரு, கமலாநேரு ஆகியோர் பயன்படுத்திய அறைகள் காந்தியடிகள் வந்தால் தங்கும் அறை, முக்கிய முடிவுகள் எடுத்த செயற்குழுக் கூட்டங்கள் நடந்த அறை நூலகம் ஆகியவை அப்படியே மாறாமல் கண்ணாடித்தடுப்புக்குள் உள்ளன. மதியம் சாம்பார் ரசம் பொரியல் மோருடன் உணவு அளிக்கப்பட்டது. சற்று ஓய்வெடுத்த பின்னர் சாரநாத் சென்று புத்தர் உபதேசம் செய்த இடத்தைப் பார்த்தோம். புத்தர் மற்றும் அவருடைய சீடர்கள் அமர்ந்திருப்பது போன்ற ஆளுயர சிலைகள் உள்ளன. சாஞ்சி ஸ்தூபி பார்த்தது மறக்க முடியா ஒன்று. இரவு 9.45 க்குக் காசி அடைந்தோம். இட்லி சிற்றுண்டி உண்டு உறங்கினோம்.

==========================================================[=

14-03-18 இன்று பயணத்தின் பதின்மூன்றாவது நாள்

இன்று இரவு இரயில் ஏற வேண்டும். காலை  5 மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டி இருக்கும் என்று முதல் நாளே சொல்லி விட்டார்கள். அப்போதுதான் காசியின் முக்கியமான இடங்களை எல்லாம் பார்க்க முடியுமாம். காசியில் தங்கியிருந்தால் கங்கையில் மூன்று முறை குளிக்க வேண்டும் என்று யாரோ சொல்லி விட்டார்கள். எனவே நாங்கள் இன்னொரு முறை குளிக்க முடிவெடுத்தோம். ”இரவு முழுதும் விளக்குகள் எரியும்; நல்ல வெளிச்சம் இருக்கும்; அதிகாலை 4 மணிக்கே சென்று குளித்து விட்டு வந்துவிடுங்கள் என நாகராஜன் கூறினார்.

நாங்கள்  3 மணிக்கே எழுந்து விட்டோம்; விடுதியில் காப்பி போடும் இடத்திற்கே சென்று சூடான காப்பி குடித்தோம். கங்கைக்குச் சென்றால் பட்டப்பகல் போல் இருந்தது. எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. ஆனால் அனுமான் காட்டில் அதாவது நாங்கள் குளிக்கும் படித்துறையில்தான் யாருமே இல்லை. குளிக்க இறங்கும்போது ஒருவர் வந்தார். உள்ளுரில் ஏதோ கோயிலில் பூசை செய்பவர் போல் தெரிந்தது. வந்தவர் தான் கொண்டுவந்த சொம்பைக் கரையில் வைத்தார். கங்கையை முதலில் விழுந்து வணங்கினார். கங்கையில் இறங்கி மூன்று முறை மூழ்கிக் குளித்தார். பின் ஈர உடையையேப் பிழிந்து உடுத்திக்கொண்டு சொம்பில் கங்கை நீர் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். எல்லாம் பத்து மணித்துளிகளுக்குள் முடிந்தன.

நாங்கள் குளித்து முடித்து விடுதிக்குச்ச் என்றதும் பூரி உருளைக்கிழங்கு சூடாகக் காத்திருந்தது. உண்டு முடித்துக் கிளம்பினோம். ஏழு அல்லது எட்டுப் பேருக்கு ஒரு வண்டி என ஏற்படுத்தி இருந்தனர். துர்கா கோயில், துளசிதாசர் கோயில் பார்த்தோம். துளசிதாசர் இந்தியில் இராமாயணம் எழுதியவர். அக்கோயிலில் இராமாயணக் காட்சிகள் வரையப்படிருந்தன. துளசிதாசரின் உருவச் சிலை ஒன்று வைத்திருந்தனர். அது தன் கையால் எழுதுவது போல அசைந்து கொண்டிருந்தது. பிர்லா கோயில் மற்றும் அனுமார் கோயில் பார்த்தோம். காலபைரவர் கோயில் முக்கியமான ஒன்று.

காசிராஜன் அரண்மணை மிகப்பெரியது. நிறைய அறைகள், கூடங்கள் கங்கையை ஒட்டி மிகப்பெரிய மதிற்சுவர். ஓர் கூடத்தை அருங்காட்சியமாக மாற்றி இருந்தனர். அதில் காசிராஜன் பயன்படுத்திய கார்கள், குதிரை வண்டிகள், உடைகள், கத்திகள், துப்பாக்கிகள், பாத்திரங்கள்,கட்டில் மற்றும் படுக்கைகள்  அவர் ஆட்சியாளருடன் எடுத்துக் கொண்ட நிழற் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. காசிராஜன் தினமும் சென்று வணங்கும் கோயில் இருந்தது. அங்கு மூன்று சிவலிங்கங்கள் இருந்தன. அக்கோயிலுக்குச் சற்றுக் கீழே இறங்கிச் செல்ல வேண்டும். அந்த வழி முழுதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருப்பதுபோல்  மிகவும் குளிர்ச்சிசியாக இருந்தது.

கடைசியாகப் பார்த்த்து சோழி அம்மன் கோயில் அதைக் கடைசியாகத்தான் பார்க்க வேண்டுமாம். மிகச் சிறிய ஒரே ஒரு அம்மன் சன்னதி கொண்டது.கோயில் சற்று உயரம் இருபது படிகள் இருக்கும். கோயிலுக்கு வெளியே 20 ரூபாய்க்கு ரவிக்கைத் துணியும் சில சோழிகளும் விற்கிறார்கள். அவற்ரை வாங்கிக் கொண்டு போனோம். பூசாரி ரவிக்கைத் துணியை எடுத்துக் கொண்டார். சோழிகளை நம்மிடமே கொடுத்து உருட்டச் சொன்னார். அவர் கூறியது போல, “காசிபலன் எனக்கு; சோழி பலன் உனக்கு” என்று கூறி உருட்டினோம். ஒரே ஒரு சோழி மட்டும் தந்தார். அதை வீட்டிற்குக் கொண்டு போய் வைத்துக் கொள்ளச் சொன்னார்.

வரும் வழியில் புகழ் பெற்ற பழமையான பனாரஸ் பல்கலைக்கழகம் வழியாய் வந்தோம். அதன் நீளமே 5 கிலோமீட்டர் இருக்கும்.

விடுதிக்கு நல்ல பசியுடன் வந்தோம். பொரியல் பருப்பு உருண்டை சாம்பார், ரசம் மோருடன் உணவு அளித்தனர். நடந்து செல்லும்  தொலைவில்  காரைக்குடியைச் சார்ந்த செட்டியார் குடும்பம் சில தலைமுறையாக கடை வைத்திருந்தார்கள். அங்கு சென்று கங்கை சொம்புகள் வாங்கினேன். செட்டியாரின் பையன் ஏழாம் வகுப்பு படிக்கிறான். தமிழ் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் பேச மட்டுமே தெரியுமாம். செட்டியார் கடை என்றே தமிழில் கடைப் பெயரை எழுதி வைத்துள்ளனர்.

மாலை 4.30 மணிக்கு கங்கை ஆரத்தி பார்க்கப் புறப்பட்டோம். வண்டிகள் ஏற்பாடு செய்திருந்தனர். கரையை அடைந்து படகுக்கு இருபது பேராகக் கங்கையில் பயணம் செய்தோம். கரை ஓரமாகவே பல தீர்த்தக் கட்டங்களைப் பார்ப்பதற்கேற்றவாறு படகு மெதுவாகச் சென்றது, கட்டம் என்பதைக் காட் என்கிறார்கள். அனுமான் காட் நாங்கள் இருந்த இடம். பக்கத்தில் இருந்தது அரிச்சந்திரா காட். இங்கும் பிரேதங்கள் எரிக்கிறர்கள். எனினும் மணிகர்ணிகாகாட்தான் அதிகம் எரிக்கும் இடமாம். நாங்கள் அந்த  இடத்தைப் பார்க்கும் போது அங்கே நான்கு எரிந்து கொண்டிருக்க இரண்டு காத்திருந்தன. நிரைய விறகுகள் அடுக்கி வைத்திருப்பதும் தெரிந்தது. ஹரித்வார் ஆரத்தியை எதிர்க்கரையிலிருந்து பார்க்கவேண்டும். ஆனால் காசியில் காட்டப்படும் ஆரத்தி கங்கையை நோக்கிக் காட்டப்படுவது. எதிர்க்கரைக்குப் போகவே முடியாது. எனவே படகுகளை நடு ஆற்றில் நிற்கவைத்து ஒன்றோடு ஒன்றாக அசையாமல் இருக்கக் கட்டிவைத்து விடுகிறார்கள். சுமார் இருநூறு அல்லது முந்நூறு படகுகள் இருக்கும். ஆரத்தி காட்டும் இடத்திற்கு நேராக எங்கள் படகை நிறுத்தி இருந்தனர். சரியாக ஏழு மணிக்கு 7 பேர் ஆரத்தி காட்டத் தொடங்குகிறார்கள். சுமார் அரை மணிநேரம் நீடித்தது. காணக் கிடைக்காத காட்சிதான் அது. அதற்கு சற்று வலப்புறத்திலும் 5 பேர் காட்டுகிறார்கள். ஆரத்தி முடிந்ததும் படகுகள் ஒன்றோடு ஒன்று சற்றும் இடிக்காமல் விரைவாகச் செல்வது நல்ல காட்சிதான்.

விடுதிக்கு வந்து இட்லியைச் சிறுண்ண்டியாக உண்டோம். 9 மணிக்கு வாகனவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வாரணாசி [காசி] ரியில் நிலையம் அடைந்தோம். ரயில் நிலையத்திலேயே தாள்களை விரித்துப் படுத்தோம். எப்படி உறங்கினோம் என்றே தெரியவில்லை. சிவா வந்து இரவு ஒரு மணிக்கு எழுப்பினார். 1.30 மணிக்கு வரவேண்டிய ரயில் ஐந்தரை மணி நேரம் தாமதமாக வந்தது. ஒரே கூட்டம் சற்று நெருக்கியடித்துத்தான் ஏற வேண்டி இருந்தது. எல்லாருமே முன்பதிவு செய்தவர்தான் என்றாலும் ரயில் புறப்பட்டு விடுமோ எனும் அச்சமே காரணம்.

======================================================

15-03-18 இன்று பதினான்காவது நாள். முழுதும் ரயில் பயணம்தான். பிழைப்புக்காக்க் காசியிலிருந்து வாரங்கல் செல்லும் இரு குடும்பங்கள் எங்கள் பெட்டியில் இருந்தன. வாரங்கலிலேயெ வீடுகள் வாங்கி நிரந்தரமாகத் தங்கி இருக்கிறார்களாம். பிள்ளைகள் தெலுங்கும், இந்தியும் படிக்கின்றன. காலையில் இடம் தேடி இட்லி வந்தது. எங்கள் பெட்டியில் பயணக்குழுவைச் சேர்ந்தவர்கள் நாங்கள் இருவர் மட்டுமே. ஒவ்வொரு பெட்டிக்கும் அவரவர் இடத்திற்கே சென்று நேரத்தில் உணவளித்தது பாராட்டுக்குரியது. மதியம் புளி மற்றும் தயிர் சாதங்கள் வற்றல், ஊறுகாயுடன் வழங்கப்பட்டன. இரவு சப்பாத்தி அளிக்கப்பட்டது. ரயில் இப்பொழுது 6 மணிநேரம் தாமதமாகப் போய்க்கொண்டிருந்தது.

===========================================================

16-03-18 இன்று ரயில் மதியம் 2.30 மணிக்குச் சென்று இருக்க வேண்டும். இன்னும் தாமதம் அதிகமாகிக்கொண்டே போகிறது என் அண்ணன் ரயில்வேத்துறையில் பணியாற்றியவர் கூறுவார். நேரம் கடந்து செல்லும் வண்டியை இன்னும் நேரம் கடந்து போகவிடு. பரவாயில்லை. அது மட்டும்தானே நேரம் கடந்து போகும் மற்றவை சரியான நேரத்துக்குச் செல்லும் அல்லவா? இதுதான் ரயில்வேயின் கொள்கையாம். மதியம் உணவை ரயிலிலேயே வாங்கிக் கொடுத்தனர். எப்பொழுது ரயிலை விட்டு இறங்குவோம் என்றாகி விட்டது. இரு வழியாய் 8 மணி நேரம் தாமதமாய் இரவு 10.30க்கு சென்ன வந்து8 சேர்ந்தோம். நிலையத்திற்கு என் இளைய மகன் முகிலன் வந்திருந்தான். அவன் இல்லம் சென்று தங்கியதுடன் பயனம் இனிதே நிறைவடைந்தது.

ஓவ்வொருவரையும் தனித்தனியாகக் கவனித்த பயண ஏற்பாட்டளர்கள் பாராட்டுக்குரியவர்கள். மெதுவாக நடப்பவர்களையும் அவசரப்படுத்தாமல் எல்லா இடங்களையும் பார்த்துவரச் சொல்கிறார்கள். அறை வசதிகள் அருமை. பேருந்துகள் நேர்த்தியானவை. பயணிகளுக்கு நேரத்தில் சிற்றுண்டி மற்றும் உணவு கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். மேலும் பார்க்கும் இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் புராணக்கதைகளை பாய் அவர்களும் அவர் இல்லையேல் நாகராஜனும் முன்கூட்டியே சொல்வது முக்கியமான ஒன்றாகும். அப்பொழுதுதான் அந்த இடத்தின் சிறப்பை நாம் முன்கூட்டியே அறிந்து வைத்துக் கொண்டு நன்கு பார்த்து ரசிக்க முடிந்தது.

[நிறைவு]

 

 

Series Navigationஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ராதூக்கிய திருவடி
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *