தொடுவானம் 221. சோதனைமேல் சோதனை

This entry is part 9 of 13 in the series 13 மே 2018
          பன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். இளம் சீன மங்கை அதைக்கொண்டுவந்து மூடியைத் திறந்து எங்கள் இருவருக்கும் பரிமாறினாள்.ஐஸ் குளிரில் இருந்த பீர் வெந்துபோன மனதுக்கு இதமாக இருந்தது.கோவிந்தசாமி என்னை நோட்டமிட்டான்.பன்னீர் சொல்லியிருப்பானா என்ற சந்தேகம் அவனுக்கு. நான் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
          பன்னீர் எங்களை திசை திருப்பும் வகையில் மருத்துவத் தேர்வு பற்றி பேசினான். என்ன பாடங்கள்கள் தேர்வில் கேட்பார்கள் என்றான். மருத்துவ இறுதியாண்டு பாடங்களான பொது மருத்துவம், அறுவை மருத்துவம், மகற்பேறும் மகளிர் நோய் இயலும் ஆகியவை மூன்று முக்கிய பாடங்கள் என்றேன். குறுகிய நாட்களில் இந்த பாடங்களைத் தயார் செய்ய இயலுமா என்றும் கேட்டான். கூடுமானவரை முயன்று பார்க்கலாம் என்றேன்.
          அன்று இரவு பன்னீர் எங்களுடன் தங்கினான். கோவிந்தசாமி தன்னுடைய படுக்கை அறையில் நுழைந்து கதவைப் பூட்டிக்கொண்டான். என் மீது அவனுக்கு பயம் வந்துவிட்டதகாக பன்னீர் சொன்னான்.என்ன பயம் என்று கேட்டேன். ஆத்திரத்தில் அவனைத் தூக்கி மாடியிலிருந்து கீழே வீசிவிடுவேனோ என்ற அச்சமாம் . எனக்கு மிகவும் நெருக்கமான நண்பனுக்கு அத்தகைய அச்சம் வருகிறது எனில் தான் செய்துள்ளது மாபெரும் தவறு என்பது அவனுக்குத் தெரிந்துள்ளது.எதனால் அவன் இப்போது திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளான் என்பது குழப்பத்தையே உண்டுபண்ணியது. என்னிடம் சொல்லத் தயங்கினாலும் பரவாயில்லை. பன்னீரிடமாவது சொல்லியிருக்கலாமே. இவன் அப்போது இருந்ததுபோலவே இன்னும் மர்ம மனிதனாகத்தான் உள்ளான்.
          கலைமகள் முதல் அறையில் உறங்கினாள்.பன்னீரும் நானும் ஹாலில் படுத்துக்கொண்டோம். பன்னீர் திரும்பத்  திரும்ப அந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கிக்கொள்கிறேன் என்று கேட்டு வியந்தான். அது பெரிய ஏமாற்றம் என்றான். கலைமகள் பாவம் என்றான். திருமணம் என்று சொல்லி அழைத்து வந்துவிட்டு திரும்பவும் திருமணம் ஆகாமலேயே தமிழகம் திரும்பியாக வேண்டும். அது பெரும் சொகத்தைத் தரலாம் என்றும்  அதை எப்படி தாங்கிக்கொள்வாள்  என்றும் கேட்டான். நான் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சொல்லவேண்டும் என்றேன் அதோடு கலைமகள் இங்கு இருக்கவேண்டுமெனில் என்னையும் இங்கே வேலையில் இருக்கச் சொன்னதையும் பன்னீரிடம் கூறினேன்.
          இத்தகையைச் சூழலில் கலைமகளை நான் இவனுடைய வீட்டில் தங்க வைத்திருப்பது நல்லதல்ல. நான் இன்னும் லாபீஸ் செல்லவில்லை. அங்கு மனைவியும் மகனும் உள்ளனர். அவர்களை இன்னும் சென்று பார்க்கவில்லை. சிங்கப்பூரில் வேலைகள் முடிந்தது. இனி தேர்வுக்குத் தயார் செய்யவதுதான் பாக்கி.நாளையே கலைமகளை அழைத்துக்கொண்டு லாபீஸ் செல்ல முடிவு செய்தேன்.
          கோவிந்தசாமி மீது கோபம் .வந்தது. அவன் பாவம். அவன் என்னுடைய பால்ய நண்பன்.முன்பே தாய் இல்லாமல் வளர்ந்தவன். இப்போது தந்தையும் இல்லாதவன். பெண் பார்க்க புதுக்கோட்டை வந்தவன் திருப்பத்தூரில் தங்கையைப் பார்த்து விரும்பினான். நானும் பால்ய நண்பன்தான் என்றுதான் சம்மதித்தேன். இப்போது சிங்கப்பூருக்கும் வந்துவிட்டோம். காரணத்தைச் சொல்லமால் தடுமாறுகிறான். சொந்த வீட்டில் என்னை வைத்துக்கொண்டு எங்கே அவனைத் தூக்கி மாடியிலிருந்து கீழே வீசிவிடுவேனோ என்ற அச்சத்துடன் உள்ளான்!
          இந்த ஏமாற்றம் எனக்கு பெரும் மனஉளைச்சளையே உண்டுபண்ணியது. இதோடு நான் தேர்வுக்கு எந்த நிலையில் நிம்மதியாகப் படித்து தயார் செய்ய இயலும். இது எனக்கு பெரும் சவால்தான்! வேறு வழியில்லை. கூடுமானவரை முயன்று பாப்போம் என்று கண்களை மூடினேன்.
          காலையிலேயே கலைமகளை அழைத்துக்கொண்டு லாபீஸ் புறப்பட்டேன். நண்பர்கள் இருவரும் சரி என்றனர். கோவிந்தசாமி செலவுக்குப் பணம் தந்தான். நான் செல்லும் காரணத்தை அவன் நிச்சயமாக அறிந்திருப்பான். இல்லையேல் பன்னீர் சொல்லிவிடுவான்.
          ” சீக்கிரமாக திரும்பிவிடு. நீ பயிற்சிக்காக சிங்கப்பூர் பொது மருத்துவ மனைக்குச் செல்லவேண்டும். ” என்று கோவிந்தசாமி நினைவூட்டினான்.
          வாடகை ஊர்தி மூலம் குயீன்ஸ் ஸ்ட்ரீட் சென்றோம். அங்கு ஜோகூர் பாரு செல்லும் துரித பேருந்து ஏறினோம். அங்கிருந்து ஆயர் ஈத்தாம் சென்று சிகாமட் பேருந்து எடுத்தோம்.. மதிய உணவுக்கு லாபீஸ் சென்றுவிட்டோம்.
           மனைவி கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தாள். மலர்ந்த முகத்துடன் குழந்தையை என்னிடம் தந்தாள். கைக்குழந்தையாக என்னுடைய மகனை அப்போதுதான் முதல் முறையாகப் பார்த்தேன். தூக்கி மகிழ்ந்தேன்.அவன் நல்ல நிறமாக இருந்தான். மனைவியின் சாயல் அதிகம் இருந்தது. அப்போதுதான் அவன் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளான். என்னைக் கண்டதில் மனைவிக்கு மகிழ்ச்சி. அக்காள் எங்களை புன்னகையுடன் வரவேற்றார்.உடன் உணவு பரிமாறினார்.
          கலைமகள் விவகாரம் பற்றி ஏதும் சொல்லவில்லை. தேர்வு பற்றி மட்டும் சொல்லி வைத்தேன்.அதை ஆர்வத்துடன் கேட்டனர். நான் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் சிங்கப்பூரிலேயே வேலை செய்வது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். மகளை இனி தமிழகம் அனுப்பவேண்டிய அவசியம் இருக்காது. அப்படியே நான் இப்போது தமிழகம் திரும்ப வேண்டிய சூழல் உண்டானாலும் அவர்கள் மனைவியை என்னுடன் அனுப்பப்போவது இல்லை என்பதும் தெரிந்தது. மகன் இன்னும் குழந்தையாகவே உள்ளான்.குடும்பத்தின் முதல் பேரனை இன்னும் சரிவர கண்காணிக்கவேண்டும்.
            கோவிந்தசாமி இப்போது திருமணம் வேண்டாம் என்று சொல்லியுள்ளதால் நான் கலைமகளை அழைத்துக்கொண்டு ஊர் திரும்பியே ஆகவேண்டும். இந்த இக்கடடான நிலையில்தான் நான் தேர்வு எழுதப் போகிறேன்.
          லாபீஸ் வீட்டில் ஐந்து அறைகள் உள்ளன. முதல் அறையில் நான் தங்கினேன். மனைவியும் மகனும் தங்கையும் இன்னொரு அறையில் தங்கினர்.
          அங்கு தங்கிய இரண்டு நாட்களும் மகனுடன் கழித்தேன். அவனுக்கு நான் புதிதாகத் தெரிந்தேன். முதலில் என்னிடம் வரத்  தயங்கினான். பின்பு பயம் தெளிந்து என்னுடன் இருந்தான்.மனதில் குடிகொண்டிருந்த சோகம் அவனின் மழலையில் மறைந்துபோனது!
          ” குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
             மழலைச்சொல் கேளா தவர். ” என்னும் குறளை குழந்தையான அவன் மூலம் உணர்ந்தேன்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationகவிதைகள்மருத்துவக் கட்டுரை – தொண்டைப் புண்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *