மருத்துவக் கட்டுரை சிறுநீர்ப்பாதை தொற்று

This entry is part 10 of 13 in the series 20 மே 2018

 

சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் சுரந்து சிறுநீரகக் குழாய்களின் வழியாக  சிறுநீர்ப் பையில் வந்து சேர்ந்தபின் வெளியேறுகிறது. இதில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் கிருமித் தோற்று உண்டாகலாம்.  இது இரு பாலரிடையேயும் காணப்படும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களிடம் இது அதிகம் காணப்படும்.
ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீரில் தொற்று உண்டாவது மிகவும் சுலபம். அதிலும் மணமாகி உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு இது மிகவும் எளிதாக உண்டாகும். ஆண்களுக்கு 50 வயதுக்கும் குறைவானவர்களுக்கு இது உண்டாவது மிகவும் குறைவு. இரு பாலருக்கும் அறிகுறிகள் இல்லாத கிருமித் தொற்று 50 சதவிகிதத்தினரிடையே காணப்படும்.
பல்வேறு வகையான பேக்டீரியா கிருமிகள் தொற்றை உண்டுபண்ணுகின்றன. இவற்றில் 80 சதவிகிதம் ஈ.கோலி ( E. Coli ) என்ற வகையாகும். ஸ்டேபைலோகாக்கஸ் ( Staphylococcus ) என்பது இன்னொரு கிருமியின் வகை. இவை தவிர்த்து மேலும் பல கிருமிகளும் உள்ளன.
சிறுநீரகத்திலும் சிறுநீரகக் குழாய்களில் கற்கள், அடைப்பு, சிகிச்சைக்காக குழாய் பொருத்துதல் போன்றவற்றாலும் கிருமித் தொற்று எளிதில் உண்டாகும்.
பெரும்பாலான கிருமிகள் சிறுநீர் வடிகுழாய் ( Urethra ) மூலமாகவே தொற்றுகின்றன . இந்த புறவழிக் குழாய் பெண்களுக்கு குறுகலாக  இருப்பதால் அவர்களுக்கு கிருமித் தொற்று எளிதில் உண்டாகிறது.அத்துடன் அவர்களின் உறுப்பில் உண்டாகும் மாற்றம், கருத்தடைச் சாதனங்கள், பாலியல் உறவு, கர்ப்பம், போன்றவற்றாலும்கூட எளிதில் கிருமித் தொற்று உண்டாகிறது.

                                                                 அறிகுறிகள்

சிறுநீரக உறுப்புகளின் தொற்றுக்கு ஏற்ப அறிகுறிகள் மாறுபடும். அவை வருமாறு :

* சிறுநீர்ப்பை அழற்சி ( Cystitis ) – முன்பே கூறியபடி, பெண்களுக்கு புறவழிக் குழாய் குறுகலாக இருப்பதால் அவர்களுக்கு இது அதிகம் உண்டாகும். இதில் சிறுநீர் கழிக்கும்போது வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் வருவதை கட்டுப்படுத்தமுடியாத அவசரம், அடிவயிற்று வலி, கலங்கலான சிறுநீர், இரத்தம் கலந்த சிறுநீர், போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

* சிறுநீரகச் சீழ் அழற்சி  ( Pyelonephritis ) – இது வெகு விரைவில் சில மணி நேரத்தில் ஒரு நாளுக்குள் தோன்றும். இதில் குளிருடன் கூடிய காய்ச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு  போன்ற அறிகுறிகள் தோன்றும். அடி முதுகில் வலி உண்டாகலாம்.

* சிறுநீர் வடிகுழாய் அழற்சி ( Urethritis ) – சிறுநீர் கழிக்கும்போது வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் சீழ் போன்ற அறிகுறிகள் தோன்றும். பாலியல் தொடர்புடைய கிருமிகளாலும் இது உண்டாகும்.

                                                                        பரிசோதனைகள்

சிறுநீரகப் பரிசோதனைதான் முக்கியமானது.அதில் பல்வேறு பரிசோதனைகள் உள்ளன. அதில் நுண்ணுயிர் வளர்ப்பு ( Culture ) பரிசோதனையின் மூலம் எந்த கிருமிகளின் தொற்று உள்ளது என்பதை எளிதில் கண்டுபிடிக்கலாம். அதன்பின் அந்த கிருமிகளை அழிக்க எந்த மருந்தைப் பயன்படுத்தலாம் என்பதையும் கண்டறியலாம்.
கிளினிக்குகளில் இப்போதெல்லாம் மிக எளிதான ” டிப் ஸ்டிக் ” என்ற முறையின்வழியாக சிறுநீரில் 10 விதமான குறைபாடுகளை அறியலாம்.

                                                                       சிகிச்சை முறைகள்

சிறுநீர்ப்பாதையில் தொற்று உண்டாக இவ்வளவு காரணங்கள் உள்ளதால், தொற்று உண்டானதும் அதன் காரணத்தைக் கண்டறிந்து அதைக் களைவதே சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும்.  அப்போதுதான் மீண்டும் தொற்று உண்டாகாமல் தவிர்க்கலாம்.
சிறுநீரகப்பாதையின் அமைப்பில் குறைபாடு, கற்கள், அடைப்பு போன்றவை இருந்தால் தொடர்ந்து தொற்று உண்டாகும். அவற்றை முதலில் சரிசெய்ய வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் தொற்று நீடிக்கும்.
பெண்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று முறைக்கும் மேலாக தொற்று உண்டானால் அவர்கள் நீண்ட நாட்கள் சிகிச்சையைத் தொடர்வது நல்லது.
தற்போது Trimethoprim – Sulphamethoxazole , Trimethoprim , Nitrofurantoin போன்ற சக்திவாய்ந்த மருந்துகளால் நல்ல நிவாரணம் பெறலாம்.

( முடிந்தது )

Series Navigationதொடுவானம் 222. இரட்டைத் தோல்விகள்அய்யிரூட்டம்மா
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *