அழகர்சாமி சக்திவேல்
கோஹட்டோ(Taboo)
போர்முனைகளில் வசிக்கும் ராணுவ வீரர்கள் இடையே, ஓர்பால் ஈர்ப்பு குறித்த மனநிலை எப்படி இருக்கும் என்பதை அலசி ஆராயும் படமே கோஹட்டோ(Gohatto) என்ற இந்த ஜப்பானியப் படம் ஆகும், 1999-இல் வெளிவந்து வர்த்தக ரீதியாக பெரும்பொருள் குவித்த இந்தப்படம், கூடவே, ஜப்பானின் சினிமாப் படங்களுக்கான நீலப் பட்டை (Blue Ribbon) என்ற தேசிய விருதினை, சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த துணைநடிகர் என்ற நான்கு பிரிவுகளில் வென்று வாகை சூடிய பெருமையுடையது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் சிறந்த திரைப்பட விருதுக்கும், இந்தப்படம் பரிந்துரைக்கப்ட்டது, இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு ஆகும். உலக இராணுவ வரலாறுகளை எடுத்துப் பார்த்தால், எத்தனையோ ஓர்பால் ஈர்ப்பு வீரர்கள் பல வீரதீர சாகசங்களை அங்கங்கே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.என்பது ஒரு கண்கூடான விஷயம். உதாரணத்திற்கு, இந்திய முஸ்லிம் மன்னர் அலாவுதீன் கில்ஜியின் அவையில், தலைமைப் பதவி வகித்த மாலிக்காபூர் என்ற ஓரின வீரனை நாம் குறிப்படலாம். அலாவுதீன் கில்ஜிக்கும் மாலிக்காபூருக்கும் இருந்த ஓரின உறவின் நெருக்கம் வரலாற்றில் பேசப்பட்டு இருக்கிறது. மாலிக்காபூர் என்ற அந்த ஓரின வீரனின் தலைமையில்தான், இந்தியாவின் பெரும்பகுதி, முஸ்லிம் மன்னர் வசம் வந்தது என்பது உலகறிந்த வரலாற்றுச் செய்தி. கிரேக்கப் போர் வீரர்களின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அலெக்ஸாண்டர் ஒரு ஓர்பால் ஈர்ப்புடைய வீரன் என்றும் அவனுக்கும் அவன் படைத்தளபதி கேபாஸ்டியானுக்கும் ஓரின உறவு நெருக்கம் இருந்தது என்பதும் ஒரு குறிப்படத்தக்க வரலாற்றுக் குறிப்பு ஆகும். கிரேக்க வீரனும், தத்துவ ஞானியும் ஆன சாக்ரடிஸ், தனது பல சீடர்களுடன் ஓரினஉறவு வைத்து இருந்தார் என, சாக்ரடிஸின் முக்கிய சீடனும் இன்னொரு தத்துவ மேதையுமான பிளாடோ, தனது சிம்போசியம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை, சாக்ரடீஸின் இன்னொரு சீடரும், மேதையுமான ஜீனோபோனும் தனது நூலில் கூறி இருக்கிறார். கிரேக்க வீரர்களில் தெபன் என்று அழைக்கப்பட்ட வீரர் குழு இருந்து இருக்கிறது. அந்த வீரர் குழுவில் இருந்த அத்தனை பேருமே ஓர்பால் ஈர்ப்பு உள்ளவர்களே. அப்படிப்பட்ட பலம்வாய்ந்த ஓரின தெபன் வீரர்களால் மட்டுமே, கிரேக்கம் பல வெற்றிகளைக் கண்டிருக்கிறது என்பது ஒரு வெளிப்படையான உண்மை ஆகும்.. ரோமப்பேரரசு வரலாற்றிலும் பல மன்னர்களும், வீரர்களும் ஓர்பால் உறவினராக இருந்து இருக்கிறார்கள். ரோமாபுரி மன்னன் அகஸ்டஸ், நீரோ போன்றோர், ரோமானிய நாட்டு ஓர்பால ஈர்ப்பு மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இப்படி பலகாலமாகவே, ஓரினவீரர்கள் போர்ப்படைகளில் இருந்தபோதும், கிறித்துவ மதம் பரவ ஆரம்பித்த பிறகே, ஓரின வீரர்கள் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பது ஓர் வரலாற்று உண்மை. கிறித்துவர்கள் அதிகம் உள்ள அமெரிக்க ராணுவ வரலாற்றில், இரண்டாம் உலகப்போரின் போது, ஆயிரக்கணக்கான ஓர்பால ஈர்ப்புடைய ராணுவ வீரர்கள் சான்ப்ரான்சிஸ்கோவில், அவமானம் செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஹிட்லரை பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவிற்கு அவருக்கு இணையான ஒரு இராணுவ அதிகாரிதான் எர்னஸ்ட் ரோம். தளபதி எர்னஸ்ட் ரோம், ஒரு ஓரினச்சேர்க்கை விரும்பி என்பது ஹிட்லருக்கும் அவனது உடன் சகாக்களுக்கும் தெரியும். இருப்பினும், எர்னஸ்ட் ரோமின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட ஹிட்லர், ‘எர்னஸ்ட் ரோம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்’ என்று குற்றம் சுமத்தி அவரைக் கொலைசெய்தான் என்று ஜெர்மன் வரலாறு சொல்கிறது. எர்னஸ்ட் ரோம் மட்டுமல்ல. ஹிட்லரின் சாம்ராஜ்யத்தில் கொலை செய்யப்பட்ட ஓரினவீரர்கள் ஏராளம் ஏராளம். இங்கிலாந்து போன்ற பல கிறித்துவ நாடுகளில், எண்ணிறந்த ஓரினப்போர்ப்படை வீரர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு ஆண்மைநீக்கம் செய்யப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டு இருக்கிறார்கள். பல ஐரோப்பிய வீரர்கள் கொலை செய்யப்பட்டும் இருக்கிறார்கள். இங்கிலாந்து நாட்டில் மட்டுமல்ல, இங்கிலாந்து ஆட்சி செய்த இந்தியா போன்ற நாடுகளிலும், ஓரினச்சேர்க்கை செய்யம் ராணுவவீரர்கள் இன்றளவும் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். இப்படி வெள்ளையர் ஆண்ட நாடுகளின் நிலை இருந்த போதும், புத்தமத நாடுகளான சீனா, ஜப்பான் போன்றவை ஓரினச்சேர்க்கை வீரர்கள் மீது தனிப்பட்ட நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை என்பது ஒரு முக்கியமான விஷயம் ஆகும்.
கோஹட்டோ(Gohatto) என்ற இந்த ஜப்பானியப் படம், ஜப்பானிய போர்ப்பிரிவில் புதிதாய் வேலைக்குச் சேரும், பெண் தன்மையுடைய ஒரு இளம் போர் வீரன் குறித்தும், அப்படி பெண்மையுடைய அந்த வீரனால், மற்ற போர் வீரர்களுக்கு ஏற்படும் மனப்போராட்டம் குறித்தும் அலசி ஆராய்கிறது. கதையில் ஓரின உடல் உறவுக் காட்சி இருந்தபோதும், கதையின் போக்கு தொய்ந்துவிடாமல், கதைக்கேற்ப, அந்த உடலுறவுக் காட்சியைக் கோர்த்து இருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ்.. இப்படத்தின் கதை, ‘ஷின்செங்குமி செப்புரோக்கு’ என்ற நாவலைத் தழுவியது என்பதாலும், கதையின் பின்புலம், ஜப்பானின் போர் வரலாற்று உண்மையால் பின்னப்பட்டு இருப்பதாலும், ஜப்பானிய போர் வரலாறு குறித்து நாம கொஞ்சம் தெரிந்து கொள்ளவேண்டியது, இங்கே அவசியமாகிறது.
ஜப்பானைப் பொறுத்தவரை ஜப்பான் மன்னர் தான் உயர்ந்தவர் என்றாலும், 1600-இல் இருந்து 1868-வரை, சோகனெட் என்ற பெரிய ராணுவமே ஜப்பானை ஆட்சி செய்து வந்தது. நாட்டைப் பாதுகாப்பது, வரி வசூலிப்பது போன்ற அனைத்து உரிமைகளும் சோகனெட் ராணுவத்திடமே இருந்து வந்தது. இக்காலத்தில், சோகனெட் ராணுவத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்ட ஜப்பான் மன்னர், ஒரு பொம்மை போலவே தனது ஆட்சியை நடத்த வேண்டியதாயிற்று. சோகனெட் ராணுவத்தின் வெளிநாட்டுக் கொள்கை சக்கொக்கு என்று அழைக்கப்பட்டது/ சக்கொக்கு கொள்கையின்படி, வெளிநாடுகளின் ஜப்பானுடனான வர்த்தகம் மிகக்குறைந்த அளவே ஜப்பானுக்குள் அனுமதிக்கப்பட்டது. அந்தக் குறைந்த வர்த்தகமும் சீனா, கொரியா போன்ற அண்டை நாடுகளுடன் மட்டுமே இருந்து வந்தது. ஆனால், 1853-இல், அமெரிக்க படைத்தளபதி மாத்யூ பெர்ரியின் கப்பல்படை, ஜப்பானை ஆக்கிரமித்தபோது, நிலைமை மாறத்தொடங்கியது. ஜப்பான் மன்னர், சோகனெட் ராணுவத்திடம் தான் இழந்து போன உரிமைகளை திரும்பப் பெறுவதற்காய், அமெரிக்காவின் உதவியை நாட, அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக தனது அதிகாரத்தை ஜப்பானுள் நிலைநிறுத்தத் தொடங்கியது. சோகனெட் ராணுவத்தை எதிர்க்கும் மன்னரின் விசுவாசிகள், சோகனெட் ராணுவத்தை எதிர்த்து போராடத் துவங்க, உள்நாட்டுக் கலகம் ஆரம்பித்தது. ஜப்பானின் நகரான க்யோட்டோவில் தொடங்கிய இந்தக் கலகத்தை அடக்க, சோகனெட் ராணுவம் ரோசிகுமி என்ற காவல் போர்ப்படைப் பிரிவை ஆரம்பித்தது. சின்சென்குமி என்று பின்னால் பெயரிடப்பட்ட இந்த போர்ப்படைப் பிரிவில், டோக்கியோ நகரில் இருந்து அனுபவம் உள்ள வீரர்கள் சேர்க்கப்பட்டனர். பல்வேறு சிக்கல்களை சநதிக்கும் சின்சென்குமி போர்ப்படைபிரிவின் தலைவராகிறார் இசாமி கோண்டோ. கோண்டோவின் தலைமையின் கீழ் இருக்கும் ஒரு முக்கியமான தளபதி ஹிஜிகட்டா தோசிசோ. இவர்கள் இருவரும் சேர்ந்து, தங்கள் படைப்பிரிவில் சேர ஆள் எடுக்கும்போது, படையில் சேர வந்து சேருகிறார்கள் நமது படத்தின் கதாநாயகன் கானா தொசிபரோவும் அவனது பின்னாள் காதலனான தஜிரோவும்.
கதாநாயகன் கானாவுக்கு பெண்ணைப் போல அழகிய கண்கள். பெண்மை ததும்பும் அந்த முகத்தைப் பார்த்து, சின்சென்குமியின் தலைவன் கோண்டோ மற்றும் அதன் உபதளபதி ஹிஜிகட்டா தோசிசோ முதற்கொண்டு, கீழ்மட்ட வீரர்கள் பலருக்கும் சலனம் எழுகிறது. நேர்மையும், பொறுப்பும் உள்ள உபதளபதி ஹிஜிகட்டா, கானாவின் நடவடிக்கை மற்றும் அவனைச் சுற்றிவரும் வீரர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக ஆராய்கிறார். என்னதான் அதிக பலசாலியாக இருந்த போதும், தனது ஓரினக்காதலன் தஜிரோவிடம் தோற்றுப்போகும் கானாவை நோட்டமிடும் உபதளபதி ஹிஜிகட்டா, கானாவும் தஜிரோவும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்பதை கண்டுபிடிக்கிறார். இருப்பினும், அந்த ஓரினக்காதலை அவர் தடை செய்யாமல் அப்படியே விட்டுவிடுகிறார். கானாவின் மேலதிகாரிகளில் ஒருவனான யுசாவாவிற்கும் கானா மீது ஆசைவருகிறது. கானாவுடன் வலுக்கட்டாய உடலுறவு கொள்ளும் யுசாவாவை, யாருமறியாமல் கானா கொன்றுவிடுகிறான். மற்ற வீரர்களிடம் கடினமாய் நடந்துகொள்ளும் உபதளபதி ஹிஜிகட்டா, கானாவின் பிரச்சினையை மட்டும் மென்மையாக அணுகுகிறார். தனது கீழ் வேலை பார்க்கும் யமசாக்கியிடம், கானாவை செக்ஸ் தொழில் செய்யும் பெண்களிடம் கூட்டிப்போக பணிக்கிறார். பல வற்புறுத்தலுக்குப் பிறகு, அந்த விபச்சார கூடத்திற்கு செல்லும் கானாவிற்கு, கூட்டிசென்ற மேலதிகாரி யமசாக்கியின் மீதே ஆசை வருகிறது. ஏளனம் பேசும் யமாசாக்கியை மாறுவேடத்தில் வந்து கானா கொல்ல நினைக்க, யமசாக்கி தப்பிக்கிறார். அப்படி தப்புகையில், முகமூடியுடன் இருக்கும் கானா விட்டுசென்ற போர்வாள் அவர் கண்ணில் தென்படுகிறது. ஆனால் அந்த வாளுக்குச் சொந்தக்காரன் கானாவின் காதலன் தஜிரோ என்பதால் பழி அவன்மீது விழுகிறது. தஜிரோவைக் கொல்ல, கானாவுக்கு கட்டளை பிறப்பிக்கிறார் உபதளபதி ஹிஜிகட்டா, கானாவும் தஜிரோ ஏமாந்தநேரம் கொன்றுவிடுகிறான். வீரர்களை இழந்துபோன உபதளபதி ஹிஜிகட்டா, இவை அனைத்துக்கும் காரணமான கானாவைக் கொல்வதோடு படம் முடிந்துபோகிறது.
ஜப்பானின் பிரபல இயக்குனர் நகிஷா ஓஷிமா, இந்தப் படத்தின் மூலம் சொல்லவந்த மையக்கருத்துக்கள் இரண்டு. முதல் கருத்து “ஒருவரது வீரத்திற்கும் அவரது இன அடையாளத்திற்கும் (Geneder Identity)க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்பதே. ஆணிடமும் வீரம் உண்டு..பெண்ணிடமும் வீரம் உண்டு…ஓர்பால் ஈர்ப்பாளனிடமும் வீரம் உண்டு. ஒரு இனத்தின் வீரம் மற்றதோடு ஒப்பிடுகையில் சளைத்ததல்ல. இரண்டாவதாய் இயக்குனர் சொல்லும் கருத்து “வீரத்திற்கும் காமத்திற்கும் சம்பந்தம் உண்டு” என்பதே. காமம் கூடினால் வீரம் மழுங்கும். இயக்குனரின் இந்தக் கருத்துகளுக்கு எதிர்மறைக்கருத்துக்களும் இல்லாமலும் இல்லை. அந்தக்காலத்தில் ஆண்கள் மட்டுமே போர்வீரர்கள் ஆக இருந்தார்கள். தவிர, அங்கே ஒரு பெண் கிடைத்தால் அவளைக் காமக்கண் கொண்டுமட்டுமே பார்க்க வீரர்கள் பழகிப்போனார்கள். ஆனால் நவீன இராணுவம், வீரர்களின் வீரத்தை மட்டுமே நம்பியில்லை. மாறாய், வீரத்தோடு, விவேகம், அவர்களது கல்வியறிவு, தொழில்நுட்பத் திறமை என பல விசயங்களைச் சார்ந்து இருக்கிறது. எனவே இங்கே ஆண் என்ற ஒரு இனத்தை மட்டுமே நம்பி நாட்டைக் காத்துவிட முடியாது. இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்ட பல நாடுகள், இன்று தங்கள் ராணுவத்தில் ஆண், பெண், திருநங்கைகள் மற்றும் ஓர்பால் ஈர்ப்பாளர்கள் என திறமையுள்ள அனைவரையும் ராணுவத்தில் சேர்த்துக் கொள்கிறது. இந்தியாவில் இப்போது திருநங்கைகள் காவல்துறையில் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். காலம் மாற மாற, இந்திய ராணுவத்தில் ஓர்பால் ஈர்ப்பாளர்களும் சேர்த்துக்கொள்ளப் படுவர் என்பது திண்ணம்.
இந்தத் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், க்யோடோ நகரின் ஒரு பிரமாண்டமான ஜப்பானியக் கோவில்புறத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது. நான் இரண்டு நாட்கள் ஜப்பானில் இருந்து இருக்கிறேன். ஜப்பானின் பாரம்பரிய கட்டிடக்கலை வடிவங்களை, குளிர் கலந்த இரவில், குறைந்த நிலவு வெளிச்சத்தில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து இருக்கிறது. இந்தப்படத்தின் பல காட்சிகள், எனது அந்த இனிய நினைவுகளை, திரும்பக் கொண்டுவந்துள்ளது. 1860-இல் நடக்கும், கதையின் பின்புலத்தில் படம் நகர்வதால், அந்தக்கால ஜப்பானை நம் கண்முன் நிறுத்த இயக்குனர் மிகவும் பாடுபட்டு இருக்கிறார். படத்தின் இன்னொரு சிறப்பாய்ச் சொல்லவேண்டும் என்றால் இயக்குனர் கதை சொல்லிய விதத்தைச் சொல்லலாம். கதை ஒரு அழகிய கவிதையைப் போல் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதை படம் பார்க்கும் அனைவரும் மனதார ஒத்துக்கொள்வர். அப்புறம் அந்த பெண்மை ததும்பும் கதாநாயகனின் கண்ணழகு. கானா என்ற கதாநாயகன் வேடத்தில் வரும் இளம் நடிகர் ரூஹை மத்சுடா, ஜப்பானியத் திரையுலகிற்கு புதுமுகமாய் இருந்தாலும், அவர் ஆக்ரோசமாய்ப் போடுகிற சண்டைக் காட்சிகளிலும், மற்ற வீரர்களுக்கு தனது உடலை உடலுறவுக்குத் தரும் காட்சிகளிலும் அனாயாசமாக நடித்து பாராட்டு பெறுகிறார். படத்தில் பாராட்டவேண்டிய இன்னொரு நடிகர் உபதளபதி ஹிஜிகட்டாவாக வரும் நடிகர் தக்கேசி கிடானோ ஆகும். ஒரு புறம், தனது போர்ப்படையை கட்டுப்பாடுடன் நடத்திச்செல்ல வேண்டிய கடமை, இன்னொரு புறம் பெண்மையுடைய ஒரு வீரனை சமாளிக்க முடியாமல் திணறும் குழப்பம், மற்றொரு புறமோ அந்த பெண்மை நிறைந்த வீரன் மீது தனக்கு ஏற்படும் சொல்லமுடியாத சலனம் என இத்தனை உணர்ச்சிகளையும் தனது அனுபவம் நிறைந்த நடிப்பால் தரும் நடிகர் தக்கேசி கிடானோவை நாம் பாராட்டாமல் இருந்துவிட முடியாது.
ஹா.ஹா…முகநூலில் நண்பர் ஒருவர் எழுதுகிறார்..”ஓர்பால் ஈர்ப்பு உடைய ஆண்கள் தமிழர்களே அல்ல.. அவர்களுக்கு வீரம் இல்லை.. அவர்கள் பொட்டைகள்” என்று. அவர் போன்றோருக்காக எடுக்கப்பட்ட படமே இந்தப் படம் என்றும் நாம் சொல்லலாம்.
அழகர்சாமி சக்திவேல்
- அரசனுக்காக ஆடுதல்
- உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 10- கோஹட்டோ(Taboo)
- அண்டவெளிப் பயணங்கள் என்னும் விஞ்ஞான நூலை சென்னை தாரிணிப் பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்
- தொடுவானம் 226. இது கடவுளின் அழைப்பு
- மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்
- 2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது !
- சொந்த நாட்டுக்கு வா ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா