டாக்டர் ஜி. ஜான்சன்
மலேசியாவிலிருந்து கடிதம் வந்தது. என் மனைவியும் மகனும் திரும்புகிறார்கள்.நான் தாம்பரம் சென்று அத்தை வீட்டில் தங்கினேன்.அத்தை மகன் பாஸ்கரனுடன் சென்னை துறைமுகம் சென்றேன். எம்.வி. சிதம்பரம் கப்பல் பிரம்மாண்டமாக நின்றது. பிரயாணிகள் இறங்கினர். அவள் கையில் என் மகனைப் பிடித்தவாறு படியில் இறங்கிவந்தாள் . நான் மகனைத் தூக்கினேன்.அவன் வராமல் திமிறினான். கொஞ்சம் சமாதானம் செய்தபின்பு அமைதியுற்றான்.அவன் என்னை ” அங்கள் ” என்று கூப்பிடடான்.அப்படிச் சொல்லாதே. அப்பா என்று சொல் என்று அவள் திருத்தினாள். அவன் அப்பா என்று சொல்லத் தயங்கினான்!
சென்னை கடற்கரை தொடர்வண்டி நிலையத்திலிருந்து தாம்பரம் சென்றோம். வாடகை ஊர்தி மூலம் வீடு சென்றோம். அத்தை எங்களுக்கு தடபுடலாக விருந்து வைத்தார்.
அன்று இரவு காரைக்குடிக்கு தொடர்வண்டி ஏறினோம். இரவெல்லாம் நீண்ட பிரயாணம்.விடியற்காலையில் காரைக்குடியில் நின்றது. வாடகை ஊர்தி மூலம் திருப்பத்தூர் அடைந்தோம்.
பெரிய வீடு அவளுக்குப் பிடித்திருந்தது. அலெக்ஸ் வீட்டு முன் ஓடி விளையாடி மகிழ்ந்தான்.எனக்கு நேரம் போவது தெரியவில்லை. அவனுடன் விளையாடினேன். டாக்டர் செல்லப்பாவும் ஆலிஸும் அவனைத் தூக்கி மகிழ்ந்தனர். மருத்துவமனை ஊழியர்களும் அவனைக் காண வந்தனர். வாழ்க்கை மிகவும் இன்பமாகத் தெரிந்தது.
ஒரு நாள் இரவு பத்து மணிக்குமேல் கதவு தட் டப்படும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தேன். இருவர் நின்றனர். தரங்கம்பாடியில் அவர்களைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. உள்ளே அழைத்தேன். அமர்ந்தனர். கைகளில் பிரயாணப் பைகள் வைத்திருந்தனர்.
அவர்களில் ஒருவர் தன்னை எட்வர்ட் என்று அறிமுகம் செய்துகொண்டார். மதுரையில் .யூ .சி. உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் என்றார்.உடன் வந்திருப்பவர் மறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் என்று அறிமுகம் செய்து வைத்தார். திருச்சியிலிருந்து வருவதாகவும், மதுரை செல்லும் பேருந்தை விட்டுவிட்ட்தாகவும் கூறினார். அதனால் இரவு தங்கவேண்டும் என்றனர். என்னை தரங்கம்பாடியில் பார்த்ததாகவும் கூறினார். நான் உடன் மாடி அறையில் அவர்கள் தங்கலாம் என்றேன். அவர்களைப் பின் தொடர்ந்தேன.
அப்போது அவர்கள் சொன்னது என்னை வியப்பில் ஆழ்த்தியது. மறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் பேராயர் தேர்தலில் போட்டியிடப் போகிறாராம்.அதன் காரணமாகவே திருச்சி சென்று வருவதாகவும் கூறினார். நான் அவர் வெற்றி பெற வாழ்த்து கூறினேன். திருப்பத்தூரில் இருந்து ஐவர் வாக்களிப்பார்களாம். அந்த ஐவரையும் தயார் செயுது தேர்தலுக்கு அழைத்து வருமாறும் வேண்டினர். நான் சம்மதம் தெரிவித்தேன். பின்பு மறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் உருக்கமாக ஜெபம் செய்தார்.அதில் எங்கள் குடும்பத்துக்காக வேண்டுதல் செய்தார். மன நிறைவுடன் கீழே சென்றேன்.
காலையில் அவர்கள் புறப்பட்டனர். இவர்களின் தொடர்பு நல்லதாகப் பட்டது. தேர்தலில் இவர் வெற்றி பெற்றால் திருச்சபையின் பேராயராகிவிடுவார். என்னை நினைவில் வைத்திருப்பார்.அது எதிர்காலத்தில் பல வழிகளில் பயனுள்ளதாக அமையும்.
புதிய ஆலயத்தின் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தவண்ணம் இருந்தன. அச்சகத்தில் அவர்கள் தயார் செய்த பக்கங்களை என்னிடம் தந்தார்கள். நான் அவற்றைச் சரி பார்த்து ஒப்புதல் அளித்தபின்பு அவர்கள் அச்சடிப்பார்கள்.அழைப்பிதழ்களை நேரில் தரும் பணியிலும் பால்ராஜ் கிறிஸ்டோபருடன் மாலை வேளைகளில் ஈடுபட்டேன்.
நாட்கள் இன்பமாகவே நகர்ந்து சென்றன. மருத்துவப் பணியிலும் திருச்சபைப் பணியிலும் மனம் விரும்பி செயல்பட்டதால் நாட்கள் ஓடியதும் தெரியவில்லை.
பேராயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. எங்கள் ஆலயத்தின் சார்பில் ஐவர் வாக்களிக்க தேர்வு செய்யப்படவேண்டும். அந்த ஐவரையும் நான் தேர்வு செய்து சபை மக்களிடம் வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தோம். எங்களை எதிர்த்துப் போட்டியிட யாரும் இல்லை.தேர்தலில் ஐவரும் வெற்றி பெற்றோம். அந்தத் தேர்தல் கூட்டத்துக்குப் பெயர் ” சினோடு ” . சுமார் 500 பேர்கள் அதில் வாக்களிக்க வருவார்கள். அது திருச்சியில் நடைபெறும்.
லுத்தரன் முன்னேற்ற இயக்கம் திருச்சியில் மீண்டும் கூடியது. ஒரு கத்தோலிக்க ஆலயத்தின் வளாகத்தில் அது நடந்தது. நான் அதில் பங்கு கொண்டேன். அதில் பேராயர் தேர்தலுக்கான இயக்கத்தின் வேட்ப்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இரு சபை குருக்கள் போட்டியிட்டனர். அவர்கள் மறைத்திரு ஏ.ஜெ.தேவராஜனும் மறைத்திரு ஜெயசீலன் ஜேக்கப் அவர்களும். இது கடசித் தேர்தல். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்தான் பேராயர் தேர்தலில் இயக்கத்தின் சார்பில் போட்டியிடுவார்.அப்போது இயக்கத்தினர் அனைவரும் ஒருமித்தமாக அவருக்கே வாக்களிக்க வேண்டும் என்பதே இயக்கத்தின் கட்டுப்பாடு. அவரை எதிர்த்து வேறு சமூகத்தினரும் வேட்பாளரை நிறுத்துவார்கள். இவர்களில் யாருக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கிறதோ அவரே திருச்சபையின் பேராயராவர். அதனால் திருச்சபை முழுதும் வாக்கு வேட்டைகள் துரிதமாக நடந்தன. திருச்சி கூட்டத்தில் மறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் வெற்றி பெற்றார். நான் உடன் அவரைக் கைகுலுக்கி வாழ்த்தினேன். அவர் என் வீட்டில் இரவு தங்கியதை நினைவு கூர்ந்தார். அவர் நிச்சயம் வென்றுவிடுவார் என்று எல்லாரும் கூறினார்கள். . லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் பலம் அயபடி இருந்தது.திருச்சபையில் மற்ற பிரிவினரின் எண்ணிக்கை குறைவு.
சினோடு தினத்தன்று காலையிலேயே நாங்கள் ஐவரும் புறப்பட்டுவிட்டொம். நாங்கள் அனைவரும் மறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் அவர்களுக்கே வாக்களிக்க முடிவு செய்திருந்தோம்.
திருச்சி சீயோன் ஆலயத்தின் அருகில் இருந்த பெரிய மண்டபத்தில் கூடினோம்..ஒவ்வொரு குருசேகரத்தின் பிரதிநிதிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டதும் அவர்கள் மேடைக்குச் சென்று வாக்குச் சீட்டை வாங்கி ஒரு பெயரை எழுதி வாக்குப் பெட்டியில் சேர்த்தனர்.அனைவரும் வாக்களித்தபின்பு வாக்குகள் எண்ணப்படடன. யாருக்கும் பெரும்பாண்மை கிடைக்காதலால் மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் மிகவும் குறைவாக வாக்குப் பெற்றவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. எஞ்சியுள்ளது இருவர் பெயர்கள்தான்.அவர்கள் மறைதிரு ஜெயசீலன் ஜேக்கப்பும் மறைதிரு ஜான் .திலக்கும். ஜான் திலக் அப்போது மதுரை இறையியல் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். வெள்ளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். ஆகவே அந்த வகுப்பைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை அவர் பெற்றிருந்தார். அவர்கள் எல்.டபிள்யு .ஏ. என்ற அமைப்பை வைத்திருந்தனர்.இப்போது பலப்பரீட்சை எல்.பி. எம் என்ற லுத்தரன் முன்னேற்ற இயக்கத்துக்கும் வெள்ளாளர் லுத்தரன் இயக்கத்துக்கு இடையில் நடக்கும் போட்டி. இதர வகுப்பினர் இந்த இருவரில் யாரை வேண்டுமானாலும் ஆதரித்து வெற்றிபெற வைக்கலாம். தேநீர் இடைவெளியில் தீவிர வாக்கு வேட்டை நடந்தது. பி.எல்.எம். என்ற பள்ளர்களின் வாக்குகளை எல்.பி.எம். வேட்பாளருக்கு அளிப்பதாக பேரம் பேசப்பட்ட்து. வி.எல்.எம். என்னும் வன்னியர்களின் அமைப்பு ஜான் திலக்கை ஆதரித்தது.
வாக்கெடுப்பு நடந்து வாக்குகள் எண்ணப்பட்டன. ஒரு மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் வென்றுவிட்டார்! அன்றுதான் திருச்சபை வரலாற்றில் முதன்முதலாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒருவர் பேராயரானார்!
லுத்தரன் முன்னேற்ற இயக்கம் பலம் பொருந்திய ஒரு மாபெரும் இயக்கமாக உருவாகிவிட்ட்து!
அன்று இரவு அங்கேயே வெற்றி விழாவும் விருந்தும் கொண்டாட்டமும் நடந்தன!
( தொடுவானம் தொடரும் )