தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

27 செப்டம்பர் 2020

”ரிஷி”யின் மூன்று கவிதைகள்

ரிஷி

Spread the love

 ‘ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  1. ஊருக்கு இளைத்தவர்களும் உத்தம உபதேசிகளும்

மகானுபாவர்கள்.
மரணத்திற்கான காரணங்களை மனப்பாடமாய் அறிந்தவர்கள்.
இன்னாரின் சாவுக்கு இன்னின்ன கேடுகளை
கிலோ கணக்கில் சந்தையில் விற்பதில் கைதேர்ந்தவர்கள்.
மனிதநேயம், சமூக அக்கறை, அறச்சீற்றம், 
என்று எத்தனை கிரீடங்களை கைவசப்படுத்திவிட முடிகிறது!
கொள்ளை லாபம்தான்!
வெள்ளையும் சொள்ளையுமாய் கடையில் அமர்ந்தபடி
வழிபோவோர் வருவோரையெல்லாம் ஆழாக்கில் அளந்துபார்த்தல்
அப்படியொரு சுவாரசியமான பொழுதுபோக்கு.
ஒரு இறப்பைக்கூட துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தத் 
தெரிந்தவர்கள்.
இறந்தவரின் மனைவி, மக்களுக்காக இரு சொட்டு முதலைக்கண்ணீர் வடித்து
திரும்பவும் கரித்துக்கொட்ட ஆரம்பிப்பார்கள். 
இறந்தவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி
கெட்டித்துப்போய்விடுவதற்கு முன்பாகவே பிணத்தின் குருதியை 
ருசித்துப் பருகிக்கொண்டே.
மரணதண்டனை கூடாதென்பார்கள் _
வன்மக்கங்குகளை வாரியிறைத்தவாறே
அன்புசெய்வோம்; அனைவரையும் நேசிப்போம் என்பவர்களைப் பார்த்து 
என்ன செய்வதென்று புரியாமல்
அங்கே நின்றுகொண்டிருக்கிறார்கள்
கள்ளமற்ற சின்னப்பிள்ளைகள் –
அன்பைக் கொள்ளைகொள்ளையாய்க் கொடுத்த அப்பன்
அசையாமல் மண்ணில் படுத்திருப்பதை
வெள்ளமென வழியும் கண்ணீரோடு பார்த்தபடி..

  •  
  • முப்பரிமாணக் கண்ணோட்டம்

இன்னார் சொல்வதால் அன்னாரைக் கொல்வதற்கு
அன்னார் hundred percent பாவியுமில்லை –
இன்னார் hapless அப்பாவியுமில்லை.
முதல் கல்லை எறிய முந்தும் கைகள் இங்கே

இருபத்தியெட்டா இருநூற்றிப் பதினெட்டா?
மேலும்,

என் துப்பாக்கியிலிருப்பதோ ஒரேயொரு தோட்டா.

  •  
  • விசாரணை

வினையை எதிர்வினையாக்கி எதிர்வினையை வினையாக்கி

தீராத வினை தீராமலேயிருக்கும்படி முனைப்பாகப் பார்த்துக்கொண்டு

எதிர்மறையாய் பனையைத் தினையாக்கி தினையாய் பனையாக்கி

பேசிய நூறாயிரம் சொற்களில் பதிவான நாலே நாலு சொற்களை

கனம் கோர்ட்டார் முன் வீசியெறிந்து

தன் தரப்பைப் பேசும் வாய்ப்பு மறுக்கப்பட்டவரைத்

திரும்பத்திரும்பக் குற்றவாளியாய் தீர்ப்பெழுதுகின்றன சில கரங்கள்

இறப்பின் இந்த முனையிலிருந்து.

தெருத்திருப்பத்தின் அந்த முனையிலான திடீர் மேடையிலிருந்து டி.எம்.எஸ் விசாரணையைத்தொடங்குகிறார்:

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?”

Series Navigationதி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.தமிழ் நுட்பம் -10- சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள்

Leave a Comment

Archives