தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.

This entry is part 8 of 10 in the series 17 மார்ச் 2019

தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் ஊடகங்கள் உருவாக்கும் செய்திகள்

நான் வெகுகாலமாகவே தமிழ் மற்றும் ஆங்கில செய்தி ஊடகங்களின் விமர்சகனாக இருந்திருக்கிறேன். அவ்வப்போது என் விமர்சனத்தை பதிவு செய்தும் வந்திருக்கிறேன்.

ஆனால் சமீபத்தில் ஊடகங்களின் அடிப்படையே மாற்றப்பட்டு இன்று அவை கட்சிகளின் நீட்சிகளாக ஆகியிருப்பது மிகுந்த அவலமானது.

இதில் வெகுகாலமாக பத்திரிக்கை அறத்தை போற்றிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி போன்றவைகளும் இணைந்துகொண்டு வெகு கேவலமாக ஆகியிருப்பது மிகவும் வருத்தத்தை தருகிறது.

கம்யூனிஸ்டு கட்சியின் நீட்சியாக ஏற்கெனவே ஆகிவிட்ட தி இந்து பத்திரிக்கையும் அதன் தமிழ் பதிப்பும் அப்பட்டமாக கம்யூனிஸ்டு கட்சி நிலைப்பாடுகளையும் திமுக ஆதரவையும் எடுத்து திமுக முன்னணி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது எனக்கு எந்த ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. தயாநிதி மாறன் தி இந்து குடும்பத்தில் பெண்ணெடுத்திருக்கிறார் என்பது எனக்கு உப செய்திதான்.

விகடன் ஏறத்தாழ நக்ஸல் பிரச்சார பத்திரிக்கையாக ஆகியிருக்கிறது.

சன் நியூஸ் குழுமம் எந்த விதமான பாசாங்கும் இல்லாமல் ஆரம்பம் முதற்கொண்டு திமுக பிரச்சாரத்தையே எடுத்து நடத்திகொண்டிருக்கிறது. தயாநிதி மாறன் திமுக வேட்பாளர்

கலைஞர் டிவி சொந்தக்காரரான கனிமொழி திமுக வேட்பாளர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சொந்தக்காரரான பச்சமுத்து திமுக வேட்பாளராக முயற்சி செய்துகொண்டிருக்கிறார். இவர் முன்பு பாஜக ஆதரவில் பெரம்பலூரில் நின்றார். (அப்போதும் என்னவோ ரொம்பவும் நடுநிலையாக பாஜகவை எதிர்த்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்திகள் வரும். இப்போது என்ன நிலைமை என்று தெரியவில்லை)
மக்கள் டிவி,கேப்டன் டிவி ஆகியவை இன்று அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, தேமுதிக கட்சி ஊடகங்களாக இருக்கின்றன.

மெகா டிவி காங்கிரஸ் ஆதரவு ஊடகமாக இருக்கிறது.
மதிமுகம் டிவி, மதிமுகவின் அதிகாரப்பூர்வமான செய்தி தொலைக்காட்சி.
வெளிச்சம் டிவி திமுக கூட்டணி வேட்பாளரின் தொலைக்காட்சி.
வசந்த் டிவியை நடத்துபவர் காங்கிரஸ் வேட்பாளர்.
ஜெயா நியூஸ் தொலைக்காட்சி, டிடிவி தினகரனின் தொலைக்காட்சியாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்த தொலைக்காட்சிகள் , முக்கியமாக கலைஞர் டிவி, சன் நியூஸ், விகடன், நக்கீரன் ஆகியோர் என்று எடுத்திருக்கும் பொள்ளாச்சி பாலியல் அத்து மீறல் ஒரு சமூக விவாதத்தை முன்னெடுப்பதற்கு பதிலாக அதிமுக எதிர்ப்பு போர்வை போர்த்தி தற்போதைய அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது.

எந்த விஷயம் ஊதி பெரிதாக்கப்பட வேண்டும், எது அமுக்கப்படவேண்டும் என்பதை இந்த ஊடக முதலைகளும், அவர்களின் அரசியல்களுமே நிர்ணயிக்கின்றன. இந்த ஊடகங்களே மக்களின் முன்னால் எது பிரச்னை என்பதை முன்னிருத்துகின்றன. எந்த வித தார்மீக நிலைப்பாடும் இல்லாமல், எந்த விதமான நாகரிகமும் இல்லாமல், ஊடக அறமும் இல்லாமல், தங்கள் அரசியல் நிலைப்பாடுகளை மக்களிடம் திணிப்பதற்காக பேரவலங்களை பயன்படுத்திகொண்டு தூக்கி எறிகின்றன.

திமுக பிரமுகர் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.

இதனை ஏன் ஊடகங்கள் பேசவில்லை? தினந்தோறும் விவாத மேடை அமைக்கவில்லை? திரும்பி திரும்பி ஓட்டவில்லை?

கவனியுங்கள். சொந்த விருப்பத்தினால் நித்தியானந்தாவுடன் வயது முதிர்ந்த பெண் இருந்ததை ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை ஓட்டி பிரச்சாரம் செய்து செய்தியை பேசு பொருளாக்கிய சன் ஊடகமும் இதர ஊடகங்களும், மேஜராகாத சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கண்டுகொள்ளாமல், தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவர்களை கண்டுகொள்ளாமல், அத்தோடு இதுவும் ஒன்றாய் கடந்து செல்வதன் உள்ளே இருக்கும் அரசியலை கண்டு கொள்ளவேண்டும். எது பேசப்பட வேண்டியது? எது முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது? யாருக்காக பரிந்து கவலைப்பட வேண்டும்? சிறுமிகளுக்கா அல்லது 35 வயது பெண்ணுக்கா? ஆனால் செய்தி ஊடகங்கள் எதனை அரசியல் படுத்துகின்றன?

ஒரு விசயத்தை ஒரே நேரத்தில் எல்லா தொலைக்காட்சிகளும் ஊதி பெரிதாக்கும்போது, அது மையம் கொண்டு விடுகிறது. மற்ற விசயங்கள் அமுக்கப்பட்டுவிடுகின்றன. அதனாலேயே இன்று நீட் விவகாரம், ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு, காவிரி, நியூட்ரினோ, அணு உலை போன்ற விசயங்கள் இதே ஊடகங்களால் பிரம்மாண்டமாக ஆக்கப்பட்டு பாஜக அரசுக்கு எதிராக மக்களை திருப்ப உபயோகப்படுத்தப்பட்டன. அது மட்டுமின்றி, பாஜக எதிர்ப்பிலிருந்து நகர்ந்து இந்திய எதிர்ப்பாகவும் திசை திருப்பப்பட்டன. இந்த ஊடக மூளைச்சலவையை எதிர்ப்பது கூட இந்த செய்தி தொலைக்காட்சிகள் அதே விசயத்தை இன்னும் அழுத்தமாக பிரச்சாரம் செய்ய வழி வகுத்துவிடுகின்றன.

தமிழகத்தில் இத்தனை கட்சி சார்ந்த ஊடகங்கள் இருப்பது தமிழகத்துக்கு நல்லதா என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

பொய்யான செய்திகளை பரப்புவது மட்டுமல்ல, எந்த செய்தி எந்த இடத்தில் வர வேண்டும் என்பதையும் இவைகளே நிர்ணயிக்கின்றன.

முதல் பக்கத்தில் பிரம்மாண்டமாக பொய் செய்தியை வெளியிட்டுவிட்டு அடுத்த நாள் மூன்றாம் பக்கத்தில் இறுதியில் ஒரு சின்ன பெட்டி செய்தியாக தவறுக்கு வருந்துகிறோம் என்று வெளியிடுவது பத்திரிக்கை தர்மம் என்று ஏமாற்றுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தை வெளியிடுவது குற்றம். ஆனால் நக்கீரன் பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தை அட்டை படமாக போட்டு காசு பார்க்கிறது. அந்த நக்கீரன் கோபாலை கைது செய்தாலும் தி இந்துவின் என் ராம் உடனே சுப்ரீம் கோர்ட் வரைக்கும் சென்று வாதாடுகிறார். கவர்னர் பன்வரிலால் புரோஹித் மீது அவதூறு எழுதிய நக்கீரன் பத்திரிக்கை கோபாலை கைது செய்தால், “நான் எழுதுவேன், நீதான் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்க வேண்டும்’ என்று நக்கீரன் கோபால் கூறுகிறார். அதற்கு என் ராம் வக்காலத்து வாங்குகிறார்.

இப்படிப்பட்ட சமூக விரோதிகள் நடத்தும் தி இந்து, நக்கீரன், விகடன் போன்ற பத்திரிக்கைகளை புறக்கணிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

இவர் எந்த கட்சியின் ஆதரவில் இவ்வாறு பேசுகிறார் என்று யோசிக்க தேவையில்லை.

தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டிய கட்சி திமுக. தமிழக மக்கள் திமுகவை முழுவதும் டெப்பாஸிட் காலியாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

Series Navigationபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்”ரிஷி”யின் மூன்று கவிதைகள்
author

சின்னக்கருப்பன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    சுப.சோமசுந்தரம் says:

    நாங்களும் தொழிற்சங்கங்களில் அவ்வப்போது தீர்மானம் போடுவோம். தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதுவதாலும் போராட்டங்களைக் கொச்சைப் படுத்துவதாலும் தினமலரைப் புறக்கணிப்போம் என்று. ஆனால் வெகுசனக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் தி இந்துவையும் ஆனந்த விகடனையும் புறக்கணிக்க நினைக்கும் தங்களின் நிறம் (வர்ணம்) நன்றாகத் தெரிகிறது. சமூகத்தில் நிகழும் பாலியல் வன்முறைகளைப் பற்றி (பெயர் மறைத்து) நாகரிகமாக மக்களிடம் எடுத்துச செ்ன்று மக்களை எச்சரிப்பது பத்திரிகை தர்மம். மண்ணின் மாண்பை மீட்டெடுக்க நினைக்கும் ஆனந்த விகடன் நக்சலா ? இந்த மண்ணில் வாழ வைத்தவர்களின் மீது விசுவாசமின்றி அவர்களின் அடையாளங்களை மொழியாலும் சடங்கியலாலும் ஈராயிரம் ஆண்டுகளாக நிராகரிக்க, அழிக்க முற்படும் கூட்டத்திற்கும் அவர்கள் சார்ந்த ‘தேசிய’ பத்திரிக்கைகளுக்கும் என்ன பெயர் கொடுக்கலாம், ஐயா ? Featured என்பதன் பொருள் ‘திண்ணை’க்குத் தெரியுமா?

  2. Avatar
    Kalai says:

    இந்த கட்டுரையல் எங்குமே அவர் வர்ணம் பற்றியோ சாதி பற்றியோ குறிப்பிடவில்லை. உங்கள் அபிமான ஊடகங்கள் எப்படி சம்பந்தமே இல்லாமல் தங்களுக்கு வேண்டாதவர்களை தொடர்பு படுத்தி எழுதுகிறார்களோ அது போல் தான் உங்கள் கமென்ட் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *