ஆணவம் பெரிதா?

author
0 minutes, 16 seconds Read
This entry is part 7 of 12 in the series 12 மே 2019

 (கௌசல்யா ரங்கநாதன்)        

-1-

 பேராசிரியராய் பணி புரிந்த காலத்திலிருந்தே எத்தனை புத்தகங்கள்,ஆராய்ச்சி கட்டுரைகள், சயன்ஸ் ஃபிக்க்ஷன் கதைகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி நான் பாராட்டுக்களை குவித்திருப்பேன்! எத்தனை முனைவர் பட்டங்கள் என்னை தேடி வந்தன..ஆனால் என்  பணி ஓய்வுக்கு பிறகு கிட்டத்தட்ட 5 நீண்ட வருடங்கள் ராப்பகலாய் தூக்கம் தொலைத்து ஒரு புதினத்தை ஆங்கிலத்தில் எழுதப்போக, அதை ஒரு பதிப்பகத்தார் வாங்கிப் போட, குறுகிய காலத்திலேயே அது பல பிரசுரங்கள் கண்டது..உலகின் பல நாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வந்து  குவிவதாகவும், இதை ஏன் நீங்கள் தமிழிலும் மொழி பெயர்த்திடக் கூடாது..பல நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒருசேர எழுதியவர்தானே நீங்கள்?” என்று பல பதிப்பகங்கள் என்னிடம் வந்து கேட்ட வண்ணமே இருந்தனர்..ஒரு மொழியிலிருந்து, இன்னொரு மொழிக்கு மாற்றம்  செய்யும்போது, மிகுந்த கவனத்துடனும், மூல நூலின் சுவை  மாறாமலும், அதே சமயம் மொழி மாற்றம் செய்யப்பட்டது என்றுணராமலும், கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமலும், எழுதுபவன் என்று பெயர் எடுத்தவன் நான்.. இதற்கு என் ஆதர்ச குரு என்று ஆங்கில மூலத்திலிருந்து சற்றும் சுவை  குறையாமல் குமுதம் வார இதழில் “பட்டாம்பூச்சி” என்ற தலைப்பில் எழுதிய திரு ரா.கி.ர.என்று பெருமையுடன் சொல்வேன்.. இந்த சமயம் பார்த்து எனக்கு சற்றே உடல் நலக்குறைவு ஏற்பட்டது..பிறகு பல முறைகள் தமிழாக்கம் செய்ய ஆரம்பிக்கும்போதெல்லாம் ஏதோ ஒரு தடங்கல்,(அதை தடங்கல் என்றும் சொல்ல முடியாது) வந்த வண்ணமே இருந்தது..என்ன காரணமோ தெரியவில்லை முன்போல் என்னால் முனைப்புடன் செயல் பட முடியவில்லை..வயதும் ஒரு காரணமோ என  என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.. சமாளித்துக்கொண்டு எழுதத் தொடங்கும் போதெல்லாம் மூளை வேலை செய்ய மறுத்தது..ஒருவித சோர்வு என்னை ஆட்கொண்டது..   மறைந்த பிரபல எழுத்தாளர் திரு.தேவன், தன் “மிஸ்டர் வேதாந்தம்” நாவலில் சொல்லியிருப்பது நினைவுக்கு அந்தது.. “எழுத்து என்பது ரொம்ப சிரமமான தொழில் என்றும்..நேற்றைக்கு நன்றாய் எழுதியிருந்தேனே என்பதற்காக இன்றைக்கு யாரும் விரும்ப மாட்டார்கள் என்றும் மனதில் அற்புதமான ஐடியா உருவாகும்..அதையே எழுத்தில் பார்க்கும் போது சில சமயங்களில் ஜீவன் இல்லாமல் போய்விடும்..மூளையும், கையும் நன்கு ஒத்துழைக்க வேண்டும்..தவிர பாஷை  அனுகுணமாய் இயங்க வேண்டும்..எழுத்து என்பது சாமான்யமானதில்லை..ஒரு தவம் போல” என்றெல்லாம்.. 

–2-

 என் வயது, மூப்பு காரணமாய் என்னால் முன்போல் சகஜமாய் இயங்க முடியவில்லை என்பதை உணர்ந்த பதிப்பக நண்பர் “உங்களுக்கு வேணா ஒரு உதவியாளரை நியமிக்கட்டுமா?” என்ற போதும் எனக்கு என்னவோ அதில் உடன்பாடில்லை என்றேன்.. பிறகு அவர்  “ஏன் தான் உங்களை கடவுள் இப்படி சோதிக்கிறான்னு தெரியலை..நீங்க முன்போல ஆரோக்கியமாய் இயங்கணும்னு அவங்கிட்ட நான் பிரார்த்திக்கிறேன்..அதே சமயம் வேற நல்ல, அனுபவுமுள்ள, ஆங்கிலம்,தமிழ் புலமைமிக்க மொழிபெயர்ப்பாளர் யாராவது கிடைப்பாங்களானும் பார்ப்போம்..” என்றார்.. “இது சரிப்படுமா?” என்ற என்னிடம் “ஒரு 2/3 அத்தியாயங்களை கொடுத்து மொழிபெயர்க்க சொல்வோம்..அதை படிச்சு பார்த்து நீங்க ஒப்புதல் கொடுத்தா மட்டுமே மத்த அத்தியாயங்களயும் கொஞ்சம், கொஞ்சமாய் கொடுத்து, அதுவும் உங்களுக்கு முழு திருப்தி ஏற்பட்டா மட்டுமே, மேற்கொண்டு ஆவன செய்வோம்..ஆனா  உங்க மூல ஆங்கில நூலை உங்களைத்தவிர வேற எந்த கொம்பனாலும் உங்க அளவுக்கு திருப்தியாய் தமிழில் மொழி பெயர்த்திட முடியாது.அந்த சொல்லாடல், விறுவிறுப்பு, புத்தகத்தை கையில் எடுத்தா முழுக்க படிக்காம கீழே வைக்கமுடியாதுன்றதுதான் நிதா¢சனம் என்ற அவர் வார்த்தை என்னுள் ஒரு அகந்தையை,இருமாப்பை தோற்றுவித்திருந்தது என்பதே நிசம்..”என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?” என்ற புகழ்பெற்ற வசனம் நினைவுக்கு வந்தது.. பிறகு பதிப்பக நண்பர் அனுப்பிய 2/3மொழிபெயர்ப்பாளர்களாலும் என் திருப்திக்கேற்றபடி மொழியாக்கம் செய்ய முடியவில்லை..  அப்போதுதான் “கடவுளே ஏன் என்னை சோதிக்கிறாய்? இது என் அகந்தைக்கு கிடைத்த தண்டனையா?..கூடவே “அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி” என்ற பாடல் வரிகளும் நினைவுக்கு வந்தது..

 -3-

 அப்போது ஒரு நாள் ஒரு பதிப்பக நண்பர் தனக்கு தெரிஞ்சவங்க மூலமாய் ஒருத்தர் இந்த பணியினை செவ்வனே செய்வதாய் சொன்னார்..நீங்க பார்த்து ஒகேனு சொன்னா, வழக்கம்போல முதல் இரண்டு அத்தியாங்களை கொடுத்து மொழிபெயர்க்க சொல்லி, உங்களுக்கு திருப்தியாய் இருந்தா, என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே நான் அவரிடம் “நீங்களே என் மூல ஆங்கில நூலை அவர்கிட்ட கொடுத்து டிராஃப்ட் பண்ண சொல்லுங்க..அப்புறம் பார்ப்போம்” என்று அசுவாரசியமாய் சொன்னேன்..அத்துடன் இந்த விஷயத்தை மறந்தே போனேன்..இப்படி 15 நாட்கள் கடந்த பின், ஒருநாள் மதியம் 12 மணியளவில் என் மனைவி என்னிடம் (அப்போது நான் என் வீட்டின் இரண்டாம் தளத்தில் உள்ள நூலகத்தில் எதையோ ரெஃபர் பண்ணிக் கொண்டிருந்தேன்)மிகுந்த சிரமத்துடன் மாடியேறி வந்து “ஒரு பெரியவரும், ஒரு அம்மாவும் உங்களைப் பார்க்க வந்து காத்துக்கிட்டிருக்காங்க..”நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டப்ப, உங்க பெயரை சொல்லி உங்களை ஒரு10  நிமிஷம் பார்த்து பேசணும்ன்றார்..பார்த்தா பாவமாய் இருக்கு..வயசும் 80+ல இருக்கும் போல தோணுது..”என்ற என் மனைவியைப் பார்த்து, ‘”எப்படி இருக்காங்க அவங்க?” என்ற என்னிடம் “ரொம்ப சிம்பிளாய் இருக்காங்க..ஷேவ் பண்ணிய முகம்..பளிச்சுனு கதர் வேட்டி,ஷர்ட்”. “ஏதாச்சும் டொனேஷனோ, வேற உதவிகளோ கேட்டு வந்திருக்கலாம்.. anyhow வயசானவங்கனு சொல்றே..வரச்சொல்லேன் இங்கே? ஒருகால் அவங்களால மாடியேறி வர முடியலைனா, நான் வரேன்” என்றேன்..அடுத்த 5 நிமிஷத்தில் அந்த தம்பதியினர் இரண்டு மாடிகள் ஏறி வந்து “நமஸ்காரம்..நாங்க உங்க பிசியான நேரத்தை வீணடிச்சுட்டோம் போலிருக்கு..” என்ற போதும் நான் எதுவும் பேசாமல் “சொல்லுங்க..என்ன வேணும் உங்களுக்கு”? என்றேன் அசுவாரசியமாய்..நிச்சயம் இவர்கள் ஏதோ உதவி கேட்டுத்தான் வந்திருக்கிறார்கள் என்றெண்ணி.. 

-4-

 வந்திருந்தவர் சொன்னார் “உங்க பதிப்பக நண்பர் உங்க ஆங்கில மூலத்தை என்னிடம் கொடுத்து தமிழில் மொழியாக்கம் செய்து தர முடியுமானு  கேட்டார்” என்ற போதும் அவர் தோற்றத்தை பார்த்து இவரா மொழியாக்கம் செய்து தரப் போகிறார்  என்றே நினைத்து மௌனம் காத்தேன்.. அவர் தன் பையிலிருந்து கையால் எழுதப்பட்ட (டைப் பண்ணியிருக்கக் கூடாதா என்றும் தோன்றியது) சில காகிதங்களை என்னிடம்  கொடுத்தார்.. neat handwriting  என்னை கவர்ந்தது..சில வா¢களை படிக்க, படிக்க என்னுள் ஒரு பிரமிப்பு..கூடவே ஒரு ஈர்ப்பு..உடனே மள,மளவென எல்லா காகிதங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்..அவரையும் அண்ணாந்து பார்த்தேன்..இவரா..இவரா இப்படியொரு அற்புத மொழிபெயர்ப்பினை செய்தார் என்றும் தோன்றியது..மறுமுறையும் கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு என்பார்களே அப்படி படித்தேன்..என்னால் கூட இப்படியொரு மொழிபெயர்ப்பினை, மூல நூலின் சுவை சற்றும் குறையாமலும், விறுவிறுப்புடனும் செய்திருக்க முடியாதுதான்..அவரை பிரமிப்புடன் அண்ணாந்து பார்த்தேன்..”ரொம்ப நல்லாயிருக்கு சார்” என்ற போது வந்திருந்த பெரியவர் “சார் என்னை கோபிக்க கூடாது..நான் உங்க அனுமதியில்லாமலேயே முழு புத்தகத்தையும் மொழி பெயர்த்துட்டேன்..” என்ற போது அவரிடமிருந்து மொத்தத்தையும் ஒரே மூச்சில் படித்து பார்க்க, அப்படியே பிரமிப்பில் ஆழ்ந்தேன்..அவர்மேல் ஒரு மரியாதை தோன்றியது..அவரைப் பற்றி மெல்ல விசாரிக்க ஆரம்பித்தேன்..”காபி சாப்பிடறீங்களா சார்?” என்று அப்போதுதான் நான் கேட்டேன்..என் செய்கைகள் எனக்கே அறுவெறுப்பை   கொடுத்தது..அவரும்,  “வேணாம் சார்”என்றார்”. “வாட்டராவது” என்றபோது, “நாங்க எப்பவும் கையிலய எடுத்துக்கிட்டு வந்துடுவோம்”என்றார். “எத்தனை மாதங்களாச்சு சார் இதை முழுக்க மொழிபெயர்த்திட?” என்ற என்னைப் பார்த்து அவர் “10 நாட்களில் முடிச்சிட்டேன் சார்..ஏதாச்சும் தப்பிருந்தா சொல்லுங்க..திருத்திக்கிறேன்” என்றார் மிக பவ்வியமாய், மெல்லிய குரலில்,அவர் என் வயதையொத்தவராய் இருந்தும்கூட.. “வாவ்..10 நாட்களிலா?ஆச்சரியமாய் இருக்கு..நம்ப முடியலை” என்றபோதும் அவர் மௌனமாய் இருந்தார்.. இதுவே அவா¢டத்தில் நானாய் இருந்தால் “என்ன சார் சொல்றீங்க?ஏன் பிறத்தியாரை under estimate பண்றீங்க?” என்று வெடித்திருப்பேன்..பாவம்..ரொம்ப சிரமப்படறவர் போல இருக்கு பணத்துக்கு” என்றே எண்ணத் தோன்றியது.. கூடவே என் செய்கைகள் எனக்கே அறுவெறுப்பை கொடுத்தது ஏன் இப்படி எல்லாம் ஒருவரைப் பற்றி நினைக்கிறாய்?” என்று..சொத்து,சுகம் எல்லாம் வரும்போது ஒருவனுக்கு அகந்தையும் கூடவே வந்து விடுகிறது.. ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான்..ஒரு கால கட்டத்தில் எல்லாம் தொலைந்தால் பிறகு தான் ஞானோதயமே பிறக்கிறது.. நான் மட்டுமே மிகச்சிறந்த கல்விமான்,அதிபுத்திசாலி என்றும்.. அதே சமயம் “என் பாட்டு கேளடா, இசைதெய்வம் நானடா” என்ற திருவிளையாடல் பாடல் காட்சியும் நெஞ்சில் அலைமோதியது..தோற்றத்தைப் பார்த்து ஒருவரை எடை போடக்கூடாது..அவருக்குள் ஒராயிரம் திறைமைகள் ஒளிந்தி ருக்கலாம் என்றும் தோன்றியது..இப்படி சிந்தைவயப்பட்டு எதை,எதையோ நான் நினைத்திருக்கையில் பெரியவர் என்னைப் பார்த்து …..

-5-

 “அப்ப நாங்க உத்தரவு வாங்கிக்கலாமா?” என்ற போது, “ஸாரி சார்..ஏதேதோ நினைவுகளில் மூழ்கிட்டேன்..உங்களுடைய இந்த பணிக்கு எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள்?” என்றபோதும் அவர் மௌனம் காத்தார்.. தொகை எவ்வளவு என்று கேட்கத் தயங்குகிறார் போலும் என்று எண்ணி “தயங்காம கேளுங்க எவ்வளவு வேணும்னு”என்றேன்.. “நீங்க எவ்வளவு கொடுத்தாலும் அதை ஆத்ம திருப்தியோட நான் வாங்கிக்குவேன்..அது ஒத்த ரூபாயாய் இருந்தாலும் கூட.”என்றார்.. “நிசமாலுமா! ” “யெஸ்..சத்தியமா..என் முன்னோர்களின் மேலும், அந்த சாட்சாத் சரஸ்வதி தேவியின் மேலும் ஆணையா சொல்றேன்..நீங்க கொடுக்கப் போற தொகை  எவ்வளவாய் இருந்தாலும் அது ஒரு நல்ல காரிப்யத்துக்குத்தான் பயன்படப் போகிறது..” என்று சொல்லி என்னை மேலும் வியப்பிலாழ்த்தினார்..

-6-

 “உங்களைப் பார்த்தா எனக்கு பிரமிப்பா இருக்கு..பணம்,பணம்னு பணத்து பின்னால அலையற கூட்டத்து நடுவால, உங்க இத்தனை வயசிலும் நீங்க இப்படி இருக்கிறதை நினைச்சு பூரிப்ப்படைகிறேன்..பணத்தை விடுங்க..அந்த வித்யா கர்வம்ன்றது துளிக்கூட உங்ககிட்ட இல்லை”. அப்போது அந்த பெரியவர் “உங்ககிட்ட ஒரு சில நிமிடங்கள் மனம்விட்டு பேசலாமா?என்றவர் சொன்னார்..”நான் பணத்துக்கு ஆசைப்பட்டு எழுத்துலகத்தில் இறங்கலை..எழுத்துத்தான் எனக்கு ஊண்,உறக்கம்,சுவாசம் எல்லாமே! என்னை சிலர் பைத்தியாக்காரன்னுகூட நினைக்கலாம். but the truth remains.. என் சின்ன வயசிலிருந்தே எனக்கு படிப்பு மேல ஒரு தணியாத தாகம்..கீழே ஒரு துண்டு காகிதம் கிடந்தாக்கூட அதை எடுத்து அதில் என்ன எழுதியிருக்குனு படிப்பேன்..மஹாகவி எழுத்து மேலே ஒரு பக்தி..அவர் சொன்ன ஒரு வாக்கியம்தான்..அதாவது பிற மொழி காப்பியங்களை தமிழில் மொழி பெயர்த்திட வேண்டும்ன்றது என் மனத்தில் அழுத்தமா பதிஞ்சு போனதால மொழிபெயர்ப்பை துவங்கினேன்..படிப்படியாய் ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியவரை சுயமா எழுதறதும், மொழிபெயர்ப்புகள் செய்யறதும் உண்டு..தவிர சில பதிப்பகங்கள் என்னை நாடி வந்து பிறமொழி நூல்களை என்னிடம் கொடுத்து “உங்களால் இதை மொழிபெயர்த்து தர முடியுமானு” கேட்கிறப்ப அந்த நூல் என் மனசுக்கு பிடிச்சிருந்தா மட்டும் அந்த வேலையை எந்த குறையும் இல்லாம செஞ்சு கொடுப்பேன்..கொஞ்சம்,கொஞ்சமாய் என்னைநாடி பலரும்,பல பதிப்பகத்தார்களும் வர ஆரம்பிச்சாங்க..அப்படி வந்து எங்கிட்ட வேலையை கொடுக்கிறவங்ககிட்ட நான் எனக்கு இவ்வளவு பணம்தான் வேணும்னு கேட்கிறதில்லை..நாம் ஒப்பந்தம் போட்டுக்கலாமேனு சொல்றவங்ககிட்ட கூட “ஒப்பந்தமெல்லாம் எதுக்கு? நீங்க மனமுவந்து கொடுக்கிற பணத்தை நான் வாங்கிக்கிறேன்னு சொல்லி அந்த பணத்தை ஏழைக்குழந்தைகள் படிப்புக்கும், டிரஸுக்கும், சாப்பாட்டுக்கும் கொடுத்துடறேன்னு சொல்வேன்..இந்த என் ஏமாளித்தனத்தை ஒரு சிலர் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்திக்கிட்டு பணம் கொடுக்கிறதும் இல்லை..நானும் அவங்களை கடிஞ்சுக்கிறதில்லை..எனக்கு எழுத்தும், எழுதுகோலும் தெய்வம்..அதனால்தான் என்னால் ஒரு கணினிகூட வாங்கிக்க முடியலை..அதுக்கு செலவழிக்கிற தொகையைக்கூட இன்னம் 2 ஏழைப் பிள்ளைகள் படிப்புக்கு கொடுத்து உதவலாமேன்ற எண்ணத்தால்தான்..அதனால்தான் உங்க மூல நாவலைக் கூட நான் கையால்தான் எழுதினேன்..” பிரமித்துப் போன நான் “சார் உங்களுக்குள் இப்படி ஒரு உத்வேகத்தை கொடுத்தது யார்னு நான் தெரிஞ்சுக்கலாமா?கொள்ளைக்காரனா இருந்தவனை வால்மீகியாக்கி ராமாயண மஹா காவியம் எழுத வச்சவன் அந்த பரந்தாமன்றாப்பல, மகாபாரதம் எழுதிட உதவி பண்ணிய வினாயகக்கடவுள் போல” என்றபோது “சார்..அவங்களோடல்லாம் ஒப்பிட்டு பேசற அளவு நான் பெரியவன் இல்லை..ஆனா, ஒண்ணு மட்டும் சொல்வேன்..என்னை பெத்தவங்க..அவங்க வழிவந்த ஜீன்ஸ்..இது எல்லாத்துக்கும் மேலே என் அப்பா, சித்தப்பா…குறிப்பாய் என் சித்தப்பா.. அவரை நினைக்கிறப்பவே எனக்கு மெய் சிலிர்த்து போகுது, இப்பவும்.. அவர் இரக்க சுபாவம், தன்னலமில்லாத, பிறர் துன்பம் பார்க்க சகிக்காத குணம், யார் எந்த நேரத்தில் தன்னை நாடிவந்து உதவினு கேட்டாலும், அவங்க யார்? என்ன சாதி,மதம்,இனம்னு பார்க்காமலும், அவங்க சொல்றது நிசமா,பொய்யானு ஆராயாமலும் வந்தவங்களை உட்கார்த்தி வச்சு வயிறார சாப்பாடு போட்டு, அவங்க கேட்ட உதவி, அது பணமோ,பொருள்களோ, இல்லை வேற உதவிகளோ உடனடியாய் செஞ்சு கொடுத்தவர் தன் ஆயுள்காலம் வரை..அதனால்தான் அந்த வி.வி.ஐ.பியை இன்னைக்கும் நாடு பூரா கொண்டாடுது” என்றவர் “புரிப்யலையா சார் உங்களுக்கு இன்னமும்”என்றவர், அவர் பெயரைச்சொன்ன போது எனக்கு ரோமாஞ்சலியே ஏற்பட்டது.. “வாழ்ந்தவர் கோடி,மறைந்தவர் கோடி” என்ற பாடல் வரிகளே நினைவுக்கு வந்தது.. பெரியவரிடம் ஒரு பெரும்தொகைக்கு காசோலை கொடுத்து அவரை கையெடுத்து கும்பிட்டு  வாயில்வரை அழைத்து வந்து “இருங்க என் டிரைவரை கூப்பிடறேன்..எங்க காரிப்ல் உங்களை உங்க வீட்டில் டிராப் பண்ணச்சொல்றேன்” என்ற என்னை பார்த்து “வேணாம்..நான் பஸ்சில போறதையே விரும்பறேன்..ஏன்னா இந்த வயசில வாக்கிங்கும் தேவைப்படுது இல்லையா? என்று புன்முறுவலுடன், கைகூப்பி அவர்கள் இருவரும் விடை பெற்று சென்ற பின்பும், அவர்கள்  எங்கள் தெருவில் அந்த வேகாத வெயிலில் நடந்து போவதை பேச்சே வராமல் என் வீட்டு வாயிலிலேயே ஒருவித பிரமிப்புடன் பார்த்துக் கொண்டே நின்றேன்..!    

Series Navigationகதைச்சக்ரவர்த்தி கு.அழகிரிசாமி – நிகழ்வுசமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில் வளர வேண்டும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *