தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

31 மே 2020

கவிதையின் உயிர்த்தெழல்

ரிஷி

Spread the love

ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)

அதுவல்ல கவிதை யென்றார்; இதுவே கவிதை யென்றார்.
இதுவல்ல கவிதை யென்றார்; அதுவே கவிதை யென்றார்.
அது இருப்பதாலேயே எதுவும் கவிதையாகிவிடா தென்றார்.
எல்லாமும் கவிதையாகிவிடும் இதுவிருந்தால் என்றார். 
இதுவும் அதுவும் எதுவுமாக
‘அல்ல’வாக்கியும் ‘நல்ல’வாக்கியும்
சிலவற்றைத் தூக்கியும் சிலவற்றைத் தாக்கியும்
சிலவற்றைப் புகைபோக்கிவழியே நீக்கியும்
கவிதையை ஒரு மெதுவடையாக மசாலாதோசை யாக
மாடர்ன் பிரட் துண்டங்கள் கலந்த சன்னா மசாலா வாக
முக்கோணமாய் மடிக்கப்பட்ட சப்பாத்தியாக
கேப்பங்கூழாக கொக்கோகோலாவாக
Cubaவின் Mojitoவாக பாவித்து
யாரும் கேட்காமலேயே
நாளும் பலவிதமாய் recipe க்கள் எழுதியெழுதி
அட்டவணையாக்கி சுவரில் மாட்டி 
தேவையான பொருட்களென சிலவற்றைப்

பட்டியலிட்டுக்காட்டி யவற்றை
வெதுவெதுப்பான நீரில் நான்கைந்துமுறை நனைத்துப் பிழிந்து
பதமாக வெளியே எடுத்துப் பின் வெள்ளைத்தாளில்
வரிவரியாய் முறுக்கு சுற்றி
என்னவொரு இன்சுவை பெற்றீர் – அடடா
கவிதை யிதுவே கவிதை யதுவே கவிதை யென
கதை கதையாய் கதைப்பதெல்லாம்
பாசிசமும் நார்சிசமுமாய் 
தனதே கவிதை யென வாசக மனங்களில்
பதிய வைக்கவே
யென்பது உள்ளங்கை நெல்லிக்கனி யெனத் 
தெள்ளத் தெளிவாகத் தெரியவர
தப்பிக்கும் பொருட்டு
விறுவிறுவென்று ஓடிச்சென்ற கவிதை

ஒரு மலையுச்சியிலிருந்து

அதலபாதாளத்திற்காய் குதித்து
You can’t write MY POEM என்று பாடியபடியே
பாதியில் தன் பாராச்சூட்டை விரித்துக்கொள்ளும்!

Series Navigationபைய பையவிரலின் குரல்

Leave a Comment

Archives