மா -னீ.
நீளுகின்ற
மூன்றாம் சாமத்தில்
எழுந்தமர்கிறது மனம் .
எதோ ஒன்றை
எழுதாத இரவு
கொடியது .
எழுதியும் பதியாத
சொல்லின் வீரியம்
வலுவில்லா சிந்தனைக்கு சாட்சி.
தாலாட்ட யாருமில்லா
எழுத்து
தனித்து வாழும்
குழந்தை .
ஏதோஒன்றை எழுத
எண்ணி
வெற்றுக்காகிதத்தை நிரப்பி
ஓய்கிறது பேனா.
உலகம் நாளை
அதை கவிதையென்றோ
காவியமென்றோ
நிச்சயம் சொல்லிக்கொள்ளும்
பேசுபொருளை எழுதுவது
சுலபம்
மனதின் மௌனவெளியை
எழுதாமல்
தோற்கிறது என்
இரவுகள்.
*
சிறு தொட்டி
சுவர் நான்கும் கண்ணாடி
அசுத்தம் நீக்கி நிரப்பிய தூய நீர்
நீரில் மிதக்கும் செயற்கைத் தாவரங்கள்
மிதமான சூரிய ஒளி
மின் சூடாக்கியின் கணகணப்பு
பதமாக தயார்செய்யப்பட்ட உணவு
நேரம் தவறாத உபசரிப்பு
சொகுசு சிறைக்குள்ளிருந்து
தன் வாழ்வைப் பாடுகிறது
மீன்குஞ்சு
*
உன் விழியாற்றில்
குளித்துக்கொண்டிருந்தபோது
காதல் அலை மோதியதில்
என் ஆடை அவிழ்ந்து
ஓடிவிட்டது.
இருட்டில் தான்
இனி நான்
கரையேற முடியும்
*
வெறிபிடித்தலையயும்
நினைவுகளைக்
கட்டிவைக்கவென்று
ஒரு தொழுவமில்லை என்னிடத்தில் .
*
நிலவு சுடுகிறதாம்
ஏன் ….
பிரம்மச்சாரிகளா
நீங்கள் ?
*
மழையடித்து ஓய்ந்த
ஒரு பகல் பொழுது
எனது கப்பல்
வண்டித்தெருவில் பயணம் செய்தது
உனது அழகான கப்பலும்
அதே தெருவில் மிதந்தது.
என்னுடையது
கடந்த ஆண்டு தமிழ் புத்தகம்
12 வது பக்கம் மற்றும் ஒற்றைக் காகித கப்பல்.
உன்னுடையது கணக்குக் கப்பல்.
நம் கப்பலில்
இளமையை நோக்கிப் பயணிக்கும்
தெருவோர முதியவரின் நினைவுகள்
அடுத்து பெய்த மழையில்
நீயும் நனைந்தாய்
நானும் நனைந்தேன்
நமது கப்பல்களும் நனைந்தன,கரைந்தன
நான் அழுதேன்.
தென்னங்குடுவை தேடி
சிறு படகு செதுக்கினாய்
எனக்கும் உனக்குமாக
குண்டு குழி வெள்ளமெல்லாம்
நமக்கே சொந்தமாயின.
தோளில் கைபோட்டு ஊரையே அளந்தோம்
யாரும், ஏதும் கேட்கவில்லை
காலங்கள் பத்து பத்தாய் மாறின.
அப்பா ஒரு வெள்ளிக்கொலுசு வாங்கினார்
அம்மா அதை என் கால்களில் மாட்டினார்
கொலுசின் மணிகள் ஒலித்தபோது
நம் நட்பிற்கும் ஒலித்தது சாவுமணி
என் வீட்டின் கதவோரம்.
அதே தெருவின்
கடைசியில் இருக்கும் நீ
ஒரு சைக்கிள் வாங்கினாய் .
என் வீட்டு வேலியும்
மிகக் கவனமாகவே உயர்ந்தது .
*