’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் 3 கவிதைகள்

This entry is part 11 of 11 in the series 8 செப்டம்பர் 2019

  1. நான் எனும் உருவிலி….

ஆடியில் காணும் என்னுருவம் உண்மையில் நானல்ல
என்றுதான் தோன்றுகிறது…..

அத்தனை அந்நியோன்யமாகத் தோளோடு தோளி ணைந்து ஆடிக்கொண்டிருக்கும் அந்த மயிற்தோகை களை
ஒருநாள்கூட அதில் கண்டதேயில்லை.

அறுபது வயதில் நானிருக்கும்போது
அந்த ஆறு வயதுச் சிறுமியின் புகைப்படம் எப்படி
நானாக முடியும்?

எழுதும் ஒரு கவிதை வரியில் நான் முளைத்தெழும் விதையாகிவிடமுடியும்தான்……

நானிலிருந்து நானற்றதையும், நானற்றதிலிருந்து நானையும்
பிரித்துக்காட்டிப் பின்னிப்பிணைக்கும் கவிதையில்
தெரிவதெல்லாம் நான் மீறிய நான்.

ஆனால், ஓர் ஆடியிலோ, அல்லது ஓர் உருவப்படத்திலோ
அல்லது எத்தகைய ஒளிஓவியனுடைய புகைப்படத்திலோ
நான் நானாக இல்லையென்பதும்
நான் நானாவதில்லை என்பதுமே
நிதர்சனம்; நிஜம்.

மனம் கனிந்திருக்கும்போதுகூட அங்கே தெரியும்
என் முகம் அத்தனை கடுகடுவென்றிருக்கிறது…..

வெய்யிலின் கடுமை தாளாமல் நான் புருவத்தைச் சுருக்கிக்கொண்டிருப்பது
வெறுப்பின் உச்சமாகக் காண்கிறது புகைப்படத்தில்.

வரமாய்ப் பெருகும் கண்ணீரில் ஒரு துளியை நான் ஒத்தியெடுக்க எத்தனிப்பது

அந்தச் சித்திரத்தில்
கத்துங்கடலையே மொத்தமாய் நான் வற்றச்செய்துவிடுவதுபோல் தெரிய
இனம்புரியா திகில் பரவுகிறது மனதில்.

ஓர் ஓவியத்தில் என்னைக் காணும்போது
உறைந்துபோயிருப்பதான உணர்வில்
எனக்கு உதறலெடுக்கிறது.

ஆடியின் உண்மைக்கும் ஓவியத்தின் உண்மைக்கும்
குறைந்தபட்சம் ‘ஏழு’ வித்தியாசங்கள் உண்டென்றாலும்
அடிப்படையில் இரண்டும் உண்மையின் பொய்ப்பிரதியே.

’அய்யோ! இந்தத் தருணம் இப்படியே நீடித்திருக் கட்டும்’ என்ற பெருவிருப்பை பொருள்பெயர்க்கும் பாரத்தை
எந்தவொரு கவிதையாலும்கூட எப்படித் தாங்கமுடியும்?

  •  
  • காலப்ரமாணம்

அதோ உறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவின் தளர்ந்த வயோதிகத் தோற்றத்திற்குள்ளாய்
இன்றொரு சிறுமி ஓடி மகிழ்ந்துகொண்டிருக்கிறாள்.

மூன்று அண்ணன்களின் முழுப் பாதுகாப்பில் வளர்ந்து தன் இருபத்தியோரு வயதில் மணமாகி பிரிந்துசென்றதோர் இளம் யுவதியும்கூட.

ஆறடி உயர அண்ணனைப் பார்க்கப்போகும் அளப்பரிய ஆனந்தம் அந்த முகத்தில் அடக்கிவாசிக்கப்பட்டுத் தெரிகிறது.

(முதுமை ஆறடியை அரையடி அல்லது அதைவிட அதிகமாகக் குறைத்திருக்கலாம். அதனாலென்ன?)

நாளை மறுநாள் அம்மாவும் மாமாவும் சந்தித்துக்கொள்ளும்போது
காலம் அவர்களிடம் தோற்றுத்தான்போகும்.

’பாசம் மலரல்ல – வேர்’ என்றொரு வரி தன்னிச்சையாக மனதில் எழுதப்படுகிறது.

ஒரு புள்ளிக்குக் கீழ் யாரையுமே மனதுள் அனுமதிக் காத நான்
அதிகம் பரிச்சயமில்லாத மாமாவை
அம்மாவின் கண்களால் பார்க்கவேண்டும் என்று திரும்பத் திரும்ப எனக்குள் அறிவுறுத்திக் கொள்கிறேன்.

ஆனால், தன் அண்ணனைக் காணவிழையும் அம்மாவின் கண்கள்
என்னால் எட்டமுடியாத அவருடைய அடியாழ மனதிலல்லவா ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன…..

’அம்மா சிறுமியென்றாலும், திருமணத்திற்கு முந்தைய யுவதி யென்றாலும்
நான் தான் இருக்கவே மாட்டேனே
பின் எப்படி என் மாமாவைப் பார்ப்பேன்!” என்று மனம் விளையாட்டாகக் கேட்க,
கண்கள் அவற்றின் போக்கில் தழுதழுக்க_

விடுகதையாய் எழுமொரு கேள்வி:

இப்பொழுது என் வயது என்ன?

  •  
  • ஊரிலேன்………

பரிச்சயமற்ற எந்தவொரு ஊருக்குச் செல்லும்போதும்
ஏதோவொரு தெருவோ கடையோ கடையில் தொங்கும்
பண்டமோ ஏற்கெனவே பார்த்ததாகிறது.

புதியவர்களைப் பார்த்து உச்சஸ்தாயியில் குரைக்கும் அந்தத் தெருநாய்
என் வீட்டருகிலிருந்து எப்படி யிங்கே வந்தது?
என்னைப் பார்த்து ஏன் குரைக்கிறது?

அருகாய் நெருங்கி அதிவேகமாய் மறையும் அந்தக்
காய்கறிக்கடையில் நான் நேற்று பார்த்த அதே கத்திரிக்காய்கள்….

அதோ அந்தப் பல்பொருள் அங்காடிக்குத்தான் நான் எப்போதும் போவது வழக்கம்.
ஆனால், அதன் பெயர்ப்பலகை வேறாக இருந்தது….

நீந்தத்தெரியாத நிலையில் காலவெள்ளத்தில் எதிர்நீச்சல் போடுவது எப்படி
என்றொரு கேள்வி அசரீரியாய் ஒலிக்கிறது இங்கும்.

விரையும் மனிதவெள்ளத்தில்
பழகிய முகம் ஒன்று கண்டிப்பாக மிதந்துவரும் என்பதாய் உள்மனது சொல்ல
நேர்மறையா எதிர்மறையா என்று புரியாத ஒருவித எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்கிறது.

இதோ என்னை ஏந்தியபடி விரைந்துகொண்டிருக்கும் ஆட்டோவை ஓட்டுபவர் சென்னையிலிருந்து தன் வண்டியையும் ஓட்டிக்கொண்டு
எனக்கு முன்பே வந்துவிட்டாரா என்ன?

அந்தத் தெருவின் திருப்பத்திலிருந்து நீளும் கால்களின் முகம்
எனக்கான தரிசனமாகத்தான் இருக்குமோ?

பாழும் மனம் ஏன் இப்படிப் பரிதவித்து அலைக்கழிகிறது?

கணத்தில் அந்த முனையைக் கடந்துவிடும் வண்டி
காலமும் காலக்குறியீடுமாகி.

திரும்பிப் பார்க்க
வண்டியின் திறப்பற்ற முதுகு வாழ்வின் அவிழாப் புதிராகிறது.

  •  
Series Navigationயாவையும் உண்மை
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *